மாணவர்களே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்: ஐரிஸ் டீச்சர் பாடம் எடுப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவு
படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் ஐரிஸ்
    • எழுதியவர், சு.மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆசிரியர் மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ளது ‘கடுவாயில் தங்கல் தொண்டு அறக்கட்டளை உயர்நிலைப் பள்ளி’ (Kaduvayil Thangal Charitable Trust- KTCT Higher Secondary School). இங்குதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் (IRIS) எனப் பெயரிட்டுள்ளனர் இதை உருவாக்கிய ஆதித்யன், முகமது முபாரக், முகமது தியாஸ், அபிஜித் மற்றும் ஆலியா ஆகியோர் அடங்கிய மாணவர் குழுவினர். இவர்கள் அனைவரும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.

ஐரிஸ் உருவானது எப்படி?

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடல் டிங்கரிங் லேப் என்பது மாணவர்களிடம் உள்ள கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி.

கடுவாயில் தங்கல் பள்ளி மாணவ குழுவினர் மேக்கர்ஸ் லேப் (Makers Lab Edu Tech) என்ற அமைப்பின் தொழில்நுட்ப உதவியோடு பள்ளியில் இயங்கும் அடல் டிங்கரிங் லேப் வழியாக இந்த ஐரிஸ் ஆசிரியையை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அடல் டிங்கரிங் லேப் என்பது மாணவர்களிடம் உள்ள கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி.

ஐரிஸ் ஆசிரியையின் கழுத்துப் பகுதியில் உள்ள மைக் மூலம் மாணவர்கள் கேட்கும் கேள்விகள் ஆசிரியையால் உள்வாங்கப்படுகிறது. குரல் வடிவில் உள்வாங்கப்படும் கேள்வி ஜெனரேடிவ் ஏஐ (Generative AI) என்ற தொழில்நுட்பம் மூலம் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டு அதற்கான விடைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

பின்னர் மீண்டும் எழுத்து வடிவ பதில், குரல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு ஐரிஸ் ஆசிரியையால் கற்றுத் தரப்படுகிறது.

மின்சார உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் யு.பி.எஸ் மூலம் ஐரிஸ் என்ற இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியை இயங்குகிறது. ஐரிஸ் ஆசிரியை நடந்து வருவது அதன் கைகள், கழுத்து ஆகியவற்றின் அசைவு ஆகியவை புளூடூத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

எதிர்கால திட்டம்

செயற்கை நுண்ணறிவு
படக்குறிப்பு, தற்போது ஒரு செயலி மூலம் ஐரிஸ் ஆசிரியையின் அசைவுகள், நகர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஐரிஸ் ஆசிரியை ஒரு முன்மாதிரி வடிவம்தான் (Prototype) எனக் கூறும் மாணவர்கள் வரும் காலங்களில் அதில் பல்வேறு கூடுதல் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஐரிஸ் ஆசிரியைக்கு கேமராக்கள் பொருத்த உள்ளோம். இதனால் இனி ஐரிஸ் ஆசிரியை மாணவர்களைத் தனித்தனியாக அடையாளம் கண்டு அவர்களின் பெயரைக் கூறி அவர்களிடம் கேள்விகள் கேட்பார்.

தற்போது ஒரு செயலி மூலம் ஐரிஸ் ஆசிரியையின் அசைவுகள், நகர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. வரும் காலங்களில் சென்சார்கள் பொருத்துவதன் மூலம் ஐரிஸ் ஆசிரியை வழியில் உள்ள தடங்கல்களை அறிந்து தானாக நடக்க, இயங்க ஏதுவான விதத்தில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

"மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தண்டணை வழங்குவார்கள். சரியாகப் படிக்கவில்லை என்றால் அதை பலமுறை எழுதச் சொல்வார்கள். வீட்டுப் பாடம் எழுதச் சொல்வார்கள், வகுப்பில் இருந்து வெளியேற உத்தரவிடுவார்கள். இந்தக் காரணங்களால் எனவே மாணவர்களுக்கு ஆசிரியர்களுடன் பேசவே சற்று பயம் கலந்த தயக்கம் இருக்கும்.

ஆனால் ஐரிஸ் ஆசிரியை தண்டணை தர மாட்டார், பலமுறை எழுதச் சொல்ல மாட்டர், எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப் பாடம் தர மாட்டார் என்பதால் மாணவர்களுக்கு ஐரிஸ் ஆசிரியையுடன் உரையாட மகிழ்ச்சியாக உள்ளது," என்கின்றனர் மாணவர்கள்.

தற்போது இப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒரு பாடம் எடுத்த பிறகு வாரம் ஒரு முறை அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள், ஐரிஸ் ஆசிரியை வைக்கப்பட்டிருக்கும் சோதனைக்கூடத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அங்கு மாணவர்கள் ஐரிஸ் ஆசிரியையிடம் அந்தப் பாடம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டால் அதற்கு ஐரிஸ் ஆசிரியை பதில் வழங்குகிறார்.

ஒரு கேள்விக்கு 40 வார்த்தைகள் என்ற அளவு வரை ஐரிஸ் ஆசிரியையால் தற்போது பதிலளிக்க முடியும். அந்த வகையில்தான் மாணவர்களின் இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஐரிஸ் ஆசிரியையால் பதில் வழங்க முடிகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)