ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை.
இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அயோத்தியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் ராமர் கோவில் பணிகளை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள், ராமர் சிலை தேர்வு குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார் கோடீஸ்வர ஷர்மா.

பட மூலாதாரம், SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA
கேள்வி : அயோத்தி ராமர் கோவிலின் கட்டிடக்கலை வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்க முடியுமா?
கோடீஸ்வர ஷர்மா : ராமர் கோவில் கட்டுமான பணிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையே கட்டுமான பணிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு.
கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.
சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.
1991 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த கோவிலின் மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் படியே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அதற்கு பிறகு, அறக்கட்டளை பொறுப்பேற்று, முதலில் உருவாக்கப்பட மாதிரியில் சிறிய மாற்றங்கள் செய்து கோவிலை கட்டியுள்ளது.
மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வில் எத்தனை மக்கள் பங்கேற்பார்கள்? அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது?
கோடீஸ்வர ஷர்மா : அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.
அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்கள் தங்குவதற்கு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஆசிரமங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு 30 - 35 உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கோவிலில் 19ஆம் தேதி மாலையோடு தரிசனம் நிறுத்தப்பட்டு சிலைகளை அங்கிருந்து புதிய கோவிலுக்கு மாற்றுவதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் 20, 21, 22 ஆகிய தேதிகள் தரிசனம் கிடையாது.
22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, விருந்தினர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்படும்.
23ஆம் தேதி காலை முதல் பொது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பட மூலாதாரம், CHAMPAT RAI
ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் 72 ஏக்கர் இருந்தபோதிலும், கோவில் 2.7 ஏக்கரில் ஒரு மூலையில் கட்டப்பட்டுள்ளது ஏன்?
கோடீஸ்வர ஷர்மா : ஒட்டுமொத்த காலியிடத்தில் கட்டுமான பணி நடக்கவில்லை. இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.
முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.
மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.
சிலை பிரதிஷ்டைக்கான தினமாக ஜனவரி 22 தேர்வு செய்யப்பட்டது ஏன்?
கோடீஸ்வர ஷர்மா : ஜோதிடம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின் படி சிறந்த முகூர்த்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22ஆம் தேதி 12.22 முதல் 12. 40 வரை நல்ல நேரம் என்பதை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

பட மூலாதாரம், ANI
பால ராமரின் சிலையை நிறுவது ஏன்?
கோடீஸ்வர ஷர்மா : முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.
அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.
முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.
முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சொல்கிறதே, அதற்கான காரணங்கள் என்ன?
கோடீஸ்வர ஷர்மா : அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.
ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.
இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.
கட்டுமானம் முடிக்கப்படுவதற்கு முன்பே கோவில் திறக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறதே, விஎச்பியின் சார்பில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கோடீஸ்வர ஷர்மா : 1951ஆம் ஆண்டு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சோம்நாத் கோவிலை ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார்.
நமது நாட்டில் இவை அனைத்தும் வாஸ்து மற்றும் கோயில் சாஸ்திரங்களின்படியே நடக்கிறது. எதுவும் அறிவியலற்ற முறையில் செய்யப்படுவதில்லை. அனைத்துமே முறைப்படி மட்டுமே செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு கோவில் தொடர்பானவர்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












