வட இந்திய - திராவிட கோவில் கட்டடக் கலை வேறுபாடு என்ன? அயோத்தி ராமர் கோவில் எந்த பாணி?

பட மூலாதாரம், SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA / THANJAVUR.NIC.IN
- எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகத்தா
- பதவி, பிபிசி நியூஸ்
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கோவிலின் கட்டடக்கலை பாணி என்ன? அயோத்தி கோயிலின் கட்டடக்கலை மற்றும் வட - தென் இந்தியாவின் கோவில்களின் கட்டிடக்கலையில் என்ன வேறுபாடுகள் உள்ளன?
இந்து சமயத் தலைவர்கள் 'உடலே ஒரு கோவில்' என்கிறார்கள். உடலைப் பிரதிபலிப்பதற்காகக் கோவில்கள் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆகமங்கள் மற்றும் இந்து மரபுகள் கோவில் நுழைவாயிலுக்கு மேலே உள்ள கோபுரத்தை பாதமாகவும், மையக் கொடிமரத்தை இடுப்பாகவும், கருவறையை தலையாகவும் கருதுகின்றன.
அயோத்தி ராமர் கோயிலும் இந்த பாரம்பரியத்தைத் தான் பின்பற்றுகிறது என்பதுடன் வட இந்தியாவில் பெரும்பாலும் பின்பற்றப்படும் நாகரா பாணியில் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்டு வருகிறது. சோமநாத், துவாரகை போன்ற கோவில்கள் இந்த பாணியில் கட்டப்பட்டவை. சோம்நாத் கோயிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் இந்த அயோத்தி கோயிலை வடிவமைத்தவர்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய இணைச் செயலர் கோட்டேஸ்வர சர்மா பிபிசி நிருபர் அமரேந்திர யர்லகட்டாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் நாகரா பாணியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், ANI
கட்டடக்கலை: இந்தியாவில் எத்தனை பாணிகள் உள்ளன?
இந்தியாவில் உள்ள கோவில்கள் முக்கியமாக மூன்று கட்டடக்கலை பாணிகளைக் கொண்டவை. இவை நாகரா, திராவிட மற்றும் வேசர பாணிகள் என்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தின் (SUV) ஓய்வுபெற்ற பேராசிரியரும் தற்போது திருமலை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளருமான நாகோலு கிருஷ்ணரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
நாகரா பாணி வட இந்தியக் கோவில்களில் அதிகம் காணப்படுகிறது.
ஆந்திர தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தின் ஓய்வுபெற்ற இயக்குனர் எமானி சிவனாகி ரெட்டி பிபிசியிடம் கூறுகையில், இமயமலை முதல் விந்திய மலைகள் வரை நாகரா பாணி பின்பற்றப்படுகிறது என்றார்.
குப்தர் காலத்தில் இந்த கட்டிடக்கலை மிகவும் பிரபலமானது.
இமயமலை முதல் விந்திய மலை வரை நாகரா பாணியும், விந்திய மலை முதல் கிருஷ்ணா நதி வரை வேசரமும், கிருஷ்ணா நதி முதல் கன்னியாகுமரி வரை திராவிட கட்டிடக்கலையும் பின்பற்றப்பட வேண்டும் என்று காசியப கட்டடக்கலை கூறுகிறது.
கோவில் அடித்தளம் முதல் மேல் பகுதி வரை சதுரமாக இருந்தால் அது நாகரா பாணி எனப்படும். அயோத்தியில் தற்போது கட்டப்பட்டு வரும் கோயிலின் பெயர் சேகரி நாகர என்று சிவனாகி ரெட்டி கூறினார்.
கோவிலில் உள்ள சிறிய சிகரம் போன்ற அமைப்புகளை சேகரி நாகரா என்று அழைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கோவிலின் உச்சி பகுதி மேருபர்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. கோயிலின் ஒரு சிறிய பகுதியில் கருவறை கட்டப்பட்டுள்ளது. ஒரு இடைவெளியும் இருக்கும். கோபுரத்தின் மேல் ஒரு கலச அமைப்பு உள்ளது.
இக்கோவில் அமைப்பிலும் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் உள்ளது ஆனால் தெற்கில் உள்ளதைப் போல் பெரிதாக இல்லை. கோவில் உயரமான மேடையில் கட்டப்பட்டுள்ளது. மூலமூர்த்தி சன்னதி உள்ளது. கருவறைக்கு மேல் ஒரு சிகரம் உள்ளது. அங்கே பல தந்திரங்களும் உள்ளன.

பட மூலாதாரம், WWW.GUJARATTOURISM.COM
இமானி சிவனாகி ரெட்டி, நாகரா கட்டடக்கலையில் மூன்று முக்கிய பாணிகள் உள்ளன என்றார். இவற்றில் ரேகா நாகரா, காதம்பரா நாகரா மற்றும் சேகாரி நாகரா ஆகியவை அடங்கும்.
அயோத்தியில் ராமர் கோவில் சேகாரி நாகரா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டு வருவதாகவும், நான்காம் நூற்றாண்டில் குப்தர்களால் தேவ்கர் இந்த பாணியில் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தெற்கிலும் நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் இருப்பதாக சிவனாகி ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
காதம்பரா நாகரா பாணியிலான ஸ்ரீஷைல ஆலயம் மற்றும் ரேகா நாகரா கட்டடக்கலையின் ஆலம்பூர் கோவில் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
பூமிஜா நாகரா கோயில் கட்டுமானம் என்றால் கோவில் முழுவதுமாக நட்சத்திர வடிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், THANJAVUR.NIC.IN
திராவிட கட்டடக்கலை என்ன?
திருமலை திருப்பதி கோவில் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும். இந்த பாணி தென்னிந்தியாவில் உள்ளது.
பல்லவர்கள் இந்த பாணியைத் தொடங்கினர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இந்த பாணியில் கட்டப்பட்டுள்ளன.
“பக்தி இயக்கம் தொடங்கிய பிறகு, மக்கள் அதிகமாக கோவில்களில் வழிபாடு செய்யத் தொடங்கினர். உருவ வழிபாடு அதிகரித்தது. மேலும், கோவில் வளாகத்தில் கல்யாணோத்ஸவ மண்டபம், சமையலறை மற்றும் பிற கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மக்களின் அதிகரித்த பக்திக்கு ஏற்ப கோவில்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. அதனால்தான் தெற்கில் பெரிய கோவில்கள் உள்ளன. எல்லாவிதமான பூஜைகள் மற்றும் பூஜைப் பொருட்களையும் கடவுளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில்கள் விரிவுபடுத்தப்பட்டன" என்கிறார் எஸ்வியூவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கிரண் கிராந்த் சவுத்ரி.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் விசாலமாகவும் பெரிதாகவும் இருக்கும்.
கோயிலில் நுழைவு வாயில் (கோபுரம் என்று அழைக்கப்படுகிறது), ஒரு பலிபீடம், ஒரு கொடிமரம், ஒரு வாகன மண்டபம் (சிவாலயங்களில் நந்தீஸ்வரர், வைணவத்தில் கருத்மந்துடா), ஒரு மகா மண்டபம், ஒரு முக மண்டபம், அந்தராலயம் மற்றும் கருவறை ஆகியவை உள்ளன. பின்னர் பிரகார மண்டபங்களும் நாட்டிய மண்டபங்களும் சுற்றிலும் காணப்படுகின்றன.
கருவறையின் மேல் பகுதி விமானம் அல்லது சிகரம் என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
வட இந்திய - திராவிட கோவில் கட்டடக் கலைகள் இடையிலான வேறுபாடு என்ன?
நாகரா பாணிக்கும் திராவிட பாணிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு கோபுரங்கள் தான் என்று கிரண் கூறுகிறார். திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்களில் கோபுரங்களுக்குப் பதிலாக நுழைவாயிலில் ஒரு வளைவு உள்ளது.
திராவிட பாணி கோபுரங்கள் மூன்று தளங்களில் இருந்து 13 தளங்கள் வரை கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மேல் கலசங்கள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகரா பாணியில், நுழைவாயிலை பிரதோலி என்று அழைக்கிறார்கள். அதை வெறுமனே 'தோரணம்' என்று அழைக்கிறார்கள் என்று கிரண் கூறுகிறார்.
நாகரா அமைப்பில் அரண் இல்லை என்றும் அது பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்றும் கூறினார்.
திராவிட கட்டடக்கலை பாணியில், அனைத்து கோவில்களும் பெரிய மற்றும் விசாலமான சுற்றுச்சுவர்களில் கட்டப்பட்டுள்ளன.
நான்கு புறமும் வாயில்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தெற்கில் உள்ள கோவில்கள் பொதுவாக மலை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் கட்டப்பட்டாலும், அவை பெரும்பாலும் சமவெளிகளில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளன. நாகரா பாணியில் கட்டப்படும் கோவிலுக்குள் மாடிகளும் உள்ளன.
இந்த மாடிக் கோவில்கள் புத்த ஸ்தூபிகளின் உத்வேகத்தால் கட்டப்பட்டவை என்று கிரண் விளக்கினார்.
இவை ’மேடா குல்லுகள்’ எனப்படும் ஒரு வித கட்டுமான பாணியாகும். சாளுக்கியர்களும் இதே போன்றவற்றைக் கட்டியுள்ளனர். தஞ்சாவூரில் உள்ள திராக்ஷரமும், பிரகதீஸ்வராலயமும் இதற்குக் காரணம். திராக்ஷரத்தில் உள்ள சிவலிங்கத்தின் ஒரு பகுதி இரண்டாவது தளத்தில் உள்ளது. அமரேஸ்வரத்திலும் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் கோவில் விரிவடைந்ததும் அம்மனை வழிபடும் கலாசாரமும் அதிகரித்ததாகவும், 11ஆம் நூற்றாண்டிலிருந்து கருவறையை ஒட்டி அம்மன் கோயிலும் கட்டத் தொடங்கியதாகவும் கிரண் கூறினார்.
சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜய நகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கோவில்களுக்கு பெரிய சுவர்கள் கட்டுவது மிகவும் பொதுவானது. இந்த காலகட்டத்தில், விமான கோபுரத்தின் உயரம் குறைந்து, சுற்றியுள்ள கோபுரங்களின் உயரம் அதிகரித்தது.
இந்த கோபுரங்கள் ராஜ தர்ப்பத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டன.
இதனாலேயே தென்னாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களும், குறிப்பாகத் தமிழகப் பகுதியில் உள்ள தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்துக் கோவில்களும் அகலமாகவும், பெரிய பிராகாரங்களும் கோபுரங்களும் கொண்டவையான உள்ளன. இந்தக் கோவில்கள் பெரிய மதில் சுவர்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
வடக்கு - தெற்கு கட்டடக் கலைகள் இணைந்த கோவில்கள்
நாகரா மற்றும் திராவிட பாணிகளின் ஒருங்கிணைந்த ஒரு பாணியில் கோவில்களை கட்டுவது கர்நாடகா பகுதியில் சாளுக்கியர் காலத்தில் தொடங்கியதாக சிவனாகி ரெட்டி கூறினார். இதில் கோவில் உயரம் சற்று குறைவாக உள்ளது.
“வட இந்தியாவிலிருந்து வந்த கட்டடக் கலைஞர்கள் இந்தப் பகுதியில் கோவில்களைக் கட்டியதால் இது தெற்கே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து,” என்கிறார் திருமலை அருங்காட்சியக இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி.
இந்த பாணி பாதாமி சாளுக்கியர் காலத்தில் செழித்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. சாளுக்கியர்கள் பாதாமியில் திராவிட மற்றும் நாகரா பாணிகளை இணைத்து கோவில்களை கட்டினார்கள்.
பேலூர் மற்றும் ஹலேபிடுவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் இந்த பாணிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
ஹொய்சாலர் ஆட்சியின் போது வேசர பாணி பெரிதும் வளர்ந்தது.
வேசர பாணியில் உள்ள நட்சத்திர வடிவ கோவிலில் முக்கிய சன்னதியுடன் இணைக்கப்பட்ட மற்ற கோவில்கள் உள்ளன.
மகாபாரதம் மற்றும் ராமாயண கருப்பொருள்கள் பெரும்பாலும் இந்தக் கோவில்களில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், வேசர பாணியில் கட்டப்பட்ட கோவில்களுக்கு தெற்கு கோவில்களைப் போல கோபுரங்கள் இல்லை.
இக் கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மண்டபங்கள் உள்ளன. பொதுவாக மூன்று சன்னதிகளும் உண்டு.
கர்நாடகாவின் ஆலம்பூர் மற்றும் பட்டடகலில் உள்ள சில கோவில்கள் இந்த வடக்கு - தெற்கு இணைந்த கட்டடக்கலைக்கு அடையாளமாக இருப்பதாக கிருஷ்ணா ரெட்டி கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












