சென்னை 'உதயம் தியேட்டர் விற்பனை' என்ற செய்தி உண்மை இல்லையா? உரிமையாளர் என்ன சொல்கிறார்?

உதயம் தியேட்டர்

பட மூலாதாரம், udhayam_cinemas/Instagram

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் உள்ள பிரபலமான உதயம் திரையரங்கம் விற்கப்படுவதாகவும் மூடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த விவகாரத்தில் உண்மை என்ன?

5 சகோதரர்கள் இணைந்து கட்டிய திரையரங்கம்

சென்னை அசோக் பில்லர் பகுதியில் அமைந்திருக்கிறது பிரபல திரையரங்கான உதயம் திரையரங்கம். உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு திரையரங்குகளைக் கொண்டது இந்த காம்ப்ளக்ஸ்.

கடந்த சில நாட்களாகவே இந்த காம்ப்ளக்ஸில் திரைப்படங்கள் வெளியாவது குறைந்து கொண்டே வந்தது. சில வாரங்களில் 2 திரையரங்குகளில் மட்டும் படம் வெளியானது. சில வாரங்களில் எந்தத் திரையரங்கிலும் படம் ஓடாமல் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், இந்தத் திரையரங்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சென்னையில் அசோக் நகர், கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய பகுதிகள் புறநகர்ப் பகுதிகளாக, அப்போதுதான் விரிவடைந்துவரும் பகுதிகளாக இருந்த காலகட்டம். ரஜினியும் கமலும் உச்சகட்டத்தில் இருந்த அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுக்கவே சினிமா திரையரங்குகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது.

திருநெல்வேலியில் இருந்து வந்து சென்னையில் தானிய விற்பனையில் ஈடுபட்டிருந்த பரமசிவம் பிள்ளை, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஐந்து சகோதரர்கள் இணைந்து கே.கே. நகரும் அசோக் நகரும் சந்திக்கும் இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி, ஒரு திரையரங்கைக் கட்ட முடிவுசெய்தனர்.

உதயம் தியேட்டர் எப்படி கொண்டாடப்பட்டது?

உதயம் தியேட்டர்

பட மூலாதாரம், Getty Images

அதன்படி விசாலமான வாகன நிறுத்துமிடத்துடன் 1983ஆம் ஆண்டில் உதயம் திரையரங்கம் திறக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒரு திரையரங்கில் காலைக் காட்சியாக ஒரு திரைப்படமும் மீதமுள்ள மூன்று காட்சிகள் வேறு ஒரு திரைப்படமும் வெளியாகும். அப்படி முதல் இரண்டு படங்களாக கமல், மாதவி நடித்து கே. விஜயன் இயக்கிய சட்டம் திரைப்படமும் ரஜினிகாந்த், சரிதா, ராதா நடித்து முக்தா ஸ்ரீநிவாஸன் இயக்கிய சிவப்பு சூரியன் திரைப்படமும் வெளியானது. இரண்டுமே பெரிய ஹிட்.

அடுத்தடுத்து வளர்ச்சிதான். அடுத்தடுத்த ஆண்டுகளில் சூரியன், சந்திரன் ஆகிய இரு திரையரங்குகள் கூடுதலாகத் திறக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டில் உதயம் திரையரங்கின் பால்கனி பகுதி மறைக்கப்பட்டு தனி திரையரங்காக்கப்பட்டது. இதற்கு மினி உதயம் என பெயர் சூட்டப்பட்டது.

சினிமா திரையரங்குகள் தனி அந்தஸ்தைப் பெற்றிருந்த அந்தக் காலகட்டத்தில், உதயம் காம்ப்ளக்ஸிற்கு என தனி இடம் உண்டானது. பல திரைப்படங்கள் இங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. சிவாஜியும் ராதாவும் நடித்து பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் இந்தத் திரையரங்கில் 275 நாட்கள் ஓடியது.

80களில் ரஜினி, கமல் படங்களும் அதற்குப் பிறகு அஜீத், விஜய் படங்களும் இங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. அந்த காலகட்டத்தில் முதல் நாள் முதல் காட்சிக்கு பெயர் பெற்ற திரையரங்கமாக இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது.

ரஜினிகாந்த், சிவாஜி நடித்த விடுதலை திரைப்படம், இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்ட போது முதல் நாள் வசூல் மட்டும் 10 லட்ச ரூபாயைத் தொட்டது. அந்தக் காலகட்டத்தில் அது மிகப் பெரிய தொகை.

ஆனால், 2000களின் பிற்பகுதியில் திரையரங்குகள் மீதான ஆர்வம் குறையத் துவங்கியபோது இந்தத் திரையரங்கும் பின்தங்க ஆரம்பித்தது. ஆனால், 2023ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி பல திரைப்படங்கள் வெளியான போது, உதயம் காம்ப்ளக்ஸில் மிகப் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் திரண்டது. இரவுக் காட்சியின்போது வாகனங்களை சாலையில் நிறுத்தும் அளவுக்கு கூட்டம் இருந்தது. ஆகவே, உதயம் திரையரங்கின் ரசிகர்கள் அந்தத் தியேட்டர் மீண்டும் களைகட்டி விட்டதாகவே நினைத்தார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.

"இப்போது வருவதையெல்லாம் கூட்டம் என்றே சொல்ல முடியாது. 1980களில் வரிசை அசோக் பில்லர் வரை சென்று வளைந்து நிற்கும்" என நினைவுகூர்கிறார் திரையரங்கின் உரிமையாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம்.

கடந்த சில வாரங்களாக இந்த திரையரங்கு காம்ப்ளக்ஸ் விற்கப்பட்டுவிட்டதாகவும் அதனை மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியிருப்பதாகவும் அந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு வரவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், அப்படி எதுவும் முடிவாகவில்லை என்கிறார் சண்முகசுந்தரம்.

உதயம் தியேட்டர்

பட மூலாதாரம், Getty Images

40 ஆண்டு பாரம்பரிய தியேட்டர் விற்பனை என்பது உண்மையா?

உதயம் தியேட்டர்

பட மூலாதாரம், udhayam_cinemas/Instagram

"உதயம் திரையரங்கை விற்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. அதுபோல ஒரு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் திரையரங்கை விற்றுவிட்டதாகவும் இடிக்கப் போவதாகவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். உண்மையில், இந்தத் தருணம் வரை இதுபோல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்கிறார் சண்முகசுந்தரம்.

சில பிரச்னைகள் காரணமாக, 2008-ம் ஆண்டு வரை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இயங்கிக் கொண்டிருந்த உதயம் தியேட்டர் 2009வாக்கில் மீண்டும் உரிமையாளர்களில் ஒருவர் வசம் சென்றது. அதற்குப் பிறகு, அவ்வப்போது இந்தத் திரையரங்கு விற்கப்படுகிறது என்ற செய்து தொடர்ந்து அடிபட்டுவந்தது.

நான்கு திரையரங்குகளைக் கொண்ட இந்த காம்ப்ளக்ஸில் தற்போது லால் சலாம், சைரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஓடுகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)