அசாமில் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்ததால் ராகுல் காந்தி தர்ணா - என்ன நடந்தது?

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு தடை

பட மூலாதாரம், INC

    • எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
    • பதவி, குவஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக

அசாம் வழியாகச் செல்லும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ நியாய யாத்திரை” கடந்த இரண்டு நாட்களாக அரசியல் மோதலில் சிக்கியுள்ளது.

ராகுல் காந்தி திங்களன்று நாகாவ் மாவட்டத்தில் படாத்ரவாவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ சங்கர் தேவ் சத்ர (மடம்) கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் உள்ளூர் நிர்வாகம் அவரை 17 கிலோமீட்டர் முன்னதாக ஹைபோர்காவில் தடுத்து நிறுத்தியது.

அசாமிய சமூகத்தால் மதிக்கப்படும் வைஷ்ணவ துறவி சங்கர் தேவ் பிறந்த இடமான படாத்ரவா சத்ர கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது தொண்டர்களுடன் ஹைபர்காவில் தர்ணாவில் அமர்ந்தார்.

முன்னதாக வெளியான ஒரு வீடியோவில், காரில் இருந்து இறங்கும் ராகுல் காந்தி தன்னை தடுத்து நிறுத்தியதற்கான காரணத்தை போலீஸ்காரர்களிடம் கேட்டறிவதை காண முடிந்தது.

தர்ணாவில் அமர்வதற்கு முன்பு அதிகாரிகளை விமர்சித்த ராகுல் காந்தி, “இன்று கோவிலுக்குள் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவது போல் தெரிகிறது. கோவில்களுக்கு யார் செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோதி முடிவு செய்வாரா?” என்று ஊடகங்களிடம் வினவினார்.

"சங்கர் தேவ் பிறந்த இடத்திற்குச் செல்ல எங்களுக்கு ஜனவரி 11-ம் தேதி அழைப்பு வந்தது. ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்று ஞாயிற்றுக்கிழமை எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு நெருக்கடியின் போது கௌரவ் கோகோய் மற்றும் பிறரும் வைஷ்ணவ துறவி ஸ்ரீமந்த் சங்கர்தேவின் பிறந்த தலத்திற்குச் செல்லலாம், ஆனால் ராகுல் காந்தி மட்டும் அங்கு செல்லக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

ராகுல் காந்தி தர்ணாவில் அமர்ந்திருக்கும் இடத்தில் அவரது ஆதரவாளர்கள் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் ஆதரவாளர்கள் சங்கர் தேவ் பற்றிய பாடல்களை பாடுவதையும் கேட்க முடிந்தது.

உள்ளூர் எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான கெளரவ் கோகோய் பின்னர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு பதிலாக தமக்கு கிடைத்ததாக வெளியே வந்த பிறகு அவர் கூறினார்.

ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கௌரவ் கோகோய், "ஸ்ரீ ஸ்ரீ சங்கர் தேவ் பிறந்த தலம் முற்றிலும் காலியாக இருந்தது. கூட்டம் இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டன. படாத்ரவா தலம் மற்றும் ஸ்ரீ சங்கர்தேவின் மரபுக்கு முதல்வர் ஒரு இருண்ட நாளைக் கொண்டு வந்துள்ளார்,” என்று குறிப்பிட்டார்.

அசாமில் ஸ்ரீமந்த் சங்கர் தேவின் முக்கியத்துவம்

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு தடை

பட மூலாதாரம், @GAURAVGOGOIASM

ஜனவரி 22ம் தேதி காலை படாத்ரவா ஸ்ரீஸ்ரீ சங்கர் தேவ் தலத்திற்கு ராகுல் காந்தி செல்வார் என்று காங்கிரஸ் அறிவித்தது முதல் காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையே மோதல்களும், வாக்குவாதங்களும் தொடங்கின.

15-16 ஆம் நூற்றாண்டின் துறவியும், அறிஞரும், சமூக-மத சீர்திருத்தவாதியுமான ஸ்ரீமந்த் சங்கர் தேவ், அசாமின் உள்ளடக்கிய கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார் என்று அசாமில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பத்திரிகை துறையில் இருக்கும் சமீர் கே புர்காயஸ்தா கூறுகிறார்.

நாட்டில் தற்போது காணப்படும் இந்துத்துவ அரசியலின் காலகட்டத்தில் ராகுல் காந்தியின் படாத்ரவா வருகை பல வகையிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

”எளிமையான மொழியில் சொல்வதானால், ராகுல் காந்தி ராமர் விக்கிரக பிரதிஷ்டை விழாவுக்குச் செல்லாததால் பாஜக அவரை அரசியல் ரீதியாக தாக்கியிருக்கும். ஸ்ரீமந்த் சங்கர்தேவ் தலத்திற்கு அவர் வந்திருப்பது அதற்கான பதில்,” என்கிறார் புர்காயஸ்தா.

அசாம் முதல்வர் என்ன சொன்னார்?

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு தடை

பட மூலாதாரம், @KCVENUGOPALMP

முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பிறந்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியிருந்தார்.

“திங்கட்கிழமை ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது படாத்ரவாவுக்குச் செல்ல வேண்டாம் என்று ராகுல் காந்தியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் இது அசாம் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்,” என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பகவான் ராமருக்கும், மாநிலத்தில் அனைவராலும் போற்றப்பட்டும் இடைக்கால வைஷ்ணவ துறவிக்கும் இடையே எந்தப்போட்டியும் இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

இது தவிர திங்கள்கிழமை, மோரிகாவ், ஜகிரோடு மற்றும் நேல்லி போன்ற "பதற்றமான பகுதிகள்" வழியாக செல்ல காங்கிரஸ் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது, இது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் முதல்வர் கூறினார்.

"இந்தப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக்கூடும் என்பதை என்னால் மறுக்க முடியாது. எனவே ஜனவரி 22 ஆம் தேதி ராகுல் காந்தியின் வருகையின் போது, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளின் முக்கியமான பாதைகளில் கமாண்டோக்கள் நிறுத்தப்படுவார்கள்" என்றார் அவர்.

நீண்ட காலமாக காங்கிரஸில் இருந்து வந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா 2015ம் ஆண்டு பாஜகவில் இணைந்ததில் இருந்து ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார்.

ராகுல் காந்தி - ஹிமந்தா சொற்போர்

கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு தடை

பட மூலாதாரம், ANI

ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடந்த வியாழக்கிழமை அசாம் வந்தடைந்ததில் இருந்து ராகுல் காந்திக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாவை நாட்டின் மிகுந்த ஊழல் நிறைந்த முதல்வர் என்றும் மற்ற பாஜக முதல்வர்களுக்கு அவர் ஊழலைக் கற்றுக்கொடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த சர்மா, காந்தி குடும்பத்தை நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் என்று வர்ணித்தார்.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் யாத்திரை ஜோர்ஹாட் நகரம் வழியாகச் சென்றபோது, நிர்வாகம் நிர்ணயித்த பாதையை மீறியதாக யாத்திரை ஏற்பட்டாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வடக்கு லக்கிம்பூரில் காங்கிரஸ் வாகனங்கள் பலவற்றின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்சி போஸ்டர்கள், பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்தநிலையில் காங்கிரஸ் லக்கிம்பூரில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை யாத்திரை அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து அசாமுக்குத் திரும்பும் போது, அசாம் காங்கிரஸ் தலைவர் பூபேன் போரா, பாஜக ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சர்மா, காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)