டி20 பேட்டர்களை கட்டிப்போட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் - ஹைதராபாத்தை குஜராத் வென்றது எப்படி?

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த அணிகள் இந்த சீசனில் மோதிக்கொண்டது இதுவே முதல்முறை.
    • எழுதியவர், நிதிஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு அணிகளுமே பெருமளவு நம்பியிருப்பது அவர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத்தான். இரு அணிகளுமே தொடரின் முதல் பாதியில் நிறைய தோல்விகளைச் சந்தித்தன.

தொடரின் இரண்டாம் பாதியில் தொடர் வெற்றிகளை பெற்று இப்போது புள்ளிப்பட்டியலில் தலா 14 புள்ளிகளோடு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை எடுத்திருக்கிறார்கள்.

இப்படி நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த அணிகள் இந்த சீசனில் மோதிக்கொண்டது இதுவே முதல்முறை. இதில் வெற்றி பெறும் அணிக்கு 16 புள்ளிகள். ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி. இப்படியான சூழ்நிலையில்தான் இரு அணிகளும் ஆமதாபாத்தில் நேற்று (மே 12) மோதிக்கொண்டன.

நேற்று இந்த ஆட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிட்ச் முதலில் பேட் செய்யும் அணிக்குச் சாதகமானது. இந்த பிட்ச்சில் இதுவரை ஆடப்பட்டிருக்கும் எட்டு போட்டிகளில் ஆறில் முதலில் பேட் செய்த அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பதுதான் கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பீல்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணியில் எந்த மாற்றங்களும் இல்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹர்ஷ் தூபேவிற்கு பதில் ஹிங்கே அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

குஜராத்தை கரைசேர்த்த தமிழக வீரர்கள்

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் இருவருமே அதிக ரிஸ்க் எடுக்காமல் அதேசமயம் ரன்ரேட்டும் குறையாமல் லாவகமாய் ஆடும் திறன் பெற்றவர்கள்.

சாய் சுதர்ஷன், சுப்மன் கில் இருவருமே இந்த சீசனில் நானூறு ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். அதாவது இருவரில் ஒருவராவது எல்லா போட்டிகளிலும் தவறாமல் அரைசதம் அடித்துவிடுகிறார்கள். மறுபக்கம், அனுபவம் வாய்ந்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான பவுலிங் குழு. எப்படி இருக்கப்போகிறது இந்த மேட்ச் அப் என எல்லாரும் எதிர்பார்த்திருக்க முதல் ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் கம்மின்ஸ்.

நிதிஷ்குமார் ரெட்டி வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட பத்து ரன்கள். மூன்றாவது ஓவரை போடவந்தார் ஹைதராபாத் இந்த சீசனில் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஹிங்கே. ஓவரின் இரண்டாவது பந்தையே கில் ட்ரைவ் அடிக்க, தரையோடு தரையாக மிதந்து வந்த பந்தை முன் பாய்ந்து கேட்ச் பிடித்தார் க்ளாஸன். குட் லென்த்தில் போடப்படும் பந்துகள் பேட்ஸ்மேன்களைத் தடுமாற வைக்க, களத்திலிருந்த சுதர்ஷனும் பட்லரும் மிகப் பொறுமையாக ஆடினார்கள்.

ஹிங்கே வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பட்லர். நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது சென்னை அணிக்காக சில சீசன்கள் பென்ச்சிலேயே உட்காரவைக்கப்பட்டிருந்த நிஷாந்த் சிந்து. வந்த வேகத்தில் அவர் பவுண்டரிகள் அடிக்க, பவர்ப்ளே முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 34/2. இந்த சீசனில் குஜராத் அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இது.

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால் அடுத்த மூன்று ஓவர்களில் நிஷாந்த் சிந்துவின் அதிரடியான கேமியோவின் பலனாக 29 ரன்கள் குஜராத்திற்கு கிடைக்க, பவுலிங் சேஞ்ச் என பொறுப்பைக் கையிலெடுத்துக் கொண்டார் கேப்டன் கம்மின்ஸ்.

பத்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் க்ளாஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சிந்து. இப்போது களத்தில் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் என இரு தமிழக வீரர்கள். இருவருமே அதிக ரிஸ்க் எடுக்காமல் அதேசமயம் ரன்ரேட்டும் குறையாமல் லாவகமாய் ஆடும் திறன் பெற்றவர்கள்.

முடிந்த அளவிற்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து பவுலர்களின் மோசமான பந்துகளை பவுண்டரியாகவோ, சிக்ஸராகவோ மாற்றி பொறுப்பான கிரிக்கெட் ஆடினார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலவீனமான மிடில் ஆர்டர். இந்த சீசனில் க்ளென் பிலிப்ஸ், ஷாருக்கான், திவேதியா என நிறைய வீரர்களை முயற்சித்துப்பார்த்தும் எதிர்பார்த்த முடிவுகள் அந்த அணிக்கு கிடைக்கவில்லை.

14வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் அடைந்தார் சாய் சுதர்ஷன். இந்த சீசனில் அவர் அடிக்கும் ஆறாவது அரைசதம் இது. அந்த ஓவரில்தான் அணியின் ஸ்கோரும் நூறைக் கடந்தது. அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே.

எனவே, 17வது ஓவரில் ரன்ரேட்டை அதிகப்படும் நோக்கோடு சாய் சுதர்ஷன் ஒரு ரிவர்ஸ் லேப் ஷாட் அடிக்க, அதை கேட்ச் பிடித்தார் ஹிங்கே. இப்போது அணியை டீசென்டான ஸ்கோருக்கு செல்ல வேண்டிய பொறுப்பு சுந்தர் மீது விழுந்தது.

ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியிருக்கும் இஷான் மலிங்கா வீசிய 19வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என பயம் காட்டினார் சுந்தர். அதுவும் ஓவரின் கடைசி பந்தில் டீப் ஸ்கொயர் பக்கம் சுந்தர் குனிந்து அடித்த அந்த சிக்ஸர் டாப் க்ளாஸ்.

கடைசி ஓவரில் மேலும் பத்து ரன்கள் வர, குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 168/5. சுந்தர் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தாஎடுத்தார். பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் இந்த ஸ்கோர் எதிர்பார்த்ததைவிட குறைவுதான்.

செய்வதறியாமல் திகைத்த சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

சன்ரைசர்ஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கத்தைவிடவும் குறைவான இலக்கு. எனவே தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்தி எதிரணியை அழுத்தத்திற்குள்ளாக்க வேண்டும் என்கிற முனைப்போடு களத்திற்கு வந்தார்கள் குஜராத் பவுலர்கள்.

சிராஜ் வீசிய முதல் மூன்று பந்துகளை தொடவே தடுமாறிய ஹெட், நான்காவது பந்தை லெக் சைட் பக்கம் ஆட முற்பட்ட, அது லீடிங் எட்ஜாகி டீப் பேக்வர்ட் பாயின்ட்டில் கேட்ச் ஆனது. ஹெட் டக் அவுட். அந்த ஓவர் விக்கெட் மெய்டன். ஒருவகையில் இரண்டாவது இன்னிங்ஸ் எப்படி இருக்கப்போகிற்றது என்பதற்கான முன்னோட்டம் அந்த முதல் ஓவர்.

ரபாடா வீசிய இரண்டாவது ஓவரை சிக்சரோடு தொடங்கினார் அபிஷேக் சர்மா. இந்த சீசனில் பவர்ப்ளேயில் அவர் அடிக்கும் 28வது சிக்ஸர் இது. அதே ஓவரின் நான்காவது பந்தில் லெக் சைட் பக்கம் விலகி நின்று அபிஷேக் ஆட முற்பட பந்து அவர் பேடில் பட்டு தரையில் குத்தி நேராக சென்று ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. சில வினாடிகளுக்கு என்ன நடந்ததுவென்றே புரியாமல் நின்ற அபிஷேக் பெவிலியன் திரும்பினார்.

ரபாடாவின் அடுத்த ஓவரில் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷனும் அவுட். ஐ.பி.எல்லில் தன் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய ஸ்மரன் ரவிச்சந்திரன் சிராஜ், ரபாடா என இரு சர்வதேச பவுலர்களை சமாளிக்க முடியாமல் ஏகத்திற்கும் தடுமாறினார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் ரபாடா பந்துவீச்சில் அவர் அவுட்டானபோது அவர் எடுத்திருந்தது 15 பந்துகளில் ஒன்பது ரன்கள். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 34/4.

தொடர்ந்து ஐந்து போட்டிகளாக சிராஜ், ரபாடா இருவர் மட்டுமே முழு பவர்ப்ளேயிலும் பந்து வீசியிருக்கிறார்கள். ஐ.பி.எல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. அடுத்த மூன்று ஓவர்களில் பெரிதாக ரன்களும் இல்லை. விக்கெட்களும் விழவில்லை. பவுலிங் சேஞ்ச் என கடந்த சில போட்டிகளாக ஆடாத ப்ரஷித் கிருஷ்ணாவை கொண்டுவந்தார் கேப்டன் கில். உடனடி பலன். பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சலீல் அரோரா.

அடுத்த ஓவரிலேயே ஹோல்டர் வீசிய ஸ்லோ பாலில் டாப் எட்ஜாகி பட்லரிடம் கேட்ச் கொடுத்து க்ளாஸன் அவுட். அதே ஓவரில் பெக்வார்ட் பாயிண்ட்டில் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ்குமார் ரெட்டியும் அவுட் ஆனார். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட குஜராத் அணி வீரர்கள் அனைவரும் கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது போல இருந்தது. ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 60/7.

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் என எஞ்சிய விக்கெட்களும் விழ, 82 ரன்களுக்கு ஆள் அவுட்டானது சன்ரைசர்ஸ் அணி. ரபாடா, ஹோல்டர் இருவருக்கும் தலா மூன்று விக்கெட்கள். கம்பேக் கொடுத்த ப்ரஷித் கிருஷ்ணாவிற்கு இரண்டு, சிராஜ், ரஷித் கானுக்கு தலா ஒன்று என பவுலர்கள் அனைவருமே விக்கெட் கணக்கு வைத்திருந்தார்கள்.

ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். ஐ.பி.எல்லில் 16 புள்ளிகள் பெற்ற எந்த அணியும் இதுவரை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் இருந்ததில்லை. எனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் நான்கு இடங்களில் ஒரு இடம் நிச்சயமாகியிருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதில் ஒன்றிலாவது பெருவெற்றி பெறவேண்டும் இரண்டு போட்டிகளுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான சக போட்டியாளர்களாக இருக்கும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளோடு நடக்க உள்ளது. இந்த போட்டிகளின் முடிவுதான் எந்த இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கப்போகின்றன.

டெஸ்ட் பவுலர்களுக்கான காலம்

பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷல் படேல் என டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் எல்லாம் இந்த சீசனில் தடுமாறிக்கொண்ண்டிருக்க, சிராஜ், ப்ரஷித் கிருஷ்ணா, ரபாடா, ஹோல்டர் என டெஸ்ட் பவுலர்கள் இந்த சீசனில், முக்கியமாக பவர்ப்ளேயில் விக்கெட்களை குவிக்கிறார்கள். ரபாடா ஒருவர் மட்டும் இந்த சீசனில் 16 விக்கெட்களை பவர்ப்ளேயில் எடுத்திருக்கிறார்.

இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது குட் லென்த்தில் வீசப்படும் பந்துகள். பிட்ச்சில் 6 முதல் 8 மீட்டர்களுக்குள் குத்தும் பந்துகளே பொதுவாக குட் லென்த் பவுலிங் எனப்படுகிறது. இப்படியான பந்துகள் பெரும்பாலும் இடுப்பு உயரத்திற்கு எழும்பும். அதனால் ஸ்வீப், லாப்ட், இறங்கி அடிப்பது போன்ற டி20க்கென பிரதானமாக இருக்கும் ஷாட்களை பேட்ஸ்மேன்களால் ஆட முடியாது.

ஐபிஎல், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம், ANI

முன்காலை ஊன்றி ட்ரைவ் ஆடலாம். இல்லையெனில் பின்காலை ஊன்றி கட், புல் ஷாட் ஆகியவற்றை ஆடலாம். இப்படி இந்த குட் லென்த் பந்துகளை ஆட குறைவான ஆப்ஷன்களே இருப்பதால் பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் தடுமாறுகிறார்கள். இந்த சீசனில் குட் லென்த் பந்துகளுக்கான எகானமி 7.91, ஆவரேஜ் 31.93.

அதுவும் இப்போது அதிரடியாக ஆடும் இளம் வீரர்கள் பலருக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை. அதனால் அவர்கள் அதிகம் குட் லென்த் பந்துகளை சந்தித்ததும் இல்லை. எனவே அவர்கள் வேறுவழியே இல்லாமல் தற்காப்பு ஆட்டம் ஆடுகிறார்கள். இல்லையெனில் எட்ஜில் பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார்கள்.

முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் ஆட்டமாகவே மாறிவிட்ட டி20யில் தங்களுக்கான ஆயுதம் ஒன்றை கண்டறிந்திருக்கிறார்கள் பவுலர்கள். இது ஆட்டத்திற்கு தேவையான சமநிலையை உருவாக்கும் என நம்புவோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு