இந்தியா, இரான், ஆப்கனுடன் மோதல் - தெற்காசியாவில் தனி மரமாகிறதா பாகிஸ்தான்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இமாத் காலிக்
- பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உள்நாட்டு பிரச்சனைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. தொடர்ந்து மோசமாகி வரும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்கள் பாகிஸ்தானை பல முனைகளில் சிக்க வைத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இரானுடனான சமீபத்திய பதற்ற நிலை பாகிஸ்தானுக்கு ஒரு பிரச்னையாக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான 'சகோதர' உறவுகளுக்கு இது ஒரு பலத்த அடியாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் ஏற்கனவே மோசமாக உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இரானுடன் ஒரு புதிய சிக்கலை உருவாக்குவது, இராஜ தந்திர மற்றும் புவியியல் கண்ணோட்டத்தில் பெரும் முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஜனவரி 16ஆம் தேதி இரவு, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் 'சப்ஸ் கோ' பகுதியில் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற போராளிகள் அமைப்பின் மறைவிடங்கள் மீது இரான் வான்வழித் தாக்குதலை நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்தனர் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வியாழன் காலை இரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்களின் மறைவிடங்களை குறிவைத்து தாக்கியது பாகிஸ்தான். இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதை இரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் உள்நாட்டு நிலவரம் எப்படி உள்ளது?
பாகிஸ்தான் உள்நாட்டு நிலவரத்தைப் பார்த்தால், பொதுத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நட்பு நாடுகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் கால அவகாசத்தை கோர வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான்.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்குப் பிறகு, உள்நாட்டுப் பிரச்சனைகளால் தான் இந்தியா, ஆப்கானிஸ்தான், இரான் ஆகிய மூன்று அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் இப்போது எல்லைச் சண்டையில் சிக்கியிருப்பதாக ஒரு கருத்து உருவாகி வருகிறது.
உண்மையில் தனது மூன்று அண்டை நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு என்ன காரணம்? பாகிஸ்தானின் புவியியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையா அல்லது சர்வதேச சக்திகளின் பங்கு காரணமாக இது நடக்கிறதா? பிராந்திய அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுகிறதா?
அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் மோதல்

பட மூலாதாரம், Getty Images
மூன்று அண்டை நாடுகளுடனான பிரச்னையின் பின்னால் உள்ள காரணத்தைப் பற்றி செனட் பாதுகாப்புக் குழுவின் தலைவர் செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத் பேசுகையில், "பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையிலான சமீபத்திய பதற்றத்தை புவிசார் அரசியலின் பின்னணியில் பார்க்க வேண்டும்" என்று கூறுகிறார்.
"கடந்த மூன்று-நான்கு தசாப்தங்களாக இந்தப் பகுதி கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதலில் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. பின்னர் அமெரிக்கா உள்ளே வந்து ஆப்கானிஸ்தானில் பல நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது தீவிரவாதம் எனும் பிரச்சனை இந்தப் பகுதியை பாதித்துள்ளது"
"ஆப்கானிஸ்தானோடு ஒப்பிடும்போது அணுஆயுதங்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இப்படி எல்லா சூழ்நிலைகளாலும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டு வருகிறது" என்று கூறுகிறார் சையத்
மேலும், "அண்டை நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவுகளைப் பொருத்தவரை, சீனா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் வரலாற்று ரீதியாகவும் நீண்ட காலமாகவும் எப்போதும் நல்ல நட்பைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
"இந்தியாவுடனான உறவுகளில் பதற்றத்திற்கு காரணம், பிராந்தியத்தில், குறிப்பாக காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்த இந்தியா விரும்புகிறது. அதேநேரத்தில் காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா. தீர்மானங்களின்படி அரசியல் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது" என்கிறார் சையத்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த ஏழு தசாப்தங்களாக அந்த உறவில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில், தனது பாரம்பரிய எதிரி நாடான இந்தியாவை இரண்டு போர்களிலும் கார்கில் போர் முனையிலும் நேருக்கு நேர் சந்தித்துள்ளது பாகிஸ்தான்.
சர்வதேச நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் ஹூமா பகாய் பிபிசியிடம் பேசுகையில், "இந்த நிலை புதிதல்ல. அண்டை நாடுகளின் மண் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பாகிஸ்தான் பலமுறை கூறியுள்ளது" என்கிறார்.
'நேரடி போர் கூடாது' என்ற மூலோபாயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதாகவும், எனவே கிழக்கு எல்லையில் இருந்து மற்ற நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானுடனான பிரச்னையை பாகிஸ்தான் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருவதாகவும் கூறுகிறார் ஹூமா பகாய்.
மேலும், "இரானுடனான சமீபத்திய பதற்றமான சூழ்நிலை புதிதல்ல, 70களில் இருந்தே இந்த பிரச்னை நடந்து வருகிறது. 2012இல் பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையில் ஒரு கூட்டு செயல்முறை முடிவு செய்யப்பட்டது, 'ஜெய்ஷ் அல்-அட்ல்' அமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதன் அடிப்படையில் தான். அப்போது பிடிபட்டவர்கள் இரானிடம் ஒப்படைக்கப்பட்டனர்" என்றும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் மற்றும் இரான் இடையேயான பதற்றம்

பட மூலாதாரம், Getty Images
"கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகளைத் தவிர, மதக் குழுக்களாலும் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பாகிஸ்தானும் இரானும் எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அவற்றைத் தீர்க்க முயற்சித்தன" என்று கூறும் ஹூமா பகாய், தொடர்ந்து பேசினார்.
"இரானுடனான சமீபத்திய பதற்றத்திற்கான காரணம் இரானுக்குள் தான் உள்ளது. பாகிஸ்தான் தூதுக்குழு சபஹரில் இருந்த நேரத்தில் இது நடந்தது. பாகிஸ்தான் எப்போதுமே ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளையும் பொறுமையாகவே கையாளுகிறது. இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் எல்லைக்கு அப்பால் மோசமடைய பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை" என்கிறார் ஹூமா.
மேலும், "இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அண்டை நாடான இந்தியாவிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் தேர்தல் நடக்கும் போது, எல்லையில் ஏதேனும் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எடுக்க இந்தியா முயற்சிக்கலாம் என்று பாகிஸ்தான் கருதுகிறது"
"எனவே, இரான் மீதான பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதல் இரானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது. அது பாகிஸ்தானுக்கு எதிராக எந்த 'தவறான செயலையும்' நினைத்துப் பார்க்க வேண்டாம் என்ற செய்தி" என்று கூறுகிறார் ஹூமா பகாய்.

பட மூலாதாரம், Getty Images
இரானுடனான சமீபத்திய பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலாளர் அஜாஸ் அகமது சவுத்ரி பிபிசியிடம் பேசுகையில், "மூன்று அண்டை நாடுகளுடன் மோதுவது என்ற பாகிஸ்தானின் யோசனை தவறானது. இரானுடனான தற்போதைய பதற்றமும் ஓரளவு குறைந்து வருகிறது" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் எப்போதும் இரானுடன் நல்ல உறவை கொண்டுள்ளது. எல்லை நிர்வாகத்தில் சில சிக்கல்கள் இருந்தன, அது இப்போது அதிகரித்துள்ளது. இரான் செய்தது தவறு, இரான் இவ்வாறு செய்திருக்கக் கூடாது"
"இரான் வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பிரச்னைகளை தீர்க்கும் நோக்கில் தாங்கள் நகர விரும்புவதை இரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது" என்கிறார் அஜாஸ் அகமது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள்

பட மூலாதாரம், Getty Images
செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத் பேசுகையில், "ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இவை புவிசார் அரசியல் பிரச்சனையின் எச்சங்கள். அமெரிக்காவால் ஏற்பட்ட குழப்பம் இது. இதைத் தீர்க்க மேலும் கால அவகாசம் தேவைப்படும்" என்கிறார்.
மேலும், "ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின் படி, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இரான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சுமார் 8 முதல் பத்தாயிரம் வரையிலான கூலிப்படை தீவிரவாதிகள் இருக்கிறார்கள்"
"பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான தகராறு பாதுகாப்பு தொடர்பானது மட்டுமே. ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் பலமுறை குரல் எழுப்பியுள்ளது" என்கிறார் சையத்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வரலாறு, வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியிலான உறவுகள் உள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களாக லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர்.
ஆனால் 2000களில், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு லட்சக்கணக்கான அகதிகளை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அனுப்புவதாக அறிவித்த பிறகும் கூட இரு நாட்டு அரசுகளுக்கும் இடையேயான பிரச்னை அதிகரித்துள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் அஜாஸ் சவுத்ரி கூறுகையில், "ஆப்கானிஸ்தான் விஷயத்தைப் பொறுத்தவரை, லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, நிதி உதவி செய்வது என ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எப்போதும் உதவி வருகிறது" என்றார்.
மேலும், “ஆப்கானிஸ்தானுடனும் எல்லை மேலாண்மை சிக்கல்கள் உள்ளன. இதைப் பற்றி நாங்களும் தொடர்ந்து அவர்களிடம் பேசி வருகிறோம். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது, அவை அப்படியே தொடரும்"
"ஆனால் இந்தியாவுடனான உறவில் உள்ள பிரச்னை குறித்து பாகிஸ்தானுடன் பேச இந்திய அரசு தயாராக இல்லை. பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த வாய்ப்பையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்கிறார் அஜாஸ்.
"ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் பாகிஸ்தானில் பதற்ற நிலையை உருவாக்க இந்தியா முயற்சி செய்வதாக ஒரு புகார் எழுந்துள்ளது" எனக் கூறுகிறார் அஜாஸ். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று கூறி அனைத்தையும் நிராகரித்து வருகிறது இந்தியா.
இரானுடனான உறவுகள் மற்றும் சமீபத்திய பதற்றங்கள் குறித்து பேசிய முஷாஹித் ஹுசைன் சையத், இரானுடன் பாகிஸ்தானுக்கு எந்த அடிப்படை பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
"இரான் இந்தியா அல்ல, நாங்கள் அதனுடன் 'ரகசிய இராஜ தந்திர முறைகள்' மூலம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம். சீர்திருத்தத்தை நோக்கி புதிய நடவடிக்கையை எடுப்போம் என்று நம்புகிறோம்"
"இரானில் பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலுக்குப் பிறகு, இரானிய குடிமக்கள் அல்லாதவர்கள் கொல்லப்பட்டதை இரானிய அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உறுதியற்ற தன்மையை பரப்ப வேண்டும் என இரு இஸ்லாமிய நாடுகளிலும் சில குழுக்கள் செயல்படுவதை இது தெளிவுபடுத்துகிறது" என்று அவர் கூறினார்.
குல்பூஷன் ஜாதவ் கைது

பட மூலாதாரம், PAKISTAN FOREIGN OFFICE
பல பலூச் பிரிவினைவாத அமைப்புகள் கடந்த பல தசாப்தங்களாக பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் அருகிலுள்ள பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன என்பதையும், கடந்த காலங்களில் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் முக்கிய மையங்கள் மீதான பல கொடிய தாக்குதல்களுக்கு அந்த அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த பல ஆண்டுகளாக இரானில் தஞ்சம் புகுந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி வந்தனர்.
"இது இரான் மற்றும் பாகிஸ்தானின் விவகாரம் மட்டுமல்ல, கிழக்கில் சிபிஇசி (சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை- CPEC) திட்டம் மீதான தாக்குதலுக்கான முன்னெடுப்புகள் அண்டை நாடுகளின் மண்ணிலும் காணப்படுகிறது"
"அது ஆப்கானிஸ்தானாக இருந்தாலும் சரி, இரானாக இருந்தாலும் சரி. இதற்கு ஒரு தெளிவான உதாரணம் இந்திய கடற்படை தளபதி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டதே, அவர் உளவு பார்ப்பது மட்டுமின்றி, நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என்று முஷாஹித் ஹுசைன் சையத் கூறுகிறார்.
2016ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பலுசிஸ்தானில் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பலுசிஸ்தானில் அவர் சதிச் செயல்களில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. அவர் இரான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
"பதற்றத்தைக் குறைக்க பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன, பதற்றம் விரைவில் குறையும்" என டாக்டர் ஹூமா பகாய் ஒப்புக்கொள்கிறார்.
தெற்காசியாவில் பாகிஸ்தான் தனி மரமாகிறதா?

பட மூலாதாரம், Getty Images
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத், தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனித்து இருப்பதாக கூறப்படுவது தவறானது என்கிறார்.
"இப்போது கூட சீனா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர உறவுகளைக் கொண்டுள்ளது பாகிஸ்தான். பிராந்தியத்தில் அணுஆயுத நாடாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது" என்று அவர் கூறினார்.
“பாகிஸ்தானின் நான்கு அண்டை நாடுகள் சீனா, இந்தியா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தான். குறிப்பாக சீனாவுடனான நமது உறவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அதேசமயம் இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகளில் அவநம்பிக்கைச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் இடையேயான பிராந்தியத்தில் சிறந்த நல்லுறவை உருவாக்குவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும்" என்கிறார் சையத்.
மேலும், "சீனா, ரஷ்யா, துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பேச வேண்டும், ஏனெனில் இந்த நாடுகள் இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நெருக்கமாக உள்ளன. பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்திய ராஜ தந்திரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் நிலையான அமைதியை அடைய முடியும். பிராந்தியத்தில் வளர்ச்சியும் ஏற்படும்" என்று கூறுகிறார் செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத்.
அஜாஸ் அகமது சவுத்ரியும் இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்படுகிறது என்ற கருத்தை ஏற்கவில்லை. அவரைப் பொருத்தவரை, பிராந்திய தனிமைப்படுத்தலுக்கு பாகிஸ்தான் பலியாகிறது என்ற கருத்து தவறானது.
"எல்லை மேலாண்மை அமைப்பை சரிசெய்வதன் மூலம் இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான எங்கள் பிரச்னைகளை நாங்கள் தீர்ப்பது பாகிஸ்தானின் எதிர்கால திட்டங்களுக்கு முக்கியமானது. இரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும். இரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பது தான் மிகவும் முக்கியம்”
"அதேநேரத்தில், இந்திய எல்லையில் தற்போது அமைதியான சூழ்நிலை இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மிகவும் மோசமாக உள்ளது" என்கிறார் அஜாஸ் அகமது சவுத்ரி.
இதுகுறித்து டாக்டர் ஹூமா பகாய் பேசுகையில், "வரும் காலங்களில் இரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும்"
"பாகிஸ்தான் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளிலும் சீனா பெரும் முதலீடுகளை செய்துள்ளது. எனவே அந்த பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மை ஏற்படுவதை அது விரும்பவில்லை. அதனால் தான் சீனா முதலில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது" என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












