துரை வைகோ உடைந்து அழக் காரணம் என்ன? சின்னத்துக்காக மதிமுகவை அழுத்துகிறதா திமுக?

மதிமுக

பட மூலாதாரம், DuraiVaiko/Facebook

படக்குறிப்பு, தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய துரை வைகோ, மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார்.
    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ அண்மையில் திமுக நிர்வாகிகள் முன்பு உணர்ச்சிவசப்பட்டு அழுத நிகழ்வு தமிழ்நாட்டு அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக களம் காண்கிறார்.

அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதிமுக கட்சிக்கு இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளதா என்ற கேள்வியும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் தேர்தல் கூட்டம் ஒன்றில் துரை வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே மேடையில் பேசிய திமுக நிர்வாகி மதிமுக உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றிய துரை வைகோ திடீரென்று உணர்ச்சிவயப்பட்டு அழுதுவிட்டார். இதன் பின்னணி என்ன? மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

மதிமுக

பட மூலாதாரம், DURAI VAIKO / X

படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

மதிமுக தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு

1994ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை தொடங்கினார். அதற்கு பின்னர் நடைபெற்ற 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது.

அதிமுக - திமுக இல்லாமல் இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது.

அதன் பிறகு ஒரே ஆண்டில் மீண்டும் நடத்தப்பட்ட 1999 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது.

அதன்பிறகு 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவீதம் 6 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றது. அதற்கு பின் மாறி மாறி அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிகளில் இடம்பெற்றாலும் மதிமுகவால் பெரியளவிலான வாக்கு வங்கியை பெற முடியவில்லை.

இந்நிலையில் 6 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்டுள்ள கட்சி என்று கூறி 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக.

மதிமுக

பட மூலாதாரம், VAIKO / X

படக்குறிப்பு, 2016ஆம் ஆண்டு மக்கள்நலக் கூட்டணி அமைத்து தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியுடன் களம் கண்ட மதிமுக அந்த தேர்தலிலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட்டது.

துரை வைகோ பேசியது என்ன?

திமுக கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து தொடங்கினார்.

இந்நிலையில் 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்.

மதிமுக

பட மூலாதாரம், VAIKO / X

படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய அவர், மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்து என்ன சின்னம் என்று சொல்லவும் என தொண்டர்கள் கூச்சலிட, “உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” என்று கூறினார்.

துரை வைகோவின் இந்த உரை அவர் மீது அழுத்தம் தரப்படுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மதிமுக

பட மூலாதாரம், PRIYAN

படக்குறிப்பு, “வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது."

உட்கட்சி அழுத்தம்?

இதுகுறித்து பத்திரிகையாளர் பிரியனிடம் பேசுகையில், "அவருக்கு அவரது கட்சிக்குள் இருந்து ஏதாவது அழுத்தம் வந்திருக்கலாமே தவிர, திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார்.

“வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன்.

மதிமுக

பட மூலாதாரம், MALLAI SATHYA / X

படக்குறிப்பு, “சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்”

‘திமுகவுக்கு தர்மசங்கடம்’

வேட்பாளர் அறிமுகக் கூட்டமெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் களத்திற்கு பரப்புரைக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில், மதிமுகவுக்கு எந்த சின்னத்தில் வாக்கு சேகரிப்பது என்பதில் தான் கூட்டணி கட்சியினரிடையே தர்மசங்கடம் நிலவுதாக கூறுகிறார் மல்லை சத்யா.

“சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” என்று கூறுகிறார் அவர்.

“களத்தில் திமுக கட்சியினர் உறுதுணையாக நிற்கிறார்கள். தற்போது வரை சின்னம் இல்லாமல் எப்படி பிரச்சாரம் செய்வது, குறுகிய காலத்தில் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது என்ற அழுத்தமே நிலவுகிறது ” என்று தெரிவித்துள்ளார் மல்லை சத்யா.

மதிமுக

பட மூலாதாரம், MAALAN / X

படக்குறிப்பு, "மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது."

மதிமுகவை இணைத்துக் கொள்ள நினைக்கிறதா திமுக?

சின்னம் குறித்த பிரச்னை, கூட்டணி தலைவர்களின் கருத்துக்கள் இது ஒருபுறமிருக்க மதிமுகவின் சூழலை பயன்படுத்தி அந்த கட்சியை தன்னோடு இணைத்து கொள்ள திமுக நினைப்பதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

“திமுகவில் இருந்துதான் வைகோ வெளியேறினார். தற்போது பலவீனமான சூழலில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். சின்னமும் இல்லை. இந்த சூழலில் தங்களது சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்து அவர்களது கட்சி உறுப்பினர்களையும் திமுக தனது கட்சியில் இணைத்து கொள்ள விரும்புகிறது. எனவே இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதிமுகவிற்கு அழுத்தம் தருகிறது” என்கிறார்.

மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது. எனவே அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார் மாலன்.

மதிமுக

பட மூலாதாரம், TAMILAN PRASANNA / X

படக்குறிப்பு, “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருகிறது”

திமுக தரப்பு கூறுவது என்ன?

பத்திரிகையாளர் மாலன் சொல்வது போல மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச்சொல்லி திமுக கட்டாயப்படுத்துகிறதா என்று செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருவதாக” கூறுகிறார்.

“சின்னம் குறித்த பிரச்னை திமுகவுக்கும், மதிமுகவுக்குமானது அல்ல. இது திமுகவுக்கும், பாஜகவுக்குமானது. நாட்டில் உள்ள லெட்டர்பேடு கட்சிகளுக்கும் சின்னம் மற்றும் அனுமதி வழங்கும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் பேச்சை கேட்டு முக்கிய கட்சிகளுக்கு சின்னம் வழங்க மறுக்கிறது” என்கிறார் அவர்.

ஆனால், “திமுக தங்களது உள்நோக்கத்தை மறைப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் மீது பழி போடுகிறது. அதற்கு பாஜகவே எளிய இலக்கு” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மாலன்.

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக தலைவர்கள் ஆலோசனை தருவது குறித்து கேட்டபோது, “வெற்றிவாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் இழக்கக்கூடாது என்ற குறிக்கோள் உள்ளது. சின்னம் அதில் ஒரு கூடுதல் பலன் அளிக்க கூடியது. அந்த வகையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்."

"உதாரணத்திற்கு மதிமுக தொடர்ந்து பரவலான தொகுதிகளில் நிற்கவில்லை. சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதனால், கூட்டணியின் நன்மைக்காக சிலர் ஆலோசனை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுகுறித்து இரு தலைமைகளும் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார் தமிழன் பிரசன்னா.

மதிமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம்." என்கிறார் மதிமுகவின் மல்லை சத்யா.

சின்னம் இல்லாமல் இருப்பது பின்னடைவா?

தேர்தலில் களம் காணும் இதர கட்சிகள் ஏற்கனவே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், மதிமுகவிற்கு இன்னும் சின்னமே இல்லை என்பது தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம். எனவே, மக்களின் ஆதரவில் கண்டிப்பாக வெற்றிப்பெறுவோம்” என்று கூறினார்.

இன்னும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் சின்னமும் வந்து விடும். அதனால், இது பெரியளவு திமுக அல்லது மதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறுகிறார் பிரியன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)