'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே: ஆர்சிபி-யின் ஓட்டைகளைப் பயன்படுத்திய கேப்டன் ருதுராஜ்

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளைய, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். அவரது கேப்டன்சி வெற்றிகரமாக அமைந்ததற்கு அறிமுக வீரர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் முக்கியக் காரணங்களாக அமைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கேப்டன் யார்?

சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், அவ்வப்போது ருதுராஜுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிய தோனி, ஃபீல்டிங் செட் செய்வதிலும் உதவினார்.

கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது.

ஆர்சிபியை துரத்தும் தோல்வி - சிஎஸ்கே சாதனை

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் தோல்வி 17வது ஆண்டாகத் தொடர்கிறது. 2008ஆம் ஆண்டுக்குப் பின் சேப்பாக்கத்தில் ஆர்சிபியால் இன்னமும் வெற்றி பெற முடியவில்லை என்ற அவப்பெயர் நீடிக்கிறது.

அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணியாகத்தான் இருக்கும்.

ஆட்டம் முடிந்தபின் மைதானத்தில் “இது எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் ஒலித்தபோது, ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே கூறுவதுபோல் இருந்தது. டிஜே-வின் சமயோஜித பாடலை ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர்.

முஸ்தபிசுர் ‘முறுக்குப்பிழிதல்’ நுட்பம்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் முக்கியக் காரணங்கள். அதிலும் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஸ்லோ-பால் நுட்பம் முதல் போட்டியிலேயே நன்கு பலன் அளித்தது.

“முறுக்குப் பிழிதல்” போல் கையை மடக்கி வைத்து பேட்டர்களை ஏமாற்றும் அந்த ஸ்லோ-பால் நுட்பம் அவருக்கு பவர்ப்ளேவில் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தது. 2வது ஸ்பெலில் பந்துவீச வரும்போது, கோலி, கிரீன் என இரு பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிஎஸ்கே பணியைச் சுலபமாக்கினார்.

சிஎஸ்கே அணியின் அறிமுக பந்துவீச்சாளர் “ஃபிஸ்(Fiz)” எனப்படும் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அதை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை.

இதனால்தான் ஆர்சிபியை 100 ரன்களுக்குள் சுருட்ட முடியாமல் கூடுதலாக 95 ரன்களை சேர்க்க முடிந்தது. அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர்(ஃபிஸ்) ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பட்டையைக் கிளப்பிய ரவீந்திரா

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

அதேபோல மற்றொரு அறிமுக வீரர், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அறிமுக ஆட்டத்தைப் போல் பேட் செய்யாமல் பட்டையைக் கிளப்பிவிட்டார்.

அவரின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 246 என்று மிரட்டலாக இருந்தது. 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த ரவீந்திரா கணக்கில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும். தொடக்கத்தில் ரவீந்திரா, ரஹானே அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் சிஎஸ்கேவின் வெற்றியை எளிதாக்கியது.

‘என்னுடன் தோனி இருக்கிறார்’

கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த கெய்க்வாட் பேசுகையில், “தொடக்கத்திலேயே கட்டுக்கோப்பாகச் செயல்பட்டோம், முதல் 3 ஓவர்கள் முடிந்து, சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தபின் ஆட்டம் எங்கள் வசம் வந்தது. இன்னும் 15 ரன்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம்.

ஆர்சிபியும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. மேக்ஸ்வெல், டூப்ளெஸிஸ் விரைவாக ஆட்டமிழந்தது எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. இதனால்தான் அடுத்த 5 ஓவர்களை கட்டுப்படுத்த முடிந்தது.

கேப்டன்சியை மிகவும் ரசித்துச் செய்கிறேன், கூடுதலாக எந்த அழுத்தமும் இல்லை. ஒருமுறைகூட அழுத்தமாக இருப்பதாக நினைக்கவில்லை ஏனென்றால் என்னுடன் தோனி இருக்கிறார்.

பேட்டர்களுக்கு அவர்களின் பணி என்பது தெளிவாகத் தெரிந்திருப்பது வெற்றியைச் சுலபமாக்குகிறது, சேஸிங்கை எளிதாக்குகிறது,” எனத் தெரிவித்தார்.

சிக்ஸர் முக்கியம்

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பது என்பது வெற்றிக்குப் பெரிதாக உதவாது. அது ஸ்ட்ரைக்கை தக்கவைக்க உதவுமே தவிர வெற்றியின் பாதையை கடினமாக்கிவிடும்.

மாறாக, அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள்தான் வெற்றியின் அருகே கொண்டு செல்லும். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 சிக்ஸர்கள் அடித்த நிலையில், சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக 9 சிக்ஸர்களை விளாசியது, 10 பவுண்டரிகள் எடுத்தது. ஆர்சிபி அணி 14 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடிக்க முடிந்தது.

ஆர்சிபி-யின் ‘ஓட்டைகள்’

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

பவர்ப்ளே ஓவர்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அதை சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆர்சிபி அணி அதிரடியான தொடக்கத்தை அளித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது.

ஆனால், அடுத்த 2 ஓவர்களில் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆர்சிபியின் தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் அனைத்து பேட்டர்களும் பங்களிப்பு செய்ததுதான் வெற்றி, தோல்விக்கான வேறுபாடு.

அதிலும் ரஹானே, டேரல் மிட்ஷெல் என அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் பவுண்டரி அடிப்பதைவிட, சிக்ஸர்கள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தியதன் நுட்பம் ஆர்சிபிக்கு புரியவில்லை. வெற்றியை எளிதாக நெருங்கும் வழியை சிஎஸ்கே கையில் எடுத்தபோது, அதைத் தடுக்கும் வகையில் பந்துவீச்சை ஆர்சிபி பலப்படுத்தவில்லை.

ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையோடு ஒப்பிடும்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தீக்சனா வரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

ஆனால், 9 பேட்டர்களை அல்லது 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு ஆர்சிபியில் பந்துவீச்சு பலம் பொருந்தியதாக இல்லை என்பதா இருக்கின்ற பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை என்பதா எனத் தெரியவில்லை.

ஏனென்றால், அல்சாரி ஜோஸப், கேமரூன் கிரீன் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டு சிஎஸ்கே ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். கேமரூன் கிரீன் பயன்படுத்திய “ஸ்லோவர் கட் பால்”, ஜோஸப்பின் அதிவேகம், “ஷார்ட்பால் பவுன்சர்” ஆகியவை நன்கு பலன் கொடுத்தது.

“ஷார்ட் பால்” உத்தியை இன்னும் திட்டமிட்டுக் கையாண்டிருந்தால், சிஎஸ்கே ரன்ரேட்டை தொடக்கத்திலேயே மட்டுப்படுத்தி இருக்க முடியும். மேலும், சுழற்பந்துவீச்சாளர் மயங்க் டாகர் அற்புதமாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மேஸ்க்வெலுக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கி அவரின் திறமையை டூப்ளெஸ்ஸிஸ் வீணடித்துவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் வேகப்பந்துவீச்சாளர்களையே டூப்ளெஸ்ஸிஸ் நம்பியது ரன்கள் எளிதாகக் குவியக் காரணமாக அமைந்தது.

‘சேஸிங் கிங்’ ஜடேஜா

சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மிட்ஷெல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், துபே களமிறங்கியபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அவரின் பேட்டிங் 13 பந்துகளுக்கு 7 ரன்கள் என மந்தமாகவே இருந்தது.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

துபே ஷார்ட் பந்துகளுக்கு திணறுகிறார் எனத் தெரிந்து கேமரூனும், ஜோஸப்பும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், தன்னை நிலைப்படுத்திய துபே, வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா பேட்டிங்கில் 2 டாட் பந்துகளை மட்டுமே சந்தித்தார், பெரும்பாலான பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் ரன்களை சேர்த்தது சிஎஸ்கேவின் நெருக்கடியைக் குறைத்தது.

ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்து 27வது முறையாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை தோனியுடன் சேர்ந்து எந்த பேட்டரும் சேஸிங்கில் இதுபோன்று வெற்றிகரமாகச் செயல்பட்டதில்லை.

ஆர்சிபி அணிக்கு டூப்ளெஸ்ஸிஸ், கோலி நல்ல தொடக்கத்தை அளித்தனர். தேஷ்பாண்டே, சஹர் ஓவர்களில் பவுண்டரிகளாக டுப்ளெஸ்ஸிஸ் வெளுத்ததால், 4 ஓவர்களில் ரன்ரேட் 10க்கு உயர்ந்தது. ஆனால், முஸ்தபிசுர் 5வது ஓவரை வீச வந்தவுடன் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது.

அதிரடியாக ஆடிய டூப்பளசிஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் சிறிது கூடுதல் பவுன்ஸரை வீசியவுடன் வந்த வேகத்தில் பட்டிதாரும் டக்-அவுட்டில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்துவந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தீபக் சஹர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். 41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

கோலியின் மந்தமான பேட்டிங்

நான்காவது விக்கெட்டுக்கு கோலி, க்ரீன் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து அணியைக் கொண்டு சென்றனர்.

இதுபோன்ற நேரத்தில் “ஆங்கர்ரோல்” செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு ஆமைவேகத்தில் கோலி ரன்களை சேர்ப்பதுதான் அவர் மீது கிரிக்கெட் விமர்சர்கள் வைக்கும் பெரிய விமர்சனத்துக்கு காரணமாக இருக்கிறது. கோலி சேர்த்த 20 ரன்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும்.

ஆர்சிபி தடுமாறிய பின் கோலியின் மந்தமான ஆட்டத்தால், ரன்ரேட் வீதம் கடுமையாகக் குறைந்தது. கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் விளையாடியதற்குப் பதிலாக பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறிய கேமியோ ஆடிச் சென்றிருக்கலாம்.

டிகே, ராவத் அதிரடி

பன்னிரண்டாவது ஓவரை முஸ்தபிசுர் பந்துவீச வந்தபோது அந்த ஓவரில் விராட் கோலி(20) விக்கெட்டையும், கிரீன்(18)விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி கொடுத்தார்.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம், IPL/Twitter

ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களை கடந்தது.

ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன்வேகத்தை அதிகரித்தனர். தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும், டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர். ராவத் 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியைத் தூக்கி நிறுத்தினர். கடந்த ஓர் ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டிகே நேற்று அருமையான ஃபினிஷர் ரோலை செய்தார். அவர் கடந்த சீசனில் மோசமாக ஆடிய குறையை முதல் போட்டியிலேயே நிவர்த்தி செய்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)