இந்து மகாசபை தலைவராக செயல்பட்ட முஸ்லிம் - சுதந்திர போராட்டத்தின் போது என்ன செய்தார்?

இந்து மகாசபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், MUNEEB AHMAD KHAN

படக்குறிப்பு, ஹகீம் அஜ்மல் கான்
    • எழுதியவர், விவேக் சுக்லா மூத்த செய்தியாளர்
    • பதவி, பிபிசி இந்திக்காக

தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் இருந்து பஞ்ச்குயா சாலையை நோக்கிச்செல்லும் போது, ஆர்.கே.ஆஷ்ரம் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு பாழடைந்த வெள்ளை கேட் காணப்படுகிறது. அதன் வெளியே நிறைய பரபரப்பு காணப்படுகிறது.

கேட்டை கடந்து பஸ்தி ஹசன் ரசூலுக்குள் நுழைந்தால், இங்கு சின்னசின்ன வீடுகளுக்கு வெளியே பல கல்லறைகள் காணப்படுகின்றன. இது மயானமா அல்லது குடியிருப்பா என்று சந்தேகம் எழுகிறது. கல்லறைகளைச் சுற்றி மக்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. வீடுகளில் இருந்து மேளத்தின் ஒலியும் சிலர் இசை பயிற்சி செய்யும் ஒலியும் கேட்கிறது.

ஹகீம் அஜ்மல் கானின் கல்லறை எங்குள்ளது என்று ஒரு வயதான நபரிடம் கேட்டேன். ரம்ஜான் என்ற பெயர் கொண்ட அவர் கல்லறையை சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபையின் தலைவராக இருந்த அந்த ஆளுமைமிக்க மனிதரின், மிகவும் சாதாரணமான கல்லறைக்கு அருகில் நான் சென்றேன். அவர் ஒரு சிறந்த யுனானி மருத்துவர். தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்.

சிலர் அவரை 'மசிஹா- இ- இந்த்' என்றும் அழைத்தனர். ஹகீம் அஜ்மல் கானின் கல்லறைக்கு முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய பெண் அமர்ந்திருக்கிறார். அவர் பெயர் ஃபெளஸியா. "நாங்கள்தான் ஹகீம் ஐயாவின் கல்லறையை பராமரிக்கிறோம். இங்கு குர்ஆன் கானி மற்றும் ஃபாத்தியாவை வாசிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

ஹகீமின் கல்லறை மீது சில உலர்ந்த ரோஜா மலர்கள் கிடக்கின்றன.

"கல்லறைக்கு எந்த ஒரு பிரபலமும் அல்லது ஹகீம் ஐயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அஞ்சலி செலுத்த வருவதில்லை," என்று ஃபெளஸியா தெரிவித்தார்.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஹகீம் அஜ்மல் கானின் கொள்ளு பேரனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான முனிப் அகமது கான் நிராகரிக்கிறார்.

"ஹகீம் சாஹேப்பின் பிறந்த நாளன்று(பிப்ரவரி 11) எனது சகோதரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நான் கல்லறைக்கு வருவேன். இந்த வளாகம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது. எங்கள் பெரியவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இப்போது அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹகீமின் கல்லறையை பராமரிப்பதாகக் கூறிக் கொண்ட அந்தப்பெண்ணை நோக்கியே அவரது குறிப்பு இருந்தது.

ஹகீம் சாஹேப்பை காந்தி சந்தித்த போது

இந்து மகாசபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், Getty Images

பழைய தில்லியில் புகழ்பெற்ற லால் குவா பகுதியில் உள்ள ஹகீம் சாஹேப்பின் வீடான ’ஷெரீப் மன்ஸில்’ என்ற மாளிகையில் இப்போது முனிப் அகமது கான் வசிக்கிறார்.

காந்திஜியும் கஸ்தூரிபா காந்தியும் 1915 ஏப்ரல் 13 ஆம் தேதி ஹகீம் சாஹேப்பை சந்திக்க வந்திருந்தனர். 1915 ஏப்ரல் 12 ஆம் தேதி முதன்முறையாக டெல்லிக்கு வந்த காந்திஜி காஷ்மீரி கேட்டில் அமைந்துள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் தங்கினார்.

ஹகீம் அஜ்மல் கான் ஏப்ரல் 14 ஆம் தேதி தில்லியின் செங்கோட்டை மற்றும் குதுப்மினாரை சுற்றிக் காட்டுவதற்காக காந்திஜியையும் கஸ்தூரிபா காந்தியையும் அழைத்துச் சென்றார். இவர்கள் அப்போது குதிரை வண்டியில்தான் சென்றிருக்க வேண்டும். ஹகீம் இங்கு காந்திஜிக்கு வைஷ்ணவ உணவை ஏற்பாடு செய்திருந்தார்.

"டெல்லியில் காந்திஜி, தீன்பந்து சி.எஃப்.ஆண்ட்ரூஸ் மூலமாக தன்னை விட ஆறு வயது மூத்தவரான ஹகீம் அஜ்மல் கானை சந்தித்தார். ஆண்ட்ரூஸின் வேண்டுகோளின் பேரில் காந்திஜி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் தங்கினார். ஆண்ட்ரூஸ் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். தில்லியின் ’ப்ரதர்ஹூட் ஸொஸைட்டி’யுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது,” என்று டெல்லி வரலாற்றாசிரியர் ஆர்.வி. ஸ்மித் குறிப்பிடுகிறார்.

முகத்தைப் பார்த்து நோயை கண்டிபிடித்துவிடுவார்

இந்து மகாசபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், MUNEEB AHMAD KHAN

படக்குறிப்பு, ஹகீம் அஜ்மல் கானின் ஷெரீப் மன்ஸிலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

”ஹகீம் அஜ்மல் கானிடம் பெண்களின் மாதவிடாய் மற்றும் வலிப்பு நோய்க்கான துல்லியமான மருந்துகள் இருந்தன. அவரது மருந்துகளை உட்கொண்டு ராம்பூர் நவாபின் பேகம் மரணப் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டார். அவர் ஒன்பது ஆண்டுகள் ராம்பூர் நவாபின் ஹகீமாக இருந்தார்,” என்று ஹம்தர்த் மருந்தகம் மற்றும் ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகத்தை நிறுவிய ஹகீம் அப்துல் ஹமீத் 1995ல் இந்த எழுத்தாளரிடம் கூறினார்.

ஹகீம் ராம்பூரில்தான் காலமானார். நோயாளியின் முகத்தை பார்த்தே அவருக்கு என்ன நோய் என்று சொல்லும் அளவிற்கு அவர் புத்திக்கூர்மை மிக்கவர் என்று டெல்லியின் முதியவர்கள் கூறுகின்றனர்.

யாருடைய ஆலோசனையின் பேரில் திப்பியா கல்லூரி திறக்கப்பட்டது?

முதல் சந்திப்புக்குப் பிறகே காந்திஜிக்கும் ஹகீம் அஜ்மல் கானுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. இங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில், டெல்லியில் ஒரு பெரிய மருத்துவமனையைத் திறக்குமாறு ஹகீம் அஜ்மல் கானிடம் காந்திஜி அறிவுறுத்தினார். அதுவரை ஹகீம் அவர்கள் லால் குவாவில் இருந்தே மருத்துவம் பார்த்து வந்தார்.

லால் குவாவை விட்டுவிட்டு வெளியில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அவர் நினைத்துக்கூட பார்த்ததில்லை. காந்திஜியின் அறிவுரை அவருக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு கரோல்பாக்கில் புதிய மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கான நிலம் அடையாளம் காணப்பட்டது. 1921 பிப்ரவரி 13 ஆம் தேதி திப்பியா கல்லூரி மற்றும் மருத்துவமனையை காந்திஜி திறந்து வைத்தார்.

சுதந்திர போராட்டத்தின் போது என்ன செய்தார்?

இந்து மகா சபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், MUNEEB AHMAD KHAN

படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ஹகீம் அஜ்மல் கானின் கல்லறை

ஹகீம் சாஹேப்பின் மூதாதையர் இல்லமான ஷெரீப் மன்ஸில் 2020 ஆம் ஆண்டு தனது 300 வருட பயணத்தை நிறைவு செய்தது. இது 1720 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மக்கள் இப்போதும் வசிக்கும் டெல்லியின் பழமையான வீடுகளில் ஒன்றாக ஷெரீப் மன்ஸில் கருதப்படுகிறது. இப்போது ஹகீம் அஜ்மல் கானின் கொள்ளுப் பேரன் ஹகீம் மஸ்ரூர் அகமது கான் சாஹேப் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஹகீம் சாஹேப் ஒத்துழையாமை இயக்கத்தில் காந்தியை ஆதரித்தார். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1921 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ஹகீம் அஜ்மல் கான், காங்கிரஸின் தலைவராக இருந்த ஐந்தாவது முஸ்லிம் ஆவார். இதற்கு முன் 1919 இல் அவர் முஸ்லிம் லீக்கின் தலைவரானார். 1906 இல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் முதல் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

1920 இல் அகில இந்திய கிலாஃபத் கமிட்டியின் தலைவராகவும் அவர் இருந்தார். முஸ்லிமான அவர் இந்து மகாசபையின் தலைவராகவும் இருந்ததாக டெல்லி அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.

மிர்ஸா காலிப் யார் வீட்டில் வாடகைக்கு இருந்தார்?

இந்து மகா சபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் உள்ள காலிப் மாளிகை

ஷெரீப் மன்ஸிலில் இருந்து இரண்டு நிமிட தூரத்தில் மிர்ஸா காலிப்பின் நினைவிடம் உள்ளது. மிர்சா காலிப்பிற்கு சொந்த வீடு கிடையாது. அவர் வாடகை வீடுகளில்தான் வசித்து வந்தார். ஹகீம் அஜ்மல் கானின் தந்தை ஹகீம் குலாம் மஹ்மூத் கான் வாடகைக்குக் கொடுத்த வீட்டில்தான் அவர் கடைசி ஆறு வருடங்கள் வாழ்ந்தார்.

மிர்ஸா காலிப் அவர்களிடமிருந்து பெயருக்கு வாடகை பெறப்பட்டது. காலிப் நினைவிடம் கட்டப்பட்டுள்ள இடம், ஹகீம் அஜ்மல் கானின் தந்தைக்கு சொந்தமானது.

ஹகீம் சாஹேப்பின் முயற்சியால்தான், உத்யோக் பவனை ஒட்டிய சுனேரி மசூதி 1920 இல் புதுப்பிக்கப்பட்டது என்று ஆர்.வி.ஸ்மித் குறிப்பிடுகிறார். புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), சுனேரி மசூதியை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியதால் அந்த மசூதி சமீபத்தில் செய்திகளில் அடிபட்டது. இது சாலையின் நடுவில் உள்ள ரவுண்டானாவில் அமைந்துள்ளது என்று என்டிஎம்சி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த ரவுண்டானா 'ஹகீம் ஜி கா பாக்' ( ஹகீமின் தோட்டம்) என்று அழைக்கப்பட்டது. இந்த சிறிய தோட்டத்தில் சுனேரி மசூதி உள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா நிறுவப்பட்டது

இந்து மகா சபை, ஹகீம் அஜ்மல் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் நிறுவக தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி

ஹகீம் அஜ்மல் கான், ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் நிறுவனர்களில் ஒருவர். அதன் முதல் தலைவராக 1920 நவம்பர் 22 ஆம் தேதி ஹகீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927 இல் அவர் காலமாகும் வரை அவர் அந்தப்பதவியில் இருந்தார்.

இந்த காலகட்டத்தில் அவர் பல்கலைக் கழகத்தை அலிகரிலிருந்து டெல்லிக்கு மாற்றினார். பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகளின் போது அதிக அளவில் நிதி திரட்டியும், தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தியும் அதற்கு ஆதரவளித்தார்.

காந்திஜியின் ஆசியுடன் ஜாமியா நிறுவப்பட்டது என்று ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் இந்தித் துறையின் பேராசிரியர் ஆசிஃப் உமர் குறிப்பிட்டார். .

காலனித்துவ ஆட்சியால் ஆதரிக்கப்படும் அல்லது நடத்தப்படும் எல்லா கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்குமாறு காந்திஜி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இருந்து தேசியவாத சிந்தனைகொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குழு அங்கிருந்து வெளியேறியது.

ஹகீம் அஜ்மல் கான், டாக்டர் முக்தார் அகமது அன்சாரி மற்றும் அப்துல் மஜீத் குவாஜா ஆகியோர் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களில் முக்கியமானவர்கள்.

ஜாமியாவில் முன்ஷி பிரேம்சந்த்

ஹகீம் அஜ்மல் கான் 1925 இல் ஜாமியாவை அலிகரில் இருந்து டெல்லி கரோல் பாகிற்கு மாற்றினார்.

இந்த வளாகத்தில்தான் முன்ஷி பிரேம்சந்த் தான் இறப்பதற்கு சில காலம் முன்பு ‘கஃபன்’ என்ற தனது கடைசி கதையை எழுதினார்.

ஹகீம் சாஹேப் ஆரம்ப கட்டத்தில் ஜாமியாவின் பெரும்பாலான செலவுகளை தனது சொந்தப்பணத்தின் மூலம் செய்தார்.

ஹகீம் அஜ்மல் கானின் கல்லறை கேட்பாரின்றி கிடப்பதை பார்க்கும்போது, திப்பியா கல்லூரியையும், ஜாமியாவையும் டெல்லியில் நிறுவியவரை டெல்லி மறந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)