நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு - பின்னணி என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு

பட மூலாதாரம், X/நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று(திங்கள்கிழமை) வழக்கை முடித்து வைத்தனர்.

வழக்கின் இன்றைய நிலையில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாது. கடந்த ஆண்டு இறுதியில், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே காரணம். அதனால்தான், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை.

என்ன நடந்தது?

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Getty Images

நாம் தமிழர் கட்சி 2010-இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில், ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறங்கினர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பதிவுபெற்ற கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆணடு அக்டோர் மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சியினர் தாமதமாகவே அணுகியிருக்கிறார்கள்.

இது பாஜகவின் சதி எனச் சாடினார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஊடகங்களிடம் பேசிய அவர்,”நாங்கள் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கோரிய போது, நாங்கள் மயில் சின்னத்தைக் கேட்டோம். அது தேசியப் பறவை என்பதால், அந்தச் சின்னத்தை ஒதுக்க மறுத்தனர். ஆனால், தேசிய மலரான தாமரையை பாஜக,விற்கு ஒதுக்கியுள்ளார். இருவருக்கும் ஒரே நியாயம் என்றால், அவர்களுக்கும் தாமரையை ஒதுக்கியிருக்கக் கூடாது,” என்றார்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

என்ன சொன்னது உயர் நீதிமன்றம்?

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், TWITTER

நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறையும் அந்தச் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அக்கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மோகன், “பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது,”எனக் கேட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “எந்த ஒரு குறுப்பிட்ட கட்சிக்காகவும் ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்,”எனக் கேட்டார்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு மீதான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளிவந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் இடாமல், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு

அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்பது உண்மைதான் என்று கூறும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி,“பதிவு செய்யப்பட்ட கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அதே சின்னத்தில் ஒரு விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

நாங்கள் எட்டு விழுக்காடு வரை வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த முறை எங்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொடுத்தால், நிச்சயம் அதை விட அதிக சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் இடம்பெறுவோம். அதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,”என்று கார்த்தி சாடினார்.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் கார்த்தி கூறினார்.

கட்சிகள் அங்கீகாரம் - தேர்தல் ஆணைய நடைமுறை என்ன?

தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கன்றது. அதன்படி, தேர்தல் ஆணையம், இரண்டு வகையாக கட்சிகளை அங்கீகரிக்கிறது. ஒன்று- அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி; இரண்டு- அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி.

  • அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
  • மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
  • மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
  • நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.

ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.

  • நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும்.
  • ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)