சேலம்: ஜல்லிக்கட்டில் வெல்ல காளைக்கு சேவல் உணவாக தரப்படுகிறதா? நடந்தது என்ன?

- எழுதியவர், க.மாயகிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி சேவலை சாப்பிட வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
மாட்டை கட்டாயப்படுத்தி சேவலை சாப்பிட வைத்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது.
மேல்குறிப்பிட்ட இடங்களை தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சேலம் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு உயிருள்ள சேவலை வலுக்கட்டாயமாக உணவாகக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது . அதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

பட மூலாதாரம், Getty Images
காளைக்கு உணவாக உயிருள்ள சேவல்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேர் இணைந்து ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி சேவலை வாயில் வைத்து திணித்து மெல்ல வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை, யூடியூபர் ரகு என்பவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, யூடியூபர் ரகுவுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீப்பிள் ஃபார் கேட்டில் எய்ம் இந்தியா (பிஎஃப்சிஐ) நிறுவனர் அருண் பிரசன்னா நேரில் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸார், விலங்குகள் வதை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை
இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறை அதிகாரி கூறுகையில்,விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960 -படி "எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். விசாரித்து வருகிறோம். நாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை” என்றார்.

புகார் தந்த விலங்கு நல ஆர்வலர்
ஜல்லிக்கட்டில் காளையை வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் அதற்கு உணவாக கோழி அளிக்கப்படுகிறது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வெற்றி பெறும் காளைகளுக்கு சந்தையில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். அதனால் அந்த மாட்டிற்கு அதிக விலை கிடைக்கும் என்றும் அவை இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிஎஃப்சிஐ அமைப்பின் நிறுவனரும் புகார்தாரருமான அருண் பிரசன்னா பிபிசி தமிழிடம் தொலைபேசியில் கூறுகையில், "காளைகளுக்கு உணவாக உயிருள்ள சேவலை அளித்து இரண்டு விலங்குகளையும் கொடுமைப்படுத்துகின்றனர். காளை ஒரு தாவர உண்ணி விலங்கு. அதற்கு கோழியை உணவாக அளித்து கட்டாயப்படுத்துவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
எனது ஒரே பயம் இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் சமூகத்தில் நன்மதிப்பை சீர்குலைக்கும் என்பதுதான். இது போன்ற மாமிச உணவு அளிக்கப்படும் காளை வென்றால், பல காளை உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்" என்றும் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்காகவும் விலங்குகள் மீது அக்கறை கொண்டுமே இந்த புகாரை நானே நேரடியாக அளித்தாகவும் அவர் கூறினார்.

தாவர உண்ணிக்கு மாமிச உணவு
காளை மாட்டிற்கு கோழி இறைச்சி தந்தது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில பொருளாளரும், கால்நடை மருத்துவருமான செல்வம் கூறுகையில், "தாவர உண்ணிகளான மாடுகளுக்கு இறைச்சியை உணவாகத் தருவது என்பது ஏற்புடையது அல்ல. அதன் உடல் கூறுகள் அனைத்துமே தாவர உணவினை செரிப்பதற்கு ஏற்றவாறு இயற்கையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செயல்களால் மாட்டிற்கு ஒவ்வாமை, உணவு செரிமான கோளாறு உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும்.
ஏன் சில நேரங்கள் இறப்பு கூட நிகழலாம்.
ஏனென்றால் மாடுகள் புல் வகைகள், கீரை வகைகள் காய்கறிகளை போன்ற தாவர உணவுகளையே எடுத்துக் கொள்ளுlj. இதை மாற்றி விலங்குகளை உணவாக வழங்குவது என்பது இயற்கைக்கு எதிரான செயல்பாடு என்று கூட கூறலாம். மனிதர்களைப் போல் மாடுகள் அனைத்து வகை உணவுகளையும் உண்பவை அல்ல.
இறைச்சியில் இருக்கும் புரதச் சத்திற்கும் தாவரங்களில் உள்ள புரதங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதன் செரிமான தன்மை, வேறுபாடுகள் கொண்டது. இதை புரிந்து கொள்ள வேண்டும். மாடுகள் மட்டுமல்லாது கால்நடைகள் அனைத்திற்கும் அவை உண்ணக்கூடிய தாவர வகை உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் அதுவே அதன் உடலுக்கும் நல்லது" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சின்னப்பம்பட்டி கிராமத்தில் இருக்கும் நபர்களை தொடர்பு கொண்ட போது எவ்வித கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை. விசாரித்த வகையில் மாட்டிற்கு கட்டாயப்படுத்தி சேவலை உணவாக்கிய மூவரும் தலைமறைவாக உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












