காணொளி: ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இந்தியா, பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, காணொளி: தெற்காசிய நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியம்?
காணொளி: ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இந்தியா, பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டார், இது சில தசாப்தங்களில் இந்தப் பிராந்தியம் கண்ட மிகக் கடுமையான பதற்றங்களில் ஒன்றாகும்.

தங்களின் பதில் தாக்குதல் பேரழிவு தரும் வகையில் இருக்கும் என கூறியுள்ள இரான், வளைகுடா முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது.

உலகின் கவனம் தாக்குதல்கள் மீதும், அதிகரித்து வரும் பதற்றமான சூழல் மீதும் உள்ள நிலையில், உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறுகிய கடல் வழித்தடமும் தற்போது கவனம் பெற தொடங்கி உள்ளது. அதுதான் ஹோர்முஸ் நீரிணை.

இதன் மிகக்குறுகலான இடத்தில் சுமார் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே இருக்கும். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி, அதாவது, தினமும் கிட்டத்தட்ட 2 கோடி பேரல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன. இதனுடன், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் பெருமளவில் இந்த நீரிணை வழியாக செல்கிறது.

இது வளைகுடா உற்பத்தியாளர்களுக்கான முக்கிய ஏற்றுமதி பாதை. இது வழியாகச் செல்லும் எண்ணெயில் 80%க்கும் அதிகமானவை ஆசியாவிற்கு செல்கின்றன. சீனா, இரானின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை கண்காணிக்கும் Vortexa-ன் படி கடந்த மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் இரானிடம் இருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது.

எந்தக் கப்பலும் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என வளைகுடாவில் உள்ள கப்பல்களுக்கு இரானின் புரட்சிகர காவல்படையினரிடமிருந்து ரேடியோ எச்சரிக்கை வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரானிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதாக திங்களன்று அறிவித்ததாக ராயிட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. மேலும் அதைக் கடந்து செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இரானின் தாக்குதலுக்கு இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதற்றம் அதிகரித்து, இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா எரிசக்தியை நம்பியுள்ள இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுக்கு இந்த நீரிணை எவ்வளவு முக்கியமானது?

"தெற்காசிய நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக, பாகிஸ்தானை பொருத்தவரை, நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 90% க்கும் அதிகமானவை வளைகுடாவிலிருந்து வருகின்றன. அவை அனைத்தும் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 70 - 75 சதவீதத்துக்கு இடையே உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, அதன் எண்ணெய் இறக்குமதியில் 60%-க்கும் அதிகமானவை ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகின்றன" என சந்தை மற்றும் பொருட்களுக்கான வியூக நிபுணர் ஒசாமா ரிஸ்வி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில், வளைகுடாவில் இரண்டு டேங்கர்கள் மீதான தாக்குதல்கள் எண்ணெய் விலையை உயர்த்தின. அதே போல சில நாட்களுக்குள் சரக்கு போக்குவரத்து செலவுகளையும் அதிகரிக்கச் செய்தன.

இந்தப் பாதையில் மீண்டும் இதேபோன்ற ஒன்று நடந்தால், தெற்காசியப் பொருளாதாரங்களில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

"நீண்ட காலத்துக்கு மூடப்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும்" என்கிறார் ஒசாமா ரிஸ்வி.

"உதாரணமாக, எண்ணெய் விலையில் வெறும் $1 அதிகரிப்புக்கு, இந்தியாவின் இறக்குமதிச் செலவு $2 பில்லியன் வரை உயரலாம். தற்போது நீரிணை ஒரு வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டால் எண்ணெய் விலை 100 டாலர் அல்லது தீவிர நிகழ்வுகளில் 150 டாலராக உயர்வதை பார்க்க முடியும். இதேபோல், பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலையில் சுமார் 30-40% அதிகரிப்பை காணலாம்."

"ஒட்டுமொத்தமாக, இது உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு முக்கிய மையமாகவும் செயல்படுகிறது. எனவே தெற்காசிய நாடுகளுக்கான பொருட்கள் மற்றும் வணிகப் பொருட்களின் உலகளாவிய வர்த்தகமும் பாதிக்கப்படும்." என்று அவர் கூறுகிறார்.

தெற்காசியாவை பொறுத்தவரை, இந்த நீரிணையின் பங்கு தெளிவாக உள்ளது. இந்த குறுகிய இடத்தில் நடக்கும் ஒன்று வெறும் வளைகுடா பிரச்னை மட்டுமல்ல. அது ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பொருளாதாரங்கள் மற்றும் வீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு