சி.எஸ்.கே vs ஆர்.சி.பி: சென்னையை அச்சுறுத்தும் மிகப்பெரிய பலவீனம் - தோனி என்ன செய்யப் போகிறார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 திருவிழா ஆர்சிபி அணிக்கும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதல் ஆட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.
ஒருபுறம் தோனி, மற்றொரு அணியில் விராட் கோலி என்ற இரு துருவங்கள் மோதிக்கொள்வதால் முதல் ஆட்டமே அனல் பறக்கும். அதிலும் சிஎஸ்கே அணி சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் முதல் ஆட்டம் நடப்பது அந்த அணிக்கு கூடுதலாக வலு சேர்க்கும். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் வரவேற்பு அளவுக்கு கோலிக்கும், ஆர்சிபிக்கும் வரவேற்பை சென்னை ரசிகர்கள் வழங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
தனிச்சிறப்பு வாய்ந்த சென்னை ரசிகர்கள்
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் தரமான கிரிக்கெட்டை எந்த அணி விளையாடியும் அதை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, ரசிக்கக் கூடியவர்கள். உலகக் கோப்பை ஆட்டம் நடந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்டத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தது.
ஆதலால், தோனியின் சிஎஸ்கே ஆக இருந்தாலும் சரி, கோலி இருக்கும் ஆர்சிபியாக இருந்தாலும் சரி தரமான கிரிக்கெட்டை சென்னை ரசிகர்கள் சிலாகிப்பார்கள் என்பது உறுதி.

பட மூலாதாரம், Getty Images
கோலியின் 16 ஆண்டு தாகம் தணியுமா?
மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிகள் தொடங்கப்பட்ட இரண்டாவது சீசனிலேயே ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன்ஷிப் பட்டம் அசத்தியுள்ளது. ஆனால், 16 சீசன்கள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட வெல்ல முடியாமல் ஆர்சிபி ஆடவர் அணி தவிக்கிறது.
இந்த முறையாவது கோப்பையை வெல்லும் தீர்மானத்துடன் முதல் ஆட்டத்தை அணுகுகிறது. ஐபிஎல் ஏலத்தில் பல வீரர்களை கழற்றிவிட்டு வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை ஆர்சிபி தேர்ந்தெடுத்துள்ளது. பேட்டிங்கில் வலுவாகத் திகழும் ஆர்சிபி பந்துவீச்சை வலுப்படுத்தி களம் காண்கிறது.
ஸ்மிரிதி மந்தனா அணி இரண்டாவது சீசனிலேயே சாதித்துக் காட்டியுள்ள நிலையில், விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விராட் கோலியின் கோப்பைக் கனவு 16 ஆண்டுகளாக நனவாகாமல் கனவாகவே நீடிக்கறிது. கோலியின் அந்த 16 ஆண்டு தாகம் இம்முறை தணியுமா?
வயது மூப்பு, தரமற்ற வேகப்பந்துவீச்சு
அதேநேரம், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயது காரணமாக இந்த சீசன் அவருக்கு கடைசியாகக் கூட அமையலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சீசனில் அவரை எதிர்பார்ப்பது கடினம் என்பதால், வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே அணி தீவிரமாகப் போராடும். ஐபிஎல் ஏலத்தில் பேட்டர்களையும், ஆல்ரவுண்டர்களையும் ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்திய சிஎஸ்கே அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இதனால், ஆர்சிபியின் வலுவான வேகப்பந்துவீச்சை எவ்வாறு சந்திக்கப் போகிறது சிஎஸ்கே என்ற கேள்வியும், எதிரணியை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிதாக பந்துவீச்சு இல்லாத சிஎஸ்கே என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடர்களில் இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 10 முறையும், சிஎஸ்கே அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இருப்பினும், ஐபிஎல் ஏலத்துக்குப் பின் வீரர்கள் மாற்றத்தால் அணியின் பலம், பலவீனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரு வெற்றிக்காக 16 ஆண்டுகள் காத்திருப்பு
சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மோதியுள்ளனர். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறார்கள் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமையும். இதுவரை 9 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 8 ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடைசியாக 2008ம் ஆண்டு மே 20ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது. அதன்பின் ஏறக்குறைய 16 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை.
இந்த ஆட்டத்துக்குப்பின, 2010, 2011(3ஆட்டம்), 2012,2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்பிசி மோதினாலும் அனைத்து ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. ஆதலால், முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையிலான கவுரப்போராக அமையும்.
16 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியைப் பெறுவதற்காக ஆர்சிபி அணியும் கடுமையாகப் போராடும், அதேநேரம், வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கே அணியும் முயலும் என்பதால் முதல் ஆட்டத்திலேயே அனல் பறக்கும்.
ஒரு ரன்னில் கோலி மைல்கல்
சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்பிசி நட்சத்திர வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 999 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் ஒரு ரன் எடுத்தாலே சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். 2வது இடத்தில் தோனி 751 ரன்களுடன் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணியின் பலவீனம்
சிஎஸ்கே அணியின் பலமே 42 வயதான கேப்டன் தோனியும், அவரின் வியூகமும்தான். கூல் கேப்டன் தோனி, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துகிறார், எந்த பேட்டரை களமிறக்குகிறார் என்ற வியூகமே எதிரணிக்கு பெரிய கிலியை ஏற்படுத்தும்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடும் வகையில் வலுவாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக முதல் பாதி விளையாடமாட்டார் என்று அறிவித்திருப்பது பலவீனம்தான். இருப்பினும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கலாம்.
சிஎஸ்கே அணியின் தூண்களாக இருந்த சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் விலகிவிட்ட நிலையில் நடுவரிசைக்கு வலுவான பேட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல் நடு வரிசையில் களமிறங்கலாம்.
சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே மிட்ஷெல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில், ரச்சின் ரவீ்ந்திராவை சிஎஸ்கே வாங்கியது வியப்பாக இருக்கலாம். ஆனால், ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களை தோனி மிகவும் சாதுர்யமாக கையாள்வார் என்பது வரும் போட்டிகளில் தெரியவரும்.
இது தவிர உத்தரபிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி எனும் பேட்டரை நடுவரிசைக்காக சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இடத்தில் ரிஸ்வி அல்லது ரஹானேவை களமிறக்கி பரிசோதிக்கலாம். இது தவிர ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என பேட்டர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உள்ளனர்.

பட மூலாதாரம், SAMEER RIZVI / INSTAGRAM
இந்த முறை ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை வாங்கி, மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது சிஎஸ்கே அணி. தோனியின் செல்லப்பிள்ளைகளான ஷர்துல், தீபக் சஹர் இருவரும் தோனிக்கு துருப்புச்சீட்டாக இருக்கலாம். முக்கியமாக வங்கதேசம் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே வாங்கியுள்ளது. டெத் ஓவர்களில் பந்துவீச்சு வேகத்தை மாற்றி வீசக் கூடியதில் ரஹ்மான் வல்லவர் என்பதால் சிஎஸ்கே கேப்டன் தோனி அவரை சிறப்பாகப் பயன்படுத்துவார்.
தோனியைப் பொறுத்தவரை கடந்த இரு சீசன்களிலும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. தோனியின் பெரிய ஸ்கோரைப் பார்க்க ரசிகர்கள் கடந்த இரு சீசன்களாக காத்திருந்தும் முடியவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய கவலை தரும் விஷயமாக இருக்கிறது. ஆனாலும் தோனி களமிறங்காதவரை சிஎஸ்கேவுக்கு பலமாகவும், எதிரணிக்கு பலவீனமாகவும் இருக்கும்.
வேகப்பந்துவீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் மட்டுமே சர்வதேச அனுபவம் அதிகம் கொண்டவர். ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் பந்துவீச்சு எதிரணிகளுக்கு பெரிதாக தொந்தரவு கொடுக்காது என்பது கடந்த காலங்களில் தெரிந்தது.
டெத்ஓவர்களில் இருவரையும் தோனி நன்றாகப் பயன்படுத்துவாரே தவிர இருவரும் தேர்ந்த, திறமையான பந்துவீச்சாளர்கள் என கூற முடியாது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் டி20 போட்டிகளில் தீபக் சஹர் பந்துவீச்சு சராசரி 13.21 ஆகவும், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சு சராசரி 11.24 ஆகவும் இருக்கிறது.
சுழற்பந்துவீச்சில் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் பங்களிப்பு பெரிய அளவுக்கு வெற்றிக்கு கை கைடுக்கும். இந்த 3 பேரும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட பங்காற்றுவர். மற்ற வகையில் பவர் ப்ளேயிலும், டெத் ஓவர்களிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபியின் பலம்
ஆர்சிபி அணி ஏறக்குறைய 16 சீசன்களாக விளையாடியும் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாதது அந்த அணிக்கு மனரீதியாக சோர்வை அளிக்கும். ஆனாலும், அந்த அணி ஒவ்வொரு முறையும் வீரர்களை மாற்றிப் பயணித்தாலும் கோப்பையை வெல்லமுடியாமல் தவிக்கிறது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது. ஏற்கெனவே பேட்டிங்கில் டூபிளெசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது.
வேகப்பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி, சிராஜ், அல்சாரி ஜோஸப், பெர்குஷன், யாஷ் தயால், வைஷாக், ரஞ்சன் குமார் என 7 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில் 4 மட்டுமே நல்ல அனுபவம் கொண்டவர்கள்.
ஆர்சிபி அணி வலுவான வேகப் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து களமிறக்கினால், நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். குறிப்பாக டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்ட் அல்ஜாரி ஜோஸப், சிராஜ், பெர்குஷன், விஜயகுமார் என சரியான கலவையை உருவாக்க வேண்டும்.
நடுப்பகுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து, 3வது பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா இல்லாதது பெரிய பலவீனம்தான். இருப்பினும் கரன் ஷர்மா, மேக்ஸ்வெல், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மயங்க் தாக்கர், ஸ்வப்னில் சிங் உள்ளனர். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறது எனக் கூற இயலாது. ஏனென்றால், கரண் ஷர்மா, மேக்ஸ்வெல் தவிர்த்து மற்றவர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், ஐபிஎல் அனுபவமும் பெரிதாக இல்லாதவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்நாட்டைச் சேர்ந்த லாம்ரோர், ஆகாஷ் தீப், பிரபுதேசாய் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் மேக்ஸ்வெல், டாம் கரண், கேமரூன் கிரீன், வில் ஜேக்ஸ், என அனைவருமே வெளிநாட்டு வீரர்கள்.
ஒரு போட்டிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள்தான் சேர்க்க முடியும். இதில் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் 3 பேர் இடம் உறுதியாகும் நிலையில் ஒருவர் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருக்கும்.
நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் கேமரூன் கிரீன் தேவை கண்டிப்பாக வேண்டும். இது தவிர்த்து வேகப்பந்துவீச்சில் ஒரு போட்டியில் அல்ஜாரி ஜோஸப் அல்லது பெர்குஷன் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும். அதேபோல 3வது வேகப்பந்துவீச்சாளருக்கு யாஷ் தயால், அல்லது விஜயகுமாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன் இருவரையும் ப்ளேயிங் லெவனில் எடுத்தால் கேமரூன் கிரீனை கைவிட வேண்டும். கிரீன் அணிக்குள் வந்தால் அல்ஜாரி அல்லது பெர்குஷன் அமர வேண்டும் என்பதால் ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப கேப்டனுக்கு முடிவெடுக்க வேண்டும்.
ஆர்சிபி அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்கள் இருப்பது அதன் பெரிய பலமாகும். ஆடுகளத்துக்கு ஏற்ப தகுதியான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்.
டெத்ஓவர்களுக்கு அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன், விஜயகுமார், சிராஜ் என 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது தவிர டாம் கரண், டாப்ளி, வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன் என ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் சரியான வெற்றிக் கூட்டணியை அமைத்தால் ஆர்சிபியின் பயணம் சிறப்பாக அமையும்.

பட மூலாதாரம், Getty Images
ஃபார்முக்கு வருவாரா டி.கே.?
ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக விளையாடுவதில் கவனம் செலுத்தாமல் வர்ணனைப் பணியில் தினேஷ் கார்த்திக் ஈடுபட்டதால் அவரின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது.
கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம். அதேபோல கேப்டன் டூபிளசிஸும் பெரிதாக ஃபார்மில் இல்லை. அதேபோல விராட் கோலியும் ஜனவரியிலிருந்து கிரிக்கெட் விளையாடவில்லை.
இதுபோன்ற நட்சத்திர பேட்டர்களின் ஃபார்மின்றி இருந்து வருவது ஆர்சிபியின் கோப்பைக் கனவை தகர்த்துவிடும். இவர்கள் ஃபார்முக்கு வராவிட்டால், ஆர்சிபியின் கோப்பை கனவு இந்த முறையும் கனவாகவே இருந்துவிடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












