பிரதீப் ஷர்மா: இந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

பிரதீப் ஷர்மா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் ஷர்மா

மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை அதிகாரியும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான பிரதீப் ஷர்மாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ஆம் ஆண்டு ராம் நாராயண் குப்தா என்ற லக்கன் பையாவின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய பிரதீப் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது அரசியல் முயற்சிகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரதீப் ஷர்மா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை.

பட மூலாதாரம், FACEBOOK/PRADEEP SHARMA

யார் இந்த பிரதீப் ஷர்மா?

காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதீப் ஷர்மாவுக்கு அரசியல் வாய்ப்பு தேடி வந்தது. சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் நலசோபாரா தொகுதியில் போட்டியிட்டார்.

ஷர்மாவின் குடும்பம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தது. பிரதீப் ஷர்மாவின் தந்தை மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் குடியேறி, ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆரம்பக் கல்வி முதல் எம்.எஸ்சி வரை, துலேயில் கல்வி பயின்றார் ஷர்மா.

அதன்பிறகு, மகாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (எம்பிஎஸ்சி) தேர்வு செய்யப்பட்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.

அப்பணியில் சேர எது தன்னைத் தூண்டியது என்பதை அவர் ஒருமுறை விளக்கினார்.

“துலேயில் குடியிருந்தபோது, பக்கத்து வீட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். சிறுவயதில் அவரை அடிக்கடி பார்ப்போம், காவல்துறை சீருடை அணிந்து கம்பீரமாக பைக்கில் செல்வார். காவலர் பணியில் சேர அதுவும் ஒரு காரணம்,'' என்று கூறியிருந்தார் ஷர்மா.

பிரதீப் ஷர்மா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை.

பட மூலாதாரம், Getty Images

1983 பேட்சை சேர்ந்த 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள்'

1983ஆம் பேட்சை சேர்ந்த மாநில போலீஸ் சேவையின் அதிகாரிகள், மகாராஷ்டிராவின் மிக முக்கியமான காவல்துறை அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பிரஃபுல்லா போசலே, விஜய் சலாஸ்கர், ரவீந்திர ஆங்ரே, அஸ்லாம் மோமின் ஆகியோர் இந்த பேட்சைச் சேர்ந்த பிரபல அதிகாரிகள்.

இவர்கள் அனைவரும் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள்' என அழைக்கப்படுவர்கள். பிரதீப் ஷர்மாவும் இதே பேட்ச்சை சேர்ந்தவர் தான். இந்த குழு 1984இல் நாசிக் காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு பணியில் சேர்ந்தது.

பிரதீப் ஷர்மா முதலில் மும்பையில் உள்ள மாஹிம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, மும்பை புறநகர் காவல் நிலையங்களின் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் மூத்த காவல் ஆய்வாளர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.

அப்போது மற்றொரு காவல்துறை அதிகாரி விஜய் சலாஸ்கருடனான பிரதீப் ஷர்மாவின் சர்ச்சை ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்தது. 26/11 அன்று நடந்த மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு இறந்தார் விஜய் சலாஸ்கர்.

பிரதீப் ஷர்மா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சிவசேனா கட்சி சார்பில் நலசோபாரா தொகுதியில் போட்டியிட்டார் பிரதீப் ஷர்மா.

விஜய் சலாஸ்கருடனான சர்ச்சையின் பின்னணி

விஜய் சலாஸ்கருடனான சர்ச்சை குறித்து ஒருமுறை டிவி-9 மராத்தி செய்தி சேனலிடம் பேசிய பிரதீப் ஷர்மா, “விஜய் சலாஸ்கர் எனது சிறந்த நண்பர். 1983ஆம் ஆண்டு ஒரே குழுவில் பயிற்சி பெற்றோம். குடும்பப்பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு குழுக்கள் பிரிக்கப்படும். அவரது குடும்பப் பெயர் சலாஸ்கர், எனது குடும்பப் பெயர் ஷர்மா, ‘எஸ்’ (S) என்ற எழுத்து. எனவே நாங்கள் இருவரும் ஒரே குழுவில் இருந்தோம். மும்பை வந்த பிறகும் பல வருடங்கள் ஒன்றாக இருந்தோம். குற்றப்பிரிவில் ஒன்றாக வேலை செய்தோம். நாங்கள் ஒன்றாக சில பெரிய நடவடிக்கைகளை எடுத்தோம்," என்று அவர் கூறினார்.

"விஜய் சலாஸ்கருடன் ஒன்றாக வேலை செய்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மிகப்பெரிய தகவல் அமைப்பைக் கொண்ட அதிகாரியாக விஜய் சலாஸ்கர் இருந்தார். என்னை விட பத்து மடங்கு அதிகமான உளவாளிகள், தகவல் அளிப்போர் அவருடன் தொடர்பில் இருந்தனர்'' என்றார் சர்மா.

“எனக்கும் சலாஸ்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அப்படி ஏதும் இல்லை. தகவல்களைப் பெறுவது குறித்தே சில பிரச்னைகள் இருந்தன. அதற்கு மேல் எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

லக்கன் பைய்யா என்ற ராம் நாராயண் குப்தா கொலை வழக்கில் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் பிரதீப் ஷர்மா. அவருடன் மொத்தம் 13 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

நான்கு ஆண்டுகள் தானே மத்திய சிறையில் இருந்த பிரதீப் ஷர்மா 2013இல் விடுதலை செய்யப்பட்டார். இப்போது இந்த வழக்கில் பிரதீப் ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஷர்மா, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP VIA GETTY IMAGES

அம்பானியின் வழக்கு

மும்பையின் ஆண்டிலியாவில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வெடிகுண்டு வைத்த வழக்கில் தொடர்புடையவர் முன்ஷுக் ஹிரேன். இவர் கொல்லப்பட்ட வழக்கில் தான் பிரதீப் ஷர்மாவின் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் பிரதீப் ஷர்மாவை கைது செய்தது என்ஐஏ.

பிப்ரவரி 25, 2021 அன்று, ஆண்டிலியா பகுதியில் வெடிபொருட்களுடன் ஒரு எஸ்யூவி வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

காரின் உரிமையாளரும், தொழிலதிபருமான முன்ஷுக் ஹிரேனின் உடல், மார்ச் 5ஆம் தேதி தானே அருகே கண்டெடுக்கப்பட்டது. முன்ஷுக் ஹிரேன் கொலையில் காவல்துறை அதிகாரி சச்சின் வாஜேவுக்கு உதவியதாக பிரதீப் ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)