மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையைத் தகர்க்க முயலும் பாஜகவுக்கு இருக்கும் சவால்கள்

மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையைத் தகர்க்க முயலும் மோதி முன் இருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி செய்தியாளர், கொல்கத்தா

சந்தேஷ்காலி விவகாரம், ஊழல், விசாரணை, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள், வேலையில்லா திண்டாட்டம், கட்சி மாறும் தலைவர்கள், சிஏஏ சட்டம் என மேற்கு வங்கத்தில் அரசியல் மோதலுக்குப் பஞ்சமில்லை. மேற்கு வங்கத்தில் எந்தத் தொகுதியில் யார் நின்றாலும், இந்தத் தேர்தல் மோதிக்கும் மமதா பானர்ஜிக்குமானது. மேற்கு வங்கம் ‘தீதி’யின் (மூத்த சகோதரி) மாநிலம். எங்கு பார்த்தாலும் இந்த விஷயம்தான் தெரிகிறது.

மமதா பானர்ஜி 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி அரசுக்கு எதிராக 2011-ல் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். 2014 மக்களவைத் தேர்தலில் 42 இடங்களில் 34 இடங்களையும் பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் தனது இருப்பை நிலைநாட்டினார்.

ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கு மேலான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக சந்தேஷ்காலி, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும் நேரத்தில், 2019 மக்களவை தேர்தலைப் போல் இந்த முறையும் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுமா?

ஒரு கருத்துக்கணிப்பு பாஜக இம்முறை மேற்கு வங்கத்தில் 25 இடங்களிலும், மற்றொரு கருத்துக் கணிப்பு 19 இடங்களிலும் மற்றொன்று 20 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. பிபிசியிடம் பேசிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாஜக சிறப்பான இடங்களைப் பெற முடியும் என்று கூறினார்.

அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸ் 30-35 இடங்களைப் பெறும் என்று அக்கட்சியின் தலைவர் குணால் கோஷ் கூறினார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா, கட்சியின் இலக்கு 35 தொகுதிகள் என்று கூறியுள்ளார். ​​சமூக அறிவியல் ஆய்வு மையத்துடன் தொடர்புடைய அரசியல் ஆய்வாளர் மதுல் இஸ்லாம், "பாஜக தனது நிலையை வலுப்படுத்தும் என்று நினைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?
படக்குறிப்பு, குணால் கோஷ்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பிரிந்து 42 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருப்பது, பிரதமர் மோதியை தனியாளாகத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை விமர்சகர்களுக்குக் காட்டுவதுதான்.

இது நடந்தால், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் மமதா பானர்ஜியின் அந்தஸ்து உயரும். ஆனால், இது நடக்கவில்லை என்றால், மேலும் பல தலைவர்கள் கட்சியை விட்டுச் செல்வார்கள் என்ற பேச்சும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழும் அச்சமும் உள்ளது.

அரசு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், அனுப்ரதா மண்டல், பார்த்தா சாட்டர்ஜி போன்ற தலைவர்கள் சிறையில் உள்ளனர். இறுதியில் என்ன நடக்கும் என்று சொல்வது கடினம்.

ஆனால், மேற்கு வங்கத்தில் வெற்றி பெற பாஜக தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. மேற்கு வங்கத்தில் பிரதமர் மோதி, அமித் ஷா நடத்தும் கூட்டங்கள், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு செல்லுதல், பாஜகவின் விளம்பரம் உள்ளிட்டவற்றை பாஜக மேற்கொண்டு வருகிறது.

மேலும், வட இந்தியாவில் அரசியல் உச்சத்தை எட்டியுள்ள பாஜகவுக்கு மேற்கு வங்கம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். எனவே, பாஜக இங்கு சிறப்பாகச் செயல்படுவது முக்கியம். ஆனால், பாஜகவுக்கு இருக்கும் சவால்கள் குறைந்தபாடில்லை.

பாஜக மீண்டும் சிறப்பாக செயலாற்றுமா?

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?
படக்குறிப்பு, ஷமிக் பட்டாச்சார்யா

மார்ச் 15ஆம் தேதி மாலை, கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைவர் ஷமிக் பட்டாச்சார்யாவின் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உயரமான மர மேசையில் மைக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அறையின் உள்ளே, சுவரில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் டெல்லி பாஜகவின் செய்தியாளர் சந்திப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அர்ஜுன் சிங் மற்றும் திபியேந்து அதிகாரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். மாநிலத்தில் கட்சி மாறிய தலைவர்களின் பட்டியல் நீண்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், பாஜகவுடன் 40 ஆண்டுகளாக தொடர்புடைய ஷமிக், "அமித் ஷா, 35 தொகுதிகள் குறித்துப் பேசியுள்ளார். அதை உண்மையாக்கும் வகையில் செயல்படுகிறோம். மக்கள் திரிணாமுலை நிராகரித்துவிட்டனர்," என்றார்.

2019 மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக ஒருங்கிணைத்ததும் ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது.

ஆய்வாளர் மைதுல் இஸ்லாத் கூறுகையில், “2019இல் ஏராளமான இடதுசாரி வாக்குகள் பாஜகவை நோக்கிச் சென்றன. அதற்கு ஒரு முக்கியக் காரணம், 2018 பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். இதனால் மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.

பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மற்றொரு காரணம், இடதுசாரிக் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கூட்டணி இல்லாதது. இதனால், மக்களுக்கு குறைந்த வாய்ப்புகளே இருந்தன. மக்கள் பாஜகவை சிறந்த தேர்வாகக் கருதினர்,” என்றார்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

அவரைப் பொறுத்தவரை, இடதுசாரிக் கட்சிகள் இழந்த வாக்குகள் மீண்டும் அக்கட்சிகளுக்கே திரும்புவதாகக் கூறுகிறார். இதன் காரணமாக பாஜக அதிக இடங்களைப் பெற முடியும் எனத் தாம் நினைக்கவில்லை என்கிறார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஷிகா முகர்ஜி கூறுகையில், அதிகமான இடதுசாரி வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் என்று யாரும் நினைக்கவில்லை.

முன்னாள் இடதுசாரித் தலைவர்களின் புகைப்படங்கள் நிரம்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேநீர் அருந்திய முகமது சலீம், தங்கள் கட்சியிலிருந்து விலகிச் சென்ற வாக்காளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் திரும்பி வந்துவிட்டதாகவும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெற்ற 2023 பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள்தான் அதற்கு சான்று என்றும் கூறினார்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?
படக்குறிப்பு, ஆய்வாளர் மைதுல் இஸ்லாத்

கட்சியில் புதிய தலைமுறை தலைவர்கள் உருவானதே வாக்குகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும், அவர்களில் மீனாட்சி முகர்ஜியின் பங்கும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். சமீபத்தில், இடதுசாரி அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு நடத்திய ’இன்சாஃப் யாத்ரா’ மற்றும் கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற பெரிய பேரணி ஆகியவை இடதுசாரிகளின் ஆதரவு தளத்தை மீட்பதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில், இழந்த இடதுசாரி வாக்குகள் மீண்டும் திரும்பும் என்று பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி நம்பவில்லை. ஒரு நிகழ்வுக்குக் கூடும் கூட்டத்தை வாக்குகளுடன் இணைப்பது சரியல்ல என்கிறார் அவர்.

மறுபுறம், பஞ்சாயத்து, சட்டமன்றம், மக்களவை என அனைத்து அதிகார நிலைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துவது அவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்றும் சந்தேஷ்காலி போன்ற பிரச்னைகள் ஆளுங்கட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறுகிறார்.

அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையின்மை போன்றவையும் சிஏஏ சட்டமும் தங்களுக்கு பயனளிக்கும் என்றும் இதனால் தாங்கள் வெல்லும் இடங்களும் அதிகரிக்கும் என்றும் பாஜக ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ஏனெனில், சிஏஏ, 370வது பிரிவை நீக்குதல் அல்லது ராமர் கோவில் கட்டுதல் போன்றவை மூலம் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பாஜக சொல்லலாம்.

பாஜகவுக்கு சவால்

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?
படக்குறிப்பு, முகமது சலீம்

மேற்கு வங்கத்தில் பாஜகவின் சவால்களைப் பற்றி பேசுகையில், மமதா பானர்ஜிக்கு போட்டியாக பாஜகவுக்கு வலுவான அமைப்பு இல்லை, எந்தப் பெரிய தலைவரும் (மாஸ் லீடர்) இல்லை என்பதும், பாஜக தலைவர்கள் பலர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்பதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸின் வலுவான அடிமட்ட அமைப்புக்கு முன்னால் பாஜக வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்று மக்கள் கூறுகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் முகமாக சுவேந்து அதிகாரி இருக்கிறார். மமதா பானர்ஜிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சுவேந்து, 2020ஆம் ஆண்டில் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் பாஜகவில் இணைந்தார். இப்போது அவரது சகோதரர்கள் திபியேந்து அதிகாரி, அர்ஜுன் சிங் மற்றும் தபஸ் ராய் ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மைதுல் இஸ்லாம் கூறுகையில், "வங்காளத்தில் பாஜகவுக்கு வெகுஜனத் தலைவர் (அல்லது பெரிய தலைவர்) இல்லை. சுவேந்து அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்) திரிணாமுல் தலைவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார். ஆனால், வாக்காளர்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்றவர்கள். அவர்களுக்கு தனிப்பட்ட தாக்குதல்கள் பிடிக்காது என்பது அவருக்குத் தெரியாது," என்றார்.

சுவேந்து அதிகாரி திரிணாமுல் கட்சியை விட்டு வெளியேறியபோது அவரது ஆதரவு தளம் முழுமையாக பாஜகவுக்கு செல்லவில்லை என்பது அவரது வாதம்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

மைதுல் இஸ்லாம் கூறுகையில், "மேற்கு வங்கம், ஒடிசா, பிகார் ஆகிய மூன்று மாநிலங்களில் உழைக்கும் மக்கள் மிகுதியாக உள்ளனர். அவர்கள் உதவிக்காக மாநில அரசுகளைச் சார்ந்துள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் தலைவர்களைச் சார்ந்து பலர் இருப்பதால் இங்கு அரசியல் வன்முறை அதிகமாக உள்ளது," என்றார் அவர்.

ஷிகா முகர்ஜியின் கூற்றுப்படி, மேற்குவங்கத்தில் பாஜக எந்த இயக்கத்துடனும் தொடர்பு கொள்ளாததும் ராமர் கோவில் இயக்கம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது போன்றவை பாஜகவுக்கு சவால்கள் என்றும் அவர் கூறுகிறார்.

"பாஜகவுக்கு இந்த மாநிலம் பற்றிக்கூட தெரியாது. இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் இங்கு பலவீனமாக இருப்பதால் பாஜக எதிர்க்கட்சியில் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அர்ஜுன் சிங் மற்றும் திபியேந்து அதிகாரி பாஜகவில் சேர்வதை தொலைக்காட்சியில் பார்த்த சில நிமிடங்களுக்குப் பிறகு, பாஜக தலைவர் ஷமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "நீங்கள் சமூகத்தில் இருந்து மக்களை அழைத்துக்கொள்ள வேண்டும். நமது தேசியம், கலாசாரத்தில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால் நாங்கள் அவர்களை எடுத்துக்கொள்வோம். இதற்கு, பாஜக வெளியாட்களால் நடத்தப்படுகிறது என்று அர்த்தமல்ல," என்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது பாஜகவின் அமைப்பு பலவீனமாக உள்ளது குறித்து, ஷமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "கட்சியின் அமைப்பு குறித்து நாங்கள் எந்த பத்திரிகையாளரிடமும் சொல்ல மாட்டோம். ஆனால் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எங்களுக்கு ஒரு முகவர் இருப்பார்," என்றார்.

மாநிலத்தின் ஏறத்தாழ 30 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் கட்சியில் இருந்து விலகி இருப்பது பாஜகவுக்கு மற்றொரு சவால். சிஏஏ சட்டம் இந்த இடைவெளியைக் குறைக்கவில்லை என்றும் கூறலாம்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

கொல்கத்தா நகரத்திற்கு அப்பால், ஐடி மற்றும் பிற நிறுவனங்களால் நிரம்பிய நியூடவுனை தாண்டி, வாகனங்கள் நிறைந்த தெருக்கள், குறுகிய சாலைகள் மற்றும் பெரும் கூட்டம் வழியாக, நாங்கள் ஹதிபூர் கிராமத்தை அடைந்தோம். அங்கு ஒரு கல்வி நிறுவன கட்டடத்தில் முகமது கம்ருஸ்ஸாமானை சந்தித்தோம்.

கம்ருஸ்ஸாமான் அனைத்து வங்காள சிறுபான்மை இளைஞர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பில் மேற்கு வங்கத்தில் 40-50 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

அவரைப் பொறுத்தவரை, “பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொண்டுள்ளனர். முஸ்லிம்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிராக உள்ளனர். ஆனால், திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை," என்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்களிடம் பேசினால், கல்வி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய சவால்கள் என்கின்றனர். ஆனால் கம்ருஸ்ஸாமானின் கூற்றுப்படி, பிரதமர் மோதி அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைக்கும்போது, ​​மமதா பானர்ஜி திகாவில் கோவில் கட்டுகிறார்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

“அரசாங்கத்தின் வேலை மதத்திற்காகப் பாடுபடுவது அல்ல, அனைவரின் நலனுக்காகப் பாடுபடுவது. மோதி செல்லும் திசையில்தான் மமதாவும் செல்கிறார்," என்கிறார் அவர்.

முஸ்லிம்களிடையே உயர்கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளைத் தவிர, தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததால், மமதா பானர்ஜி மீதும் அவர் கோபத்தில் இருக்கிறார். இது, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் என அவர் தெரிவிக்கிறார். இந்த மும்முனைப் போட்டியால் திரிணாமுல் பலன் அடையும் என்ற கருத்தும் நிலவுகிறது.

"வாக்குப்பதிவுக்கு 2-4 நாட்களுக்கு முன்னதாக, ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவிப்போம். இதனால் பாஜகவை தோற்கடிக்க யாருக்கு வாக்களிப்பது என்பது தெரியும்," என்கிறார் அவர்.

ஷிகா முகர்ஜியின் கூற்றுப்படி, மமதா ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அல்லது இடதுசாரிக் கட்சிகளுடன் சமரசம் செய்ய விரும்பவில்லை என்கிறார்.

பாஜகவின் எதிர் தாக்குதல்

பாஜக நிலையான ஆட்சியைக் கொடுப்பதாக வாக்காளர்களுக்கு உறுதியளிக்கிறது. மேலும் மாநில அரசைத் தாக்குவதற்கு சந்தேஷ்காலி விவகாரம் ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது.

இதன்மூலம், பெண்கள் மீதான மரியாதையையும், திரிணாமுல் காங்கிரஸின் நற்பெயரையும் பாஜக பெரிய பிரச்னையாக்கியுள்ளது.

பாசிர்ஹாட் மக்களவைத் தொகுதியில் உள்ள சந்தேஷ்காலியின் பெண்கள், உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

கொல்கத்தாவில் இருந்து மூன்றரை மணிநேரப் பயணத்தில் சிறிய படகில் ஆற்றைக் கடந்து சந்தேஷ்காலி தீவை அடையலாம். வழியில், சாலையின் இருபுறமும், பசுமையான பயிர்களுக்குப் பதிலாக, மீன் வளர்ப்பு நடக்கும் நீர் நிரம்பிய பண்ணைகளைப் பார்க்கலாம்.

பாரதிய ஜனதா, இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் கொடிகளைத் தவிர, சந்தேஷ்காலியின் சாலையோரங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும் காவலர்கள் காணப்படுகின்றனர். இங்கு மிகுந்த வறுமையில் வாடும் பெண்களும் ஆண்களும் அச்ச மனநிலையில் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷாஜகான் ஷேக்கை தவிர, வேறு சிலர் போலீஸ் காவலில் உள்ளனர். இங்கே மக்கள் தங்கள் வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், எதிர்காலத்தில் சந்தேக நபர்கள் எனக் கூறப்படும் நபர்களை போலீசார் விடுவிப்பார்கள் என்ற அச்சமேயாகும். மமதா மோசமானவர் அல்ல, ஆனால் காவலில் வைக்கப்படுவோமோ அல்லது கைது செய்யப்படுவோமோ என்ற அச்சம் காரணமாக சிலர் போலீஸ் விசாரணைக்குப் பயப்படுகிறார்கள் என ஒருவர் தெரிவித்தார்.

மிகக் கவனமாகப் பேசிக் கொண்டிருந்த பெண்கள், திரிணாமுல் காங்கிரஸுக்குதான் வாக்களிப்போம் என்று கூறியபோது, அதைப் பெரிய உற்சாகத்துடன் சொல்லவில்லை என்று தோன்றியது. இதற்குக் காரணம் ஏதோ அழுத்தமா, அல்லது அவர்கள் ஏதேனும் விஷயங்களை மறைத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. திரிணாமுல் காங்கிரஸை போன்ற தொண்டர்களும் அமைப்புகளும் பாஜகவிடம் இல்லை என்று ஒருவர் கூறினார்.

ஷாஜகான் வீட்டின் அருகே உள்ள சாலையோரக் கடைக்கு வெளியே நின்றிருந்த சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் பொய் என்றும் ஊடகங்கள் விற்கப்பட்டு விட்டதாகவும் பாஜக இதில் அரசியல் செய்வதாகவும் கூறினர். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஷாஜகான் பஜார், துணிகள், மீன்கள் போன்ற சிறிய கடைகளால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த முகமது உஸ்மான் அன்சாரி, இந்த குற்றச்சாட்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் வாக்குகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

மற்றொருவர், "ஷாஜகானின் அரசியல் தொடர்புகளால் மக்கள் அவர் குறித்துப் பயப்படுகிறார்கள். பலர் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பிரச்னை பாஜகவுக்கு ஒரு சூழலை உருவாக்கியுள்ளது," என்று கூறினார்.

ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேஷ்காலி வழக்கு முடிவடைந்துவிட்டதாகவும், அது தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் மைதுல் இஸ்லாம் நம்புகிறார். இருப்பினும் அவரைப் பொறுத்தவரை கைது தாமதமாக நிகழ்ந்ததாகவும் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷின் கூற்றுப்படி, அரசாங்கம் கைது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார். உன்னாவ், ஹத்ராஸ், மணிப்பூர் போன்ற பாலியல் சம்பவங்கள் குறித்து அவர் பாஜகவுக்கு நினைவூட்டினார்.

திரிணாமுல் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் பாஜக

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக ஊழல் ஒரு பிரச்னையாக மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பி.டி.எஸ் ஊழல், மாடு கடத்தல் ஊழல், ஆசிரியர் நியமன ஊழல், அமைச்சர்கள், அதிகாரிகள் கைது போன்றவை அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதித்துள்ளன. ஷிகா முகர்ஜியும் ஊழல் விவகாரம் திரிணாமுலுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதுகிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறும்போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், "ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் உள்ளது, ஆனால் அரசாங்கத்திற்குள் ஊழல் குறைவாக உள்ளது. ஆனால் இங்கே முழு அரசாங்கமும் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது" என்றார். இதை பாஜகவும் பிரச்னையாக்கியுள்ளது.

கொல்கத்தா பிரஸ் கிளப் அருகே உள்ள சந்திப்பில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகிலிருந்த நடைபாதையில், 31 வயதான சங்கீதா நாக் அமர்ந்திருப்பதைக் கண்டேன். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிக்கு எதிராக இவரைப் போன்ற டஜன் கணக்கானவர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில், அவர் அரசு பதவிகளுக்கு தேர்வு எழுதியபோது, ​​​​அவருக்கு வயது 23. தனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பியதாக அவர் கூறுகிறார். ஆனால் இதுதொடர்பான ஊழல் விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

முதலில் இந்தப் போராட்டங்கள் 2019இல் உண்ணாவிரதப் போராட்டத்துடன் தொடங்கி, இரண்டாவது கட்டமாக சால்ட் லேக் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்தப் போராட்டங்கள் தற்போது 16-17 மாணவர்கள் முன்னிலையில் காந்தி சிலையருகே நடைபெற்றது.

இதனால் ஏமாற்றம் அடைந்த சங்கீதா, பல மாதங்களாகப் போராட்டம் நடத்தியும் மாணவர்களின் பேச்சை யாரும் கேட்பதில்லை என்றும், மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், இதனால் அரசு மீது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறுகிறார். அருகில் அமர்ந்திருந்த 37 வயதான ஸ்வரூப் பிஸ்வாஸுக்கு இந்த வயதில் என்ன செய்வது என்று புரியவில்லை.

சிஏஏ சட்டம்

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?

சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்ததற்கான நேரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அச்சட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்று பாஜக கூறுகிறது. இது மக்களவை தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வி.

அகில இந்திய வங்க சிறுபான்மை இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த முகமது கம்ருஸ்ஸாமான் சிஏஏ-ஐ வரவேற்றார். இதனால், ஓரிரு இடங்களில் தாக்கம் இருக்கும் என்றார். குடியுரிமை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து மட்டுவா சமூகம் உற்சாகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிய, கொல்கத்தாவில் இருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ள வங்கதேசத்தை ஒட்டிய கிராமமான தாக்கூர்நகர் சென்றடைந்தோம்.

இதே கிராமத்திற்குத்தான் வங்கதேசத்தில் இருந்து மட்டுவா சமூகத்தினர் தங்களின் பாதுகாப்புக்குப் பயந்து பல தசாப்தங்களாக வருகின்றனர். 1971 போரின்போது, ​​இந்த இடம் அகதிகளால் நிறைந்திருந்தது. இன்று அருகில் ஒரு ரயில் பாதை உள்ளது, அங்கு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. குழந்தைகள் திறந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கடந்த 1943ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய மட்டுவா மகாசங்கின் தலைவரான மம்தா தாக்கூரையும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரையும் அங்கு சந்தித்தோம். இந்தியாவில் மட்டுவா சமூகத்தைச் சேர்ந்த மூன்று முதல் நான்கு கோடி மக்கள் வசிக்கும் அதே வேளையில், மேற்கு வங்கத்தில் அவர்களின் மக்கள் தொகை இரண்டிலிருந்து இரண்டரை கோடி என்று அவர்கள் கூறினர்.

அவர்களது செல்வாக்கு 65 சட்டமன்றத் தொகுதிகளிலும், பங்கான், ரனாகாட், பர்தமான், மால்டா வடக்கு, வடக்கு தினாஜ்பூர் போன்ற மக்களவைத் தொகுதிகளிலும் உள்ளது. அகதிகள் முகாம்களில் வாழும் வலியைப் பார்த்த மமதா தாக்கூர் கூறுகையில், 99 சதவீத மக்களிடம் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக்கூடிய ஆவணங்கள் இல்லை.

மேற்குவங்கம்: மமதா பானர்ஜியின் கோட்டையை தகர்ப்பாரா மோதி?
படக்குறிப்பு, மம்தா தாக்கூர்

இச்சட்டத்தை எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இச்சட்டத்தைப் பற்றியோ, ஆவணங்கள் பற்றியோ தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் பலர் கூறினர்.

நாங்கள் சந்தித்த அனைவரும் திரிணாமுல் காங்கிரஸுக்குத்தான் வாக்களிக்கிறோம் என்று சொன்னாலும், சட்டத்தின் பலனை பாஜக பெறலாம் என்று மற்றொருவர் கூறினார்.

பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் தவிர, எல்லை தாண்டும்போது தந்தைக்குக் கொடுத்த பார்டர் சீட்டும் தன்னிடம் இருப்பதாகவும், சட்டம் அமலுக்கு வந்த பிறகு, தற்போது அந்த சீட்டை தேடி வருவதாகவும் கட்டுமானப் பொறியாளர் ஹிமாத்ரி மண்டல் தெரிவித்தார்.

'இந்தியா' கூட்டணி என்ன செய்யும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, மமதா பானர்ஜி அரசாங்கம் பாஜகவின் சவாலைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை வலியுறுத்துகிறது.

லட்சுமி பந்தர் திட்டம் மற்றும் ஸ்வஸ்த்ய சதி போன்ற மாநில திட்டங்கள் இதில் அடங்கும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு உதவும் லட்சுமி பந்தர் திட்டத்தை அரசு அதிகரித்துள்ளது. லட்சுமி பந்தர் திட்டத்தின் கீழ், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு மாதம் ரூ.1,200 மற்றும் பொதுப் பிரிவினருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

ஸ்வஸ்த்ய சதி திட்டத்தின் நோக்கம், சிகிச்சைக்கான காப்பீடு மூலம் மக்களுக்கு உதவி வழங்குவது. மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மைதுல் இஸ்லாம் கூறுகையில், "மத்திய அரசு எங்களுக்கு அநீதி இழைக்கிறது என்பது திரிணாமுல் காங்கிரசின் பிரச்னை. வங்காளத்தில் 1905 முதல் அநீதி இழைக்கப்பட்டது. வங்காளம் உடைந்தது, எங்கள் தலைவர்கள் எழ அனுமதிக்கப்படவில்லை, சுபாஷ் போஸுக்கு தவறு இழைக்கப்பட்டது. தலைநகர் இங்கிருந்து போய்விட்டது, மீண்டும் கூட்டாட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. மாநிலங்களுக்கு பணம் கிடைக்கவில்லை. ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி நிலுவையில் உள்ளது. மேலும் வெளியிலிருந்து வரும் தலைவர்களால் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்ய முடியாது," என்றார்.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில் பாஜகவை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது குறித்துப் பேசலாம் என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர். அதற்குத் தேவை எழுமா, எழாதா என்பது ஜூன் 4ஆம் தேதிதான் தெரியும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)