சேப்பாக்கம் மைதானம் 16 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு கொடுங்கனவாக இருப்பது ஏன்?

கோலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு 2024 சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

தோனியின் சொந்த மைதானமாகிப் போன சேப்பாக்கத்தைப் பொறுத்தவரை, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கொடுங்கனவுதான். புள்ளிவிவரங்களே இதற்குச் சாட்சிகளாக இருக்கின்றன.

தோனி எனும் மாபெரும் சக்தி சிஎஸ்கே அணியை 14 ஆண்டுகளாக வழிநடத்தியநிலையில் புதிய கேப்டனுடன் இந்த சீசனை எதிர்கொள்கிறது.

தோனி களமிறங்குவாரா, ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா, பேட் செய்வாரா என்பதை தெரிந்து கொள்ளவும், அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டைப் பார்க்கவும், மின்னல்வேக விக்கெட் கீப்பிங்கை ரசிக்கவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்றைய முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு எந்தவிதமான ரோல் கிடைக்கும், விக்கெட் கீப்பராக களமிறங்குவாரா அல்லது இம்பாஃக்ட் ப்ளேயர் ரோலில் களமிறங்குவாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம், IPL/Twitter

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட்

அடுத்த தலைமுறை கேப்டன்களுடன் களம் காணும் அணிகள்

முதல் போட்டியே ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புக் கொண்ட ஆட்டமாக அமைந்துள்ளது. இரு பெரிய ஜாம்பவான்களான எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் களமிறங்கும் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஒரு காலத்தில் சிஎஸ்கே அணிக்காக ஆத்மார்த்தமாக விளையாடிய, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் ஆலோசனையில் செயல்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் டூபிளசிஸ் இன்று ஆர்சிபி அணிக்கு கேப்டனாக களமிறங்குகிறார்.

இதே சென்னை மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக டூபிளசிஸ் விளையாடும்போது அவரின் ஷாட்களையும், அதிரடி சிக்ஸர்களையும் ரசித்த சென்னை ரசிகர்கள், இன்று ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடுவதையும் ரசிப்பார்கள் என்று நம்பலாம்.

சிஎஸ்கே அணியில் டூபிளசிஸ் தொடக்க வீரராக களமிறங்கியபோது, அவருடன் சேர்ந்து களமாடிய ருதுராஜ் கெய்க்வாட்தான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டமே ஏதோ “தேஜாவு” நடப்பதுபோல்தான் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் காட்சியளிக்கிறது.

சிஎஸ்கே அணியில் விளையாடும் பல வீரர்களுடன் ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் விளயைாடியுள்ளார். அந்த அணி வீரர்களின் பலம், பலவீனம் அனைத்தையும் அருகருகே இருந்து பார்த்ததால், டூபிளசிஸ்க்கு சிஎஸ்கே அணிக்கு எதிராக வியூகம் அமைப்பது ஓரளவுக்கு எளிதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆர்சிபிக்கு சென்னை மைதானம் சாதகமாக இல்லாதது ஏன்?

ஆனாலும், சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே ஆர்சிபி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியை தோல்வி துரத்தி துரத்தி அடித்து வருகிறது. அதிலும் ஓர் ஆண்டு, 2 ஆண்டுகள் அல்ல 16 ஆண்டுகள். ஐபிஎல் டி20 தொடர் தொடங்கிய 2008-ம் ஆண்டில் சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் கடைசியாக சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியது.

அதன்பின் கடந்த 16 ஆண்டுகளாக முயற்சித்தும் சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி-யால் தோற்கடிக்க முடியவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் 70 ரன்களில் ஆர்சிபி அணி சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆக, சேப்பாக்கம் மைதானம் என்றாலே ஆர்சிபி அணிக்கு கிலி ஏற்பட்டுவிடுகிறது. அந்த “சென்டிமென்ட் கிலி” இந்த ஆட்டத்திலும் தொடருமா அல்லது அந்த அச்சத்தை உடைத்து, முதல் ஆட்டத்தை வெற்றிகரமாக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.

இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடர்களில் இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன.இதில் ஆர்சிபி அணி 10 முறையும், சிஎஸ்கே அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மோதியுள்ளனர். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறார்கள் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமையும். இதுவரை 9 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 8 ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது.

2010, 2011(3 ஆட்டம்), 2012,2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி மோதினாலும் அனைத்து ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

சுழற்பந்துவீச்சு வலிமை

சென்னை சேப்பாக்கம் மைதானம் கறுப்பு களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளம். ஸ்லோ விக்கெட் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்களின் கைதான் ஓங்கி இருக்கும் என்பது கடந்தகால வரலாறு. அதற்கு ஏற்றார்போல், சிஎஸ்கே அணியில் தீக்சனா, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகிய 3 தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

ஆர்சிபி செய்த தவறுகள் என்ன?

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆனால், ஆர்சிபி அணியோ இந்த முறை வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தி, சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டைவிட்டுள்ளது. சொல்லிக்கொள்ளும் வகையில், உலகத் தரம்வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட ஆர்சிபி அணியில் இல்லை என்பது பெரிய பலவீனம்.

மயங்க் தாக்கர், ஹிமான்சு ஷர்மா, கரன் ஷர்மா, ஸ்வப்னில் சிங் என 4 சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும், ஒருவர் கூட சர்வதேச அனுபவம் இல்லாதவர். ஐபிஎல் போட்டி என்பது விளையாட்டு மட்டுமல்ல, ஒவ்வொரு வெற்றியும், புள்ளியும் கோடிக்கணக்கான மதிப்புள்ளது. இதில் அனுபவமமற்ற இந்த சுழற்பந்து வீச்சாளர்கள் லைன்லென்த்தில் பந்துவீசத் தவறினால், அதற்கான விலை முதல் போட்டியிலேயே ஆர்சிபிக்கு மோசமானதாக அமைந்துவிடும்.

ஆதலால் பந்துவீச்சை நம்பி ஆர்சிபி களமிறங்கினால், அது விஷப்பரிட்சையாகிவிடும். பெங்களூருவில் நடந்தாலும் சரி, வெளிமாநிலத்தில் நடக்கும் ஆட்டமானாலும் வலுவான பேட்டர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி உள்ளது.

தோனி

பட மூலாதாரம், Getty Images

ஓர் ஆண்டுக்குப்பின் தோனி

42 வயதான தோனி ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் முழங்கால் அறுவை சிகிச்சையை தோனி செய்து கொண்டபின் பயிற்சி இன்றி இருந்தார். இப்போது ஓர் ஆண்டுக்குப்பின் பயிற்சியில் ஈடுபட்டு, களமாடுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.

தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீரர்களே, சில ஆட்டங்களில் மண்ணைக் கவ்வும்போது, ஓர் ஆண்டுக்குப்பின் தொழில்முறை கிரிக்கெட்டுக்கு திரும்பிய தோனி என்ன செய்யப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பு.

சிஎஸ்கே அணி இரு பெரிய பலவீனத்துடன் இன்று களமாடுகிறது. நடுவரிசையில் களமிறங்கும் ஷிவம் துபே காயம் காரணமாக உடற்தகுதியின்றி தவிக்கிறார், வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவும் தசைப்பிடிப்பு காயத்தால் சில போட்டிகளுக்கு களமிறங்கமாட்டார் எனத் தெரிகிறது.

கோலியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொடர்

அதேபோல விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்துக்குப்பின் எந்த சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் இருந்து ஐபிஎல் பயிற்சிக்காக நேரடியாக வந்தார். கடந்த ஐபிஎல் தொடருக்குப்பின், ஜனவரியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2டி20 போட்டிகளில் கோலி விளையாடினார். ஏறக்குறைய நீண்ட இடைவெளிக்குப்பின் டி20 ஃபார்மெட்டுக்கு கோலி வந்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடர் கோலிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனென்றால் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்ற தகவல் உலவிவருகிறது. ஒருவேளை ஐபிஎல் டி20 தொடரில் விராட் கோலியின் பேட்டிங் அற்புதமாக அமைந்து, ஆகச்சிறந்த ஃபார்முக்கு திரும்பினால் இந்திய அணிக்குள் சென்று டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம். இல்லாவிட்டால், கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு சிக்கல் ஏற்படலாம்.

ஆர்சிபி

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபியின் வியூகம் என்ன

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அனுஜ் ராவத், மகிபால் லாம்ரோர், சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோரை களமிறக்க வேண்டியிருக்கும். ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தால், சுழற்பந்துவீச்சாளர் ஹிமான்சு அல்லது கரன் ஷர்மா இவர்களில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கலாம். வேகப்பந்துவீச்சில் அல்சாரி ஜோஸப், சிராஜ் இருவர் தவிர்த்து, விஜயகுமார் அல்லதுஆகாஷ் தீப் இருவரில் ஒருவர் களமிறங்கலாம்.

ஒருவேளை ஆர்சிபி அணி முதலில் பந்துவீசினால் அனுஜ் ராவத், மகிபால் லாம்ரோர், சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோரை அமரவைத்து, சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், GETTY IMAGES

வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி

ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே சமவலிமை கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வெற்றி தோல்விகள் அடிப்படையில் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தினாலும் சமபலம் பொருந்தியவை என்பதில் சந்தேகமில்லை.

எந்த நேரத்தில் எந்தெந்த வீரர்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி அமைந்துள்ளது.அந்தப் பணியை தோனி கடந்த காலங்களில் சிறப்பாகச் செய்து வெற்றி பெற்றார். ஆதலால் இந்த ஆட்டத்திலும் வீரர்களின் கலவை, தேர்வு, பயன்படுத்தும் விதம், வியூகம் ஆகியவைதான் அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ஆர்சிபி அணியின் மேக்ஸ்வெலை சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா இதுவரை 6 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஜடேஜாவின் 51 பந்துகளை இதுவரை சந்தித்த மேக்ஸ்வெல் 70 ரன்களை எடுத்து 5 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெலை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்தது ஜடேஜாவைத் தவிர வேறு எந்தப் பந்துவீச்சாளரும் இல்லை என்பதால், மேக்ஸ்வெல், ஜடேஜா மோதல் சுவாரஸ்யமாக அமையலாம்.

அல்சாரி ஜோஸ், பெர்குஷன் இருவருக்கும் எதிராக ருதுராஜ் கெய்க்வாட் கடந்த கால சீசன்களில் சிறப்பாக பேட் செய்துள்ளார். அல்சாரி ஜோஸப் வீசிய 25 பந்துகளில் கெய்க்வாட் 47 ரன்களும், பெர்குஷன் வீசிய 29 பந்துகளில் 56 ரன்களையும் ஐபிஎல் தொடரில் கெய்க்வாட் விளாசியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஷிகர் தவண் 1057 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 73 ரன்கள் தேவை. தற்போது விராட் கோலி 985 ரன்களில் உள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் கோலி கடந்த காலங்களில் மோசமாகவே விளையாடியுள்ளார். 23 பந்துகளில் 15ரன்கள் சேர்த்து 2 முறை கோலி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலி

பட மூலாதாரம், Getty Images

சென்னை அணியின் பலவீனங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்குவர். ஆனால், இருவருக்கே சர்வதேச அளவில் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். லைன் லென்த்தில் இருவருமே பெரிதாக பந்துவீசக்கூடியவர்கள் அல்ல.

சிஎஸ்கே அணியில் இருக்கும் காலத்தில், தோனியின் கைகளில் இருக்கும்போததான் இருவரும் விக்கெட் டேக்கர்களாக இருந்துள்ளனர், டெத் ஓவர்களிலும், பவர்ப்ளே ஓவர்களிலும் பந்துவீசியுள்ளனர். ஆனால் சர்வதேச தளத்தில் இருவரின் பந்துவீச்சும் சுமார் ரகத்துக்கும் கீழ்தான். இலங்கை வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவும் காயத்தால் சில போட்டிகளுக்கு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் தோனியால் நன்கு வளர்க்கப்பட்ட பதிரணா, சர்வதேச தளத்தில் அவரின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினர் என்பது தெரிந்ததே. ஆதலால், அனுபவமற்ற, தரமில்லாத வேகப்பந்துவீச்சுடன் சிஎஸ்கே களம் காண்கிறது.

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சு மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். மற்றவகையில் வேகப்பந்துவீச்சில் சிஎஸ்கே அணி பலவீனமாகவே இருக்கிறது. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படம். ஏனென்றால், ரவீந்திர ஜடேஜா, சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, தீக்சனா என பலரும் இருக்கிறார்கள்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம், Getty Images

ஆடுகளம் எப்படி?

சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஆட்டம்கூட மைதானத்தில் நடுப்பகுதியில் உள்ள விக்கெட்டில்தான் நடக்கிறது. இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். மாறாக கடந்த மாதம் நடந்த ரஞ்சிக் கோப்பையில் தமிழகம்-கர்நாடக அணிகள் மோதிய ஆடுகளத்தில் பந்து நன்கு டர்ன் ஆகக்கூடியது. அந்த விக்கெட்டில் ஆட்டம் நடக்கவில்லை.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை சர்வதேச அனுபவமுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் அல்சாரி ஜோஸப், பெர்குஷன், சிராஜ் ஆகியோர் உள்ளனர், உள்நாட்டிலும் சிறப்பாகச் செயல்படும் இளம் வீரர்களும் உள்ளது பெரிய பலம். சுழற்பந்துவீச்சில் சர்வதேச அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள் இருப்பது பெரியபலவீனம்.

லைன் லென்த்தில் தவறிவீசும்போது, பெரிய விலையை பந்துவீச்சாளர்கள் கொடுக்க நேரிடும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்களை கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் ஆர்சிபி இருக்கிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளுமே சமபலம் பொருந்தியதாகவே இருக்கிறது.

தோனி களமிறங்குவாரா?

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு தோனியிடம் இருந்து, இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சாதாரண விக்கெட் கீப்பராகவே தோனி செயல்பட்டாலும், கெய்க்வாட்டுக்கு பின்னால் “ சிறந்த மேய்ப்பாளராக” செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைதான் தோனியை கேப்டன் பதிவியை கெய்க்வாட்டுக்கு வழங்க வசதியாக இருந்தது. அணியில் விக்கெட் கீப்பராக 20 ஓவர்கள் செயல்பட்டாலும், இம்பாக்ட் ப்ளேயராக தோனி களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தால் நிச்சமயாக ப்ளேயிங் லெவனில் தோனிக்கு இடம் இருக்காது. ஒருவேளை விக்கெட்டுகள் சரிந்தால், தோனி இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கலாம். சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாக ஆடினால் தோனி களமிறங்காமல் இருக்கலாம்.

சிஎஸ்கே அணி சேஸிங் செய்தால் களத்தில் விக்கெட் கீப்பிங் செய்து, இம்பாக்ட் ப்ளேயர் விதியில் அவர் பேட்டிங் செய்யலாம். இல்லாவிட்டால் தோனிக்குப் பதிலாக சிஎஸ்கே அணி கூடுதலாக பந்துவீச்சாளர் அல்லது ஸ்பெஷலிஸ்ட் பேட்டரை களமிறக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)