உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது?

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் ஒரு முழு மலையையும் குடைந்து ஸ்தூபிகளாக செதுக்கப்பட்ட புத்த கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த மலையில் புத்தர் சிலைகள் இரண்டு அடுக்குகளாக செதுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்த கோவிலை முன்மாதிரியாக கொண்டு வெளிநாடுகளிலும் புத்த கோவில்கள் கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்தக் கோவில் தான் அனகாபள்ளி மாவட்டம் சங்கரத்தில் உள்ள போஜனகொண்டா பௌத்த கோவிலாகும்.
வட ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பௌத்த வரலாற்றின் தடயங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், பௌத்த வழிபாட்டாளர்களும் கூறுகின்றனர்.
இவற்றில், போஜனகொண்டா, பாவிகொண்டா, தோட்லா கொண்டா மற்றும் பவுரல கொண்டா ஆகியவை விசாகாவின் பிரபலமான சுற்றுலா மையங்களாகும். போஜனகொண்டாவில் லிங்க வடிவில் சில ஸ்தூபிகள் இருக்கும் பகுதி லிங்கலகொண்டா என்று அழைக்கப்படுகிறது.
போஜன மலை என்பது நான்கு பாறைகளால் வெட்டப்பட்ட குகைகளின் வளாகமாகும்.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
இந்த மலையின் சிறப்பு என்ன?
ஓய்வு பெற்ற பேராசிரியர் கொல்லூரி சூர்யநாராயணா பிபிசியிடம் பேசுகையில், கி.பி 4 ஆம் நூற்றாண்டில் பௌத்தம் இங்கு செழித்தோங்கியதாகத் தெரிவித்தார்.
“இங்குள்ள மலையில் அழகாக செதுக்கப்பட்ட கௌதம புத்தரின் சிலைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இந்த குகைகளுக்கு அருகில் புத்த துறவிகள் தியானம் செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. இந்த போஜன மலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பௌத்தத்தின் மூன்று நிலைகளான மகாயானம், ஹீனயானம் மற்றும் வஜ்ரயானம் தொடர்பான குகைகள், சைத்தியங்கள் மற்றும் ஸ்தூபிகளில் பல விவரங்கள் உள்ளன,” என்றார் சூர்யநாராயணா.
மலையில் மடங்கள், குகைகள் மற்றும் புத்தரின் சிலைகளை இங்கு காணலாம், இது கட்டிடக்கலை மற்றும் வரலாற்று சிறப்புக்கு தலைசிறந்த ஆதாரங்களாகத் திகழ்கிறது.
இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டில் இருந்து பௌத்த துறவிகள் ‘கனுமா’ திருவிழாவின் போது வருவதாகவும், அவர்களை சந்திக்க உள்ளூர் மக்களும், பௌத்த வழிபாட்டாளர்களும் அதிகளவில் வருகை தருவதாகவும், அன்றைய தினம் இங்கு பெரிய திருவிழா நடத்தப்படுவதும் இந்த பகுதிக்கு சிறப்பு சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
போஜனகொண்டா 1906 மற்றும் 1908 க்கு இடையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சில பகுதிகளில் லிங்க வடிவில் அதிக ஸ்தூபிகள் இருப்பதை அப்போது ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இதனால் இப்பகுதி லிங்கலகொண்டா என அழைக்கப்பட்டது. போஜனகொண்டா மற்றும் லிங்கலகொண்டா வளாகத்தில் மண் பாண்டங்கள், பெரிய செங்கற்கள், தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் என பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றின் அடிப்படையில், அப்போது அகழாய்வு செய்யப்பட்ட அலெக்சாண்டர் ரியோ அரசுக்கு அளித்த அறிக்கையில், இந்த கட்டமைப்புகள் கிறிஸ்து பிறந்ததற்கு முன்பே கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது என, பௌத்த நினைவுச் சின்னங்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் கொத்தப்பள்ளி வெங்கடரமண பிபிசியிடம் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் கொல்லூர் சூர்யநாராயணா மேலும் பேசிய போது, இந்தியாவில் இதுபோன்ற அமைப்பு வேறு எதுவும் இல்லை என்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றார்.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
இந்த ஆண்டு நாக்பூரிலிருந்து போஜனகொண்டாவுக்கு வந்த புத்த துறவி ஜனதீப் மகாதேரோ, சங்கராந்தியின் போது அவர் எப்போதும் போஜனகொண்டாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். பௌத்த விகாரைகளில் இப்பிரதேசம் மிகவும் சிறப்பு வாய்ந்த அடையாளத்தைக் கொண்டுள்ளதாகவும், அதனால்தான் வருடாந்த பௌத்த யாத்திரைக்காக பல பௌத்த பிக்குகள் போஜன மலைக்கு தவறாமல் வருகை தருவதாகவும் அவர் கூறினார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள மற்றொரு பௌத்த தலமான தொட்லகொண்டா 1975 இல் கிழக்கு கடற்படையின் ஆய்வின் போது வெளிச்சத்திற்கு வந்தது.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
ஒரு முழு மலையை குடைந்து ஈரடுக்குகளில் உருவான பௌத்த கோவில்
இரண்டு தளங்களில் கட்டப்பட்ட சைத்யாலங்கள், மஹாசைத்ய அடித்தளங்கள், மகா ஸ்தூபி மேடை, குகைகள் மற்றும் செங்கல் கட்டமைப்புகள் என பல சிறப்பு அம்சங்களை போஜனகொண்டா கொண்டுள்ளது. சீனா, பர்மா, தைவான் போன்ற பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் பௌத்தம் படிக்க கடல் மார்க்கமாக இங்கு வந்து பல ஆண்டுகளாக பௌத்தம் பயின்று வந்தனர். இங்குள்ள கட்டடக்கலைப் பாணியைக் கண்டு அந்தந்த நாடுகளில் இதேபோன்ற அமைப்புகளைச் செய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் சூர்யநாராயணா கூறுகையில், அனகாபள்ளியில் உள்ள போஜன மலையைப் பார்த்த பிறகு, மற்ற நாடுகளிலும் இதேபோன்ற புத்த கோவில்கள் கட்டப்பட்டன என்றார்.
“அதற்கு உதாரணம் இந்தோனேஷியாவில் உள்ள போரோபுதூர் பௌத்த கோவில். இது 9 ஆம் நூற்றாண்டில் போஜனகொண்டாவிற்கு வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த துருமா மன்னர்களால் கட்டப்பட்டது. அதனால் வாஸ்து சிற்பிகளை வரவழைத்து, சுமார் ஒரு வருடம் இங்கு தங்கி புகைப்படங்கள் வரைந்தனர். 1909-ம் ஆண்டு போஜனகொண்டாவில் அகழ்வாராய்ச்சி செய்த பேராசிரியர் அலெக்சாண்டர் ரியா, போரோபுதூர் புத்த கோயிலும் போஜனகொண்டாவைப் போலவே கட்டப்பட்டதாகக் கூறினார்" என்று விசாகா புத்த சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறினார்.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
புத்தர் மலை - போஜன மலை
அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள சங்கரம் கிராமத்திற்கு அருகில் போஜன மலை அமைந்துள்ளது. இங்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் இப்பகுதியில் உள்ள பௌத்த சின்னங்களும் சான்றுகளும் கி.பி. 4 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதி என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, சங்கரம் கிராமம் புத்த கலாசாரம் மற்றும் போதனையின் செழிப்பான மையமாக இருந்தது. இப்போது சங்கரம் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தின் அசல் பெயர் சங்கராமா. பௌத்த துறவிகள் வாழும் இடத்தை பௌத்தர்கள் சங்கராமம் என அழைக்கின்றனர். அதே கால கட்டத்தில் சங்கராமம் கஸ்தா சங்கரா ஆனது.
மேலும், போஜனகொண்டாவின் இயற்பெயர் புத்தினி கொண்டா என்று விசாகா புத்த நினைவுச் சின்னங்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கொத்தபள்ளி வெங்கடரமண தெரிவித்துள்ளார். புத்தரின் மலை நாளடைவில் போஜனகொண்டா ஆனது என்றார். போஜனகொண்டாவில் புத்தர் உருவம் செதுக்கப்பட்டிருப்பதால், உள்ளூர்வாசிகள் புத்தரை போஜனா என்று அழைப்பதாக ஒரு வதந்தி இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
இம்மலையில், ஒரே பாறையில் வெட்டப்பட்ட ஒரு குகையையும், நான்கு தூண்களால் செதுக்கப்பட்ட புத்தர் சிலையையும், மற்றொரு குகையில் ஒன்பது தூண்களுடன் செதுக்கப்பட்ட மற்றொரு சிலையையும் காணலாம். மேலும், பாறையில் வெட்டப்பட்ட கிணறுகள் மற்றும் குகைகள் தண்ணீரை சேமிக்க மலையில் உருவாக்கப்பட்டன. துறவிகள் மற்றும் சீடர்களுக்கான விகாரைகளும் உள்ளன. குகை நுழைவாயிலில் தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை ஒன்றும், போஜன மலையில் வாயில் காவலர்கள் சிலைகளும் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
பௌத்த துறவிகள் ஏன் ‘கனுமா’ பண்டிகைக்கு வருகிறார்கள்?
போஜனகொண்டாவில் ஒவ்வொரு ஆண்டும் ‘கனுமா’ திருவிழா அன்று போஜன தீர்த்தம் விழா நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்த துறவிகள் அன்றைய தினம் இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். ‘கனுமா’ நாளில் நாடு முழுவதிலும் இருந்து வரும் புத்த துறவிகளை சந்திக்க இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்தும் புத்த பக்தர்கள் வருகிறார்கள்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளாக வரும் புத்த துறவிகளுக்கு ‘கனுமா’ பண்டிகை நாளில் உள்ளூர் மக்கள் தங்கள் பயிர்களை தானமாக வழங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த நடைமுறையை இப்போது காணாவிட்டாலும் பௌத்த பிக்குகள் தொடர்ந்து வந்து அவர்களிடம் இருந்து பௌத்த தீர்க்கதரிசனங்களைக் கேட்கின்றனர்.
“அனகாபள்ளியில் பல பயிர்கள் விளைகின்றன. அதனால் தான் அனகாபள்ளி பகுதியில் இந்த அளவுக்கு குடியேற்றம் நடந்ததாக ஒரு கதை உலவுகிறது. இப்பகுதியில் நல்ல பயிர்கள் விளைந்து வருவதால், சங்கராந்தியின் போது புத்த மதத்தைப் பரப்புவதற்காக பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பௌத்த துறவிகளுக்கு விவசாயிகள் தங்கள் பயிர்களை தானமாக வழங்குவது இங்கு வழக்கம். இருப்பினும், எந்த நன்கொடையும் வழங்கப்படாவிட்டாலும் புத்த துறவிகள் ‘கனுமா’ நாளில் இந்த பகுதிக்கு தொடர்ந்து வருவார்கள்," என்று மாவட்ட மகாபுத்தி சங்கத்தின் தலைவர் குணபுடி பாபுலு பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், LAKKOJU SRINIVAS/BBC
யுனெஸ்கோ அங்கீகாரம் வேண்டும் - இன்டாக்
இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை (INTAC) வரலாற்று சிறப்புமிக்க போஜனா மலையை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக பௌத்த தலங்களைப் பாதுகாப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என அந்த அமைப்பு கூறுகிறது.
மேலும், அதன் மூலம் சுற்றுலாத் தொழில் மேம்பட்டு ஏராளமானோருக்கு வருவாய் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது தேசிய தொல்லியல் துறை போஜனகொண்டாவின் பராமரிப்பை கவனித்து வருகிறது.
புத்தராமங்களை ஆய்வு செய்யும் யு.வி.ராவ் பிபிசியிடம் கூறுகையில், "போஜனகொண்டா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் முறையான கண்காணிப்பு இல்லாததால் அதன் நிலை ஒவ்வொரு ஆண்டும் மோசமடைந்து வருகிறது" என்றார். இதுதொடர்பாக பல பௌத்த பிக்குகள் கவலை தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ‘கனுமா’ திருவிழாவையொட்டி, தெலுங்கானா மாநிலம் பத்ராதி கொத்தகுடேமில் இருந்து போஜனகொண்டாவில் உள்ள புத்த விகாரையை தரிசிக்கவும், அதன் சிறப்புகளை தெரிந்து கொள்ளவும் சந்திரலேகா என்ற பிடெக் சிவில் மாணவி வந்தார். புத்தரின் குணாதிசயங்களை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், புத்த விகாரைகளுக்கு தொடர்ந்து செல்வதாகவும் சந்திரலேகா கூறினார்.
“போஜனகொண்டாவில் நிறைய ஸ்தூபிகள் இருக்கின்றன. கடந்த காலங்களில் நான் பார்த்த எந்த பௌத்த விகாரைகளிலும் இந்த மாதிரியான அமைப்பை நான் பார்த்ததில்லை. இங்கு பல ஸ்தூபிகளைப் பார்த்தேன். புத்த கோவில்களில் இது ஒரு சிறப்பு. இருப்பினும், இந்தத் துறை இன்னும் வளர்ச்சியடைய வேண்டும்,” என்று சந்திரலேகா பிபிசியிடம் கூறினார்.
போஜனகொண்டாவை மேலும் மேம்படுத்த ரூ.15 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக அனகாபள்ளி எம்.பி. சத்தியவதி தெரிவித்தார். மேலும், இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அவர் கூறினார். “போஜனகொண்டாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறப் பாடுபடுகிறோம்,” என்று எம்.பி. சத்தியவதி தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












