அமலாக்க துறை சோதனைக்குப் பிறகு ரூ.160 கோடி தேர்தல் பத்திரம் வாங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எல்லா தகவல்களையும் மார்ச் 21ஆம் தேதிக்குள் அளிக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யார் வாங்கிய பத்திரத்தை எந்த அரசியல் கட்சி பணமாக்கியது என்பதை அறிய உதவும் பிரத்யேக எண்களும் இந்த தகவல்களில் அடங்கும்.
பாரத ஸ்டேட் வங்கி இதுவரை வெளியிட்டுள்ள தரவுகள் இரண்டு விஷயங்களை மட்டுமே கூறுகின்றன.
முதலாவது, யார் எந்தத் தேதியில் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கினார்கள். இரண்டாவது எந்த அரசியல் கட்சி எந்தத் தேதியில் எத்தனை பத்திரங்களை பணமாக்கியது என்பது.
ஆனால் வாங்கியவரின் பத்திரம் எந்த அரசியல் கட்சிக்கு கிடைத்தது என்பது தெளிவாக இல்லை.
பிரத்யேக எண்களை பெற்ற பிறகு இதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
கேள்விகள் எழுப்பப்படுவது ஏன்?
பிரத்யேக எண் கிடைப்பதற்கு முன்பே SBI இன் முதல் தொகுப்பில் வெளியிடப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல விஷயங்கள் புலப்பட்டன.
தேர்தல் பத்திர திட்டத்தை நாட்டில் இதுவரை நடந்த மிகப் பெரிய ஊழல் என்று சொல்லும் அளவுக்கு இவை உள்ளன.
இதுவரை கிடைத்துள்ள தரவுகளை நாம் கவனமாகப் பார்த்தால், எந்த ஒரு ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) அல்லது வருமான வரித் துறையின் ரெய்டு நடந்துள்ளதோ, அதன் சில நாட்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது என்பதற்கான பல உதாரணங்கள் உள்ளன.
ஒரு நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீர் சோதனை நடத்தப்பட்டதும், அதன் பிறகு அந்த நிறுவனம் மீண்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிகழ்வுகளும் உள்ளன.
சில சந்தர்ப்பங்களில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களிலேயே குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒரு பெரிய அரசு திட்டத்தின் ஒப்பந்தத்தை பெற்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
”தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்கும் அரசு, உலகிலேயே மிகப்பெரிய ஊழலை செய்துள்ளதாக,” காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்
இதை ஒரு கிரிமினல் கேம் என்று கூறிய ராகுல் காந்தி, இந்த விளையாட்டில் ’ஒருபுறம் ஒப்பந்தம் கொடுத்தார், இன்னொரு பக்கம் கமிஷன் வாங்கினார்’, ’ஒரு பக்கம் ரெய்டு நடத்தினார், இன்னொரு பக்கம் நன்கொடை வாங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்க இயக்குனரகம், வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு கழகமும் வசூல் ஏஜெண்டுகளாக செயல்படுவதாக ராகுல் காந்தி கூறினார்.
அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிறகு பல கார்ப்பரேட் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்குவது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்று கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், மார்ச் 18 ஆம் தேதியன்று கூறினார்.
என்ன பேட்டர்ன்?

இந்த பகுப்பாய்வைப் பற்றி பேசுவதற்கு முன், இந்த வடிவங்களில் வெளிப்படும் விஷயங்கள் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உட்பட்டவை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
பத்திரம் வாங்கியவர் மற்றும் பத்திரத்தை அரசியல் கட்சிகள் பணமாக்குவதற்கு இடையே உள்ள தொடர்பு பிரத்யேக மூலம் வெளியாகும்போது இதில் பல விஷயங்கள் தெளிவாகிவிடும்.
எனவே சில நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளைப் பார்ப்போம்:
1. பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
• இந்த நிறுவனம் அக்டோபர் 2020 முதல் ஜனவரி 2024 வரை 1368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
• 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி லாட்டரி ஊழல் வழக்கில் இந்த நிறுவனத்தின் 409.92 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத் துறை (ED) பறிமுதல் செய்தது.
• 2022 ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
• 2023 ஏப்ரல் 11 ஆம் தேதி நிறுவனம் மீண்டும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2023 மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், ஃபியூச்சர் கேமிங் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் பிறரின் சென்னையில் உள்ள குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கோவையில் உள்ள வணிக வளாகங்களில் ED சோதனை நடத்தியது. சோதனையின் போது, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும்/அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டன.
• 2023 ஜூலை 6 ஆம் தேதி இந்த நிறுவனம் மீண்டும் 62 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
2. டோரண்ட் பவர் லிமிடெட்
• இந்த நிறுவனம் 2019 மே 7 முதல் 2024 ஜனவரி 10 ஆம் தேதி வரை 106.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
• PM-KUSUM திட்டத்தின் கீழ் 1,540 கோடி ரூபாய் மதிப்பிலான 306 மெகாவாட் சோலார் திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்திடம் இருந்து தான் பெற்றுள்ளதாக 2024 மார்ச் 7 ஆம் தேதியன்று நிறுவனம் தெரிவித்தது.
• 2024 ஜனவரி 9 ஆம் தேதி இந்த நிறுவனம் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2024 ஜனவரி 10 ஆம் தேதி நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
3. யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
• இந்த நிறுவனம் 2021 அக்டோபர் 4 முதல் 2023 அக்டோபர் 11 வரை 162 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
• 2020 டிசம்பர் 22 ஆம் தேதி வருமான வரித் துறை அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
• இந்த நிறுவனம் 2021 அக்டோபர் 4 முதல் தேர்தல் பத்திரங்களை வாங்கத் தொடங்கியது.
4. அரபிந்தோ ஃபார்மா
• இந்த நிறுவனம் 2021 ஏப்ரல் 3 முதல் 2023 நவம்பர் 8 வரை 51 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2022 நவம்பர் 10 ஆம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் பி சரத் சந்திர ரெட்டி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டார்.
• 2022 நவம்பர் 15 ஆம் தேதி நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 5 முதல் ஜூலை 2 வரை நிறுவனம் 19.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

5. ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ்
• 2023 டிசம்பர் 18 ஆம் தேதி கடப்பாவில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
• 2024 ஜனவரி 11 ஆம் தேதி 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை நிறுவனம் வாங்கியது.
6. கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்
• இந்த நிறுவனம் ஏப்ரல் 7, 2023 முதல் அக்டோபர் 10, 2023 வரை ரூ.25.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
• 2023 ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• ஜூலை 5 ஆம் தேதி இந்த நிறுவனம் மீண்டும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2023 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தது.
• 2023 அக்டோபர் 10 ஆம் தேதி இந்த நிறுவனம் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
7. மைக்ரோ லேப்ஸ்
• இந்த நிறுவனம் 2022 அக்டோபர் 10 முதல் 2023 அக்டோபர் 9 வரை 16 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
• 2022 ஜூலை 6 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
• 2022 அக்டோபர் 10 ஆம் தேதி நிறுவனம் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2022 நவம்பர் 15 ஆம் தேதி இந்த நிறுவனம் மீண்டும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
8. ஹீரோ மோட்டோகார்ப்
• இந்த நிறுவனத்தில் 2022 மார்ச் 23 மற்றும் 26 க்கு இடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
• இந்த நிறுவனம் 2022 அக்டோபர் 7 ஆம் தேதி 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

9. APCO இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட்
• இந்த நிறுவனம் 2020 ஜனவரி 15 முதல் 2023 அக்டோபர் 12 வரை 30 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
• 2022 ஜனவரி 10 ஆம் தேதியன்று நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• சில நாட்களுக்குப் பிறகு 2022 ஜனவரியில் இந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான வெர்சோவா-பாந்த்ரா கடல் இணைப்பைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது.
10. டாக்டர் ரெட்டி லேப்
• 2019 மே 8 முதல் 2024 ஜனவரி 4 வரை 80 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
• சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது வருமான வரித்துறை 2023 நவம்பர் 12 ஆம் தேதி சோதனை நடத்தியது.
• 2023 நவம்பர் 17 ஆம் தேதி இந்த நிறுவனம் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
• 2024 ஜனவரி 4 ஆம் தேதி இந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

முன்னாள் ஜேஎன்யு பேராசிரியரான அருண் குமார் பொருளாதார விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர். கறுப்புப் பணம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து "The Black Economy in India" என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
இந்த தரவுகளிலிருந்து வெளிவரும் பேட்டர்ன் பற்றிப்பேசிய அவர், ”இதில் ’குயிட் ப்ரோ க்வோ’ (ஏதாவது ஒன்றை பெறுவதற்காக ஒன்றை கொடுப்பது) என்ற கேள்வி எழுகிறது. நாட்டில் எல்லா வகையான சட்டவிரோத செயல்களும் நடப்பதை நாம் அறிவோம். குறிப்பாக ஆளும் கட்சிகள் வருமான வரித்துறை, அமலாக்க இயக்குனரகத்தை பயன்படுத்துகின்றன.
இந்த ஏஜென்சிகளை பயன்படுத்தி மக்களை வதைக்கிறார்கள். ஆனால் இது அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டது என்று தேர்தல் பத்திரங்களின் தரவுகள் காட்டுகின்றன. முன்பும் இது நடந்தது. ஆனால் இப்போது அதிகமாகிவிட்டது. ஆளும் கட்சி இந்த ஏஜென்சிகளை பயன்படுத்தி பணம் பறிக்கிறது. மேலும் இந்த ஏஜென்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பயன்படுகின்றன,"என்று குறிப்பிட்டார்.
”மாநிலங்களில் கூட ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்து பணம் வசூல் செய்கிறார்கள், ஆனால் அமலாக்க இயக்குனரகமும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கைகளில் உள்ளன," என்று பேராசிரியர் குமார் கூறினார்.
"மிகப்பெரிய திட்டங்கள் கூட மத்திய அரசின் கையில் தான் உள்ளது. அதனால்தான் பாஜக ஆட்சியில் இருப்பதால் அதை அதிக அளவில் தவறாக பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பத்திரங்களை வாங்கிய பிறகு திடீர் சோதனையின் அர்த்தம் என்ன?
தேர்தல் பத்திரங்களை வாங்கிய பிறகும் கூட நிறுவனங்கள் மீது ரெய்டுகள் நடந்திருப்பதை தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.
அரசு நிறுவனங்கள் பாரபட்சமின்றி செயல்பட்டன. தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களில் கூட சோதனைகளை நடத்தத் தயங்கவில்லை என்று அரசுக்கு ஆதரவாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
"யார் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் அதை அவர்கள் நியாயப்படுத்துவார்கள். பத்திரங்களை வாங்கிய பிறகும் ரெய்டு நடந்தால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த தொகையில் திருப்தி இல்லை, மேலும் தொகை வேண்டும் என்று கருதப்பட்டது என்றும் நாம் சொல்லமுடியும். யாராவது போதுமான பணம் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுத்து மேலும் பணம் பெறப்பட்டது. இரண்டு வகையான சாத்தியங்களும் இருப்பதால் எதையும் சொல்வது கடினம்." என்று பேராசிரியர் அருண்குமார் குறிப்பிட்டார்.
”யார் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்குகிறார்கள் என்பது தெரிந்தால் அவர்கள் மீது நெருக்குதல் கொடுப்பது எளிதாகிவிடும்,” என்றார் அவர்.
"ஒரு நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டத்தின் ஒப்பந்தத்தை பெறுகிறது என்றால் அதில் 8-10 சதவிகிதத்தை நெருக்குதல் செய்து வாங்கிவிடலாம். யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது அதிகார வர்க்கத்திற்குத் தெரியும். அழுத்தம் அளிக்க இந்த தகவலை பயன்படுத்த முடியும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
'உண்மை வெளிவர வேண்டும்'
அமலாக்க இயக்குனரகம் அல்லது வருமான வரி சோதனை எப்போது நடந்தது, தேர்தல் பத்திரங்கள் மூலம் எப்போது நன்கொடைகள் வழங்கப்பட்டன அல்லது நன்கொடை அளித்த பிறகு அரசு அமைப்புகளின் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் கிடைத்ததா என்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்க முடியும் என்று உத்தரபிரதேச முன்னாள் காவல்துறை இயக்குநர் விக்ரம் சிங் கூறுகிறார்.
"வருமான வரித்துறையில் தரவு உள்ளது. எனவே ஒருவர் திடீர் சோதனைக்குப் பிறகு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்களா அல்லது தேர்தல் பத்திரங்களை வாங்கிய பிறகு நடவடிக்கை நின்றதா, நடவடிக்கை நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் நன்கொடைகள் பெறப்பட்டனவா என்பதை மென்பொருள் மூலமாக ஏன் கண்டுபிடிக்க முடியாது? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,” என்று அவ்ர் குறிப்பிட்டார்.
இந்தக் கேள்விகளையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் கேட்கிறார்கள் என்கிறார் விக்ரம் சிங். ”தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது வெளிப்படைத் தன்மை பற்றி பேசப்பட்டது.. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், எந்த அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு தகவல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அதை கட்டாயம் வெளியிடவேண்டும். முக்கியமான விஷயங்களை மறைக்காமல், முழுத் தரவுகளையும் வெளியிட வேண்டும். முக்கிய விஷயங்களை மறைப்பதும், முக்கியமற்ற விஷயங்களைமட்டும் வெளியிடுவதும் நடக்கக்கூடாது,” என்று அவர் சொன்னார்.
போலி நிறுவனங்கள்( shell companies) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல்களும் வெளியிடப்பட வேண்டும் என்று விக்ரம் சிங் கூறினார். "உண்மையான நன்கொடையாளரை கண்டுபிடிக்க வேண்டும். கூட்டுச்சதியை விசாரிக்கும் போது அதன் அடிப்பகுதி வரை செல்வது முக்கியம். இந்த விவகாரத்தில் தகவல் மறைக்கப்பட்டால், அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை தேவையா?
இப்போது தேர்தல் பத்திர விவகாரத்தில் பெரிதாக எதுவும் வெளிவராது என்றும், பிரத்யேக எண் வந்த பிறகு தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தெரியவரும் என்கிறார் பேராசிரியர் குமார்.
"ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ’க்விட் ப்ரோ க்வோ’ தொடர்பாக சட்டவிரோதம் என்ற கேள்வி இருந்தால், அந்த சட்டவிரோதத்தை விசாரிக்க முடியும். ஆனால் அத்தகைய விசாரணையை அரசோ, எந்த அரசியல் கட்சியோ தொழில்துறை சமூகமோ விரும்பாது,” என்றார் அவர்.
”விசாரணை நடத்தினால் பல விஷயங்கள் வெளியாகும். ஆனால் அப்படி நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த விவகாரத்தை கடந்த காலத்தில் இருந்து ஆராய்வது தொழில்துறைக்கு நல்லதல்ல என்றும் வாதிடலாம். நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது கமிஷன் அமைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இது நடக்க வேண்டும். இது பகிரங்கமாக பொதுமக்கள் முன் வர வேண்டும்.”
"உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். ஏனென்றால் இன்று எல்லா அரசுகளின் நம்பகத்தன்மையின் மீதும் ஒரு பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது," என்று விக்ரம் சிங் குறிப்பிட்டார்.
"இந்தக் கேள்விகளுக்கெல்லாம் 15 நாட்களுக்குள் பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும். அரசும் இது குறித்து முழு விவர அறிக்கை வெளியிட வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








