நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி - முதலமைச்சர் விஜய் அரசுக்கு 144 பேர் ஆதரவு

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN Assembly

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது )

தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது பேசினர்.

இதன் பின்னர் டிவிஷன் பெஞ்ச் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், அவையில் இருந்தவர்களில் 22 பேர் எதிராக வாக்களித்தனர். 5 பேர் வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

"நூலிழையில் தவறிய தனிப்பெரும்பான்மை" - விஜய்

இறுதியாக மீண்டும் உரையாற்றிய விஜய் தவெகவிற்கு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப்போய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், "எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக களம் கண்டோம். 1967, 1977 போல சாமானியர்களின் ஆட்சியை அமைப்போம் என மக்களிடம் கூறினோம். கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் 34.92 சதவிகிதம் மற்றும் 1.72 கோடி வாக்குகளுடன் தவெகவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த அரசை யாரும் சிறுபான்மை அரசு என நினைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் அரசு இது." என்றார்.

"இது எல்லோருக்குமான அரசாக இருக்கும், எந்த பாகுபாடும் இருக்காது. இதையெல்லாம் போகப் போக புரிந்து கொள்வார்கள். மக்கள் நலன் முக்கியம் என்பதே எங்களின் நிலைப்பாடு." என்று விஜய் பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது எப்படி?

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு விடப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் ஓவ்வொரு பகுதியாக ஆதரவு தெரிவிக்கும், எதிர்ப்பு தெரிவிக்கும், நடுநிலை வகிக்கும் உறுப்பினர்கள் எழுந்து நிற்கும்படி கூறப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினரின் பெயரும் அழைக்கப்பட்ட பிறகு அவர்கள் அமர்ந்தனர்.

தவெக உறுப்பினர்கள் உடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து எழுந்து நின்றனர்.

வாக்கெடுப்பு எதிர்க்கட்சிகள் அமர்ந்திருந்த நான்காவது பிரிவுக்குச் சென்றபோது அதிமுக உறுப்பினர்கள் இருந்தனர். அந்தப் பிரிவில் எஸ்.பி வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அவரைத் தொடர்ந்து அதே பிரிவில் இருந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்றனர். அதன் பிறகு தீர்மானத்தில் நடுநிலை வகிக்கும் பாமக, பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர்.

அதன் பிறகு ஐந்தாவது பிரிவுக்குச் சென்றபோது அங்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். அதிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்ப்பவர்கள் தனியாகவும், ஆதரிப்பவர்கள் தனியாகவும் எழுந்து நின்றனர். திமுக வெளிநடப்பு செய்ததால் 6வது பிரிவில் யாருமில்லை.

இறுதியில் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 144 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் 5 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இதனால் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

"தவெக குதிரை பேரத்தில் ஈடுபடாது" - முதலமைச்சர் விஜய்.

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

முன்னதாக நம்பிக்கை தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்களின் உரைக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

அவர் தனது உரையில், "தீர்மானத்தின் மீது உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதச்சார்பற்ற அரசுக்கான ஆதரவு என காங்கிரஸ் உறுப்பினர் கூறினார். இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகத் தான் இருக்கும் எனத் தெரிவிக்கிறேன். சிபிஎம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. முந்தைய அரசு கொண்டு வந்த முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேமலதா அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் பற்றி மீண்டும் யோசிப்பேன். மகளிர் பாதுகாப்பில் இருந்து இந்த அரசு தவறாது. தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிவர்கள், ஆதரித்து உரையாற்றியவர்களுக்கு நன்றி." எனத் தெரிவித்தார்.

குதிரை பேரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதற்கு பதிலளித்த விஜய், "இந்த அரசு குதிரை வேகத்தில் ஈடுபடுகிற அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடாது." என்றார். மேலும் அவர், "தமிழ்நாட்டிற்கு வழிகாட்டிய தலைவர்களின் வழியிலிருந்து இந்த அரசு இம்மியளவும் விலகாது." என்று கூறி தனது உரையை முடித்தார்.

"அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது" - உதயநிதி ஸ்டாலின்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தவெக என்று உரையை தொடங்கினார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

"234 உறுப்பினர்களில் 118 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோதான் ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால் இந்த கட்சி 108 பேரை மட்டுமே கொண்டுள்ளது. அதிலும் முதலமைச்சர் வென்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார், திருப்பத்தூர் எம்எல்ஏ நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்களிக்க முடியாது.

இன்று அவர்களின் பலம் 106 ஆக மட்டுமே உள்ளது. ஆனால் தேர்தலில் தனக்கு எதிராக உருவான கட்சிகளின் ஆதரவோடுதான் இந்த ஆட்சி அமைந்துள்ளது.

கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை அந்த கட்சி தலைவருக்கு தெரியாமல் ஆதரவு தர வைத்துள்ளீர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அந்த கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்." என்றார். அப்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

"அதே கூட்டணியில் உள்ள அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது, அதில் பிளவுபட்ட ஒரு தரப்பு உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது" என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

"எம்எல்ஏக்களை கடன் பெற்று ஆட்சி நடத்தும் இவர்கள், போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்ததும், முந்தைய அரசு வளர்ச்சிக்காக பெற்ற கடன் குறித்து தவறான கருத்துக்களால் மக்களை திசை முயற்சித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

"அதிமுக எதிர்த்து வாக்களிக்கும்" - எடப்பாடி பழனிசாமி

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுகவில் 47 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பலருக்கு ஆட்சியில் பங்கு பெற அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் பதவி வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறப்படுகிறது எனக் கேள்விப்படுகிறேன். முதலமைச்சர் அதற்கு இடம் அளிக்கக்கூடாது. " என்றார்.

"மக்கள் பிரச்னைகளைக் கொண்டு வரும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும். இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களிப்பார்கள். குதிரைப் பேரத்திற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

"அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையிலேயே வாக்குகள் சேகரித்தோம், அதனடிப்படையில் 47 பேர் வெற்றிபெற்றோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்போமே தவிர எதிரிக்கட்சியாக இருக்கமாட்டோம். தமிழ்நாட்டில் 34% மக்கள் தான் தான் ஆளுங்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 பேரும் இந்த அரசை எதிர்த்துதான் வாக்களிப்பார்கள்." என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

"ஆதரவு" - எஸ்.பி வேலுமணி

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி பேசத் தொடங்கினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரவைத் தலைவர் தலையிட்ட பிறகு அவர் தொடர்ந்து பேசினார்.

அப்போது அவர், "மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து முதலமைச்சர் தலைமையில் அமைந்துள்ள அரசுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

நாங்கள் யாரும் பதவிக்காக ஆசைபட்டவர்கள் கிடையாது திமுகவை எதிர்த்து தான் நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம், இன்று மக்கள் முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்துள்ளனர் அதன் அடிப்படையில் நாங்கள் இந்த அரசை ஆதரிக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

"ஜோதிடத்தை அரசு மையமாக்குவதை ஏற்க முடியாது" - தமிமுன் அன்சாரி.

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN assembly

தீர்மானத்தின் மீது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

அவர் தனது உரையில், "தமிழக அரசு 717 மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சந்தித்தபோது ' எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது, உங்களுக்கு இல்லை, ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சொன்னபோது அவரது உணர்வை மதித்து அவர் சொன்ன நேரத்திற்கு முன் கையெழுத்திட்டேன். அதே போல உங்கள் உணர்வை மதிக்கிறேன். அதே நேரத்தில் ஜோதிடத்தை அரசு மையமாக்குவதை ஏற்கமுடியாது." எனத் தெரிவித்தார்.

வாக்கெடுப்பிலிருந்து விலகிய பா.ம.க.

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

நம்பிக்கை தீர்மானத்தின் மீது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேசினார்.

அவர் தனது உரையில், "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும். கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்." எனப் பேசினார்.

தனது உரையின் இறுதியில் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

"தீர்மானத்தை எதிர்ப்போம்" - கொமதேக

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் தீர்மானத்தின் மீது பேசுகையில், "மாற்றம் தேவை என மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த அரசு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி பெறலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிலையான ஆட்சி வழங்க முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. " என்றார்.

"எதிர்க்கட்சிகளை தீய சக்தி எனக் கூறிவிட்டு இன்று அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர். தமிழ்நாடு என்பது அரசியல் பரிசோதனை நடத்தும் மேடை அல்ல. தமிழ்நாட்டிற்கு நல்லது என்றால் எதையும் ஆதரிப்போம். ஆனால் குழப்பம், அனுபவமின்மை, நிலையற்ற அரசியல் ஆகியவற்றை எதிர்ப்போம்." எனத் தெரிவித்தார்.

"மக்களுக்கு பாதகமான திட்டங்களை எதிர்ப்போம்" - சிபிஎம்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ செல்லச்சாமி

தீர்மானத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ செல்லச்சாமி பேசினார்.

அவர் தனது உரையில், "தனிப்பெரும் கட்சியாக இருந்த தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அரசு மக்கள் நலனுக்கு திட்டங்கள் அறிவித்தால் வரவேற்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதகம் நேர்ந்தால் அதனை எதிர்க்கவும் தயங்காது" என்றும் அவர் தெரிவித்தார்.

"மத்திய அரசை எதிர்க்க தமிழக அரசு தயங்கக்கூடாது" - இந்திய கம்யூனிஸ்ட்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர், "மத்திய அரசு ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவித்துக் கொண்டிருக்கிறது, மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்துக்கொண்டிக்கிறது, மாநிலங்கள் வலிமையாக இருந்தால்தான் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்.

மாநில உரிமைகள், சமூக நீதி, மதசார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை எதிர்க்க தமிழக அரசு தயங்கக்கூடாது எனவே இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்." என்றும் தெரிவித்தார்.

நடுநிலை வகிக்கும் பாஜக

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

படக்குறிப்பு, பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜ ராஜன்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு பாஜக நடுநிலை வகிப்பதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போஜராஜன் அவையில் தெரிவித்தார்

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், "முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பேச வேண்டியதை பாஜகவுக்கு எதிரான பிரசாரக் கூட்டமாக கருதி மாண்பை மீறி பேசிவிட்டார்கள். அரசின் நல்ல திட்டங்களுக்கு மத்திய அரசு என்றும் ஆதரவாக இருக்கும். இந்த தீர்மானத்தில் பாஜக நடுநிலை வகிக்கும்." எனத் தெரிவித்தார்.

"குதிரை பேரம் பற்றி முதல்வர் பேச வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

தீர்மானத்தின் மீது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அவர் தனது உரையில், " தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் நடக்காத விஷயம். அதனை நினைத்து நான் மனவேதனை அடைகிறேன்." என்றார். "முதல்வரைச் சந்திக்க யார் முகமூடி அணிந்து வந்தார் எனத் தெரிவிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட தலைகுனிவு இருக்க முடியாது. " எனவும் கூறினார்.

"அதே போல அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதல்வர் தெரிவித்தார். ஆனால் இன்று அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை அரசின் உயர் பொறுப்பில் நியமித்ததை ஒட்டுமொத்த தேமுதிக கண்டிக்கிறது." எனத் தெரிவித்தார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, "ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா

"நேற்று, இன்று, நாளையும் ஆதரவு" - மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ்

தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாகப் பேசினார்.

"முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்ததால் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். தமிழ்நாட்டு மக்களையெல்லாம் காப்பாற்றப்போகும் முதல்வர் விஜய், என்னையும் காப்பாற்றுவார், எனக்கு ஆதரவாக இருப்பார் என நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நேற்றும் இன்றும் நாளையும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பேன்," எனத் தெரிவித்தார்.

"எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது" - காங்கிரஸ்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN ASSEMBLY

படக்குறிப்பு, காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார்

காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

"இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு காங்கிரஸ் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது." என்று கூறினார்.

"முதலமைச்சர் ஆதரவு கோரியது காங்கிரஸ் உள்ளிட்ட 5 மதசார்பற்ற கட்சிகளிடம் தான். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வெளியிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் மக்கள் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பான சமூகம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது." என்றும் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

திமுக அரசின் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் - முஸ்லிம் லீக்

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN Assembly

படக்குறிப்பு, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான்

இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்.

அவர் தனது உரையில், "ஒன்றிய அரசின் முயற்சிகளைத் தடுக்கவே தவெகவிற்கு முஸ்லிம் லீக் ஆதரவளித்துள்ளது. மதுபானக் கடைகள் அப்புறப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை முஸ்லிம் லீக் வரவேற்கிறது. தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், மாநில வளர்ச்சி உள்ளிட்ட உயர்ந்த தத்துவங்களை நிலைநாட்டுவதில் உங்களுடைய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும். திமுக அரசின் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும்." எனத் தெரிவித்தார்.

"மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் வேண்டும்" - விசிக

தவெக, விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு

பட மூலாதாரம், TN Assembly

படக்குறிப்பு, வன்னி அரஅரசு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் வன்னி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லாமல் இருக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.

"அதே போல ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். எஸ்சி/எஸ்டி மக்கள் பதவி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. அந்த ஆணையம் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தில் இருப்பதைப் போல மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். மீனவப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும். ஒன்றிய அரசிடம் பேசி அவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முந்தைய திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் தொடர வேண்டும்," எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மே 10 அன்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

த.வெ.க. 108 தொகுதிகளில் வென்ற நிலையிலும், விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக உள்ளது. இது தவிர காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2 மற்றும் ஐயூஎம்எல் 2 என 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

தவெக அரசு தனது பெரும்பான்மையை மே 13ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.

தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளன்று அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களின் அடிப்படையில்தான் பெரும்பான்மைக்கு எத்தனை இடங்கள் தேவை என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அவையில் 234 உறுப்பினர்கள் இருக்கும்போது, பெரும்பான்மைக்குத் தேவையானது 118 இடங்கள் ஆகும். அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான எண்ணிக்கையே பெரும்பான்மை எனக் கருதப்படுகிறது.

மே 13 அன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, ரகசிய வாக்கு சீட்டு முறையில் நடைபெறாது. குரல் வாக்கெடுப்பு மூலமே நடைபெறும். காரணம், இதற்கென வகுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை விதிகள். அதேபோல டிவிஷன் என்ற மற்றொரு முறையும் நடைமுறையில் உள்ளது.

குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு ஆகிய இரண்டு நடைமுறைகளும் பிரிட்டனின் நாடாளுமன்ற விதிகளில் இருந்து பெறப்பட்டவை மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டம் இயற்றும் அவைகளில் இவை நடைமுறையில் இருந்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவை நடைமுறை விதிகள், குறிப்பாக விதி 99 மற்றும் அரசியலமைப்பு விதிகள் பிரிவுகள் 164 மற்றும் 189, ஆகியவற்றைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்திய அரசியலமைப்பின் 164வது பிரிவு, "அமைச்சரவையானது மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு கூட்டாகப் பொறுப்புடையதாகும்" என்று கூறுகிறது. எனவே, அவர்களுக்கு சட்டப்பேரவையின் ஆதரவு இல்லையென்றால், அந்த அரசு பதவி விலக வேண்டியிருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு