சிறுநீருக்கு வரி விதித்த ரோமானிய பேரரசர் - 'திரவ தங்கம்' எனும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
ரோமானியப் பேரரசர் வெஸ்பாசியன் தனது மகன் டைட்டஸின் மூக்கின் மேலே ஒரு தங்க நாணயத்தை வைத்து "துர்நாற்றம் வீசுகிறதா?" என கேட்டார்.
டைட்டஸ், "இல்லை" என்று பதிலளித்தார்.
வெஸ்பாசியன், "நாணயங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால், இந்த வாசனை சிறுநீரில் இருந்து வருகிறது" என்றார்.
வெஸ்பாசியனுக்கும் அவரது மகன் டைட்டஸ் ஃபிளேவியஸ் பெட்ரோவுக்கும் இடையிலான இந்த உரையாடலின் விவரங்களை ரோமானிய வரலாற்றாசிரியர் சூட்டோனியஸ் தந்துள்ளார் .
அவரைப் பொறுத்தவரை, இந்த உரையாடல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. டைட்டஸ் தனது தந்தை வெஸ்பாசியனால் சிறுநீர் வணிகத்தின் மீது விதிக்கப்பட்ட வரியை 'அருவருப்பானது' என்று குறிப்பிட்டுள்ளார்.
கயஸ் சூட்டோனியஸ் ரோமின் முதல் 12 சீசர்களின் சுயசரிதைகளை எழுதியதில் பெயர் பெற்றவர். ரோமானிய அரண்மனைக்கு அருகாமையில் இருந்ததால், ரோமானிய அரச குடும்பத்தைப் பற்றி அவர் நிறைய எழுதினார் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS
பண்டைய ரோமானியப் பேரரசில் சிறுநீர் ஒரு மதிப்புமிக்க பொருளாக இருந்தது. இது பொது கழிப்பறைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு பற்பசை தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டது.
அதற்கு 'வெக்டிகல் யூரின்' என்று வரி விதிக்கப்பட்டது. வெஸ்பாசியன் தவிர, இந்த சிறுநீரை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் நீரோ மன்னரும் இந்த சிறப்பு வரியை விதித்திருந்தார்.
சிறுநீரின் சேகரிப்பு மற்றும் பயன்பாடு ஆகிய இரண்டுக்கும் இந்த வரி கி.பி முதல் நூற்றாண்டில் ஐந்தாவது ரோமானிய பேரரசர் நீரோவால் விதிக்கப்பட்டது (அவரது ஆட்சியின் போது ரோம் எரிக்கப்பட்டது). ஆனால், அது பின்னர் ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த வரி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கி.பி. 69-ல் அவருக்குப் பின் வந்த ரோமானியப் பேரரசர் வெஸ்பாசியன் மீண்டும் இந்த வரியை விதித்தார்.

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS

பட மூலாதாரம், GETTY IMAGES
'திரவ தங்கம்' எனும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது?
ஓ.எஃப். ராபின்சன் 'பண்டைய ரோம்: நகர திட்டமிடல் மற்றும் நிர்வாகம்' (Ancient Rome: City Planning and Administration) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின்படி, ரோமில் 144 பொது கழிப்பறைகள் இருந்தன.
"இந்த பொது சிறுநீர் கழிப்பறைகளில் 'டோலியா கார்டா' என்று அழைக்கப்படும் வாளிகள் இருந்தன. இந்த வாளிகளில் சிறுநீர் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு செய்ய தாமதம் செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் ஏற்பாடும் இருந்தது" என அவர் எழுதுகிறார்.
அறிவியல் எழுத்தாளர் மோஹி குமாரின் கூற்றுப்படி, "சிறுநீர் யூரியாவின் ஒரு பெரிய மூலமாகும். இது நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் கரிம சேர்மமாகும். நீண்ட நேரம் சேமிக்கப்பட்டால், யூரியா அம்மோனியாவாக மாறும்" என குறிப்பிடுகிறார்.
கண்ணாடி, எஃகு, எண்ணெய் கறை போன்ற பல பொருட்களை சுத்தம் செய்ய இன்று பயன்படுத்தப்படும் திரவங்களில் அம்மோனியாவும் ஒன்றாகும்.
மோஹி குமாரின் கூற்றுப்படி, தண்ணீரில் உள்ள அம்மோனியா, வேதிவினை புரிந்து பொருள்களை அழிக்கும் ஒன்றாக செயல்படுகிறது. எனவே, விலங்குகளின் தோல்களை மென்மையாக்கவும், தோல் பதனிடவும் சிறுநீர் பயன்படுத்தப்பட்டது.
விலங்குகளின் தோலை சிறுநீரில் ஊறவைப்பதால் தோல் தொழிலாளர்கள் முடி மற்றும் சதைத் துண்டுகளை எளிதாக நீக்கினர்.
"சிறிதளவு அமிலத்தன்மை கொண்ட அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகளை அம்மோனியாவைப் பயன்படுத்தி அகற்றலாம். சிறுநீர் நிறத்தை மேம்படுத்துகிறது" என அவர் எழுதுகிறார்,
ராபின்சன் தனது புத்தகத்தில், "சிறுநீர் வாளிகளில் நிரப்பப்பட்டு, அது அம்மோனியாவாக மாறும் வரை வெயிலில் வைக்கப்பட்டது" என்று எழுதுகிறார்.

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS
சிறுநீர் பயன்பாடு
வான்கூவர் சன் (Vancouver Sun) நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், பண்டைய ரோமானியர்கள் தங்கள் பற்களை மெருகூட்டுவதற்கு சிறுநீரை மவுத்வாஷ் (mouthwash) ஆக பயன்படுத்தியதற்கு அம்மோனியா தான் காரணம் என்று நிக்கோலஸ் சோகிக் எழுதினார்.
ஆனால், ரோமானிய ராணுவம் மற்றும் ரோமானிய கலைப் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்த டாக்டர் மைக் பிஷப், "எல்லா ரோமானியர்களும் இதைச் செய்யவில்லை. கேடல்லஸ் என்ற கவிஞர் தனது ஒரு கவிதையில் இவ்வாறு செய்வதைக் கூட கேலி செய்தார்" என்று கூறுகிறார்.
ஜோசுவா ஜே., வரலாற்றாசிரியர் மற்றும் மாரிஸ்ட் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக உள்ளார். பண்டைய ரோமில், துணி துவைப்பவர்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சிறுநீரை இயற்கையான ப்ளீச்சிங் பொருளாகப் பயன்படுத்தி துணிகளைச் சுத்தம் செய்து பளபளக்கச் செய்ததாக அவர் எழுதியுள்ளார்.
இதைச் செய்ததற்காக அவர்கள் அவமரியாதையாகப் பார்க்கப்பட்டதாக அவர் எழுதுகிறார். இருப்பினும் அந்த காலகட்டத்தில் வெற்றிகரமான பல சலவையாளர்கள் இந்த வேலைக்கு நிறைய ஊதியம் பெற்றனர்.
பண்டைய ரோம் பற்றி ஆராய்ச்சி செய்த வரலாற்றாசிரியர் பி.கே. ஹார்வி , "அவர்கள் தங்கள் வேலையில் சிறுநீரைப் பயன்படுத்துவதை அவமதிப்புடன் பார்க்கப்பட்டனர். ஆனால், மறுபுறம் அவர்கள் ரோமில் அதிக ஊதியம் பெறுபவர்களாக இருந்தனர்" என்று எழுதியுள்ளார்.
"பல சலவைத் தொழிலாளர்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. சிறுநீர் அவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது. அதன் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு வரி விதிக்கப்பட்டது" என அவர் எழுதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ரோமானிய மக்கள் வீட்டில் குளிக்கவோ துணி துவைக்கவோ இல்லை. எனவே அவர்கள் தங்கள் துணிகளை சலவையாளர்களிடம் எடுத்துச் சென்று சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. எகிப்து மற்றும் கிரீஸிலும் சலவைத் தொழிலாளர்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று பேராசிரியர் ஜோசுவா எழுதுகிறார்.
"சலவையாளர்கள் பொது கழிப்பறைகளில் இருந்து முடிந்த அளவு சிறுநீரை சேகரிக்க முயன்றனர். இந்த சிறுநீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அதில் துணிகளை நனைத்தனர். சிலர் இந்த துணிகளை நசுக்க வற்புறுத்தப்பட்டனர். அவர்கள் மீது நடக்கச் சொன்னார்கள். இதன் மூலம், நவீன சலவை இயந்திரம் போல, துணிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து அழுக்கு மற்றும் கறைகள் அகற்றப்பட்டன" என அவர் எழுதுகிறார்.
"உடைகளை சுத்தம் செய்யும் இந்த முறை நீண்ட காலம் நீடித்தது. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகும், சோப்பு பயன்பாட்டுக்கு முன்னர் வரை, மக்கள் தங்கள் ஆடைகளை சிறுநீர் மூலம் சுத்தம் செய்தனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைமன் வெர்னீஸ் மற்றும் சாரா பெஸ்ட் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். அவர்கள் சிறுநீரை ' திரவ தங்கம் ' என்று அழைத்தனர். "சிறுநீர் தோலை மென்மையாக்குவதற்கும், துணிகள் மற்றும் கம்பளிகளை சுத்தம் செய்வதற்கும் சாயமிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டது" என்று அவர்கள் எழுதினர்.
"1850கள் வரை துணிகளுக்கு சாயமிடுவதற்கும் சுத்தம் செய்வதற்கும் சிறுநீர் அம்மோனியாவின் மதிப்புமிக்க ஆதாரமாக இருந்தது" என அவர்கள் குறிப்பிட்டனர்.

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS
சிறுநீர் வரி
ரோமானியப் பேரரசர் நீரோ சிறுநீர் வரியை ரத்து செய்தார். ஆனால், அவரது வாரிசான வெஸ்பாசியன் அதை மீண்டும் செயல்படுத்தினார்.
வரலாறு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் கர்ட் ரீட்மேன், மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், இதன் காரணமாக நீரோ சிறுநீர் விற்பனை மீதான வரியை விரைவில் ரத்து செய்தார் என எழுதியுள்ளார்.
சாமுவேல் மச்சாக்ஸ், நீரோ தனது கொள்கைகளால் முழு சாம்ராஜ்யத்தையும் திவாலாக்கிவிட்டார் என்று எழுதினார். நீரோவை மக்களுக்கு எதிரியாக செனட் அறிவித்தது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார், ரோமில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில்தான் வெஸ்பாசியன் வரி உருவானது. அவர் தனது நிதிப் பொறுப்புகள் மற்றும் ராணுவ பரப்புரைகளுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
வெஸ்பாசியன் பேரரசரானபோது, ஏகாதிபத்திய கருவூலம் காலியாக இருப்பதைக் கண்டுபிடித்தார்.
கர்ட் ரைட்மேனின் கூற்றுப்படி, அவரது தசாப்த கால ஆட்சியில் அவர் ரோமின் நிதி அமைப்பை சீர்திருத்துவதில் வெற்றி பெற்றார்.
வெஸ்பாசியன் கூறினார், "அவர் மூன்று மடங்கு வரி வருவாயை எதிர்கொண்டார். எனவே, நீரோ போலல்லாமல், அவர் அதை நீக்கவில்லை."
இந்த வரிக்கு எதிரானவர்கள் சிறுநீரில் பணம் சம்பாதித்தவர்கள். தோல் பதனிடுபவர்கள், ஜவுளி தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் பொது கழிப்பறைக்கு வெஸ்பாசியன் என பெயரிட்டனர்.
வெஸ்பாசியனுக்குப் பிறகும், பொதுக் கழிப்பறைகள் இத்தாலியில் 'வெஸ்பாசியானோ' என்றும் பிரான்சில் 'வெஸ்பேசியன்' என்றும் அழைக்கப்பட்டன.
கி.பி. 79-ம் ஆண்டில் வெஸ்பாசியன் இறந்தபோது, ரோம் ஒரு பணக்கார நாடாக மாறியது. பணம் எங்கிருந்து வந்தாலும் அதன் முக்கியத்துவத்தை விவரிக்க அவரது வார்த்தையான 'Pecunia non olet' (பணம் துர்நாற்றம் அடிக்காது) இன்றும் இத்தாலிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












