நீட் விலக்கு, சிஏஏ ரத்து: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநர்களை நியமிப்பது, மீண்டும் திட்டக்குழுவை அமைப்பது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, சிஏஏ சட்டம் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் தந்திருக்கிறது தி.மு.க. இவை எந்த அளவுக்கு சாத்தியம்?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை புதன்கிழமையன்று அக்கட்சியின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு
இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழு தயாரித்தது. டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எம். அப்துல்லா, எழிலன் நாகநாதன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
தேசிய அளவில் செய்யப்பட வேண்டிய கொள்கை மாற்றங்கள், தேசிய அளவிலான திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வாக்குறுதிகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

பட மூலாதாரம், DMK
அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
இந்தத் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியில் சில முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
- முதலாவதாக, மத்திய - மாநில அரசுகளின் உரிமை குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட நான்கு ஆணையங்களின் பரிந்துரைகளை பரிசீலனை செய்து, மாநிலங்களுக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வலியுறுத்தப்போவதாக தி.மு.கவின் அறிக்கை கூறுகிறது.
- இதுதவிர, அரசியல்அமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்படும் பல வாக்குறுதிகளை இந்தத் தேர்தல் அறிக்கை முன்வைத்திருக்கிறது:
- "மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில அரசைக் கலந்தாலோசித்து நியமனங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆளுநர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநில அரசுகளைக் கலைக்க வழிவகுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு நீக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பட மூலாதாரம், Getty Images
- உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளையும் மத்தியப் பணியாளர் தேர்வாணயத்தின் தேர்வுகளையும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக தமிழை பிரகடனப்படுத்த வேண்டும். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343ல் திருத்தம் கொண்டுவரப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
- அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் உரிய நிதி ஒதுக்கப்படும்.
- இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வந்த தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தலைமைக் கணக்காயர் அலுவலகம், பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய மருத்துவக் குழு, தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சை அமைப்புகள் தற்போது ஆபத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில், அவை மீண்டும் சுயேச்சையாக இயங்குவது உறுதிசெய்யப்படும்.
- ரயில்வே நிர்வாகத்தை படிப்படியாக மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் மெட்ரோ மற்றும் ரயில்வே துறைக்கு இடையில் ஒத்துழைப்பு ஏற்பட இது வசதியாக இருக்கும் என இந்தத் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
- மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக் குழு அமைக்கப்படும். நிடி ஆயோக் அமைப்பு கலைக்கப்பட்டு, திட்டக் குழு மீண்டும் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். சிஏஏ சட்டம் ரத்து செய்யயப்படும். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் தடுக்கப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். பல்கலைக்கழக ஆளுநர் நியமனங்களை மாநில அரசுகளே மேற்கொள்ள சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

பட மூலாதாரம், Getty Images
- மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். திட்டக்குழுவைப் போல நிதிக் குழுவும் நிரந்தரக் குழுவாக அமைக்கப்படும்.
- ராபர்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்படும்.
- ஓய்வுபெற்ற நீதிபதிகள், மத்திய அரசின் ஓய்வுபெற்ற செயலர்கள் தனியார் நிறுவனங்களிலோ, அரசியல் கட்சிகளிலோ இணைய காத்திருப்புக் காலம் 2 ஆண்டுகளாக இருக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
- ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். உடனடியாக தேர்தல் நடத்தப்படும்.
- யுபிஎஸ்சி தேர்வுக் கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.
- நெருக்கடி நிலை காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
- பத்தாண்டுகளில் பா.ஜ.க. அரசு கொண்டுவந்த மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்தும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
- தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக அகற்றப்படும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கைவிடப்படும். மக்களவைத் தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே தொடர ஆவன செய்யப்படும்.
- செஸ் வரியை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க வலியுறுத்தப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியை 42 முதல் 50 சதவீதம் வரை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.
- பொதுத் துறை நிறுவனங்களில் அரசாங்கப் பங்குகள் விற்கப்படுவது நிறுத்தப்படும். தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்த ஏதுவான ஐபிசி சட்டத்தின் பிரிவு 124 நீக்கப்படும்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதோடு, சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமை குறித்த கணக்கெடுப்பும் மத்திய அரசால் நடத்தப்படும்.
- அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
- இவை தவிர, நிதி சார்ந்த பல வாக்குறுதிகளையும் தி.மு.க. அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிதி சார்ந்த வாக்குறுதிகள்
- இந்தியா முழுவதும் கூட்டுறவு அமைப்புகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- அனைத்து மாநில மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அளிக்கப்படும். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
- பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் எரிவாயு உருளை 500 ரூபாய்க்கும் வழங்கப்படும்.
- வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாதபோது, அபராதம் விதிக்கப்படும் முறை நீக்கப்படும்.
- கடந்த 2019ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டால், பல வாக்குறுதிகள் இந்தத் தேர்தல் அறிக்கையில் மீண்டும் இடம்பெற்றுள்ளன.
- குறிப்பாக, மாநில அரசுகளைக் கலைக்க ஏதுவாக உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356ஐ நீக்கவது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் இணை அலுவலக மொழியாக தமிழை பயன்படுத்த வலியுறுத்துவது, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வலியுறுத்துவது, கச்சத் தீவை மீட்பது, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களின் சுயாட்சியை உறுதிசெய்வது, மீண்டும் திட்டக் குழுவை உருவாக்குவது, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, நீட் தேர்வை நீக்குவது, கல்விக் கடன் தள்ளுபடி, ஜாதி வாரிக் கணக்கீடு, இலங்கைத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை, சேது சமுத்திரத் திட்டம் போன்றவை கடந்த தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தன.
- மாநிலங்களுக்குக் கூடுதல் சுயாட்சி, சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை தி.மு.க. நீண்ட காலமாகவே தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி வருகிறது.
- அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தி.மு.க., அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது எந்த அளவுக்கு இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த முடியும் என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

பட மூலாதாரம், FACEBOOK
பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?
"நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைக்கு பெரிய வலு இருக்காது. இந்தியா முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களில் ஒரு பரந்த புரிந்துணர்வை ஏற்படுத்திய பிறகே பல விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தால் அந்த ஆட்சி எப்படியிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு பாதையை வேண்டுமானால் இந்தத் தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவது குறித்து பல அறிவிப்புகள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதனை எல்லா கட்சிகளும் ஏற்குமா என்பதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும் பட்சத்தில், ஆட்சி அமைந்த பிறகு உருவாகும் குறைந்தபட்ச செயல்திட்டமே எதிர்பார்க்கத்தக்க வாக்குறுதிகளாக அமையும் என்கிறார் ஷ்யாம்.
2004ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந்த பிறகு அதுபோன்ற ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "மற்றபடி, இதுபோல மாநிலக் கட்சிகள் வெளியிடும் அறிக்கைக்கோ, தேசியக் கட்சிகளின் மாநிலப் பிரிவுகள் வெளியிடும் அறிக்கைக்கோ பெரிய உத்தரவாதம் அளிக்க முடியாது. அதை எந்த மாநிலத்தில் இருக்கும் கட்சி சொன்னாலும் அதுதான் நிலை" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், PRIYAN
தி.மு.க. அளித்திருக்கும் வாக்குறுதிகள் பலவற்றை இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகள் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் தனித்தனியாக வாக்குறுதிகளை அளித்தால் அவை எந்த அளவுக்கு ஏற்கத்தக்கதாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். மாறாக, இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட வேண்டும். அந்த செயல்திட்டம்தான் இந்தியா கூட்டணியின் வாக்குறுதியாக இருக்கும்.
தற்போது மும்பையில் நடந்த கூட்டத்தில்கூட அதைச் செய்திருக்கலாம். ஒரு மாநிலக் கட்சி வெளியிடும் வாக்குறுதிகளில் சிலவற்றை, அவர்கள் கூட்டணி அரசு அமையும்போது புதிய அரசில் வலியுறுத்தலாம். மற்றபடி, முழுமையாகச் செயல்படுத்துவது கடினம்" என்கிறார் ப்ரியன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












