அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் - பாகிஸ்தான் கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன. 22) கோலாகலமாக நடைபெற்றது.

இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர்.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், ANI

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி

ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பேசிய பிரதமர் மோதி, “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, துறவு, தவம், தியாகம் முடிந்து ராமர் இங்கு வந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் இந்நாளை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்று குறிப்பிடாமல், நீதித்துறைக்கு மோதி நன்றி தெரிவித்தார். இந்திய நீதித்துறை நீதியின் மாண்பை காத்ததாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் கண்டனம்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருப்பதை கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவின் அயோத்தி நகரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருப்பதை பாகிஸ்தான் கண்டிக்கிறது.

நூற்றாண்டுகள் பழமையான மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது. வருந்தத்தக்க வகையில், இதற்குக் காரணமான குற்றவாளிகளை இந்தியாவின் உச்ச நீதி பரிபாலன அமைப்பு விடுதலை செய்ததுடன், மசூதி இடிக்கப்பட்ட இடத்திலேயே கோவில் கட்டவும் அனுமதி அளித்தது.

கடந்த 31 ஆண்டு நிகழ்வுகளின் நீட்சியாக இன்று நடந்தேறியுள்ள கும்பாபிஷேகம் இந்தியாவில் பெரும்பான்மைவாதம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. இந்திய முஸ்லிம்களை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளில் முக்கிய அம்சமாக இவை விளங்குகின்றன.

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோவில் இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒரு கறையாகவே இருக்கும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி போன்றவையும் இதேபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், X/Spokesperson MoFA

இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவா அலை மத நல்லிணக்கத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் மிகவும் அச்சுறுத்தலானது. இந்தியாவின் 2 பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலை கட்டியது பாகிஸ்தானில் பகுதிகளை திரும்பப் பெறுவதற்கான முதல் படி என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் இஸ்லாமோபோபியா, வெறுப்புப் பேச்சு, வெறுப்புணர்வுக் குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருதை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும். அத்துடன், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் மத, கலாசார உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களது புனிதத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொள்கிறது."

என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலராமரின் கண்கள் திறப்பு

பாலராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வை முன்னிட்டு இசைக்கருவிகளை வாசித்தனர்.

ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அயோத்தி ராமர் கோவில்

கோவிலின் சிறப்பம்சங்கள்

நிகழ்வுக்கு முன்னதாக, பிரபலர் இசைக்கலைஞர்கள் சோனு நிகம், சங்கர் மகாதேவன், அனுராதா பட்வால் உள்ளிட்டோர் ராம பஜனை பாடினர்.

பின்னர், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தி ராமர் கோவில் குறித்து பல தகவக்களை வழங்கினார்.

அதன்படி,

  • கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லைக் கொண்டு ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்தவர் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ்.
  • இந்த கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் ஆழம் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் வலுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
  • கோவிலில் சுமார் 25,000 பேர் தங்கள் காலணிகள், மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கென மையம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
  • கோவில் கட்டமைப்புக்காக பல்வேறு நிபுணர்களும் உதவியுள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், ANI

இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அயோத்தியில் ரஜினிகாந்த்

யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு அவர் அயோத்தி சென்றடைந்தார். அதேபோன்று, நடிகர் தனுஷும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மத சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மத்திய அமைச்சர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவில்கள், பொது இடங்களில் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கங்கனா ரணாவத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கங்கனா ரணாவத்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் ஆகியவை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவிலை சுற்றி முக்கியமான இடங்களில் முள்கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

கூடார நகரம்

அதிகளவிலான துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை.

இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவர் கூறுகையில், “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.

அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் மக்கள் வரத்தொடங்குவார்கள் என்பதால், அயோத்தியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை 120 படுகைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல, அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க உள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் முகேஷ் மெஷ்ராம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதார கட்டமைப்பையும் வலுப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வை நேரலை செய்ய தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ, பூஜைகள், அர்ச்சனைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ, அன்னதானம் வழங்கவோ எவ்வித கட்டுப்பாடுகளும் தடையும் இல்லை எனவும் இந்த மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு பல சமூகத்தினர் வசிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதித்த வாய்மொழி உத்தரவை யாரும் கடைபிடிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

காஞ்சிபுரத்தில் மீண்டும் எல்.இ.டி திரை

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு எல்.இ.டி திரைகள் மீண்டும் பொருத்தப்பட்டு நேரலையாக ராமர் கோவில் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

முன்னதாக, காமாட்சி அம்மன் கோவிலில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்.இ.டி திரையை "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது" என கூறி அதை காவல்துறையினர் அகற்றியிருந்தனர்.

இதனை நிர்மலா சீதாராமன் கண்டித்திருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)