மதுரை திருமலை நாயக்கர் - மைசூர் மன்னர் இடையே நடந்த 'மூக்கறுப்பு போர்' பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வரலாறு போர் பற்றிய பல கதைகளை உள்ளடக்கியுள்ளது. அதில் பல விசித்திரமான நிகழ்வுகளும் அடக்கம்.அத்தகைய ஒரு விசித்திரப் போர் நாயக்கர்களுக்கும் மைசூர் படைக்கும் இடையே நடைபெற்றது.
இன்று 'நோஸ்-கட்' என ஆங்கிலத்திலும் 'மூக்கறுபட்டான்' எனத் தமிழிலும் பேச்சு வழக்கில் பயன்படுத்துவது உண்டு. ஆனால், இந்தப் பேச்சுவழக்கின் பின்னணியில் ஒரு கொடூர வரலாறு உண்டு.
அப்படி ஒரு வித்தியாசமான மூக்கறுத்த போர் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
அந்த விநோதமான மூக்கறுப்பு போர் மதுரை திருமலை நாயக்கரும் மைசூர் மன்னரும் மோதிக் கொண்ட போரில் என்ன நடந்தது? இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
மைசூர் படையை விரட்டியடித்த திருமலை நாயக்கர் படை


மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். அவர் கி.பி.1623இல் இருந்து 1659 வரை ஆட்சி செய்து வந்தார்.
கி.பி.1625இல் மைசூர் அரசரான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் பகை உண்டாகி, போர் நடைபெற்றது. மைசூர் படை திண்டுக்கல் வரை வந்தது.
அப்போது, "திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும், கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நாயக்கரும் மைசூர் படையை ஸ்ரீரங்கப்பட்டினம் வரை துரத்திச் சென்று தோற்கடித்தனர்," என்று மூக்கறுப்பு போரின் வரலாறு குறித்து விவரித்தார் விழுப்புரம் அறிஞர் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ்.
அதன்பிறகு, விஜயநகர அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் ஆட்சிக் காலத்தில், மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட நாயக்கர்களின் கூட்டுப் படைக்கும், விஜயநகர அரசர் மற்றும் மைசூர் அரசர் ஆகியோரின் கூட்டுப் படைக்கும் போர் மூண்டது.
இந்தப் போரில் பீஜப்பூர் சுல்தானின் உதவியுடன், விஜயநகர அரசை வீழ்த்தி, சுதந்திர நாடாக மாற்றம் பெற வைக்கிறது நாயக்கர் படை. இதனால், மைசூர் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.
முதல் மூக்கறுப்பு போர்

மூக்குகளை சாக்குப் பையில் கட்டி அரசருக்கு அனுப்பி வைத்த கொடூரம் முதல் மூக்கறுப்புப் போரில் நடந்தது.
பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, மைசூர் அரசர் தாங்கள் இரண்டு முறை வீழ்த்தப்பட்டதற்குப் பழி வாங்கும் முயற்சியிலும், மீண்டும் விஜயநகர அரசைத் தோற்றுவிக்கும் முயற்சியிலும் 1656இல் மைசூர் அரசர் நரசராஜன் காந்தீரவன், மதுரை நாயக்கர் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்தார்.
"மைசூர் அரசரின் தளபதி கொம்பையாவின் தலைமையில் கன்னட வடுகப் படையினர், திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துக்குள் புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில் தாக்கப்பட்டவர்களின் மூக்குகள் மேல் உதட்டுடன் சேர்த்துக் கொடூரமாக அறுக்கப்பட்டு, பின்னர் அவை சாக்குப் பையில் குவிக்கப்பட்டு, மைசூர் அரசரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது."
இப்படியே தொடர்ந்து பல ஊர்களையும் தாக்கிய மைசூர் படை, திண்டுக்கல்லை அடுத்து மதுரையை நோக்கி முன்னேறியதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

பட மூலாதாரம், Getty Images
சேதுபதி செய்த உதவி
திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன திருமலை நாயக்கர் தலைமறைவாகி மக்களைக் காப்பது குறித்து அமைச்சர்களிடம் ஆலோசனை செய்தார். மேலும் திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் உடல் நிலையும் கவலை அளிப்பதாக இருந்தது.
ஆனாலும் எதிரிகளால், மதுரை மக்கள் மூக்கை இழக்கும் அவல நிலை வந்துவிடக் கூடாது என்றெண்ணி, தன் மனைவி மூலம் ராமநாதபுரம் ரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார்.
விரட்டியடித்த மதுரை படை
"சேதுபதி ரகுநாத தேவரும் உடனடியாக 25,000 வீரர்களை திரட்டிக்கொண்டு மதுரை சென்றார். அங்கு திருமலை நாயக்கரின் மகன் குமார முத்துவும் இணைந்துகொண்டார். மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் வீரர்கள் மறித்து நின்றனர்.
சேதுபதி ரகுநாத தேவர், நாலுகோட்டை சீமையின் தலைவர் மதியாரழக தேவர், படமாத்தூர் சீமை தலைவர் பொய்யாரழகத் தேவர் வண்டியூரில் முகாமிட்டு இருந்தனர்."
சேதுபதியின் படையில் இருந்த 25,000 வீரர்கள், மதுரை நாயக்கர் படையில் இருந்த 35,000 வீரர்கள் என, மொத்தம் 60,000 படை வீரர்கள் கன்னட படையின் முற்றுகையைத் தகர்த்ததாகவும், மைசூர் வடுகப் படையினர் திண்டுக்கல்லை நோக்கி விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ்.
"திண்டுக்கல் கோட்டையில் மைசூர் படையினர் தஞ்சம் அடைந்தனர். சில நாட்களிலேயே, அவர்கள் எதிர்பார்த்த 20,000 பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது. சேதுபதி தலைமையிலான படைகளும் தளவாய் ஹம்பையா தலைமையிலான மைசூர் படைகளும் நேருக்கு நேர் மோதின."
கருவாட்டுப் பொட்டல்

அதீத போர்வெறியுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், "இரு தரப்பிலும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். வீரர்களின் உடல்கள் பல நாட்கள் அதே இடத்தில் கிடந்ததால் சிதைந்து, காய்ந்து கருவாடானது.
திண்டுக்கல்லில் அந்த இடத்தை, இன்றும் கருவாட்டுப்பொட்டல் என்றே அழைக்கின்றனர். சேதுபதி படையினரின் தாக்குதலால், மைசூர் படை வீரர்கள் சிதறி ஓடினார்கள்.
அவர்களை விடாமல், மைசூர் வரை துரத்திச் சென்றார்கள் சேதுபதி படையினர். அதோடு, நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகஅளில் மக்கள் மூக்கை அறுத்த படை வீர்களின் மூக்கையும் பதிலுக்குப் பதில் அறுத்தனர்."
மூக்கறுப்பு போர் வெற்றி நினைவு மண்டபம்

வெற்றியோடு திரும்பிய சேதுபதிக்கு மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். அந்த வெற்றியைக் காலமெல்லாம் நினைவுபடுத்தும் வகையில், மதுரை தல்லாகுளம் அருகில், சேதுபதி மகாராஜாவுக்கு கல் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.
சேதுபதியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்ட அந்த மண்டபத்துக்கு ‘மூக்கறு போர் மண்டபம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மண்டபம் தற்போதும் மதுரையில் உள்ளது.
வரலாற்றின் மிகக் கொடுமையான போர் முறைகளில் ஒன்றுதான் மூக்கறுப்பு போர். எதிரி நாட்டினரைக் கொல்லாமல், அவர்களின் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான வடுவை ஏற்படுத்தி, முகத்தைச் சிதைப்பதுதான் அந்தப் போர் முறை. திருமலை நாயக்கர் மீது மைசூர் அரசர் நரசராஜன் காந்தீரவன் கொண்டிருந்த கடுமையான பகையால் இந்தப் போர் நடைபெற்றது.
போரில் வீரர்களைக் கொல்வதுதான் மரபு. மைசூர் அரசரோ, “எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக்கொண்டு வாருங்கள். வெகுமதி அளிக்கிறேன்,” என்று கூறியதாக விவரிக்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
மேலும் அவர், “வீரர்களாகிய நீங்கள் கொண்டு வரும் மூக்குகளில், மேல் உதட்டுடன் மீசையும் இருந்தால் சன்மானம் அதிகமாகத் தருவேன்' என்று அறிவித்ததை அடுத்து போரில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில், எதிர்ப்பட்ட மக்களின் மூக்குகளை மேல் உதட்டோடு மைசூர் படை வீரர்கள் அறுத்தெடுத்தனர்.
அவற்றை மைசூர் மன்னரிடம் காட்டி, தக்க பரிசு பெற்றனர். இதற்கு பதிலடியாக, திருமலை நாயக்கர் படையினரும், சேதுபதி படையினரோடு சேர்ந்து, மைசூருக்குள் புகுந்து, எதிரிகளின் மூக்குகளை அறுத்துக் கட்டி மதுரைக்கு அனுப்பி வைத்தனர்," என்று மூக்கறுப்பு போர் நடந்த விதம் குறித்து விளக்கினார்.
சூர்ப்பநகை மூக்கறுப்பால் உருவான ராமாயணம்

மக்கள் உயிரையும்விட மானத்தைப் பெரிதாகக் கருதியதால், அக்காலத்தில் மூக்கறுபட்ட நிலையில் ஒருவர் இருப்பாரேயானால், அவர் தனது எதிரியால் தாக்கப்பட்டு தோல்வியால் மானத்தை இழந்து வாழ்வதாகவே கருத முடியும்.
அக்காலப் போர் முறையில் எதிராளிகள் அணிந்துள்ள மாலையைப் பறித்தல், அவர்கள் நாட்டிலுள்ள ஆடு, மாடுகளைக் கொள்ளையடித்தல், மகுடங்களைப் பறித்தல் போன்ற செயல்பாடுகள் அவர்களை அவமானப்படுத்துவதாகக் கருதப்பட்டது.
அதேபோல், மூக்கை அறுப்பதும் இந்தப் போரில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. சூர்ப்பனகை மூக்கறுப்பும், அதனால் ஏற்பட்ட ராம-ராவண யுத்தம் பற்றியும் விவரிக்கிறது ராமாயணம்.
அதன் அடிப்படையில், "எதிரி நாட்டவரின் மூக்கை அறுத்து, அவர்களை அவமானச் சின்னங்களாக, அவர்களது நாட்டிலேயே நடமாட விட வேண்டும் என்பதே இந்த மூக்கறு போர்முறையை வகுத்த அரசர்களின் கொடூர சிந்தனையாக இருந்துள்ளது," என்று விளக்கினார் பேராசிரியர் ரம்ெஷ்.
மூக்கறுத்த போர் குறித்த பேளூர் கல்வெட்டு

சேலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரும், பள்ளி ஆசிரியருமான, கலைச்செல்வன் பிபிசி தமிழிடம் சேலம் மாவட்டம் பேளூரில் கிடைத்த மூக்கறுத்த போர் கல்வெட்டு குறித்து விளக்கினார்.
சேலம் மாவட்டம், பேளூர் அங்காளம்மன் கோவில் அருகே தனியாருக்குச் சொந்தமான விளை நிலத்தில், பலகை கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. 6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டாக அது இருந்தது. அந்தக் கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான எழுத்துகள் இருந்தன.
"மீசையுடன் மூக்கறுப்பிச்சே" என்ற வார்த்தை அதில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
"கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்," என்று கூறினார் கலைச்செல்வன்.
மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளது.
மைசூர் மன்னன் நரசராஜன் கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து நெருக்கடி தந்ததால் கடும் ஆத்திரமடைந்த மைசூர் மன்னர், நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் வாழ்ந்த அப்பாவி மக்கள் உதடுகளையும், வீரர்களின் உதடுகள் மீசைகளையும் அறுத்தது குறித்து கல்வெட்டு தெளிவாக விளக்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து சேதுபதி உதவியுடன் நாயக்கர் படைகள் மைசூர் படையை விரட்டியடித்து பதிலுக்கு பதில் மைசூர் படை வீரர்களையும் மூக்கை அறுத்துப் பழி தீர்த்தனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்தப் போர் கி.பி.1656ஆம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கலாம். நாயக்கர்கள் ஆட்சி சேலம் மாவட்டம் வரை விரிவு படுத்தப்பட்டிருந்தது," என்று கல்வெட்டு குறித்து விளக்கினார் வரலாற்று ஆர்வலர் கலைச்செல்வன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












