2024 மக்களவை தேர்தல்: பாஜக-வுக்கு உதவவே மாயாவதி தனித்துப் போட்டியிடுகிறாரா?

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாயாவதியின் தேர்தல் திட்டம்

மாயாவதி எப்போதும் போல 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தனது நிலைப்பாட்டை மீண்டும் அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின் இருந்த தனது கூட்டணிக் கட்சிகளை அவர் நிராகரிக்கவில்லை என்றாலும், தற்போது அவர் மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கு முன்பு, தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று அவர் கூறியிருந்தார்.

தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பகுஜன் சமாஜ் கட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று மாயாவதி கூறினார். பெரும்பாலான கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும் இம்முறை மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடும்.

மாயாவதியின் இந்த அறிவிப்பால், பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் முடிவிற்கு வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்க சில காங்கிரஸ் தலைவர்கள் கடைசி நேரம் வரை முயன்றதாகக் கூறப்படுகிறது.

தற்போது, தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்ததை அடுத்து, அது மீண்டும் பாஜகவின் "பி" அணியில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு கூட்டாக இணைந்து சவால்விடும் இந்தியா கூட்டணியின் முயற்சிக்கு இது ஒரு வீழ்ச்சியாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயாவதி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து தேர்தலில் முக்கோண போட்டியை உருவாக்கியுள்ளார். அவரது முடிவால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா?

மாயாவதியின் இந்த முடிவு இந்தியா கூட்டணிக்கு பேரிடியாக இருக்குமா?

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், KHARGE

படக்குறிப்பு, இந்தியா கூட்டணி கூட்டம்

மாயாவதியின் கட்சி, தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முதன்முறையாக அறிவிக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலை தவிர, ஒவ்வொரு முறையும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துதான் போட்டியிட்டது.

ஆனால் உத்திர பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து 4 முறை ஆட்சியைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

மாயாவதியின் இந்த முடிவு, இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான சரத் பிரதான், “1980களின் பிற்பகுதியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாதிரியான சந்தர்ப்பவாத அரசியலைச் செய்து வருகிறது என்பது தெரிய வருகிறது," என்று கூறுகிறார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, "மாயாவதி தங்களுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதில் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்."

"பகுஜன் சமாஜ் கட்சி எப்போது யாரிடம் இருந்து விலகி, யாருடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று கணிக்க முடியாது,” என்கிறார் சரத் பிரதான். மாயாவதி கூட்டணி அமைக்காததால் தேர்தலில் மூன்று அணிகளாக போட்டி இருந்தாலும், இந்தியா கூட்டணிக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

மேலும் அவர், "மாயாவதி தங்களுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நான் நினைக்கிறன். இதில் ஈடுபட்டிருந்தால், மாயாவதிக்கு மட்டும்தான் பலன் கிடைத்திருக்கும், இந்தியா கூட்டணிக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்," என்று கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலை இந்தியா கூட்டணி அறிந்து செயல்பட வேண்டும் என்று சரத் பிரதான் கூறுகிறார். ஆனால் இந்தக் கூட்டணி தலித் மக்களுக்கு விரோதிகளாகக் கருதப்படக்கூடாது என்பதற்காகவே மாயாவதியுடன் கூட்டணி வைக்க முயல்கிறது.

பாஜக-விற்கு உதவுகிறாரா மாயாவதி?

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி உதவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி உதவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் காரணமாக பாஜக-வுக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப் பிரியக்கூடும்.

இந்த வாக்காளர்களில் ஒரு பகுதி சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு பகுதி பகுஜன் சமாஜ் கட்சிக்கும் வாக்களிப்பார்கள். இதன்மூலம் பாஜக பலன் அடையும்.

கடந்த 2019இல் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியில் இணைந்து 15 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால் இந்த முறை தனித்தனியாகப் போட்டியிடுவதால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

"கடந்த 2 ஆண்டுகளில் மாயாவதியின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருந்தன,” என்று சரத் பிரதான் கூறுகிறார்.

மேலும் அவர், “பாஜக மற்றும் நரேந்திர மோதியின் கட்டளைப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை,” என்றும் கூறினார்.

மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஷரத் குப்தாவும், சரத் பிரதானின் கருத்துகளுக்கு உடன்படுகிறார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, தனித்து போட்டியிடுவதின் மூலம், மாயாவதி பாஜக-விற்கு உதவி செய்கிறார்.

"தனித்து போட்டியிடுவதின் மூலம், மாயாவதி பாஜக-விற்கு உதவி செய்கிறார். 2022 சட்டமன்றத் தேர்தலிலும் அவர் இதையே செய்தார்," என்கிறார் ஷரத் குப்தா. காங்கிரஸ் கட்சி சரிந்து இரண்டு சதவீதம் வாக்குகளே பெற்றன. மாயவாதிக்கு ஒரேயொரு தொகுதிதான் கிடைத்தது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தோல்வியையே சந்தித்தது.

“எப்போதெல்லாம் எதிர்க்கட்சியில் ஒற்றுமை குறைகிறதோ, அப்போது ஆளுங்கட்சிக்கு அதிக பலன் கிடைக்கும்,” என்கிறார் ஷரத் குப்தா. மாயாவதியின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். தனது கட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ளார் மாயாவதி. காரணம் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குப் பிரிக்கப்பட்டாலும், பிற கட்சிகளின் வாக்குகள் ஏதும் அதற்கு மாறி வராது.

"கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது," என்று சரத் குப்தா கூறுகிறார். 2014 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

"எனவே, பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் பிரிக்கப்படுவதாகக் கூறுவது தவறானது. இது நடைபெறவில்லை என்றால், பகுஜன் சமாஜ் கட்சி பூஜ்ஜியத்தில் இருந்து பத்து இடத்தைக்கூட கைப்பற்றி இருக்காது.

கடந்த 2019 தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டபோது சமாஜ்வாடி கட்சி அதிக இழப்புகளைச் சந்தித்ததாக ஷரத் குப்தா கூறுகிறார். எனவே, இந்த முறை சமாஜ்வாதி கட்சி உத்திர பிரதேசத்தில் உள்ள எந்தக் கட்சியையும் இந்தியா கூட்டணியில் சேர்ப்பதற்கு முன்பாக, உரிய கேள்விகள் எழுப்பப்படும் என்று காங்கிரஸிடம் நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஓரளவு ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு கிட்டத்தட்ட முடிவான நிலையில், இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மட்டும் வெளியாகக் காத்திருக்கிறது. அதன்படி பார்த்தால், மாயாவதிக்கு இப்போது வேறு வழியில்லை. அதனால் யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

மாயாவதி 2017 சட்டமன்றத்தில் 100 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி ஆச்சரியப்படுத்தினார். இதன்மூலம் இந்து வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக திசை திருப்ப முயன்றதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாயாவதி பாஜக-விற்கு ஆதவாகச் செய்த இத்தகைய நடவடிக்கைகளால், ஜாதவ் அல்லாத தலித்துகளான தோபி, பாசி, காதிக், துசாத், பாஸ்வான் மற்றும் நோனியா சாதியினர் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கான வாய்ப்பிற்காகப் பிற கட்சிகளை நாடத் தொடங்கினர்.

மாயாவதிக்கு மிரட்டல் விடுகிறதா பாஜக?

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "மோதி அரசாங்கம் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தப்படுவதால், பணக்கார அரசியல் தலைவர்கள் பயப்பட வேண்டும்."

மோதி அரசு மாயாவதி மீதான சொத்துக்குவிப்பு விவகாரத்தில் அவர் மீதான பிடியை வலுப்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் பாஜகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

"மோதி அரசாங்கம் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தப்படுவதால், பணக்கார அரசியல் தலைவர்கள் பயப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை," என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.

ஷரத் குப்தாவும் இதைச் சுட்டிக்காட்டி, சில விஷயங்கள் அவர்கள் கையில் இல்லை என்று கூறினார். எனவே மாயாவதி தனது வாரிசை அறிவித்துள்ளார். அவர் சற்றுப் பின்வாங்கி ஆகாஷ் ஆனந்தை முன்னிறுத்தி வருகிறார்.

மேலும் அவர், "ஆனால் இந்த முறை சிறுபான்மை வாக்காளர்கள் பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளால் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகப் போகலாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சிக்குப் பலன் கிடைக்கும். இது பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்," என்று கூறினார்.

ஆனால் மூத்த பத்திரிக்கையாளர் சுனதி ஆரோன் கூறுகையில், "மாயாவதியின் ஆளுமை அமலாக்கத்துறைக்குப் பயப்படக்கூடிய ஒன்று போல இல்லை. அவர் தனது அரசியல் பாணியை மட்டும் மாற்றிக்கொண்டார்," என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சி

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு உதவுகிறாரா மாயாவதி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தேர்தலில் அதன் செல்வாக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 1991இல் 12 தொகுதிகளை வென்ற பிறகு இதுவே அதன் மோசமான நிலையாக இருந்தது. 2012 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களையே கைப்பற்றியது.

பகுஜன் சமாஜ் கட்சி 2022 சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு சதவீதம் 12.88 சதவீதமாகக் குறைந்தது.

பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி நான்கு முதல் எட்டு சதவிகித வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஆனால் இக்கட்சியால் அதை இங்கு பயன்படுத்த முடியவில்லை.

பல அரசியல் ஆய்வாளர்கள் மாயாவதியின் கட்சி இப்போது வீழ்ச்சியடைந்து வருவதாகவும், படிப்படியாக அது மக்களின் மனதிலிருந்து முற்றிலும் மறக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் உத்திர பிரதேசத்தில் இன்னும் 12 சதவீத வாக்குகளை வைத்திருப்பதால் மாயாவதியை அவ்வளவு சீக்கிரம் விலக்கி வைக்க முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுனீத் ஐரான். அவரது பலம் 2024 தேர்தலில் தெரிந்துவிடும்.

அவரது முக்கிய வாக்காளர்கள் எந்த அளவிற்கு அவருடன் இருக்கிறார்கள் என்பதை இத்தேர்தல் காட்டவிருக்கிறது. இன்னும் தலித் வாக்காளர்களில் பெரும் பகுதியினர் அவரை ஆதரிக்கின்றனர். மாயாவதி இனி அடிமட்ட அரசியல் செய்யமாட்டார் என்று கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களுடனான தொடர்பு குறைந்துள்ளது. இப்போது அவர் இருந்த இடத்திலிருந்து நாற்காலி அரசியல் மட்டுமே செய்கிறார். சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு பேரணிகளில் பங்கேற்கிறார் அல்லது அறிக்கைகளை வெளியிடுகிறார்.

மாயாவதியின் இந்தப் போக்கு குறித்து சுனதி ஆரோன் கூறும்போது, "2007இல் நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்கும் முன், மக்களுடன் மிகவும் ஒத்துப் போகிறவராக இருந்தார். அந்த நேரத்தில், தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கருதி பாதுகாப்புக்காக அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் அடைக்கப்பட்டு இருந்தார்.”

மேலும், "2012 முதல் அவரது அரசியலில் ஒரு மாற்றம் காணப்பட்டது. ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்புவதை நிறுத்திக் கொண்டார். எங்கும் செல்லாமலே 19 முதல் 20 சதவீத வாக்குகளைப் பெற்று வந்தார். அதனால்தான் அவருடன் கூட்டணி அமைக்க அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டினர். அடல் பிஹாரி வாஜ்பேயி உத்திர பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினார்,” என்று கூறுகிறார்.

"காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இருக்கும் தலித் வாக்குகளைப் பெற பாஜக கடுமையாக முயல்கிறது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி இல்லாமல் தலித் வாக்குகள் தனக்கு வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் மாயாவதியின் வாக்குகள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் வரை இருந்தால் அவர் அரசியலுக்குப் பொருத்தமற்றவராக மாறி வருகிறார் என்று நாம் சொல்லலாம்," என்று கூறுகிறார் சுனதி ஆரோன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)