பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்வது ஏன்? என்ன பிரச்னை?
பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வாகனங்கள் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்தினால், ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்யவும், மற்றும் இதர பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் கூடுமானவரை குடிநீரை சேமிக்கும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர் தொட்டிகளில் சுமார் 130 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கிடைக்கிறது. இதைத்தவிர, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தினமும் 60 கோடி லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது. இவையே, குடிநீர் தவிர இதர பணிகளுக்குப் போதுமானதாக இருக்கும்,” என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறினார்.
திங்கள்கிழமை பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன்மூலம் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களுக்குத் தேவையான மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுத்துச் செல்லும் தண்ணீர் லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். “அதனால், குடிநீரை எடுத்துச் செல்லும் லாரிகள் மற்றும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுத்துச் செல்லும் லாரிகளை மக்கள் அடியாளம் காண முடியும்,” என்றார்.
ஆனால், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த சமீபத்திய நடவடிக்கை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. குடிநீரை மாற்று விஷயங்களுக்காக பயன்படுத்துவதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றும், ஒவ்வொரு வீட்டையும் அதிகாரிகளால் சோதனையிட முடியாது என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
பெங்களூருவில் தினமும் தேவைப்படும் குடிநீரில் சுமார் 20 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்காதது தான் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணமாக உள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள சுமார் 1.5 கோடி மக்களுக்கு தினமும் 145 கோடி லிட்டர் தண்ணீர் 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மீதம் உள்ள 60 கோடி லிட்டர் தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுகிறது.
தென்-மேற்கு பருவ மழையும், வட-கிழக்கு பருவ மழையும் பொய்தும்போனதால், நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைந்ததுதான் தற்போது குடிநீர் பற்றாக்குறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு பெருநகரத்துடன் இணைக்கப்பட்ட 110 கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



