மதுரை: உசிலம்பட்டி மலைக் கிராமத்தில் 14 பேருக்கு எலி காய்ச்சல் பரவியதன் பின்னணி

மதுரை மலைக் கிராமத்தில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் பரவியது எப்படி?
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

உசிலம்பட்டி அருகே உள்ள மலைக் கிராமமான மொக்கத்தான்பாறையில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 14 பேர் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மலை கிராமத்தில் எலி காய்ச்சல் பரவியது எப்படி?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட டி. கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள மொக்கத்தான்பாறை என்கிற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரது மூன்று வயது மகன் தர்மபிரபு இரு வாரங்ளுக்கு முன்பாக காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மூளைக் காய்ச்சலால் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பழங்குடியின கிராமத்தில் சுகாதாரத் துறை ஆய்வு

மதுரை மலைக் கிராமத்தில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் பரவியது எப்படி?

பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து சுகாதாரத் துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் அந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகள், சிறியவர்கள், பெண்கள் என 14 பேருக்குக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

'மலைக் கிராமத்தில் எலி காய்ச்சல் உறுதி'

மதுரை மலைக் கிராமத்தில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் பரவியது எப்படி?

இதுகுறித்துப் பேசிய உசிலம்பட்டி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மணிவண்ணன்

"மலை கிராமத்தில் காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து அங்கு நடத்தப்பட்ட சிறப்பு காய்ச்சல் முகாமில் 14 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இரண்டு குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இருக்கக்கூடிய மலைக்கிராம மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனர்," என்றார்.

'4 குழந்தைக்கு எலி காய்ச்சல்'

இதுகுறித்து பிபிசியிடம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் பேசியபோது, "உசிலம்பட்டி அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று கூறினார்.

அவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற விரும்பவில்லை என்றும் அவர்களிடம் பேசி, நிலைமையை விளக்கி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எலி காய்ச்சல் பரவியது எப்படி?

மதுரை மலைக் கிராமத்தில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் பரவியது எப்படி?

எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராமம் முழுவதிலும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் "கிராமத்தில் பாராமரிப்பு இல்லாத தொட்டியில் ஆழ்துளைக் கிணறு மூலம் எடுக்கப்பட்ட நீரைத் தேக்கி வைத்து அங்கிருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் பருகி வந்தது தெரிய வந்ததாக" சுகாதாரத்துறை துணை இயக்குநர் கூறினார்.

மேலும், அந்தத் தேக்கி வகத்த தண்ணீரில், "எலிகள் ஏதேனும் இறந்திருக்கலாம் அல்லது எலிகள் அந்த நீரைப் பயன்படுத்தி இருக்கலாம். இந்த நீரை மக்கள் தொடர்ச்சியாகக் குடித்து வந்ததால் எலி காய்ச்சல் பரவியிருக்கும்.

இதைத் தொடர்ந்து அந்தத் தொட்டி முழுவதும் தூய்மை செய்யப்பட்டு தண்ணீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என பழங்குடியின மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்றார்.

'குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை'

மொக்கத்தான்பாறையைச் சேர்ந்த வீரப்பனுடைய உறவினரின் இரண்டு வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர், "எங்கள் கிராமம் மலையின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு 30 குடும்பங்கள் உள்ளன. எங்கள் மக்கள் மலையிலிருந்து தேன், நெல்லிக்காய், கடுக்காய் பட்டை, கடுக்காய் போன்றவற்றைச் சேகரித்து வருவாய் ஈட்டி வாழ்ந்து வருகிறோம்," என்றார்.

மதுரை மலைக் கிராமத்தில் 4 குழந்தைகளுக்கு எலி காய்ச்சல் பரவியது எப்படி?

கிராமத்திற்குப் பொது குடிநீர் தொட்டி ஒன்று உள்ளதாகவும் அதில் சிறுவர்கள் குளித்து விளையாடுவது போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபடுவார்கள் எனவும் அதன் மூலமே காய்ச்சல் பரவியிருக்க வேண்டும் எனவும் வீரப்பன் கூறினார்.

"ஆழ்துளைக் கிணறு மூலம் எடுக்கப்படும் அந்த நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இருக்காது. குடிநீர் தொட்டியின் அருகிலேயே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், அது செயல்பட்டிற்கு வரவில்லை. அது செயல்பாட்டுக்கு வந்தால் இது மாதிரியான காய்ச்சல்கள் பரவுவது தடுக்கப்படும்," எனக் கூறினார்.

எலி காய்ச்சல் எப்படிப் பரவும்? அறிகுறிகள் என்ன?

"எலி காய்ச்சல் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது விலங்குகளின் கழிவுகள் கலந்த நீரைப் பயன்படுத்துவதன் வழியாக உடலுக்குள் நுழைகிறது.

காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி ஆகியவை எலி காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள். பின்னர், வயிறு வீக்கம், கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம். இது பரவக்கூடிய நோய் அல்ல. மேலும், வீடுகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பாக்டீரியா பரவலைத் தவிர்க்க முடியும்," என்று மருத்துவர் மணிவண்ணன் விளக்கினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)