நேரலை, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அமமுக எம்எல்ஏ நீக்கம் - டிடிவி தினகரன்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை - என்.ஆனந்த எச்சரிக்கை

    தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த்

    பட மூலாதாரம், TVKHQ/X

    படக்குறிப்பு, தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த்

    தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ''கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக்கூடாது'' என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், ''கட்சியின் நிர்வாகிகள் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பதாகைகளை வைக்கக்கூடாது, கொண்டாட்டங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூட்டாது'' என்று அறிவிறுத்தியுள்ளார்.

    ''அவ்வாறு இடையூறு செய்யும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.

  2. தமிழ்நாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் யார்?

    தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து தேர்தல் சமயத்தில் மாற்றப்பட்டு விடுப்பில் இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை அமுதா ஐஏஎஸ் கூடுதலாக கவனித்து வந்தார்.

    மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்திக் ஐ ஏ எஸ், நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநில திட்டக்குழு இயக்குனராக இருந்த சுவர்ணா ஐஏஎஸ், சுற்றுலா கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலை துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்

    கூட்டுறவுத்துறை பதிவாளராக இருந்த நந்தகுமார் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்

    நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அண்ணாதுரை முதலமைச்சரின் மூன்றாவது தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கூடுதல் செயலராக இருந்த விஷ்ணு ஐஏஎஸ் முதலமைச்சரின் கூடுதல் செயலராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சாய்க்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  3. விசிக தலைவர் திருமாவளவனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

    விசிக தலைவர் திருமாவளவனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

    பட மூலாதாரம், VCK

    தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க விசிக இறுதி நேரத்தில் ஆதரவு தந்த நிலையில், திருமாவளவனை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்தார்.

    சென்னை வேளச்சேரில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இல்லத்திற்கு சென்ற விஜய்யை திருமா வாசலில் நின்று வரவேற்றார்.

    இந்த சந்திப்பில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்,

  4. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவரை சந்தித்த முதலமைச்சர் விஜய்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவரை நேரில் சந்தித்தார் விஜய்

    பட மூலாதாரம், ANI

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார்.

    தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை வழங்கினர்.

    இந்தநிலையில் அக்கட்சியின் தலைவர்களை விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை , பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

  5. ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்

    ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்

    பட மூலாதாரம், RickyRadhaanpaditvetrivel

    படக்குறிப்பு, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜோதிடரான இவர், தவெகவில் பயணித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு அரசு பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  6. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அமமுக எம்எல்ஏ நீக்கம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அமமுக எம் எல் ஏ காமராஜ்

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அமமுக எம் எல் ஏ காமராஜ்

    சபாநாயகர் தேர்வு செய்ய கூட்டப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமமுக சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

    கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காமராஜ் நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

  7. மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து - தேசிய தேர்வு முகமை கூறியது என்ன?

    நீட் தேர்வு

    பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Image

    படக்குறிப்பு, மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது

    மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரிலேயே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Admit Card) வெளியாகும் அட்டவணைகள் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்படும்.

    சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தேசிய தேர்வு முகமை, "இப்பிரச்னை குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "இத்தேர்வை மீண்டும் எழுதுவதற்கு மாணவர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; அதற்கெனக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தியிருந்த தேர்வுக் கட்டணம் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். மேலும், இத்தேர்வு NTA-வின் சொந்த வளங்களைப் பயன்படுத்தியே நடத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு குறித்து ராகுல் காந்தி கேள்வி

    நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்களன்று நீட் தேர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் 2026 வினாத்தாள் கசிந்ததாக வந்த செய்தியை நான் அறிந்தேன். இதுவொரு தேர்வு இல்லை; நீட் இப்போது ஒரு ஏலமாக மாறிவிட்டது. தேர்வு தொடங்குவதற்குச் சரியாக 42 மணிநேரத்துக்கு முன்பே, பல கேள்விகள் வாட்ஸ்ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.

    "22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஓராண்டு முழுவதும் இரவும் பகலும் பாராமல், உறக்கமின்றிப் படித்துத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டனர். ஆனால் ஒரே இரவில், அவர்களின் எதிர்காலம் பகிரங்கமாக ஏலம் விடப்பட்டுள்ளது. இது நடப்பது முதல்முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளில், 89 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; 48 முறை மறுதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அதே வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன; அதைத் தொடர்ந்து அதே மௌனமே நிலவுகிறது."

    ராகுல் காந்தி மேலும் "பிரதமர் மோதி, ஒவ்வொரு தோல்விக்கும் நீங்கள் பொதுமக்களையே குறை கூறுகிறீர்கள் என்றால், அதில் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலமும் அடங்கும். 22 லட்சம் மாணவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு, மோதி அரசை விடப் பெரிய அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது." என்றார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிற தலைவர்களும் இப்பிரச்னை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

  8. "திமுக ஆதரவோடு முதலமைச்சராக முயன்றார்" - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

    காணொளிக் குறிப்பு, எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
  9. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏவுக்கு தடை

    சீனிவாச சேதுபதி

    பட மூலாதாரம், TN Assembly

    படக்குறிப்பு, சீனிவாச சேதுபதி

    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (மே 13) நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு கவனம் பெறுகிறது.

    நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.

    பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.

    இந்நிலையில், திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விக்டோரியா கௌரி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதில், “நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது அவையின் எண்ணிக்கை பலம் குறித்த எவ்வித சோதனைகளிலும் அடுத்த உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி வாக்கு செலுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இருப்பினும், இந்த உத்தரவு சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்வதாகக் கருதப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த உத்தரவு பெரியகருப்பனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்க எந்த உரிமையையும் அளிக்காது என்றும் அது கூறியது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. பேரவையில் முதலமைச்சராக விஜய் தனது முதல் உரையில் கூறியது என்ன?

    விஜய்

    பட மூலாதாரம், TN assembly

    சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமம் என, முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தன் முதல் உரையை இன்று ஆற்றினார்.

    அப்போது, “மக்களின் எதிர்பார்ப்புகளை இங்கு கொண்டு வந்து அவற்றை பூர்த்தி செய்வது இந்த அவையின் பொறுப்பு. இங்கே அனைவரும் சமம். அனைத்து கட்சியினர் கூறும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்படும். நல்லது ஏற்கப்பட்டு அல்லாதவை நிராகரிக்கப்படும். ஜனநாயகத்தின் மூளையாக இந்த அவை செயல்பட வேண்டும்.” என்றார்.

    சபாநாயகரை எதிர்க்கட்சி தலைவரும் அவை முன்னவரும் கையைப் பிடித்து அமர வைத்ததை குறிப்பிட்ட முதலமைச்சர், அந்த மரபு எப்படி ஆரம்பித்தது என்பதை கூறினார்.

    “பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை மதிக்கும் பண்புகள் மதிக்கப்பட வேண்டும். அவையின் மரபு காக்கப்பட வேண்டும்.” என்றார்.

  11. 'அறிவு, அனுபவத்தை பகிர தயார்' - பேரவையில் உதயநிதி பேச்சு

    உதயநிதி

    பட மூலாதாரம், TN Assembly

    “எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்” என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவராக என் முதல் உரை இது. பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என எங்களின் தலைவர்களை வணங்கி உரையை தொடங்குகிறேன். இரண்டாவது முறையாக என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி. எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த சுமார் 1.55 கோடி தமிழக மக்களுக்கு நன்றி. கூட்டணி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கு வாழ்த்துகள்.” என்றார்.

    மேலும் பேசிய அவர், “சபாநாயகர் சிரித்த முகத்துடன், அன்பாக பழகக்கூடியவர் என கேள்விப்பட்டுள்ளேன். முன்பும் சிறந்த எம்எல்ஏவாக செயல்பட்டுள்ளீர்கள். பேரவை மரபுகள் உங்களுக்கு புதிது அல்ல. எதிர்க்கட்சிகளையும் நீங்கள் அரவணைத்து, நடுநிலையுடன் செயல்படுவீர்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.” என்றார்.

    “முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர் வீடுகளுக்கும் சென்று வாழ்த்து பெற்றார். அந்த அரசியல் நாகரிகம் பேரவையிலும் தொடர வேண்டும் என்பது எங்கள் எண்ணம். திமுக பேரவையில் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். திமுக ஆக்கசக்தி தான்.” என்றார்.

    காணொளிக் குறிப்பு, "நாம் ஒரே கல்லூரியில் படித்தோம்" - உதயநிதி பேச்சு; சிரித்த விஜய்

    “இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு இந்த பேரவையில் நடந்த செயல்பாடுகளே காரணம். பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழும் பேரவை இது. இங்கு ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

    திமுக அரசு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாக திகழ்ந்தது. புதிய அரசும் அவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

    எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். நீங்களும் தயாராக இருங்கள். மாநில மக்களின் நலன் தான் நமக்கு முக்கியம். ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்.” என்றார்.

    அரசு நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாம் இடத்துக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உதயநிதி வலியுறுத்தினார்.

  12. சட்டப்பேரவை சபாநாயகர் ஆனார் ஜேசிடி பிரபாகர்

    ஜேசிடி பிரபாகர் உடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செங்கோட்டையன்

    பட மூலாதாரம், TN assembly

    படக்குறிப்பு, ஜேசிடி பிரபாகர் உடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செங்கோட்டையன்

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வானார்.

    ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். சபாநாயகராக ஆவதற்கான வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் நேற்று அவர் வழங்கினார்.

    வேறு யாரும் போட்டியிடாத சூழலில் அவர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அவரது இருக்கையில் அமரவைத்தனர்.

    காணொளிக் குறிப்பு, சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு

    அதன்பிறகு, பேரவையின் துணைத் தலைவருக்கான வேட்புமனு சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    அதன்படி ரவிசங்கர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வழிமொழிந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

    ரவிசங்கர் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனு அளிக்காததால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ரவிசங்கர் துறையூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவராவார்.

  13. சட்டப்பேரவையில் விஜயை பாராட்டிப் பேசிய அமமுக எம்எல்ஏ

    காமராஜ்

    பட மூலாதாரம், TN assembly

    படக்குறிப்பு, காமராஜ்

    அமமுக எம்எல்ஏ காமராஜ் முதலமைச்சர் விஜயை சட்டப்பேரவையில் பாராட்டி பேசியுள்ளார்.

    அமமுக எம்எல்ஏ காமராஜ் சட்டப்பேரவையில் பேசுகையில், “தமிழ்நாட்டு முதலமைச்சர் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம். அவர் முதலில் அறிவித்த மூன்று திட்டங்களும் மக்களுக்கு உதவும் திட்டங்கள். காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் ஐந்தாண்டுகால சிறப்பான ஆட்சியை தர வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். முதலமைச்சர் விஜய் முதலில் இலவசங்களை அறிவிப்பார் என எதிர்பார்த்தார்கள், ஆனால் உண்மையில் மக்களுக்கு உதவும் திட்டங்களை அறிவித்துள்ளார். கடந்த காலத்தில் ஏதேனும் பேசியிருந்தால், அது அன்றைக்கிருந்த அரசியல் சூழலில் பேசியது” என்றார்.

    முன்னதாக, அடுத்து ஆட்சியமைப்பது யார்? என்ற சூழல் நிலவிய போது காமராஜ் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்ததாக, ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டதாகவும் ஆனால், அவ்வாறு அவர் வழங்கவில்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

    டிடிவி தினகரன், “ஆளுநரிடம் நகல் கடிதத்தை வழங்கிய தவெக-வினர் அசல் கடிதத்தை வழங்காதது ஏன்? அசல் கடிதம் எங்கே உள்ளது? என்னுடைய ஒப்புதலுடன் தான் கடிதம் வழங்கினார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், காமராஜ் கையெழுத்திட்டதாக தவெகவினர் வெளியிட்ட காணொளி ஏஐ-ஆகக் கூட இருக்கலாம் என்றும் தினகரன் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், காமராஜ் முதலமைச்சர் விஜயை பாராட்டியுள்ளார்.

  14. தவெகவுக்கு அதிமுகவின் ஒரு தரப்பு ஆதரவு - சி.வி.சண்முகம் பேசியது என்ன?

    சி.வி.சண்முகம்

    பட மூலாதாரம், CVShanmugamofl

    படக்குறிப்பு, சி.வி.சண்முகம்

    தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசினார்.

    அப்போது, "அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். தவெகவுக்கு குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்." என்று அவர் கூறினார்.

    காணொளிக் குறிப்பு, "தவெக அரசுக்கு ஆதரவு" - சி.வி.சண்முகம் பேசியது என்ன?

    மேலும் பேசிய அவர், "தேர்தலுக்கு பிறகு கலந்தாலோசித்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்த 'திமுகவின் ஆதரவுடன் அதிமுக என்னை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டுள்ளனர், அதனை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும்' என அவர் சொன்னபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை." என்றார்.

    “அதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘அதிமுக புதிதாக கூட்டணியை அமைக்க வேண்டும்’ என கூறினோம். முதலமைச்சர் விஜயின் ஆட்சியை ஆதரிப்பதாக அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.” என்றார்.

    மேலும், சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக சி.விஜயபாஸ்கர், துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    விரைந்து அதிமுக பொதுக்குழுவை பொதுச் செயலாளர் கூட்ட வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

  15. 717 மதுக்கடைகளை 2 வாரங்களுக்குள் மூட விஜய் உத்தரவு

    முதலமைச்சர் விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வுசெய்து கண்டறியுமாறு முதலமைச்சர் விஜயால் உத்தரவிடப்பட்டது.அதன்படி, இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  16. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது நந்தினி வெள்ளைச்சாமி. இன்று (மே 12) தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், அரசியல் மற்றும் செய்திகளை இந்த பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  17. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக ராஜேஷ்குமார் நியமனம்

    காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார்

    பட மூலாதாரம், MLARajeshkumar

    படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார்

    17வது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் சட்டமன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    அதன்படி காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    துணைத்தலைவராக குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பர்ட், தலைமை கொறடாவாக மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் ஆகிகோய் நியமனம்.

    இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்தார்.

  18. வைகோவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

    பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

    பட மூலாதாரம், MDMK

    படக்குறிப்பு, பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளநிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

    அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜயை திருச்சி மக்களவை உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வரவெற்றார்.

    பின்னர் வைகோவை சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாற்றினார் முதலமைச்சர் விஜய்.

    பின்னர் அன்புமணியை அவரது இல்லத்துக்கு சென்று விஜய் சந்தித்தார்.

    பின்னர் அன்புமணியை அவரது இல்லத்துக்கு சென்று விஜய் சந்தித்தார்.
  19. தமிழக முதல்வர் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு

    தமிழக முதல்வர் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு

    தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார்.

    திமுக - அதிமுக என சுமார் அறுபது ஆண்டுகளாக மாறி மாறி நீடித்த தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தை உடைத்து ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்.

    தமிழக முதல்வர் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு

    விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று சட்டப்பேரவையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தவெகவின் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிசங்கர் ஆகியோரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் விஜய் கலந்துகொண்டார்.

    இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு விஜய் சென்றார்.

    இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு விஜய் சென்றார்.
  20. எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா

    காணொளிக் குறிப்பு, எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் முதலில் பதவியேற்கவில்லை. பின்னர் சான்றிதழை காண்பித்து பதவியேற்றுக்கொண்டார்.