சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி – என்ன நடந்தது?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 17) ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தல் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அதில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் எட்டு பெயர்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள்: ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா, முத்து, அபேராஜ், முருக ஜோதி, சாந்தா, ஜெயா.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
‘காலையில் உடன் வந்தவர்கள் மாலையில் உயிருடன் இல்லை’
ஆலையில் வெடி விபத்து நடந்த போது ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி செல்வம் பிபிசி தமிழிடம் பேசுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாரான போது திடீரென வெடி சத்தம் கேட்டது, என்றார். “ஓடிப்போய் பார்க்கும்போது ஒரு அறை முழுமையாக சரிந்து, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுறமும் சிதறி கிடந்தனர்.
பின்னர் அவர்களை ஒவ்வொருவராக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை,” என்றார்.
மேலும் பேசிய அவர், உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர், ஆனால் பலரை காப்பாற்ற முடியவில்லை, என்றார்.
“நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்து வருகிறோம். இன்று நடந்த விபத்தற்கு என்ன காரணம் என தெரியவில்லை காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை,” என்றார்.

விதியை மீறி ஒரே அறையில் வேலை பார்த்த 8 பேர்
இந்நிலையில் சம்பவம் நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் விபத்து நடந்ததாகத் திஎரிவித்தார். ஆலை முறையாக உரிமம் பெற்று நடைபெற்று வந்ததாகக் கூறினார். ஆனால் ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரிய வந்துள்ளதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ், தீயணைப்பு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,” என்று ஆட்சியர் ஜெயசீலன் கூறினார்.

'வாணவெடி தயாரிப்பதில் கூடுதல் கவனம் வேண்டும்'
இதுகுறித்து சிவகாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரிசாமி பிபிசி தமிழிடம் பேசுகையில்,
இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது, என்றார்.
“தீபாவளி பண்டிகை முடிந்து அனைத்து பட்டாசு ஆலைகளும் விடுப்பில் உள்ள நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாணவேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது,” என்றார்.
மேலும், “வாணவேடிக்கைகளை தயாரிக்கும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,” என்றார்.
கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும், ஆனால் இன்று ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், என்றார் மாரிசாமி. பட்டாசுத்தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். கேட்டுக்கொண்டார்.
இழப்பீடு அறிவிப்பு
பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு, தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விபத்து குறித்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்ததாகவும் விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘இந்த இக்கட்டான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்தவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்,’ என்று தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












