மெக்கா சென்ற முதல் 'இந்திய பெண்' அங்கே ஓட்டோமான் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது ஏன்?

பட மூலாதாரம், JUGGERNAUT BOOKS
- எழுதியவர், செரிலன் மோலன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
1576-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மெக்கா மற்றும் மதீனா புனித நகரங்களுக்கு அரச பெண்களின் குழுவை வழிநடத்தி அழைத்துச் சென்றார் ஒரு முகலாய இளவரசி.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித யாத்திரைக்கு முகலாய இந்தியாவில் இருந்து ஒரு பெண் சென்றது அதுவே முதல் முறை.
அந்தப் பெண் முகலாய பேரரசை நிறுவிய பாபரின் மகள் குல்பதன் பேகம்.
அவர் தலைமையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள், ஃபதேபூர் சிக்ரியில் உள்ள ஒரு அரண்மனையின் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி, ஆறு வருடங்கள் நீடிக்கப் போகும் அந்த பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது குல்பதன் பேகமுக்கு வயது 53.
ஆனால் இந்தக் காவிய பயணத்தின் விவரங்கள் வரலாற்றுப் பதிவுகளில் இல்லை. ஒருவேளை பெண் பயணிகளின் இந்த யாத்திரையை விரும்பாத முகலாய அரசின் 'ஆண்' வரலாற்றாசிரியர்களின் புறக்கணிப்பு காரணமாக இந்த விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்று தற்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
குல்பதானின் மெக்கா யாத்திரை வீரம், கருணை மற்றும் கிளர்ச்சி ஆகிய பண்புகளுக்காக அறியப்படுகிறது என எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ரூபி லால் தனது, 'நாடோடி இளவரசி: குல்பதனின் மிகச்சிறந்த சாகசங்கள்' (Vagabond Princess: The Great Adventures of Gulbadan) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இந்தப் புத்தகம் சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த மாத இறுதியில் உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
'நாடோடி இளவரசி'

பட மூலாதாரம், RANA SAFVI
முகலாயப் பேரரசின் முதல் மற்றும் ஒரே பெண் வரலாற்றாசிரியராக குல்பதன் பேகம் கருதப்பட்டாலும், அவர் எழுதிய ஹுமாயுன்-நாமாவில் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்திருந்தாலும், அவரது இந்த பயணம் பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இல்லை. அவரது புத்தகம் முழுமையாகவும் கிடைக்கவில்லை, பல பக்கங்கள் அதில் காணவில்லை.
"அரச குடும்பத்தாரால் எழுதப்பட்ட படைப்புகளை வரலாற்றாசிரியர்கள் நகல் எடுப்பது வழக்கமாக இருந்த காலத்தில் குல்பதன் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் குல்பதனின் புத்தகத்தின் ஒரு முழுமையான நகல் கூட இல்லை," என்று கூறுகிறார் ரூபி லால். முகலாய இளவரசியின் பயணத்தின் குறித்து கிடைத்த விவரங்களை சேகரித்துள்ளார் அவர்.
ஒட்டோமான் வரலாறு, பாரசீக மற்றும் முகலாய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்து, அவரது சொந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் காரணமாக இதைச் செய்துள்ளார் ரூபி லால்.
"சக்தி வாய்ந்த ஒரு இளவரசியின் பயணத்தைச் சுற்றியுள்ள இந்த மௌனமே நிறைய பேசுகிறது," என்கிறார் லால்.
குல்பதன் என்றால் 'ரோஜா நிறத்திலான தோல்' என்று தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1523-இல் காபூலில் பேரரசர் பாபரின் மூன்றாவது மனைவியான தில்தார் பேகத்திற்கு அவர் பிறந்தார். அவர் பிறந்த நேரத்தில், பல மைல்களுக்கு அப்பால் இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் ஹிந்துஸ்தானைக் கைப்பற்ற திட்டமிட்டுக் கொண்டிருந்தார் அவரது தந்தை.
பல போர்களுக்கு இடையில் தந்தை அவ்வப்போது வந்து செல்கையில் விரைவாக அவரைப் பார்த்து பேச பழகிக் கொண்டார் இளவரசி குல்பதன். அவரது தந்தை, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஹுமாயூன் மற்றும் அவரது மருமகன் அக்பர் என அவரது குடும்பத்தின் சக்தி வாய்ந்த ஆண்களை அதிகம் சந்தித்து பேச அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை.
ஆண்கள் தொலைதூர தேசங்களைக் கைப்பற்றுவதற்காக போர்களில் ஈடுபட்டிருந்த போது, பேரரசரின் தாய், அத்தைகள் மற்றும் சகோதரிகள், மனைவிகள் மற்றும் மகள்கள் என வலிமையான பெண்களின் அரசவையில் வளர்ந்தார் குல்பதன். அவர்கள் நீதிமன்ற விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்தனர், அரசர்கள் மற்றும் இளவரசர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆலோசகர்களாகவும் செயல்பட்டனர்.
குட்டி இளவரசியின் குழந்தைப் பருவம் பயணங்களால் நிறைந்தது. ஆறாவது வயதில், ஆக்ராவை அவரது தந்தை பாபர் கைப்பற்றிய பிறகு, காபூலில் இருந்து ஆக்ராவிற்குப் பயணம் செய்த முதல் முகலாயப் பெண்மணி குல்பதன். பின்னர் இதே இளவரசி ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் மன்னர் ஷெர்ஷா சூரியால் ஹிந்துஸ்தானில் இருந்து தன் குடும்பம் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, திருமணமான பெண்ணாக காபூலுக்குத் திரும்பினார்.
இது போன்ற பயணங்கள் மாதக்கணக்கில் நீடித்தன, குல்பதான் மற்றும் பிற அரசப் பெண்களும் கூடாரங்களில் முகாமிட்டு, பல்லக்குகளிலும், குதிரைகளிலும் வெறிச்சோடிய மலைப்பகுதிகளில் பயணம் செய்து, எதிரிகள், திருடர்களை துணிவுடன் எதிர்கொண்டனர்.
"முகலாய பெண்கள் நாடோடி வாழ்க்கை முறைக்குப் பழகினர். அவர்கள் தொடர்ந்து புதிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து, தற்காலிக முகாம்களில் வாழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் அரச குடும்பத்து ஆண்களுடன் போர்களுக்கு பயணித்து பழகி இருந்தனர்," என்கிறார் லால்.
ஹஜ் யாத்திரை செல்வதற்கான அனுமதி

பட மூலாதாரம், Getty Images
1500-களின் பிற்பகுதியில் முகலாய இளவரசி குல்பதன் ஹஜ் யாத்திரை செல்ல தனது மருமகன் அக்பரிடம் அனுமதி கேட்க இத்தகைய நாடோடி அனுபவங்களே வழிவகுத்தது என்று லால் கூறுகிறார்.
அக்பரின் மிகப்பெரிய லட்சியம் முகலாய வம்சத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாகும். அவர் இந்துஸ்தானில் இந்த இலக்கை நோக்கி நகர்ந்த போது, "தன்னை ஒரு புனிதமான நபராகவும், ஒரு போதும் தவறு செய்யாத ஒரு ஆன்மீக அதிகாரியாகவும் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்," என்று லால் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.
அனைத்து முகலாய பெண்களையும் அரண்மனையில் தனிமைப்படுத்த உத்தரவிட்ட முதல் முகலாய ஆட்சியாளர் என்ற பெருமையையும் அக்பர் பெற்றார்.
"அரண்மனையின் அந்தப்புரத்திற்கு பேரரசர் தவிர யாரும் செல்லக்கூடாது என்ற விதி, புகழ்பெற்ற மற்றும் தீண்டத்தகாத பெண்களை அங்கே தங்க வைப்பது போன்றவை அவரது புனிதர் போன்று காட்டிக்கொள்ளும் குணத்திற்கு ஒரு சான்றாக இருந்தது," என்று லால் எழுதுகிறார்.
ஆனால் இந்த தேக்க நிலை குல்பதனை அமைதியற்றவராக ஆக்கியது, அதனால் அக்டோபர் 1576-இல், அவரும் மற்ற அரச பெண்களும் மக்காவிற்கு புனித யாத்திரை புறப்பட்டனர், இது தெய்வத்திற்கு தான் செய்த சபதம் என்று அக்பரிடம் கூறினார் குல்பதன்.
அக்பர் அவர்களால் கட்டப்பட்ட முதல் இரண்டு பிரமாண்டமான முகலாய கப்பல்களான சலிமி மற்றும் இலாஹி, அவர்களின் பயணத்திற்காக தயார் செய்யப்பட்டது. யாத்திரையின் போது அன்னதானம் அளிக்க, ஏழைகளுக்கு விநியோகிக்க ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் 12,000 'கௌரவ ஆடைகள்', வெள்ளி மற்றும் தங்கத் துண்டுகள் நிரப்பப்பட்ட தங்கக் கோடுகளால் ஆன பெட்டிகளையும் அரச குழுவினர் எடுத்துச் சென்றனர்.
"அவர்கள் பயணம் தொடங்குவதைப் பார்க்க, சாதாரண ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிவப்பு மணற்கற்களால் உருவாக்கப்பட்ட முகலாய தலைநகரான ஃபதேபூர் சிக்ரியின் தெருக்களில் வரிசையாக நின்றார்கள், " என்று லால் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.
மெக்காவில் ஓட்டோமான் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது ஏன்?

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS
ஆனால் பயணம் ஆரம்பத்திலிருந்தே ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. மெக்காவிற்கான கடல் வழித்தடத்தை, இஸ்லாமிய கப்பல்களை எரித்துக் கொள்ளையடிப்பதில் புகழ்பெற்ற போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்தி வந்தனர். பெர்சியா வழியாகச் செல்லும் தரைவழி பாதை அதைவிட ஆபத்தானதாக இருந்தது. அது பயணிகளை தாக்கும் போராளி குழுக்களுக்கு புகலிடமாக அறியப்பட்டது.
போர்த்துகீசியர்களிடம் சிக்காமல் ஒரு பாதுகாப்பான வழித்தடத்திற்காக குல்பதனும் அவரது தோழிகளும் சூரத் துறைமுகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தவித்தனர். அவர்கள் நான்கு வாரங்கள் கடலில் பயணித்து அரபிக்கடல் வழியாக ஜித்தாவை அடைந்து, பின்னர் மெக்காவை அடைய பல நாட்கள் சூடான பாலைவன மணலில் ஒட்டகங்களில் பயணம் செய்தனர்.
மெக்காவிற்குச் சென்ற பிறகு, அவரும் அவரது தோழிகளும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரேபியாவில் தங்க முடிவு செய்தனர். இதுவே குல்பதனின் பயணத்தின் மிகவும் சுவாரசியமான காலகட்டம்.
"அந்தபுரத்தை விட்டு வெளியேறும் முடிவில் அவர்கள் ஒன்றிணைந்த அவர்கள், அதே போல பாலைவன நிலங்களில் அலைந்து திரிபவர்களாக, முஜாவிர்களாக (ஆன்மீகப் பயணம் செய்பவர்கள்) தங்கள் விருப்பத்தில் ஒன்றுபட்டனர்," என்று லால் தனது புத்தகத்தில் எழுதுகிறார்.
இங்கே, குல்பதனும் அவளது தோழர்களும் நாணயங்களையும் பிற பொருட்களையும் தானமாக கொடுத்தனர், இது நகரத்தின் பேச்சாக மாறியது. முகலாய இளவரசியின் கருணை, அந்த பகுதியை ஆண்ட ஒட்டோமான் சுல்தான் முராத் என்ற மன்னனை கோபப்படுத்தியது. அக்பரின் அரசியல் வலிமைக்கு சான்றாக இந்தச் செயல்களை அவர் கண்டார்.
எனவே, குல்பதன் மற்றும் முகலாயப் பெண்களை அரேபியாவிலிருந்து வெளியேற்றும்படி நான்கு ஆணைகளை அனுப்பினார் சுல்தான்.
ஒவ்வொரு முறையும் குல்பதன் வெளியேற மறுத்து வந்தார்.
"இது ஒரு முகலாயப் பெண்ணின் கிளர்ச்சிச் செயல்," என்கிறார் லால். "குல்பதன் சுதந்திரத்திற்கான அவளது விருப்பத்தில் எவ்வளவு உறுதியுடன் இருந்தார் என்பதை இது காட்டுகிறது."
இறுதியாக, சுல்தான், அவளது பிடிவாதத்தால் கோபமடைந்து, ஒட்டோமான் துருக்கிய மொழியில் "நா-மெஷ்ரு" (ஒரு பொருத்தமற்ற அல்லது தவறான செயல்) என்ற வார்த்தைகளை பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார். இது அக்பருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த ஐந்தாவது ஆணைக்குப் பிறகு தான், 1580-இல், குல்பதன் மற்றும் அவரது தோழிகள் அரேபியாவை விட்டு வெளியேறினர்.
நாடு திரும்பியதும், குல்பதன் ஒரு 'நவாப்' (ஆட்சியாளர்) என்று பாராட்டப்பட்டார், மேலும் 'அக்பர் நாமா' நூலிற்கு ஒரே பெண் பங்களிப்பாளராக இருக்க அக்பரால் அழைக்கப்பட்டார். இந்த நூல் அக்பரின் வம்சத்தின் மகத்துவத்தை விவரிக்கிறது.
ஆனால் அக்பர் நாமாவின் ஒரு முழு பகுதி குல்பதனின் மெக்கா பயணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அதில் அரேபியாவில் அவர் இருந்த காலத்தைக் குறித்தோ, சுல்தான் முராத்துக்கு எதிரான கிளர்ச்சி குறித்தோ குறிப்பிடவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












