உங்கள் குழந்தைக்கு 'திக்குவாய்' பிரச்னை உள்ளதா? சரிசெய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு வாய் திக்கினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

"பள்ளியில் காலை வருகைப்பதிவின் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். பொதுவாக பள்ளியில் ‘பிரசண்ட் மேம்’ அல்லது ‘யெஸ் மேம்’ என்று கூறி வருகையை பதிவு செய்வோம். நான் எப்போதும் ‘யெஸ் மேம்’ என்று தான் கூறுவேன். எதை கூறுவதற்கு குறைவான முயற்சி தேவையோ அதையே தேர்வு செய்வேன்".

இது 35 வயது ஆதித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பகிர்ந்துக் கொண்ட அனுபவமாகும். அவர் ஒரு மென்பொருள் பொறியியலாளார். தனக்கு பேசும் போது, திக்குவதால் பேச்சு பயிற்சி எடுத்து வருகிறார்.

பிபிசி செய்தியாளர் பாயல் பூயானிடம், “எனது வாய் திக்கும். ஆனால் அதற்கு எப்படி நான் காரணமாக முடியும்? எனது தவறு என்ன இதில்?” என்று ஆதித்யா கேள்வி எழுப்புகிறார். “கடவுள் தான் எங்களை இப்படி படைத்துள்ளார். எனது குழந்தைப் பருவத்தில் திக்கி திக்கி பேசியதால், அனைவரும் கிண்டல் செய்வார்கள். அது இப்போதும் தொடர்கிறது என்று தான் நினைக்கிறேன்” என்றார்.

ஒரு ஆய்வின் படி, 8% குழந்தைகள் ஏதாவது ஒரு பருவத்தில் பேசும்போது திக்குவார்கள். பல குழந்தைகளுக்கு இது தானாகவே சரியாகிவிடும். சில குழந்தைகளில் ஓரளவு பாதிப்பு இருக்கும். சிலருக்கும் எந்த முன்னேற்றமும் இருக்காது.

குழந்தைகளுக்கு வாய் திக்கினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்களுக்கு பொறுமை அவசியம்

குழந்தை பேசும் போது திக்குவது, பெற்றோர்களுக்கு உண்மையாகவே பெருங்கவலை தான். எனவே பெற்றோர்கள் பல வழிகளில் குழந்தைகளுக்கு உதவ முயல்கின்றனர். ஆனால் அவை உண்மையிலேயே பலனளிக்கின்றனவா என்று

பிபிசி சவுண்ட்ஸ் பெண்கள் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், ஜெர்ரி என்ற பெற்றோர், தனது மகன் இரண்டு வயதிலிருந்து திக்கி திக்கி பேசுவதாக கூறுகிறார்.

“அவனுக்கு ஐந்து வயது ஆகும் போது தான் அவனுக்கு உண்மையிலேயே திக்குகிறது என உணர்ந்தேன். அவன் குழந்தையாக இருக்கும் போது, அப்படி பேசுவது இயல்பு தான் என்று நினைத்திருந்தோம். அவனுக்கு நாங்கள் எப்படி உதவ வேண்டும் என்று தெரியவில்லை. அவனுக்கு தானாகவே குணமாகிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம்” என்றார்.

ஆனால், ஜெர்ரியின் மகனுக்கு திக்குவது அதிகரித்தது. நினைத்ததை சரியாக சொல்ல முடியாததால், ஒவ்வொரு சிறு விசயத்துக்கும் கூட, மிகவும் கோபம் கொண்டான்.

“அவனுக்கு உதவி செய்வதற்காக, அவன் சொல்ல தடுமாறும் சொற்களை நாங்கள் சொல்லிக் கொடுப்போம். அது அவனை மேலும் எரிச்சலூட்டியது. பல நேரம் அவனுக்கு மிகுந்த கோபம் ஏற்படும். அவன் முகத்தில் ஒரு கையற்ற நிலை தெரியும்” என்றார்.

நொய்டாவை சேர்ந்த ஆதித்யா, “பல நேரங்களில் திக்குபவர்களின் வார்த்தைகளை அருகில் இருப்பவர்கள் சொல்லி முடித்துவிடுவார்கள். ஆனால் அது தவறு. நாங்கள் சொல்ல வரும் கருத்தை நாங்கள் சொல்லி முடிக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

“நல்ல எண்ணத்துடன் எங்களுக்கு உதவ தான் இதை செய்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அது எங்களுக்கு உதவுவதில்லை. ஏதோ ஒரு இடத்தில் அது எங்களை எரிச்சலாக்குகிறது. இன்னும் சற்று பொறுமையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்” என்று ஆதித்யா கூறுகிறார்.

பேச்சு பயிற்சியாளர் ஷிஷுபாலிடம் பாயல் பூயன் பேசிய போது, வாய் திக்குவதை தவிர்க்க முன்பை விட, தற்போது நிறைய பேர் பேச்சு பயிற்சி எடுத்துக் கொள்வதாக கூறுகிறார்.

திக்குவாய் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

வாய் திக்குவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்

  • லேசான திக்கல்
  • மிதமான திக்கல்
  • தீவிர திக்கல்

“லேசான திக்கல் இருக்கும் குழந்தைகள் வேகமாக குணமடைந்து விடுவார்கள். மிதமான திக்கல் இருக்கும் குழந்தைகளுக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் பேச்சு பயிற்சி தேவைப்படும். அதன் பிறகு அவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரியும். “ என்கிறார் ஷிஷுபால்.

தீவிர சிக்கல் இருக்கும் குழந்தைகளின் நிலை சவாலானது என்று அவர் கூறுகிறார். “அவர்களுக்கு 30 - 40 சதவீத முன்னேற்றம் ஏற்படலாம். பேச்சு பயிற்சிக்கான செலவு மற்றும் அதற்காக குடும்பத்தினரின் உழைப்பு ஆகியவையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

“நான் குழந்தையாக இருக்கும் போது எனக்கு திக்குவது குணமடையும் என்ற நம்பிக்கை இல்லை. இதற்கான சிகிச்சைகளுக்கு அதிக செலவாகும். அப்போது எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை” என்கிறார் ஆதித்யா.

பிபிசி சவுண்ட்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஜெர்ரி, “பள்ளியில் புத்தகம் வாசிக்க சொல்லும் போது என்து பையன் திக்குவான். எனது பையன் மிகவும் மெதுவாக படிக்கிறான் என்று ஆசிரியர் கூறுவார். அவனுக்கு தன்னம்பிக்கை இல்லை என்று கூறுவார் . ஆனால் இலக்கியம் கற்றுக்கொள்ளும்போது குழந்தைகள் பல இடங்களில் திணறுவார்கள். என் பிள்ளை போன்ற மாணவர்களுக்கு இன்னும் சில நேரம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கு பதிலாக அவர்கள் மெதுவாக கற்றுக் கொள்கிறார்கள் என்று கூறுவது சரியல்ல” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

குழந்தைகளுக்கு வாய் திக்கினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

பேச்சு பயிற்சியுடன் மனநல ஆலோசனையும் அவசியம்

பேச்சு பயிற்சியாளர் ஷிஷுபால், பேச்சு பயிற்சியுடன் சேர்த்து மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். “பலநேரங்களில் திக்குபவர்களுக்கு தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது. நான் திக்கி பேசிவிட்டால் தவறாக பேசி விட்டால் சுற்றியிருப்பவர்கள் என்னை கேலி செய்வார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது” என்று கூறுகிறார்.

“பேசும்போது திக்குபவர்கள், குழு விவாதங்களில் அமர்ந்து பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். குழுவில் இருப்பவர்கள் ஏதாவது கேட்டால் எப்படி திக்காமல் பதில் சொல்வது என்று யோசிப்பார்கள். இது அலுவலகங்களில் பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும்” என்று மேலும் ஷிஷுபால் தெரிவிக்கிறார்.

தான் வேலை தேடிய ஆரம்ப நாட்களை நினைவு கூறும் ஆதித்யா, “எழுத்து தேர்வு சுற்றுகள் அனைத்திலும் நான் தேர்ச்சி பெற்று விடுவேன். ஆனால் இறுதியாக நடைபெறும் நேர்காணல் சுற்றில் நான் தேர்ந்தெடுக்கப்படமாட்டேன். எனக்கு வாய் திக்குவது தான் வேலை கிடைக்காமல் இருக்கக் காரணம் என்று புரிந்துகொண்டேன். அடுத்த முறை நேர்காணலுக்கு செல்லும் போது, எனக்கு திக்கும் என்று முன்கூட்டியே கூறிவிட்டேன். அவர்கள் புரிந்து கொண்டார்கள். எனது பேச்சு பயிற்சி பற்றிக் கேட்டுக் கொண்டார்கள். எனக்கு அந்த வேலை கிடைத்தது” என்று கூறுகிறார்.

எனினும், அதிகம் பேச வேண்டும் என்ற காரணத்தினாலேயே பல நேரங்களில் மனதில் இருப்பதை வெளியே சொல்லுவதில்லை என்கிறார் ஆதித்யா. பல காலம் பேச்சு பயிற்சிகள் எடுத்துக் கொண்ட பிறகு ஆதித்யாவிடம் தற்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

குழந்தைகளுக்கு வாய் திக்கினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பெற்றோர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அதன் படி,

  • திக்குபவர்கள் சொல்ல வரும் வாக்கியங்களை அவர்களுக்காக நீங்கள் சொல்லி முடிக்காதீர்கள்.
  • அவர்கள் பேசும் போது குறுக்கிடாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
  • வேகமாகவோ மெதுவாகவோ பேச சொல்லாதீர்கள்.
  • அவர்கள் பேசும் போது அவர்கள் கண்களை பாருங்கள். அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனிக்காமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்.
  • ஒரு குழந்தையுடன் பேசும் போது, மெதுவாக பேசுங்கள். சிறு சிறு வாக்கியங்கள் பயன்படுத்துங்கள். எளிமையான மொழியில் பேசுங்கள்.
  • நீங்கள் கூறுவதை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ள போதிய கால அவகாசம் கொடுங்கள்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, திக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறது. சில நேரங்களில் பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், இதன் பாதிப்பை கண்டிப்பாக குறைக்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேச்சு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். எவ்வளவு சீக்கிரம் பயிற்சியை தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. எனினும், இந்த பயிற்சி எந்த வயதில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளக் கூடியதாகும்.

பிபிசியுடனான நேர்காணலில், ஜெர்ரி, “என் குழந்தைக்கு வாய் திக்கும். எதிர்காலத்திலும் அவனுக்கு திக்கலாம். ஆனால், என் குழந்தைக்கு இந்த உலகம் இன்னும் சற்று எளிமையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் நம்மை போன்றவன் தான், எந்த வித்தியாசமும் இல்லை” என்கிறார்.

“எங்களுக்கு குறைபாடுகள் இருப்பதாக நினைக்க வேண்டாம். எங்களைப் பார்த்து யாரும் கிண்டல் செய்யாமல் இருந்தாலே எங்களது தன்னம்பிக்கை அதிகரித்து, நாங்கள் முன்னேற முடியும்” என்று ஆதித்யா கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)