தேநீர், சர்க்கரையை ருசிக்க ஸ்பெயின் நடத்திய அடிமைகள் கடத்தல் ஒழிக்கப்பட்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பாவில் காபி மற்றும் தேநீரை இனிமையாக்கும் சர்க்கரையின் இனிப்புச் சுவை, அமெரிக்காவின் கடைசிப் பிரதேசங்களில் பல தசாப்தங்களாக அடிமைத் தனத்தை நீடித்தது.
ஸ்பெயின் அரசு 1820ஆம் ஆண்டில் அடிமை வர்த்தக முறையை நிறுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்தாலும், 1870ஆம் ஆண்டு வரையிலும் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக மக்கள் கடத்தப்படுவது நிறுத்தப்படவில்லை.
அந்த 50 ஆண்டுகளில், வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் சர்க்கரை உற்பத்தி முக்கியப் பங்கு வகித்தது. சர்க்கரை உற்பத்தி பெரும் வணிகமானதன் காரணமாக, ஐரோப்பாவில் அடிமை முறையைக் கைவிட்ட கடைசி நாடாக ஸ்பெயின் இருந்தது.
அந்த வணிகமும் அதைக் கட்டுப்படுத்திய குடும்பங்களும் சாக்கரோக்ராசி (saccharocracy) என அழைக்கப்படுவதாக 32 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெசஸ் சன்ஜூர்ஜோ, தான் எழுதிய ‘வித் தி ப்லெட் ஆப் அவர் ப்ரதர்ஸ்’ (With the Blood of our brothers) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பாடப்பரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கரும்பு சாகுபடியைக் கட்டுப்படுத்திய குடும்பங்கள், அட்லாண்டிக் பகுதியில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறினர். அவர்கள், அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தாமதப்படுத்தினர். அவர்களின் செல்வம் பெருகியது. இதனால், கியூபா, ஸ்பெயின் அடிமைத்தனத்தின் கடைசிக் கோட்டையாக இருந்தது.
பிபிசி சார்பில் அந்த நூலின் எழுத்தாளர் முனைவர் ஜெசஸ் சன்ஜூர்ஜோவிடம் பேசினோம். அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளையும், அவர் அதற்கு அளித்த பதில்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம்.
ஐரோப்பாவில் கடைசிவரை அடிமை முறையை ஸ்பெயின் கடைப்பிடித்தது ஏன்?

பட மூலாதாரம், SAMUEL CRITCHELL
ஸ்பானிய ஏகாதிபத்திய சூழலில் கியூபாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சர்க்கரையின் பங்கு முக்கியமாக இருந்தது.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தின் வடக்கில் உள்ள புதிய கனரக தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களில் அதிகம் பேர் காபி மற்றும் தேநீர் அருந்தத் தொடங்கினார்கள். அதனால், அவற்றை இனிமையாக்க வேண்டிய அவசியம் எழுந்தது.
தேநீர் அல்லது காபியில் இனிப்பு சேர்ப்பதற்கான பாரம்பரிய வழிகளான தேன் அல்லது இயற்கை சர்க்கரை (பீட் செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவது) மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால், கரீபியன் மற்றும் வடக்கு பிரேசிலின் வெப்பமான காலநிலையில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு சர்க்கரை, தேன் மற்றும் இயற்கை சர்க்கரைக்கு மலிவான மாற்றாகத் தோன்றியது.
இந்தச் சூழலில்தான், இந்தப் புதிய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆப்பிரிக்க மக்கள் அடிமைத் தொழிலாளர்களாக இறக்குமதியாகும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கின.
சாக்கரோக்ராசி என்றால் என்ன? அப்படி அழைப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images
சாக்கரோக்ராசி, ஒரு பொருளாதார மற்றும் அரசியல் உயர் வர்க்கமாகப் பார்க்கப்படுகிறது. இது கியூபாவில் சர்க்கரை உற்பத்தியுடன் இணைக்கப்பட்டது.
அந்தக் குடும்பத்தினர்தான் அடிமைகளுக்கும் உரிமையாளர்கள், தோட்டங்களுக்கும் உரிமையாளர்கள். அடிமைத் தொழிலாளர்களை கடத்துவது, அவர்களை இடம் மாற்றுவது, அவர்களுக்கு செலவு செய்வது என அனைத்தையும் அந்தக் குடும்பத்தினரே பார்த்துக்கொள்வார்கள்.
முழு அட்லாண்டிக் பகுதியிலும் அவர்கள்தான் பணக்காரர்களாக இருந்தனர். 1820ஆம் ஆண்டு முதல் அடிமைமுறை சட்டவிரோத செயல் என்றாலும், அந்த முறை தொடர்ந்தது மட்டுமல்லாமல், அந்த முறை மிக வேகமாகவும் வளர்ந்தது.
இந்த அடிமை முறையை ஊக்குவிப்பது, அரசியல், நிர்வாக, ராணுவ, மத மற்றும் பொருளாதார சக்திகளுக்கு இடையே ஒரு கச்சிதமாகப் பிணைக்கப்பட்ட வலையமைப்பாக இருந்தது. இது மிகக் குறைந்த நபர்கள் தங்களின் செல்வத்தைப் பெருக்கி, குவிப்பதற்கான ஏற்பாடாக இருந்தது.
இவை அனைத்தையும் செய்த அந்த நபர்களும், அந்தக் குடும்பங்களுமே சாக்கரோக்ராசி என்று அழைக்கப்படுகின்றனர்.
கடத்தப்பட்ட அடிமைகள் என்ன ஆனார்கள்?

பட மூலாதாரம், Getty Images
தோட்டங்கள் மற்றும் அடிமைகளின் உரிமையாளர்களாக ஒரு சில குடும்பங்களே இருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில் கியூபா எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்வதில், அடிமைத்தனம் முக்கியப் பங்கு வகித்தது.
ஒரு பிரிட்டிஷ் தூதரக அதிகாரி தனது துணிகளைத் துவைக்க அடிமைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக சக ஊழியரால் கண்டிக்கப்பட்டதைப் பற்றிய ஒரு கதை உள்ளது.
பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளருடனான ஒரு கடிதப் பரிமாற்றத்தில், அந்த வேலையைச் செய்ய விரும்பும் ஒரு பெண்ணை ஹவானாவில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று கூறி தன்னை நியாயப்படுத்தினார் அந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி.
ஆனால் அது மட்டுமல்ல. ஒரு நவீன நிறுவனத்தைப் போன்று, தொழிலாளர்களை ஏலத்தில் எடுக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டது.
இதனால், பல முறை ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கடத்தப்பட்டபோது, அவர்கள் பல்வேறு வழிகளில் தப்பித்துள்ளனர். ஆப்பிரிக்க மக்கள், கப்பலில் கடத்தப்பட்டபோது, அவர்கள் சண்டையிட்டுத் தப்பித்துள்ளனர், சில முறை, பிரிட்டிஷ் ராணுவம், அடிமைகளாகக் கடத்தப்படும் மக்கள் பயணிக்கும் கப்பலைக் கைப்பற்றி, அவர்களை விடுவித்துள்ளது.
கியூபாவில் மக்கள் அடிமைகளாக ஏலம் விடப்படுவது வெற்றிகரமாக நடந்தது. ஆனால், அவர்கள் பெரிய கடத்தல்காரர்களோ அல்லது அடிமைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களோ இல்லை. அவர்கள் பணம் மற்றும் கடன் வசதி இல்லாத மக்கள். அவர்களுக்கு மனிதர்களை அடிமைகளாக ஏலம் எடுப்பது ஒரு லாபகரமான வணிகமாக இருந்தது.
ஸ்பெயினில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரிட்டிஷ் அரசு ஆர்வமாக இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம், 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனில் தோன்றிய குவாக்கர் உலகம் - அடிமை வர்த்தகத்திற்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், நெறிமுறை, மனிதநேயம் மற்றும் கிட்டத்தட்ட கோட்பாடு சார்ந்த மத நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
பிரிட்டிஷ் அதிகாரிகள் “எங்கள் காலனிகளான ஜமைக்கா மற்றும் பார்படாஸில் அடிமை வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்தால், எங்கள் ராணுவ மற்றும் அரசியல் கூட்டாளிகளும் அவ்வாறே செய்ய வேண்டும்," எனக் கூறி வந்தனர்.
ஆனால் ஸ்பெயினுக்கு வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. ஸ்பெயினில் நெப்போலியன் படைகளுக்கு எதிரான போரில், ஆங்கிலேயர்கள், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியர்களுடன் போரிட்டனர். அந்த நேரத்தில் மிக நெருக்கமான அரசியல் மற்றும் ராணுவ உறவு உருவானது. இதனால், ஸ்பெயினின் நிதி நெருக்கடியை பிரிட்டன் அறிந்திருந்தது.
கடன்பட்டிருந்தால், ஸ்பெயினின் உள்நாட்டுக் கொள்கையை அமைப்பதில் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என பிரிட்டன் கருதியது.
எடுத்துக்காட்டாக, 1817இல் ஆங்கிலேயருடன் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் சர்வதேச ஒப்பந்தத்தில், மன்னர் ஏழாவது ஃபெர்டினாண்ட், அது ஒரு சமூகவிரோத செயல் என்றும், அது கிறிஸ்தவ மதத்திற்கு முரணானது என்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அடிமைமுறை அதுவரையில் ஒரு சட்டபூர்வமான வணிகமாக இருந்ததையும், அதை ஸ்பெயின் அரசு ஆதரித்ததையும் அவர் புரிந்துகொண்டார்.
அதனால்தான், பிரிட்டிஷ் அரசு கியூபாவின் பொருளாதாரத்திற்கும், அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நான்கு லட்சம் பவுண்டுகள் வழங்க ஒப்புக்கொண்டது.
ஆனால், பணம் வந்தவுடன், மெக்சிகோவை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷ்யாவின் முதலாம் ஜார் அலெக்சாண்டரிடம் இருந்து போர்க் கப்பல்களை வாங்கப் பயன்படுத்துகிறார்.
அடிமைகள் கடத்தப்பட்ட கப்பல்களை தாக்கிய ஆங்கிலேயர்கள், ஸ்பானிய கப்பல்களைத் தாக்காதது ஏன்?
பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் பார்வையில், பிரேசில் அதன் பேரரசுடன் ஒப்பிடக்கூடிய தேசம் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் இருந்த காலனித்துவ, இனவாத மற்றும் ஏகாதிபத்திய தர்க்கத்தில், அது(பிரேசில்) "பெரியவர்களின்" மேசையில் உட்கார அனுமதிக்கும் தார்மீக நியாயத்தன்மை, ராணுவ சக்தி மற்றும் வரலாற்று கௌரவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஸ்பானிய சாம்ராஜ்யத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனால், அதே மரியாதை ஸ்பானிய அதிகாரிகளுக்கு இல்லை.
ஸ்பானிய அதிகாரிகளைக் குறிப்பிட்டுப் பேசும் இனவெறிப் பேச்சும் இருந்தது. ஆனால், அதை லத்தீன் அமெரிக்க அரசுகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் தொனியோடு ஒப்பிட முடியாது.
சர்வதேச உடன்படிக்கைகளின் வெளிப்படையான மீறல் காரணமாக ஸ்பானிய பேரரசுடன் போரை அறிவிக்கும் அபாயம் இருந்தது. ஆனால், அது பிரிட்டிஷ் எடுக்கத் தயாராக இல்லாத ஒரு நடவடிக்கை.
அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள கியூபாவின் புவியியல் அமைவு இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வட அமெரிக்க தலையீடு பற்றிய யோசனை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்தது.
அடிமை வர்த்தகம் இறுதியாக எப்படி முடிவுக்கு வந்தது?

பட மூலாதாரம், Getty Images
அடிமை வர்த்தகம் 1870இல் முடிவடைந்தது என்று தீர்மானிக்கும் அளவிற்குப் பெரிய வரலாற்றுச் சான்று எதுவும் இல்லை. முடிவை அடைய, ஒருபுறம், அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் தெற்கிற்கும், வடக்கிற்கும் நடந்த சண்டையில், வடக்கு வெற்றி பெற்றது.
அங்கு, ஒரு சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது. அது பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் இடையிலான கூட்டு ராணுவ நடவடிக்கைகள் தொடர்பானது. அந்த ஒப்பந்தம், வட அமெரிக்காவில் அடிமைகளைக் கடத்தும் கடத்தல்காரர்களைத் தடுக்கவும், கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இயங்கும் கடத்தல் சம்பவங்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.
மறுபுறம், ஸ்பெயினில் அடிமை ஒழிப்பு இயக்கம் ஒன்று உருவானது. பின்னர் 1865ஆம் ஆண்டுக்குப் பிறகு அதில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஸ்பானிய காலனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளரான ஜூலியோ விஸ்காரோண்டோ இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.
இதற்குப் பிறகு, இந்த இயக்கம், முதலில் அடிமை வர்த்தகத்திற்கும் பின்னர் அடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ஸ்பெயின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












