ராமர் கோவில் திறப்பு: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மௌனமாக இருப்பது ஏன்?

ஆளுநர் ரவி

பட மூலாதாரம், RN RAVI/X

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
ராமர் கோவில் திறப்பு விழா

பட மூலாதாரம், TN Raj Bhavan

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்கின்றன. இந்த அரசியல் அமைதிக்கு என்ன காரணம்?

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா திங்கட்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துவிட்டன என்றாலும், ஏதோ ஒருவிதத்தில் ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக அறிவித்தன.

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊர்வலம் நடத்தியிருக்கிறது. டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி ராமர் பூஜையை மேற்கொண்டார். ஒரு மத நிகழ்வை அரசியல் நிகழ்வாக பா.ஜ.க. மாற்றியதாக குற்றம்சாட்டியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், எல்லா மதத்தினரையும் இணைத்து நல்லெண்ண பேரணியை நடத்த தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே மாலை 6 மணிக்கு காலாராம் கோவிலில் பூஜையும், இரவு 7 மணிக்கு கோதாவரி நதிக்கரையில் மகா ஆரத்தியும் நடத்தினார். சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி முடிந்ததும், ராமரை தரிசிக்க குடும்பத்துடன் அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருக்கிறார்.

ராமர் கோவில் திறப்பு

பட மூலாதாரம், TN Raj Bhavan

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் அமைதி

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராமர் கோவில் திறப்பு விழா குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒரு முழுமையான அமைதியே நிலவியது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் இது குறித்துப் பேசிவந்தாலும், பிற கட்சிகள் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்தே வந்தன.

ஆனால், ஞாயிற்றுக் கிழமையன்று நிலைமை மாறியது. அன்று காலையில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்றில், 'பிரான் பிரதிஷ்டை' நடக்கும் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்புப் பூஜைகளை நடத்தவோ, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி கூறியது.

இந்தச் செய்தி காலையிலேயே வெளிவந்துவிட்ட நிலையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மறுப்பு ஏதும் வெளியாகிவில்லை. சிறிது நேரத்திலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டி, பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Nirmala Sitaraman/Facebook

"ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்வதை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஸ்ரீ ராமர் கோவில்கள் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ராமரின் பெயரால் பூஜைகளோ அன்னதானமோ அனுமதிக்கப்படவில்லை.

தனியார் கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல்துறை தடுக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் இதயத்தை நொறுங்கச் செய்யும் காட்சிகள் தென்படுகின்றன." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் இந்த விவகாரத்தை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலம் எழுப்பினார்.

இதற்குப் பிறகே தமிழ்நாடு அரசு இந்தச் செய்திக்கு மறுப்புகளை வெளியிட ஆரம்பித்தது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் மறுப்புத் தெரிவித்தார்.

ராமர் கோவில் திறப்பு விழா

பட மூலாதாரம், x/Nirmala Sitharaman

திங்கட்கிழையன்று காலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றுவந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதற்குப் பிறகு, ஆளுநர் மாளிகையின் சமூக வலைத்தளப் பக்கத்தில், "பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.

பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என்று பதிவிடப்பட்டது.

இதற்குப் பிறகுதான் தி.மு.க. ராமர் கோவில் நிகழ்வு தொடர்பாக நேரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று பிற்பகலில் தி.மு.கவின் இளைஞரணி மாநாடு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்தார்.

"பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது" என்று குறிப்பிட்டதோடு, ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் "பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், ராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது. இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதைத்தவிர, 'ப்ரான் பிரதிஷ்டை' குறித்து நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ கருத்துச் சொல்வதை தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாகவே தவிர்த்துவிட்டன என்று சொல்லலாம்.

பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. இது குறித்து எதையும் பேசவில்லை. தமிழக காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின்

பட மூலாதாரம், ANI

"சிலையை உடைக்கவும் மாட்டோம், தேங்காய் உடைக்கவும் மாட்டோம்"

இந்தச் சூழலில் அப்படித்தான் இருக்க முடியும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"1952ஆம் ஆண்டில், பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை நடத்தியபோது, அண்ணாவிடம் அது தொடர்பாக கேட்கப்பட்டது. 'நாங்கள் பிள்ளையார் சிலையை உடைக்கவும் மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கவும் மாட்டோம்' என்று பதிலளித்தார். அந்த நிலைப்பாட்டைத்தான் திராவிடக் கட்சிகள் பின்பற்றுகின்றன.

குறிப்பாக அ.தி.மு.கவைப் பொறுத்தவரை அதற்கு சில பின் வரலாறுகள் இருக்கின்றன. ஜெயலலிதா கரசேவையை ஆதரித்திருக்கிறார். ராமர் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது எனக் கேட்டிருக்கிறார். ஆகவே, அதை மனதில் வைத்து பேசாமல் இருக்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகள் போன்றவை இதில் என்ன பேச முடியும்? அதனால், அவர்களும் பேசாமல் இருக்கிறார்கள்.

ராமர் கோவில் திறப்பு விழாவைப் பொறுத்தவரை, அதனை ஒரு ஆன்மீக நிகழ்வாக வட இந்தியா பார்க்கிறது. அரசியல் நிகழ்வாக தென் இந்தியா பார்க்கிறது. ஆகவே வட இந்திய அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதமும் தென்னிந்திய அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதமும் மாறுபட்டுத்தான் இருக்கும்" என்கிறார் ஷ்யாம்.

பிரதமர் மோதி

பட மூலாதாரம், ANI

ஆனால், இந்த ராமர் கோவில் நிகழ்வு இந்திய அரசியலை ஒரு புதிய சிக்கலான கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.

பிபிசியின் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மதச்சார்பின்மை VS மற்றவர்கள் என்று இருந்தது மாறி, இந்துத்துவா VS மற்றவர்கள் என இருக்கிறது என்கிறார்.

"இந்திய அரசியல் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறது. மதச்சார்பற்ற அரசின் பிரதமர் ஒரு மதம் சார்ந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார். நாடு முழுவதும் ஒரு வெறியும் எழுச்சியும் கலந்த மன நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து, இஸ்லாமியர்களுக்கு அளித்த இடத்தில் மசூதி கட்டப்படும். அந்த மசூதியின் திறப்பு விழாவிற்கு பிரதமர் வருவரா?

1980கள், 90களில் யார் உண்மையான மதச்சார்பின்மைவாதி என்று பேசுவார்கள். ஆனால், இன்றைக்கு யார் உண்மையான இந்து எனப் பேசுகிறார்கள். மம்தா பானர்ஜி நாங்கள்தான் உண்மையான இந்து என்கிறார். அதையே ஜெயராம் ரமேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோரும் சொல்கிறார்கள்.

முஸ்லீம் லீக், இடதுசாரிகளைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுமே பா.ஜ.கவைவிட தாங்கள்தான் உண்மையான இந்து என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான கட்சிகள் இன்று ஏதோ ஒரு கோவிலில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது இந்திய அரசியல் ஒரு முக்கியமான, சிக்கலான காலகட்டத்தில் இருப்தைக் காட்டுகிறது. இது எத்தகைய அச்சத்தை, வலியை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தும்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

ஆளுநர் ரவி

பட மூலாதாரம், RN RAVI/X

'கடந்த காலத் தவறுகளை நியாயப்படுத்த முடியாது'

ஆனால், நம் காலத்தில் ஒரு பிரம்மாண்டமான கோவில் கட்டப்படுவதை ஒரு நேர்மறையான அம்சமாகப் பார்க்கலாம் என்கிறார் எழுத்தாளரான ஜெ. ராம்கி.

"ஒரு பகுதியில் நவீன கோவில், மற்றொரு பகுதியில் நவீன மசூதி என்பதை நேர்மறையான விஷயமாகத்தான் பார்க்கிறேன். மன்னர்கள் எப்போதுமே அவர்கள் விரும்பும் மதத்திற்கு முன்னுரிமை கொடுபப்பார்கள். இப்போது மக்களாட்சி என்ராலும் மன்னராட்சியின் நடைமுறையை பின்பற்றுவதை தவிர்க்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பான கடந்த காலத் தவறுகளை நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்தியாவில் இது ஒரு புதிய அடையாளமாக இருக்கும்" என்கிறார் அவர்.

ஆனால், வழிபாட்டுத் தலங்களை வைத்துச் செய்யும் அரசியலை இதோடு நிறுத்தாவிட்டால் நாடு பெரும் சிக்கலை நோக்கி நகரும் என்கிறார் ஆர். மணி.

"ஆர்.எஸ்.எஸ்சின் 'ஆர்கனைசர்' இதழில் ராமர் கோவில் திறப்பு என்பது ஒரு துவக்கம் என்கிறார்கள். இதனை எப்படி புரிந்துகொள்வது? நாட்களுக்கு முன்பாக, ஒவ்வொரு மசூதிக்கு கீழும் சிவ லிங்கத்தை தேடக்கூடாது என்றார் மோகன் பகவத். ஆனால், இப்போது இப்படிப் பேசுகிறார்கள். ஏற்கனவே, காசி, மதுராவில் இதோ போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கெல்லாம் எதிர்வினை இருக்கும். இந்தத் திட்டங்களை இதோடு நிறுத்தவில்லையெனில் நாடு பெரும் சிக்கலை நோக்கித்தான் நகரும்" என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)