காணொளி: 4 அடி ஆழ பனியில் புதையுண்ட பனிச்சறுக்கு வீரர்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், பனிச்சறுக்கு செய்துகொண்டிருந்த வீரர் ஒருவர் நான்கு அடி ஆழ பனியில் புதையுண்டார். அவரைத் தொடர்ந்து வந்த இருவரின் முயற்சியால் அவர் பின்னர் மீட்கப்பட்டார்.
அதுகுறித்து, அவரை மீட்ட கார்சன் ஷ்மிட் பேசும்போது, "முதலில் அவர் ஒரு குறுகிய சரிவில் இறங்கினார், பிறகு நான் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் ஏதோவொரு காரணத்திற்காக அங்கே நின்று, அவரைப் பார்த்தபடி, அன்றைய நாளைப் பற்றிப் பேசினோம். அப்போதுதான், அவரது காலிலுள்ள பனிச்சறுக்குப் பலகைகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர் புதையுண்டு இருப்பதை உணர்ந்தேன்.
நாங்கள் செயலில் இறங்கினோம். அவரது தலை உள்ளேயும், கால் மேலேயும் இருந்தன. அவரால் சுவாசிக்க முடியாது, நாங்கள் அவரைத் தோண்டி எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். யாரையும் உதவிக்கு அழைக்க போதுமான நேரம் இருக்கவில்லை. அவரிடம் 3 நிமிட அளவுக்கான சுவாசம் மட்டுமே இருந்தது" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



