நம் முன்னோர்கள் நரமாமிசம் உண்டது ஏன்? நாம் ஏன் அதைக் கைவிட்டோம்?

தி ஸ்னோ சொசைட்டி

பட மூலாதாரம், NETFLIX

    • எழுதியவர், ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ
    • பதவி, தி கன்வர்ஷேசன்

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’.

இந்தப் படம், அதீதமான ஒரு சூழ்நிலையில் மக்கள் நரமாமிசம் உண்பதைப் பற்றிப் பேசுகிறது.

ஆண்டிஸ் மலைத்தொடரில் விமான விபத்தில் சிக்கிய உருகுவே நாட்டு மக்கள் குழுவின் உண்மைக் கதை அது. அந்தக் குழுவினர், தங்களுடன் பயணித்த தோழர்களின் சடலங்களை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், படத்தில் வரும் பனிக்கட்டிகளின் பின்னணியில் நமக்குள் நாமே எதிர்கொள்ளும் ஒரு கேள்வியும் எழுகிறது: நாம் எப்போது, எந்த நேரத்தில், மனித மாமிசத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்?

ஹோமினிட் ஆகிய நாம், நமது பரிணாம வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் அதைச் செய்துள்ளோம். ஒரு வேளை, அது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட தேவையின் காரணமாகக் கூட நாம் அதைச் செய்திருக்கலாம்.

நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி

சுமார் 14.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கென்யாவில், நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் அறுத்துக் கொன்றனர் என்பதற்கான மிகப் பழமையான ஆதாரம் உள்ளது. கால் முன்னெலும்பில் உள்ள வெட்டுக் குறியின்படி, நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிட்டுள்ளனர்.

ஆனால், நரமாமிதத்தைப் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தப் பழக்கம், தென்னாப்பிரிக்காவில் ப்ளியோ-ப்ளீஸ்டோசீன் காலத்தில், அதாவது சுமார் 25 முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த பழைய மனித இனத்திடமிருந்து வந்திருக்கலாம்.

இவர்களைத் தொடர்ந்து, பெரும்பாலான ஹோமினிட் இனத்தினர் (மனிதர்களை உள்ளடக்கிய குரங்குகளின் பரிணாமக் குடும்பம்), அடாபுர்காவின் ஹோமோ முன்னோர்கள் முதல், நியண்டர்தால்கள் முதல் வெவ்வேறு ஹோமோ சேபியன்ஸ் சமூகங்கள் வரை அனைவரும் நரமாமிசம் உண்டவர்கள் எனத் தெரிகிறது.

உதாரணமாக, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன. சில பசிபிக் தீவுகள் உட்பட பிற புவியியல் பகுதிகளில், நரமாமிசம் சமீப காலம் வரை நடைமுறையில் இருந்தள்ளது.

நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன

‘நாம் வேட்டையாடுபவர்களாக இருந்தபோது நிறைய கொழுப்பு தேவைப்பட்டது’

நம்முடைய இனங்கள் மற்றும் நமக்கு முந்தைய உறவினர்கள், எந்த வகையான வாழ்விடத்திலும் வாழ பழகிக்கொள்ள வேண்டி இருந்தது. அந்தத் தன்மை, நமது உணவு முறையில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பூமியின் துருவப் பகுதிகளில் உறைபனிக்காலங்களில், அப்பகுதியில் உள்ள விலங்குகள் உண்ணும் உணவின் விகிதம், வெப்பமான பகுதிகளில் இருக்கும் விலங்குகளின் உண்ணும் உணவின் விகிதத்த விட அதிகமாக இருந்தது. மேலும், அங்கு வாழ்வதற்கான முக்கிய ஆற்றலாக, விலங்கின் கொழுப்பு இருந்தது.

இதற்கு மாறாக, தென் பிராந்தியங்களில், கார்போஹைட்ரேட் நிறைந்த தாவர உணவுகள் அதிகம் உண்ணப்படும்.

இதில், கொழுப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் இருந்து வந்துள்ளது. மற்ற காரணங்களுக்கிடையில், ஓமேகா-3 மற்றும் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இது, தற்கால மனிதர்கள் உள்ளிட்ட ஹோமினிட்களுக்கு மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாகிறது.

உண்மையில், ஒமேகா-3 இன் குறைபாடு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட தாவரங்கள்

பட மூலாதாரம், Getty Images

குதிரைகள் மற்றும் யானைகள் மான்களை விட அதிக ஓமேகா-3 ஐ கொண்டுள்ளன

எளிய வயிற்றைக் கொண்ட பாலூட்டிகளில் (ஹோமினிட்கள், குதிரைகள், கரடிகள், யானைகள் மற்றும் மாமத்கள்) ஒமேகா-3 நிறைந்த தோலடி கொழுப்பு உள்ளது.

மாறாக, சிக்கலான செரிமான அமைப்பு அல்லது ரூமினன்ட்கள் (ஆடுகள், கலைமான், மான் மற்றும் காட்டெருமை) கொண்ட விலங்குகளின் உடல்களில் உள்ள கொழுப்பில், இந்த வகை கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே காணப்படுகின்றது.

இதிலிருந்து நமது முன்னோர்களின் ஊட்டச்சத்து நிலை பெரும்பாலும் அவர்களின் இரையின் தேர்வைப் பொறுத்தது.

கற்கால ஹோமினிட்கள், வாழ்வாதாரத்திற்காக ஒரு சில வகையான விலங்குகளை நெருக்கமாகச் சார்ந்திருந்தனர் என்பதையும், தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததையும் நாம் அறிவோம்.

ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த இரை அதிகமாகக் கிடைக்காதபோது என்ன நடந்தது?

பதில்: ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஒத்த வளங்கள் போன்ற ஒமேகா-3 இன் பிற தாவர ஆதாரங்களை நம்பியிருந்திருக்கலாம்.

இருப்பினும், யூரேசியாவில், நீண்ட பனிக் குளிர்காலத்தில், தாவர வளங்களும் பற்றாக்குறையாகவே இருந்தன.

இது ஒமேகா-3 குறைபாடு நோய்கள் அடிக்கடி வெளிப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கும், எனவே நீண்டகாலத்தில் ஹோமினிட் குழுவின் பரிணாம வளர்ச்சி சமரசம் செய்யப்பட்டிருக்கும்.

ஓமேகா-3 குறைபாடுக்கும் நரமாமிசத்திற்கும் என்ன தொடர்பு?

இந்த அனைத்து காரணங்களுக்காகவும், யூரேசியாவில், கற்காலத்தில், மாமிச உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுவும், குறிப்பாக, பனிக்காலங்களில், மனிதர்கள் அவற்றையே நம்பியிருந்தனர்.

கார்போஹைட்ரேட்டுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, விலங்குகளின் கொழுப்பை உண்பதன் மூலம் தேவையான ஆற்றல் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

இந்த விலங்கின் கொழுப்பு, ஒரே நேரத்தில், தேவையான ஆற்றல், ஒமேகா-3, மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றையும் வழங்கியது.

இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ஹோமினிட்கள், அதிக இரைப்பை கொண்ட விலங்குகளை சர்ந்திருந்தனர். ஆனால், அவற்றில் தேவையான, ஒமேகா-3 இல்லை.

இத்தகைய கடினமான சூழலில், ஹேமினிட்கள், ஒருவரையொருவர் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒமேகா-3 அளவை அவர்களுக்கு கூடுதலாக வழங்கியது.

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, நியண்டர்தால்களும் நவீன மனிதர்களும் ஒருவரையொருவர் வேட்டையாடி சாப்பிட்டிருக்கலாம், அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த ஹோமினிட்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருக்கலாம்.

உண்மையில், இந்தச் சூழ்நிலையில் மிகவும் சுவையான ஒன்றாக ஹோமினிட்களின் மூளை இருந்திருக்கக்கூடும். அளவில் பெரிதாக இருந்த அது, தேவையான டி.எச்.ஏ-வை வழங்கியிருக்கக்கூடும். இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும்.

எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்கக் கூடியதன் சாத்தியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே தோன்றுகிறது.

நரமாமிசம்

பட மூலாதாரம், Getty Images

பூமியின் எல்லா பகுதியிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததா?

கற்கால யூரேசியாவில் ஒமேகா-3 அமிலத்தின் தேவைக்காக மனிதர்கள் நரமாமிசம் உண்டனர்.

சரி.

ஆனால் ஒமேகா-3 அமிலங்கள் அதிகமாகக் கிடைத்த பிற சூழல்களிலும் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்குமா?

ஆம் என்பதே பதில்.

பூமியின் தெற்குப் பகுதிகளில் ஒமேகா-3 அமிலங்களின் மூலங்களை அதிக அளவில் கிடைத்தாலும், மீன் அல்லது கொட்டைகள் போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுகள் எப்போதும் சரியான அளவில் கிடைத்திருக்காது.

ஊட்டச்சத்து மூலம் என்ற வகையிலும், எளிதில் பெறக்கூடிய ஒரு உணவு என்ற வகையிலும் மனித உடல் இருந்ததால், நரமாமிசம் உண்ணும் வழக்கம் எப்போதும் ஹோமினிட்களின் உயிர்வாழ்விற்கு பரிணாம ரீதியாகச் சாதகமாகவே இருந்திருக்கும்.

ஆனால், இதனால் நாம் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்த இனம் என்பது பொருளல்ல. மாறாக நாம் ‘நிபந்தனைகள் சார்ந்து வன்முறையாக’ இருந்திருக்கிறோம். அதாவது, கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பொறுத்து நமது நடத்தை மாறியிருக்க வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று, மீன், வால்நட், அல்லது ஆளி எண்ணெய் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளைப் பார்க்கும்போது, நம் முன்னோர்களின் வள பற்றாக்குறையின் நீண்ட வரலாற்றை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள்.

* ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ, அல்மேரியா பல்கலைக்கழகத்தில் உணவு தொழில்நுட்பப் பேராசிரியராக உள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)