இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ERIC LALMAND/BELGA MAP/AFP

படக்குறிப்பு, பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.

எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது?

மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது.

ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு

ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர்.

  • விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு.
  • விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு.
  • பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள்.
  • ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும்.

அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர்.

போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர்.

இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்

ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர்.

ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

  • குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம்.
  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
  • 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
  • மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது.
  • விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்.
  • 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.

எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா?

இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)