ஷோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் - சானியா மிர்சா உறவு என்ன ஆனது?

பட மூலாதாரம், SHOAIBMALIK/Getty Images
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அவர் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்துள்ளார்.
ஷோயிப் மாலிக், சனா ஜாவேத் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், SCREENGRAB
இது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், சானியா மிர்சா - ஷோயிப் மாலிக் உறவு என்ன ஆயிற்று என்பது குறித்து சானியாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
2010-ம் ஆண்டில் சானியா - ஷோயிப் திருமணம்
ஷோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
ஷோயிப் மாலிக் உடனான திருமணத்திற்கு முன்பு, சானியா மிர்சா தனது குழந்தைப் பருவ நண்பரான சோராப் மிர்சாவுடன் நிச்சயம் செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் சோராப் – சானியாவின் நிச்சயம் ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஷோயிப், சானியா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. சானியா, ஷோயிப் தம்பதிக்கு ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த புதன்கிழமையன்று, சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார்.

பட மூலாதாரம், INSTAGRAM/MIRZASANIAR
திருமணம் மற்றும் அதில் ஏற்படும் விவாகரத்து மிகவும் கடினமானது. ஆனால், நாம் எப்போதும் கடினமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சானியா தனது பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்.
அந்தப் பதிவைப் பார்த்த பல பயனர்கள் ஷோயிப், சானியா இடையிலான உறவு முற்றிலும் மோசமடைந்து இருக்க வேண்டும் என்றும் இருவரும் விவாகரத்து செய்திருப்பார்கள் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.
சானியா மிர்சா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஷோயிப் மாலிக், சானியா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டதாக சானியா மிர்சாவின் குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சானியா அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இருந்து எப்போதும் தவிர்த்து வைத்திருந்தார். இருப்பினும், இப்போது அவரும் ஷோயிப் மாலிக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவகாரத்து செய்துகொண்டதைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஷோயிப்பின் புதிய வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமைய சானியா வாழ்த்தியுள்ளார்,” என்று சானியா மிர்சா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்வின் மிகவும் உணர்ச்சிபூர்வமான இந்தத் தருணத்தில் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எந்தவித ஊகங்களுக்கும் இடம்கொடுக்காமல் தவிர்க்குமாறும் சானியாவின் தனியுரிமையை மதிக்குமாறும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
சனா ஜாவேத் யார்?
பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான சனா ஜாவேத், உருது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் 2012இல் ஷெர்-இ-ஜாத் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பட மூலாதாரம், INSTAGRAM/SANAJAVEDOFFICIAL
காதல் நாடகமான கானியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு அவர் அங்கீகாரம் பெற்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் அவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
அவரது சமூக நாடகங்களான ருஸ்வாய், டன்க் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றன.
அவர் 2020இல் பாகிஸ்தானிய நடிகரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான உமைர் ஜஸ்வாலை திருமணம் செய்தார்.
சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாக சியாசட் இதழ் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேலும் சனா, உமைர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் விமர்சனங்கள்

பட மூலாதாரம், SCREENGRAB
சில நெட்டிசன்கள் ஷோயிப் மாலிக் செய்துகொண்ட மூன்றாவது திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஏராளமான நெட்டிசன்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
ஷோயிப்பின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அஜிசியா என்ற பதிவர், “அந்தப் பெண் உங்களை முழு நாட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். மக்கள் அவரது தேசிய உறுதிப்பாட்டையே கேள்வியெழுப்பினர். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அவரை ஏமாற்றிவிட்டீர்கள். வாவ் மேன்... வாவ் மேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஹீபா அர்மான் என்ற பதிவர், “ஆச்சர்யமாக இருக்கிறது. நடந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை!” என்று பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில், #ShoaibMalik, #Divorce, #SaniaMirza ஆகிய ஷேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.
சானியாவின் தந்தை கூறியது என்ன?
மறுபுறம், சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி மீதான விவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தனது மகள் 'குலா' கொடுத்துவிட்டதாக கூறினார்.
இஸ்லாத்தில் 'குலா' என்பது ஒரு பெண் தன் கணவனை விருப்பத்துடன் விட்டு விலகுவது என்று பொருள் ஆகும்.
இதுகுறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், “இந்த திருமணத்திற்கு முன்பு தனது மகள் சானியாவும், 41 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் ‘குலா’ மூலம் விவாகரத்து பெற்றுள்ளனர" என்று தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












