சீனாவில் ரூ.30 லட்சம் கோடி கடனால் 'எவர்கிராண்டே' மூடல் - சீன பொருளாதாரத்திற்கு என்ன அச்சுறுத்தல்?

பட மூலாதாரம், Getty Images
கடனில் சிக்கித் தவிக்கும் சீன நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனத்தை கலைக்க ஹாங்காங்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கலில் உள்ள இந்த கட்டுமான நிறுவனம் அதன் கடன்களை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க பலமுறை தவறியதை அடுத்து, நீதிபதி லிண்டா சான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் ($325bn - £256bn) அளவுக்கு கடன் உள்ளிட்ட நிதி சார்ந்த நெருக்கடியில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதத்தை பிடித்துள்ளது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவர்கிராண்டே கடனில் மூழ்கிய போது அது உலக நிதிச் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
எவர்கிராண்டே நிறுவனம் என்ன தொழில் செய்கிறது?
தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 இல் தெற்கு சீனாவின் குவாங்சோவில் ஹெங்டா குழுமம் என்று அழைக்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனத்தை நிறுவினார்.
இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் குழுமம், சீனா முழுவதும் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்த அளவில் செயல்படும் எவர்கிராண்டே, ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்கிறது என்றில்லாமல் பிற தொழில்களையும் செய்துவந்தது.
ரியல் எஸ்டேட் தொழிலைத் தவிர, மின்சார கார் உற்பத்தி முதல் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு வரை பல தொழில்களை இந்நிறுவனம் செய்துவந்தது. நாட்டின் மிகப்பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான குவாங்சோ எஃப்சியில் கூட இந்நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
ஹுய் ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ($42.5bn -£34.8bn) ரூபாயாக இருந்தது என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எவர்கிராண்டே ஏன் சிக்கலில் சிக்கியது?
எவர்கிராண்டே சுமார் 25 லட்சம் கோடி ($300bn) ரூபாய்க்கும் அதிகமான கடன் வாங்குவதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு தீவிரமாக முயற்சித்தது.
இதற்கிடையே, 2020 ஆம் ஆண்டில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்த சீனா புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய விதிகளின் காரணமாக எவர்கிராண்டே தனது சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அந்நிறுவனம் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்த தொகைகளைப் பெறமுடியாத சூழ்நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கியது.
இப்போது கடன்களுக்கான வட்டியை அடைக்க முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது.
இந்த நிச்சயமற்ற தன்மையால் கடந்த மூன்று ஆண்டுகளில் எவர்கிராண்டேயின் பங்குகள் 99% அளவுக்கு மதிப்பை இழந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் நியூயார்க்கில் திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்தது. கடனாளர்களுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் வேலை செய்ததால், அதன் அமெரிக்க சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
எவர்கிராண்டே வீழ்ச்சியால் சீன பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு?
எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தீவிரமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, கட்டுமானப் பணிகளைத் தெடங்குவதற்கு முன்பே பலர் அந்நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்குவதற்காக முன்பதிவு செய்து பெரும் தொகைகளைச் செலுத்தினர். தற்போது இந்நிறுவனம் சிதைந்துவிட்டால், அவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை இழக்க நேரிடும்.
எவர்கிராண்டேவுடன் வணிகம் செய்யும் நிறுவனங்களும் உள்ளன. எவர்கிராண்டேவின் வீழ்ந்தால், கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் வழங்குபவர்கள் என பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. இது அந்நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளும்.
மூன்றாவதாக, சீனாவின் நிதி அமைப்பில் ஏற்படக் கூடிய பாதிப்பு: எவர்கிராண்டே சரிந்தால், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் குறைவாகக் கடன் கொடுக்க நிர்பந்திக்கப்படும் அபாயம் உள்ளது.
குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போராடும் போது, இது கடன் நெருக்கடியாக மாறும்.
கடன் நெருக்கடி என்பது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்க முடியாத நிறுவனங்கள் வளர்ச்சியடைவது மிகவும் கடினம். மேலும் சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படலாம்.
இது போன்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தகுந்த நாடு சீனா இல்லை என்று கருதும் நிலைக்குத் தள்ளலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












