எரிபொருளை சேமிக்குமாறு மோதி வேண்டுகோள் விடுத்த பிறகு பெட்ரோலிய அமைச்சகம் கூறியது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும் சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்துமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் கையிருப்பு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
பெட்ரோலிய துறையின் இணை செயலாளர் சுஜாதா ஷர்மா செய்தியாளர் சந்திப்பில், "நமது சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பான திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.
மேலும் அவர், "போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளன. வீட்டுத் தேவைகளுக்கான எல்பிஜி விநியோகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து, திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய கூட்டத்துக்கு தலைமை வகித்தார். அந்த கூட்டத்தை தொடர்ந்து, நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி தெலங்கானா சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, இரான் போர் தொடர்பான சர்வதேச பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.
தங்கம் வாங்க வேண்டாம் என்றும், சமையல் எண்ணெயை சேமிக்க வேண்டும் என்றும் அறிவுரைகளை கூறிய பிரதமர் மோதி, "அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும்." என்றார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது என்பது குறித்து பிரதமர் மோதி இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், "இது பொருளாதார அவசரநிலையின் தொடக்கமா? நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதா? முன்னெப்போதும் நாட்டில் இப்படி நடந்ததில்லை" என தெரிவித்தார்.

பெட்ரோலிய அமைச்சகம் கூறியது என்ன?
பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா ஷர்மா, "நமது சுத்திகரிப்பு நிலையங்கள் சிறந்த திறனில் இயங்கிவருகின்றன. எந்தவொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக எந்த தகவலும் இல்லை" என்றார்.
மேலும் அவர், "எல்பிஜி விநியோகமும் இயல்பாக நடைபெற்று வருகிறது. எங்கேயும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக எந்த தகவலும் இல்லை. வீட்டுத் தேவைகளுக்கான எல்பிஜி விநியோகமும் தடையின்றி தொடர்ந்து வருகிறது" என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசலை பொறுத்தவரை, 'நாட்டில் போதுமான கையிருப்பு உள்ளது" என்றார்.
"கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1.26 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1.14 கோடி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில், 17,000 டன்னுக்கும் அதிகமான வணிக எல்பிஜி விற்கப்பட்டுள்ளது. 762 டன்னுக்கும் அதிகமான ஆட்டோ எல்பிஜியும் விற்கப்பட்டுள்ளது" என்றார் சுஜாதா ஷர்மா.
"இவைதவிர, 1.40 லட்சத்துக்கும் அதிகமான 5 கிலோ சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன." என்றார்.

பட மூலாதாரம், PIB
அதிகாரிகள் கூறியது என்ன?
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறித்து திங்கட்கிழமை அமைச்சகங்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவிடம் போதுமான எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாகவும் அப்பிராந்தியத்தில் தற்போது நடைபெறும் மோதலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர்களின் கூற்றுப்படி, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி தேவைகளில் 90% அந்த பிராந்தியத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன. எனினும், விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோதியின் சமீபத்திய வேண்டுகோள் சாத்தியமான பற்றாக்குறைக்கான எச்சரிக்கை அல்ல எனவும், ஆனால் எரிசக்தியை சேமிக்கும் முயற்சிகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டத்தில் பொருளாதார சுமையை குறிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்தது.
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை எனவும் அக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. இந்தியாவிடம் 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் 45 நாட்களுக்கு தேவையான எல்பிஜி கையிருப்பும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிலையாக உள்ளதாகவும், பல நாடுகளில் 30 முதல் 70% வரை உயர்ந்துள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இழப்பு ஏற்படும் சமயத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு நுகர்வோர் மீது சுமையை ஏற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோதியின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி மக்கள் பொதுப் போக்குவரத்து, காரை பகிர்ந்துகொள்ளுதல், எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், உற்பத்தி மற்றும் விற்பனை தரவுகளை மேற்கோள் காட்டி, நாட்டில் உரம் கையிருப்பு வலுவாக உள்ளதாகவும் தேவையை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Elke Scholiers/Getty Images
கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்
பிரதமர் மோதியின் வேண்டுகோளை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தோல்விக்கான ஆதாரம் என்றும் மக்கள் எதை வாங்க வேண்டும், எதை வாங்க வேண்டாம் என கூறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், "நேற்று மோதி தங்கம் வாங்கக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, குறைவான பெட்ரோலையே எரிக்க வேண்டும், உரங்கள் மற்றும் சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்த வேண்டும், மெட்ரோ ரயில்களில் பயணிக்க வேண்டும், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என மக்களை தியாகம் செய்யுமாறு கூறினார். இவை பிரசங்கங்கள் அல்ல தோல்விக்கான ஆதாரம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "இந்த 12 ஆண்டுகளில் மக்கள் எதை வாங்க வேண்டும், எதை வாங்க வேண்டாம், எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்ல கூடாது என்று கூறும் நிலையை நாடு அடைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் மக்களின் மீது கடமையை ஏற்றிவிடுகின்றனர், அதன்மூலம் அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்கின்றனர். சமரசத்திற்கு உள்ளான ஒரு பிரதமரின் அதிகாரத்தில் இனி நாட்டை ஆளும் அதிகாரம் இல்லை." என தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், தேர்தல்கள் முடிந்த உடனேயே இந்த நெருக்கடி குறித்து நினைவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோதி மக்களுக்கு விடுத்த வேண்டுகோள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கேஜ்ரிவால் தன் எக்ஸ் பக்கத்தில், "இது பொருளாதார அவசரநிலையின் தொடக்கமா? நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதா? இதுபோன்று முன்னெப்போதும் நாட்டில் இப்படி நடந்ததில்லை" என தெரிவித்தார்.
"நாட்டின் பொருளாதாரத்தின் உண்மையான நிலை என்ன என்பது குறித்த உண்மையை நாட்டு முன்பு பிரதமர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா?"
காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், அரசாங்கம் எதையாவது மறைக்க முயற்சிக்கிறதா என கேள்வியெழுப்பியுள்ளார்.
பிரதமர் மோதியின் வேண்டுகோளை தொடர்ந்து, திங்கட்கிழமை பங்குசந்தை பெருமளவில் சரிவை சந்தித்தது.
சந்தை தொடங்கியவுடனேயே, முக்கிய நகை நிறுவனங்களின் பங்குகள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியை சந்தித்தன.
சென்கோ பங்குகள் 7.85% சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது, அதே சமயம் ஸ்கை கோல்ட் பங்குகள் 12% சரிந்து அதிகபட்ச வீழ்ச்சியைச் சந்தித்தன; இருப்பினும், சந்தை முடிவடையும் நேரத்தில் அதன் சரிவு 6.63% ஆகப் பதிவாகியிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































