பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு - என்ன செய்தார்?

ஷோபா கரந்தலஜே

பட மூலாதாரம், ANI

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்ர் ஷோபா கரந்தலஜே மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது கருத்துக்கு ஷோபா மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஷோபா கரந்தலஜே என்ன பேசினார்? தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளனர்? விரிவாகப் பார்க்கலாம்.

ஷோபா கரந்தலஜே என்ன பேசினார்?

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் இந்துக்களுக்கு எதிராக மாநில காங்கிரஸ் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

"தொழுகை முடிந்ததும் தான் செல்ல முடியும் என போலீசார் கூறினர்... இங்கு யார் ஆட்சி நடக்கிறது என்று சித்தராமையாவிடம் கேட்க விரும்புகிறேன். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? இங்கு இந்துக்களுக்கு அவமதிப்பு தொடர்ந்து நடக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள். பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கின்றனர். அப்படித்தான் ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து மற்றொருவர் வந்து சட்டமன்றத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்புகிறார். கேரளாவில் இருந்து வந்து மற்றொருவர் கல்லூரி மாணவர்கள் மீது ஆசிட் வீசியுள்ளார்." என்று அவர் பேசினார்.

ஷோபா கரந்தலஜே

பட மூலாதாரம், Shoba Karandlaje/Facebook

மத்திய அமைச்சர் பேச்சுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னணி பாஜக தலைவரும், மத்திய இணையமைச்சருமான ஷோபா கரந்தலஜேவின் பேச்சு தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாத கருத்துகள் இனியும் தொடராத வண்ணம் தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஷோபா கரந்தலஜே மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்ர் ஷோபா கரந்தலஜே மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளள்து. மதுரை சைபல் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திடமும் ஷேபா கரந்தலஜே மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஷோபா கரந்தலஜே

"பிரதமர் முதல் தொண்டர் வரை..." - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக இத்தகைய கருத்துகளை தெரிவிக்கும் நபர் ஒன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். இத்தகைய கருத்துகளை கூற அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகிறது. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் மறுப்பார்கள்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷோபா கரந்தலஜே

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.

இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அமைப்புகளும் மத்திய அமைச்சர் பேச்சைக் கண்டித்துள்ளன.

ஷோபா கரந்தலஜே பேச்சால் சர்ச்சை

பட மூலாதாரம், CCTV

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் நடந்தது என்ன?

பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அந்தப் பெண் 40 சதவீதம் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஐந்து வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு மதியம் 12:55:32 மணிக்கும், இரண்டாவது குண்டுவெடிப்பு 12:55:37 மணிக்கும் நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிவிபத்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் வாஷ்பேசின் பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான ஆணிகள், நட்டுகள், போல்ட்கள் சிதறிக் கிடந்தன.

குண்டுவெடிப்பு நடத்திய நபர் முதலில் ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசின் அருகே உள்ள மரத்தடியில் பையை வைத்துவிட்டுச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவையும் கர்நாடக காவல்துறை வெளியிட்டது.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை கைது செய்ய 10 குழுக்களை கர்நாடக காவல்துறை அமைத்தது. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)