அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளுக்கு குறியா? பாஜக-வில் சேர்ந்தவர்கள் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21, 2024 அன்று இரவு கைது செய்தது. புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமலாக்கத்துறை கேஜ்ரிவாலுக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றைச் சட்டவிரோதமானது என்று நிராகரித்தார். இதையடுத்து, கேஜ்ரிவால் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் பிரசாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இது ஏப்ரல் 19 முதல் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால், இந்த நேரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. டெல்லி அரசு 2021இல் புதிய கலால் வரிக் கொள்கையை அறிவித்தது. மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் 2023 முதல் சிறையில் உள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மார்ச் 2022இல், நிதி அமைச்சகம் மக்களவையில் இதற்கான பதிலை அளித்தது. அதன்படி, 2004 முதல் 2014 வரை 112 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி 5,346 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றியது.
ஆனால், பாஜக ஆட்சியில் 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் 310 சோதனைகளை நடத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. 2014 மற்றும் 2022க்கு இடையில், 121 உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 115 தலைவர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதாவது 95% வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் 26 தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 14 பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
எவ்வாறாயினும், 2022 டிசம்பரில் மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை வழங்கும் தரவுகள் எங்களிடம் இல்லை என்று கூறியது.
"மற்ற வழக்குகள் மற்றும் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் நாங்கள் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அமலாக்கத்துறையின்படி சிபிஐ நடவடிக்கைகளின் புள்ளிவிவரங்களை நாம் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளில், 72 தலைவர்கள் சிபிஐயின் வலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் 43 பேர் அதாவது 60 சதவீதம் பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள்
கடந்த 2014 முதல் 2022 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 124 தலைவர்கள் சிபிஐ வசம் சிக்கியுள்ளனர். இதில் 118 அல்லது 95% தலைவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல், காங்கிரஸ் ஆட்சியின்போது, சத்தீஸ்கரில் அமைச்சர்கள் மற்றும் பல அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக, எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க, மத்திய அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2013ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, சிபிஐ அரசாங்கத்தின் கிளி என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட நிறுவனங்களைப் பயன்படுத்துவதாக நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களிலும் அரசாங்கத்தின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், அமலாக்கத்துறையில் இருந்து ஒரு புதிய போக்கு வெளிவருவதைக் காணலாம்.
பிபிசி 2023இல் இதுபோன்ற சில நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தது. அது பற்றிய அனைத்து தகவல்களையும் எடுத்தது. 'கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பயன்படுத்தப்பட்டுள்ளதா? மேலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க.வில் சேரும்போது, அவர்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணை உண்மையில் என்ன ஆனது?' இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை அறிய முயன்றோம்.
இதற்காக மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து சில வழக்குகளைத் தேர்ந்தெடுத்தோம். இந்த மத்திய அமைப்புகளின் குழப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
மகாராஷ்டிரா: நவாப் மாலிக் மற்றும் நாராயண் ரானே
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 23, 2022 அன்று, என்சிபி தலைவர் நவாப் மாலிக் பல மணிநேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு நவாப் மாலிக் சொத்துகளை வாங்கியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் நெருங்கிய உறவினரான சலீம் படேலிடம் இருந்து அவர் சொத்து வாங்கியுள்ளார். இந்த வழக்கு 22 ஆண்டுகள் பழமையானது. அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது.
முன்னதாக ஜனவரி 2021இல், நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் 2021இல், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் என்சிபியால் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த முழு விவகாரத்திலும், நவாப் மாலிக் பல செய்தியாளர் சந்திப்புகள் மூலம் என்சிபி மற்றும் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். என்சிபியும் பாஜகவும் சதி செய்து ஆர்யன் கானை கடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு பொய்யானது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, போதிய ஆதாரங்கள் இல்லாததால், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆர்யன் கானை நீதிமன்றம் விடுவித்தது. சமீர் கானுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நவாப் மாலிக் தற்போது சிறையில் உள்ளார். தற்போது உடல்நிலை காரணமாக ஜாமீன் கோரியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் மற்றொரு பெரிய பெயர் நாராயண் ரானே. ரானே சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் இருந்துள்ளார். 1999ஆம் ஆண்டு சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சியில் சிறிது காலம் மகாராஷ்டிர முதல்வராகவும் பதவி வகித்தார்.
பாஜகவின் முன்னாள் எம்பி கிரித் சோமையா 2016ஆம் ஆண்டு நாராயண் ரானே மீது பணமோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சோமையா, அப்போதைய அமலாக்கத்துறையின் இணை இயக்குநர் சத்யபிரதா குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், நாராயண் ரானே மற்றும் அவரது குடும்பத்தினரின் வணிகம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நாராயண் ரானே மீது 300 கோடி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ரானே அக்டோபர் 2017இல் காங்கிரஸில் இருந்து விலகி மகாராஷ்டிரா ஸ்வாபிமான் கட்சியை உருவாக்கினார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைவதாக அறிவித்தார். தற்போது நாராயண் ரானே மத்திய அரசில் அமைச்சராக உள்ளார்.
ஆனால், நாராயண் ரானே மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டதா? மத்திய அமைப்புகள் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இந்தக் கேள்விகளுக்கு 'இல்லை' என்பதே பதில்.
இந்த இரண்டு வழக்குகளும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவை. காங்கிரஸில் இருந்தபோது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரானே தற்போது மத்திய அரசில் அமைச்சராக உள்ளார். இதற்கிடையில், என்சிபி தலைவர் நவாப் மாலிக் தற்போது 22 ஆண்டுகால சொத்து பரிவர்த்தனை வழக்கில் சிறையில் உள்ளார்.
2019இல், சட்ட திருத்தத்திற்குப் பிறகு அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் அதிகரித்தன
பணமோசடி தடுப்பு சட்டத்தை அதாவது பிஎம்எல்ஏ-ஐ திருத்த மத்திய அரசு 2019இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.
பிரிவு 17இன் துணைப் பிரிவு (1) மற்றும் பிஎம்எல்ஏ-வின் பிரிவு 18 ஆகியவை திருத்தப்பட்டன. மக்களின் வீடுகளில் சோதனைகள் மற்றும் கைதுகளை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் அளித்தது. அதற்கு முன், பிற அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் பிஎம்எல்ஏ-வின் உட்பிரிவுகள் ஏதேனும் இருந்தால் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டது. ஆனால், இப்போது அமலாக்கத்துறை தானே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்ய முடியும்.
சுவாரஸ்யமாக, பிஎம்எல்ஏ-ஐ திருத்துவதற்கான மசோதா பண மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. பண மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மக்களவையில் நேரடியாகத் தாக்கல் செய்யப்பட்டு அங்கிருந்து சட்டமாகிறது.
சுவாரஸ்யமாக, 2019இல் அந்த நேரத்தில், ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பிஎம்எல்ஏவில் பண மசோதா என எதுவும் இல்லாவிட்டாலும், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அதை தன்னிச்சையாகப் பயன்படுத்த மத்திய அரசு விரும்புகிறது என்று எதிரணியினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பி.எம்.எல்.ஏ-வில் இந்த மாற்றங்கள் உச்சநீதிமன்றத்திலும் சவால் செய்யப்பட்டன. ஆனால் இந்த திருத்தம் சரியானது என்று நீதிமன்றம் கண்டறிந்தது. கடுமையான நிதி முறைகேடுகளை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் என்று மத்திய அரசு வாதிட்டது.
அசாமில் என்ன நடந்தது?
அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த சில ஆண்டுகளாக தனது அறிக்கைகளால் செய்திகளில் இருந்து வருகிறார். சர்மா ஒருமுறை அசாமின் காங்கிரஸ் அரசில் சுகாதார அமைச்சராக இருந்தார். ஆனால் தற்போது அசாமில் பாஜக அரசின் முதல்வராக உள்ளார். பாஜகவின் தேர்தல் பிரசாரத்தின் நட்சத்திரப் பிரசாரகராகவும் இருக்கிறார்.
அசாமின் இளம் கோகோய் அரசாங்கத்தில் சர்மா மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருந்தார். 2011 தேர்தலுக்குப் பிறகு சர்மா மற்றும் கோகோய் இடையேயான சர்ச்சை அதிகரித்தது. சர்மா ஜூலை 2014இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால், அதற்குள் அவரது பெயர் சாரதா சிட் ஃபண்ட் ஊழலுடன் இணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2014இல், குவாஹாட்டியில் உள்ள ஹிமந்த் சர்மாவின் வீடு மற்றும் அவரது சேனல் நியூஸ் லைவ் ஆகியவற்றில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சேனல் அவரது மனைவி ரிங்கி புயன் சர்மாவுக்கு சொந்தமானது. நவம்பர் 2014இல், ஹிமந்த் சர்மாவை சிபிஐ அதன் கொல்கத்தா அலுவலகத்தில் பல மணிநேரம் விசாரணை செய்தது.
அப்போது, ஷார்தா குழுமத்தின் உரிமையாளரும், வழக்கில் முக்கிய குற்றவாளியுமான சுதிப்தோ சென்னிடம் இருந்து, மாநிலத்தில் தனது குழுவின் விவகாரங்களை நடத்துவதற்காக சர்மா மாதம் ரூ.20 லட்சம் பெறுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2015 ஜனவரியில், அனைத்து சிட்பண்ட் வழக்குகளின் விசாரணையையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆகஸ்ட் 2015இல் ஹிமந்த் சர்மா பாஜகவில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, அசாம் காங்கிரஸ் தலைவர் பிரத்யோத் பர்டோலோய் பிப்ரவரி 2019இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "ஹிமந்த் சர்மா பாஜகவில் இணைந்தவுடன், அசாமில் சாரதா சிட் ஃபண்ட் ஊழல் தொடர்பான விசாரணை நிறுத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் பா.ஜ.க.வில் சேர்ந்து மாநில முதல்வராகப் பதவியேற்ற பிறகு, சர்மாவை சிபிஐ விசாரிக்கவில்லை அல்லது விசாரணைக்கு அழைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
சர்மா வடகிழக்கு மேம்பாட்டுக் கூட்டணியின் (NEDA) தலைவராகவும் பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வடகிழக்கில் பாஜக விரிவாக்கத்தின் நாயகனாகவும் கருதப்படுகிறார்.
மம்தாவின் மருமகன்கள் மீது வழக்கு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாமின் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், மமதா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது. நிலக்கரி திருட்டு தொடர்பான வழக்கில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அபிஷேக் பானர்ஜி அழைக்கப்படுவது இது மூன்றாவது முறை.
பல கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்கம் தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. மே 19, 2022 அன்று, இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் 41 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் அபிஷேக் பானர்ஜியின் பெயர் இல்லை.
இந்த வழக்கு நவம்பர் 2020 முதல். அப்போது, ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவுக்கு மேற்கு பிர்பும் பகுதியில் இருந்து பெரிய அளவில் நிலக்கரி திருடப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவர் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் அதிகாலையில் சட்ட விரோதமாக நிலக்கரி தோண்டப்படுவதாகவும், நிலக்கரியை சாக்கு மூட்டைகளில் அடைத்து லாரிகள், சைக்கிள்கள் மூலம் திருடிச் செல்வதாகவும் புகார் எழுந்தது.

பட மூலாதாரம், ANI
ஆனால் 2021இல் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அது ஒரு புதிய அரசியல் திருப்பமாக இருந்தது.
இந்த சம்மன் 2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அனுப்பப்பட்டது. அதாவது, சட்டசபை தேர்தல்தான் விசாரணையின் பின்னணி.
இந்த சம்மன்கள் பாஜகவை பயமுறுத்துவதற்கான தோல்வி முயற்சி என்று மமதா பானர்ஜி கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
சுபேந்து அதிகாரி வழக்கில் நடந்தது என்ன?
சுபேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி 2020 டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். மமதா பானர்ஜிக்கு நெருக்கமானவராகவும், திரிணாமுல் கட்சியின் சக்திவாய்ந்த தலைவராகவும் இருந்தவர். ஆனால் அவர் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார். தற்போது சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்த வழக்கு 2014இல் நடந்தது. அப்போது பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூ ஸ்டிங் ஆபரேஷன் நடத்தினார். அவர்களில் முக்கிய டிஎம்சி தலைவர்கள் சுபேந்து அதிகாரி, முகுல் ராய் மற்றும் ஃபிர்ஹாத் ஹக்கீம் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் கேமரா முன் பல லட்சம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது நாரதா ஸ்டிங் கேஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் கட்சி வெற்றி பெற்றதையடுத்து திரிணாமுல் தலைவர்கள் சிபிஐயால் 2021 மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மமதா பானர்ஜியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஃபிர்ஹாத் கீம் மற்றும் மேற்கு வங்க பஞ்சாயத்து அமைச்சர் சுப்ரதா முகர்ஜி ஆகியோர் அடங்குவர்.

பட மூலாதாரம், ANI
இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்டம்பர் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, டிஎம்சி எம்எல்ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் டிஎம்சி தலைவர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சோவன் சட்டர்ஜியும் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி வங்காள சட்டசபை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, தனக்கு விருப்பமான தொகுதியில் சீட்டு கிடைக்காததால் மீண்டும் பாஜகவில் இருந்து விலகினார்.
குற்றப்பத்திரிகையில் சுபேந்து அதிகாரி அல்லது முகுல் ராய் பெயர் குறிப்பிடப்படவில்லை. இரு தலைவர்களும் தற்போது பாஜகவில் இருந்தாலும், சுபேந்து அதிகாரி ரூ.5 லட்சமும், முகுல் ராய் 15 லட்சமும் லஞ்சம் பெற்றதை ஸ்டிங் ஆபரேஷன் ஒப்புக்கொண்டது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமா?
அமலாக்கத்துறை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக மோதி அரசை பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரா அவரது சோதனைக் களம் என்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா குழு ஒன்று கலகம் செய்தது. அந்த எம்.எல்.ஏ.க்கள் முதலில் குஜராத் மற்றும் பின்னர் கவுஹாத்திக்கு விரைந்தனர். உயர் அழுத்த அரசியல் நாடகத்திற்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே குழுவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதற்காக ஜூலை மாதம் முதல் சோதனை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறைக்கு பயந்தும் பண பேராசையாலும் சிவசேனா எம்எல்ஏக்களை உடைத்து ஷிண்டே குழு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது என்றும் உத்தவ் தாக்கரே குழு குற்றம் சாட்டியது.
அதற்கு தேவேந்திர ஃபட்னாவிஸ், "இது அமலாக்கத்துறை அரசாங்கம் மற்றும் அமலாக்கத்துறை என்றால் ஏக்நாத் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம்" என்று பதிலளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் இந்த அரசியல் மாற்றம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், பாஜகவுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், 27 ஜூலை 2022 அன்று அமலாக்கத்துறையால் அழைக்கப்பட்டார். ஆகஸ்ட் 1, 2022 அன்று, மும்பையின் கோரேகானில் பத்ரா சால் மறுவடிவமைப்பு தொடர்பான பணமோசடி வழக்கில் ராவத் கைது செய்யப்பட்டார்.
பத்ரா சாலியின் மறுவடிவமைப்பு, மகாராஷ்டிரா வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் ஹவுசிங் டெவலப்மெண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்-இன் (HDIL) துணை நிறுவனம் என்று அமலாக்கத்துறை கூறுகிறது.
மகாராஷ்டிரா பஞ்சாப் கூட்டுறவு வங்கியின் ரூ.4,300 கோடி முறைகேடு தொடர்பாக எச்.டி.ஐ.எல். நிறுவனம், பிரவீன் ராவத்தின் கணக்கிற்குப் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது. பிரவீன் ராவத் சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர்.
நவம்பர் 2022இல், சஞ்சய் ராவத்துக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, "நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட ஆதாரங்களில், பிரவீன் ராவத் மீது ஊழல் வழக்கு உள்ளது. ஆனால் சஞ்சய் ராவத் காரணமின்றிக் கைது செய்யப்பட்டார்" என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இப்போது உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி ஷிண்டே குழுவில் இணைந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான அமலாக்கத்துறை மற்றும் பிசிஐ வழக்குகள் என்ன ஆனது? அதைப் பார்க்கலாம்.
சிவசேனா தலைவர் அர்ஜுன் கோட்கர் 2016 மற்றும் 2019க்கு இடையில் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடியில் தற்போது அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 2022இல் அர்ஜுன் கோட்கரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பிறகு அவரது 78 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.
கோட்கர் உத்தவ் தாக்கரே கோஷ்டியில் இருந்து விலகி ஜூலை மாதம் ஷிண்டே கோஷ்டியில் சேர்ந்தார். அப்போது, தற்செயலாக இந்த முடிவை எடுக்கிறேன் என்றார். ஷிண்டே குழுவில் இணைந்த பிறகு, அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
சிவசேனா தலைவர் பாவ்னா கவ்லியின் நிலையும் அப்படித்தான். பாவ்னா கவ்லியின் கல்லூரி மற்றும் அவர் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. கவ்லி ஒரு சமூக அமைப்பை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.
கவ்லி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். பிறகு அவர்கள் மீதான இந்தப் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை என்ன செய்கிறது? இது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












