24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘டிராகன்’ பற்றிக் கிடைத்த அபூர்வ தகவல்கள்

பட மூலாதாரம், NATIONAL MUSEUMS OF SCOTLAND
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்
டிரையாசக் காலகட்டத்தைச் சேர்ந்த (சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்) 16 அடி நீளமுள்ள (5 மீ) நீர்வாழ் ஊர்வன இனத்தின் புதிய, குறிப்பிடத்தக்க, முழுமையான புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த உயிரினம் 24 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. அதனுடைய மிக நீளமான கழுத்து காரணமாக இந்த உயிரினம் 'டிராகன்' என்று அழைக்கப்படுகிறது.
டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ் (Dinocephalosaurus orientalis) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம், முதன்முதலில் 2003-இல் அடையாளம் காணப்பட்டது. ஆனால், அதன் முழுமையான புதைபடிவம் தற்போதுதான் கிடைத்துள்ளது.
அபூர்வமான இந்தப் புதிய புதைபடிவம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த வினோதமான ஒரு விலங்கின் முழு உடற்கூறியலையும் அறியும் வகையில் அமைந்துள்ளது.
இப்புதைபடிவத்தை ஆய்வு செய்த சர்வதேசக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தைச் சேர்ந்த முனைவர் நிக் ஃப்ரேசர், விஞ்ஞானிகள் இதை முழுமையாகப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றார். அவர் அதை 'மிகவும் விசித்திரமான விலங்கு' என்று விவரித்தார்.
உடலை விட நீளமான கழுத்து

பட மூலாதாரம், MARLENE DONELLY
மேலும் பேசிய நிக் ஃப்ரேசர், "இது ஃபிளிப்பர் (தட்டையான கை போன்ற வடிவிலான) போன்ற மூட்டுகளைக் கொண்டிருந்தது. அதன் உடலும் வாலும் சேர்ந்த நீளத்தைவிட அதன் கழுத்து நீளமானது,” என்று அவர் கூறினார்.
32 தனித்தனி முதுகெலும்புகளுடன் கூடிய அதன் 'நீண்ட, வளைந்த மற்றும் நெகிழ்வான கழுத்து', அந்த உயிரினத்திற்கு வேட்டையாடும் திறனை வழங்கியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் ஊகிக்கிறார். மேலும், இந்த நீண்ட கழுத்து, அவை தண்ணீருக்கு அடியில் உள்ள பிளவான பகுதிகளில் உணவைத் தேட அனுமதித்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்தப் புதைபடிவமானது தெற்கு சீனாவில் உள்ள பண்டைய சுண்ணாம்பு படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
"டிரையாசக் காலகட்டத்தின் விசித்திரத்தை இந்த கண்டுபிடிப்பு மேலும் அதிகரிக்கிறது," என்று ஃப்ரேசர் பிபிசியிடம் கூறினார். "இக்காலகட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொன்றை ஆராயும்போதும் புதியதாக நாம் ஏதாவது கண்டுபிடிக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.
இந்த உயிரினத்தின் புதிய புதைபடிவங்களின் தொகுப்பை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரை, 'எர்த் அண்ட் என்விரான்மெண்டல் சயின்ஸ்: டிரான்சாக்ஷன் ஆஃப் தி ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பெர்க்' ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












