முதல் போட்டியில் மிரட்டிய இங்கிலாந்து, கடைசியில் இந்தியாவிடம் சரணடைந்தது எப்படி?

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை

தரம்சாலாவில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதில் இருந்தே இந்தியாவின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பேஸ்பால் உத்தியுடன் இந்தியாவுக்குச் சவால் விட்ட இங்கிலாந்தின் மிகப்பெரிய, நான்காவது தொடர் தோல்வி இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தொடர் தோல்வியும் இதுதான்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் இங்கிலாந்துக்காக தனது நூறாவது டெஸ்டில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

டெஸ்ட் ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் ஸ்கிரிப்டை இப்படித்தான் டீம் இந்தியா எழுதியது.

முதல் இன்னிங்சில் பெரிய முன்னிலை

இந்தியா முதல் இன்னிங்சில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து நீடித்திருந்தனர். ஆனால் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர்.

முதல் 10 ஓவர்களிலேயே இங்கிலாந்தின் முதல் மூன்று வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். மதிய உணவுக்கு சற்று முன், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பென் ஃபோக்ஸை வெளியேற்றி அஸ்வின் தனது ஐந்தாவது விக்கெட்டை பெற்றார்.

பின்னர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் நம்பிக்கையை பும்ரா முற்றிலும் முறியடித்தார். சோயப் பஷீர் சிறிது நேரம் ரூட்டுடன் நிலைத்துநின்றார். இந்த இணை 48 ரன்களைச் சேர்த்தது.

பஷீர் இறுதியில் 13 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் பலியானார். ஜோ ரூட் தனது சதத்திற்கு 16 ரன்கள் தேவைப்படும்போதே ஆட்டமிழக்க, இங்கிலாந்து தொடரில் நான்காவது முறையாக தோல்வியடைந்தது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டனாக இருந்த பும்ரா

மூன்றாவது நாளில், ரோஹித் சர்மா முதுகில் பிடிப்பு காரணமாக பீல்டிங்கிற்கு வரவில்லை. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக இருந்தார். அவர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வரலாற்று 100வது டெஸ்டில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அஸ்வின் 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

முதல் இன்னிங்ஸில் ஜொலித்த குல்தீப் - அஸ்வின்

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை 218 ரன்களுக்குள் முடித்தனர்.

இந்திய இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அற்புதமான சதங்கள் அடங்கும். இவர்களைத் தவிர, தனது முதல் டெஸ்டில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரது 700வது விக்கெட்.

இந்த நிலையை எட்டிய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னும் மட்டுமே இதுவரை எழுநூறு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சோயப் பஷீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸ் 477 ரன்களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால்

இப்போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குல்தீப் முதல் இன்னிங்சில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்வு செய்யப்பட்டார்.

தொடரில் 712 ரன்கள் குவித்த இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது.

வெலிங்டனில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு, இரண்டு முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது.

தர்மசாலாவில் நடந்த மாபெரும் வெற்றி, இந்தியா 12 புள்ளிகளைப் பெற உதவியது. புள்ளிகள் சதவிகிம் 64.50 லிருந்து 68.51 ஆக அதிகரித்தது.

நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவிகிதம் 60 ஆக இருக்கிறது. ஆஸ்திரேலியா 59.09 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது

சரணடைந்த இங்கிலாந்து

இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எளிமையாக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேபோல முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28 ரன்கள் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது இந்திய அணியால் வெற்றி பெற இயலவில்லை. அப்போது இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

முதல் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “தோல்வி வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று கூறினார். ஆனால் அடுத்தடுத்து 4 தோல்விகள் வரும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் கடைசியில் போட்டியில் சரணடைவது போன்ற தோல்வி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் பாராட்டுகளைப் பெற்ற ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

“தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். அணியை அடுத்த போட்டிகளுக்கு முன்னெடுத்துச் செல்வோம்” என்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)