நாடாளுமன்ற தேர்தல்: மோதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? - ஓர் அலசல்

- எழுதியவர், ஷதாப்
- பதவி, பிபிசி
தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசு தனது 2019 தேர்தல் அறிக்கையில் அரசு திட்டங்களுக்குக் குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்திருந்தது.
அவ்வாறு உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் 2024க்குள் நிறைவேற்றப்பட்டதா?
பிரதமர் மோதியின் ஐந்து திட்டங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தரவுகளை பிபிசி ஆராய்ந்தது. நாங்கள் கண்டறிந்தது உங்கள் பார்வைக்கு.
பிரதமமந்திரி- கிசான் சம்மான் நிதி (PM- Kisan)

வாக்குறுதி: 2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பின்னர் இது விரிவுபடுத்தப்படும்.
இந்தத் திட்டம் 2018-19இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் இரண்டு ஹெக்டேர் வரை பயிரிடக்கூடிய நிலம் வைத்திருக்கும் எல்லா சிறு மற்றும் குறு விவசாயிகளின் (SMF) குடும்பங்களுக்கு ரொக்கமாக (ஆண்டுக்கு ரூபாய் 6,000) வழங்க உறுதியளிக்கப்பட்டது.
வைத்திருக்கும் நிலத்தின் அளவு எவ்வளவாக இருந்தாலும் எல்லா விவசாயி குடும்பங்களுக்கும் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
திட்டத்தின்படி நிதி மூன்று தவணைகளில் விநியோகிக்கப்படுகிறது. இது நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இது 52 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை எட்டியுள்ளது.
இந்த நிதியை 2023-24 நிதியாண்டில் 8.5 கோடி பேர் பெற்றுள்ளனர். மொத்த பயனாளிகளின் 21% அதாவது 1.8 கோடி விவசாயிகளுக்கு உதவியளித்து உத்தர பிரதேசம் முன்னணியில் உள்ளது.
பிரதமமந்திரி- கிசான், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் (MoAFW) கீழ் உள்ள மிகப்பெரிய திட்டமாகும். இது நிதியாண்டு 2021-22 பட்ஜெட் மதிப்பீடுகளில், அமைச்சகத்தின் 49% ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதற்கான ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இத்திட்டத்திற்காக, 2018-19 நிதியாண்டின் பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு (2019-20) பட்ஜெட்டில் 75,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் சில சரிகட்டல்களுக்குப் பிறகு அந்த ஆண்டுக்கான இறுதி ஒதுக்கீடு 54,370 கோடியாக முடிந்தது. இது 28% குறைவாக இருந்தது.
எதிர்பார்க்கப்பட்ட தகுதிபெற்ற விவசாயிகளின் எண்ணிக்கைக்கும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது மற்றும் 2019 பிப்ரவரி-மார்ச் தேர்தலின் போது சில பணம் செலுத்தல்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் இந்தக் குறைப்பு ஏற்பட்டது.
ஜல் ஜீவன் மிஷன் (குழாய் மூலம் தண்ணீர்)

வாக்குறுதி: 2024ஆம் ஆண்டுக்குள் எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் இணைப்பு உறுதிசெய்யப்படும்.
கடந்த 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தை (NRDWP) புதுப்பித்து 2024க்குள் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் குழாய் இணைப்பை வழங்கும் நோக்கத்துடன் அதை ஜல் ஜீவன் மிஷனுடன் (JJM) இந்திய அரசு இணைத்தது.
இப்போது 19 கோடி குடும்பங்களில் சுமார் 73% அதாவது 14 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் உள்ளன. 16.80% குடும்பங்கள் மட்டுமே அத்தகைய இணைப்புகளைக் கொண்டிருந்த 2019ஆம் உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
மாநிலங்களில் மேற்கு வங்கம் பட்டியலில் கீழே உள்ளது. 41% குழாய் நீர் இணைப்புகளே அங்கு அளிக்கப்பட்டுள்ளன. அதை அடுத்து ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 50%க்கும் குறைவான நீர் இணைப்புகளே அளிக்கப்பட்டுள்ளன. கோவா, ஹரியாணா, தெலங்கானா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 100% குடும்பங்களுக்கு குழாய் இணைப்புகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் வரை, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் கூட்டாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு நிதியை உயர்த்தியது மட்டுமின்றி இதில் மாநில அரசுகளின் பங்களிப்பும் உயர்ந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் மொத்த நிதியில் 40% மாநிலங்களின் பங்களிப்பாக இருந்தது. தற்போது 2023-24 நிதியாண்டில் இது 44% ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு இல்லை. ஜேஜேஎம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 2 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2019-20இல் மிக அதிகமாக 3.2 கோடி இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள எல்லா குடும்பங்களுக்கும் 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள் இணைப்பை அளிக்க முடியுமா என்பதைப் பார்க்க இணைப்புகளின் வேகத்தை அளவிடுவதற்கு வருடாந்திர சதவிகித அதிகரிப்பைப் பார்த்தோம்.
இணைப்புகள் முந்தைய ஆண்டைவிட 2022-23இல் 15% (2 கோடியில் இருந்து 2.33 கோடி குடும்பங்கள்) அதிகரித்தது. ஆனால் 2023-24இல் இந்த விகிதம் குறைந்து 6% அதிகரிப்பு (2.48 கோடி குடும்பங்கள், கூடுதலாக 15 லட்சம் குடும்பங்கள்) மட்டுமே ஏற்பட்டது.
இந்த விகிதத்தைப் பார்க்கும்போது எல்லா குடும்பங்களுக்கும் இணைப்புகள் அளிக்கப்படாவிட்டாலும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 80%க்கும் அதிகமான குடும்பங்கள் இணைப்புகளைப் பெறும் என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளியுங்கள்

வாக்குறுதி: பாலின அடிப்படையில் பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, பெண் குழந்தைகளின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் மதிப்பைக் கட்டியெழுப்புதல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பை உறுதி செய்தல்
கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் ('பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள்') முன்முயற்சியானது பாலின பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதையும், மகளிர் அதிகாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
ஆரம்பத்தில் 100 கோடி ரூபாய் நிதியுடன் துவக்கப்பட்ட இந்தத் திட்டம் 2017-18ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 200 கோடியாக உயர்த்தப்பட்டது. இதில் அமைச்சகம் ஏறக்குறைய 84% நிதியைச் செலவிட்டது. கிட்டத்தட்ட 164 கோடி ரூபாய் ஊடகங்கள் மற்றும் விளம்பர பிரசாரங்களுக்காக செலவிடப்பட்டது.
அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த செலவீனங்களில் குறைவு இருந்தபோதிலும், 2018 மற்றும் 2022க்கு இடையில் அமைச்சகத்தின் செலவில் சுமார் 40%, ஊடகங்கள் மற்றும் விளம்பர பிரசாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வியிலும் இந்த வாக்குறுதி கவனம் செலுத்துகிறது. இதை மதிப்பிடுவதற்கு மாணவிகளின் மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) ஆய்வு செய்தோம். இது ஒரு நேர்மறையான போக்கை வெளிப்படுத்துகிறது. 2016-17ஆம் ஆண்டில், சிறுமிகளின் GER (23.8) சிறுவர்களைவிடக் (24.3) குறைவாக இருந்தது. இருப்பினும் 2020-21இல் இது 27.9 ஆக உயர்ந்து, 27.3 என்ற சிறுவர் விகிதத்தை விஞ்சியது.
அதே நேரத்தில், மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் 2018-19இல் 17.1 ஆக இருந்து 2020-21இல் 12.3 ஆகக் குறைந்துள்ளது. இது சிறுவர்களுக்கான விகிதத்தை விடக் குறைவு (13).
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னா (பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்)

வாக்குறுதி: எல்லா விவசாயிகளுக்கும் இடர் குறைப்பு மற்றும் காப்பீடு சலுகை
கடந்த 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இயற்கைப் பேரழிவுகள், பூச்சிகள் அல்லது நோய்களால் பயிர் இழப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி வழங்குகிறது. தன்னார்வமாக இருந்தாலும், செயல்படுத்தும் மாநிலங்களில் உள்ள மொத்த பயிர்ப் பகுதி (GCA) மற்றும் கடன் பெறாத விவசாயிகளில் 30%க்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
சமீபத்திய தரவுகளின்படி இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் செலுத்திய 30,800 கோடி ரூபாய் பிரீமியத்திற்கு எதிராக 1,50,589 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலாக 2018-19இல் 577 லட்சமாக இருந்த காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2021-22இல் 827.3 லட்சமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், 2021-22இல் காப்பீடு செய்யப்பட்ட நிலப்பரப்பு 525 லட்சம் ஹெக்டேரில் இருந்து 456 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. சில மாநிலங்கள் தங்கள் சொந்த பயிர் உதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தத் திட்டத்தில் இருந்து விலகியதே இந்த சரிவுக்கு முதன்மைக் காரணம்.
இன்னும் செலுத்தப்படாத, நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கையில் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான செலுத்தப்படாத கோரிக்கைகளில், ராஜஸ்தானில் 430 கோடி ரூபாய் மதிப்புள்ள கோரல்களும், மகாராஷ்டிராவில் 443 கோடி ரூபாய் மதிப்புள்ள கோரல்களும் நிலுவையில் உள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












