இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுன்டரில் கொலை - என்ன நடந்தது? - பிபிசி கள ஆய்வு

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?
படக்குறிப்பு, சஜித் மற்றும் ஜாவேத்தின் தாய் நஸ்னீன்
    • எழுதியவர், ஆனந்த் ஜனானே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேச மாநிலம் படாயூனில் இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், சஜித் மற்றும் ஜாவேத் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பிபிசி குழு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருதரப்பு குடும்பத்தினரிடமும் பேசி அவர்களின் தரப்பை அறிந்துகொள்ள முயன்றது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர்.

கொலைக்கான காரணத்தை தெளிவுபடுத்த ஜாவேத்-ஐ விரைவில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?
படக்குறிப்பு, கொல்லப்பட்ட குழந்தைகளின் தந்தை வினோத் குமார்

பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்திற்கு பாதுகாப்புக் கோரி படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை வினோத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால், அல்லது எங்கள் குழந்தைகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என தெரியவில்லை என்றால், நாங்கள் தற்கொலை தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், யாரோ ஒருவர் வந்து எங்கள் குழந்தைகளை கொல்ல முடியும் என்றால், அவர்களால் எங்களையும் கொல்ல முடியும்."

“எங்கள் வீட்டுக்குள் நுழைந்து குழந்தைகளைக் கொன்றிருக்கின்றன. இதகுப் பின்னால் ஏதோ சதி இருக்கும்.. எனக்கும் கொலையாளிக்கும் எந்த விரோதமும் இல்லை.. எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவருக்கு வணக்கம் சொல்வேன்.."

"இந்த விவகாரத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைப் பிடிக்க வேண்டும்."

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?
படக்குறிப்பு, படாயூனில் கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தையான வினோத் குமார் மற்றும் 'என்கவுன்டரில்' கொல்லப்பட்ட சஜித்தின் தாயார் நஸ்னீன்.

குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் என்ன சொல்கிறார்?

குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் நஸ்னீனிடமும் பிபிசி பேசியது.

சஜித் மற்றும் ஜாவேத்தின் தாய் நஸ்னீன் கூறுகையில், தனது மகன்கள் அப்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றனர்.

சஜித்தின் வயது 28 என்றும் ஜாவேத்தின் வயது 24 என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை சஜித்தின் வயது 22 என்று கூறப்படுகிறது.

"சஜித்தை தேடி போலீசார் வீட்டிற்கு வந்தபோது, ​​​​இது எங்களுக்குத் தெரியவந்தது. அவர்கள், "குழந்தைகளை சஜித் கொன்றுவிட்டார், இப்போது நீங்கள் காலையில் சவச் சீலையை ஏற்பாடு செய்யுங்கள். ஏனெனில் சஜித்தும் கொல்லப்படுவார்" என்று கூறியதாக தெரிவிக்கிறார். பின்னர், சஜித் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், சஜித் தனது மனைவியின் பிரசவத்திற்காக ஐந்தாயிரம் ரூபாய் எடுக்க வினோத் குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்து நஸ்னீன் கூறுகையில், "இது தவறான செய்தி. அவர் கர்ப்பமாக இல்லை. பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அவர்கள் எப்போதும் காலையில் சென்றுவிட்டு மாலையில் திரும்புவர். சஜித் வெளியே சென்றிருந்தார். ஜாவேத் வீட்டில் தான் இருந்தார். ஜாவேத் இந்த விவகாரத்தில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்" என்றார்.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?
படக்குறிப்பு, சம்பவ இடத்தில் போலீசார்

இதுவரை தெரியவந்தது என்ன?

இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சில கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதையடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உள்ளூர் நிர்வாகம் கூடுதல் பாதுகாப்புப் படையினரை அப்பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், குற்றம் சாட்டப்பட்ட சஜித் மற்றும் அவரது சகோதரர் ஜாவேத் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படும் என்கவுன்டர் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் மாறிமாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, உயிர்தப்பிய சிறுவன் ஊடகத்திடம் பேசுகையில்

உயிர்தப்பிய மற்றொரு குழந்தை

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரின் அடிப்படையில் பிடிஐ செய்தி முகமை புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த கொலை வழக்கில் இறந்த குழந்தைகள் முறையே எட்டு மற்றும் 12 வயதுடைய ஹனி மற்றும் ஆயுஷ்.

அதே சமயம், இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த குழந்தையின் வயது பத்து என கூறப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், "சலூன் உரிமையாளர் அங்கு வந்து என் தம்பியையும் அண்ணனையும் மாடிக்கு அழைத்துச் சென்றார். எதற்காக அவர்களை கொன்றனர் என தெரியவில்லை. பிறகு என்னையும் அடிக்க ஆரம்பித்தார்கள். நான் தப்பித்து வந்துவிட்டேன்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை வினோத்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

அதில், "குற்றம் சாட்டப்பட்ட சஜித் தனது மனைவி பிரசவத்திற்காக எனது மனைவி சங்கீதாவிடம் 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பணத்தை எடுக்க எனது மனைவி உள்ளே சென்றபோது, ​​சஜித் மொட்டை மாடிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து ஜாவேதும் வந்து சேர்ந்தார். சஜித், என் மகன்கள் ஆயுஷ் மற்றும் ஹனியை மொட்டை மாடிக்கு அழைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"என் மனைவி பணத்துடன் வெளியே வந்தபோது, ​​சஜித் மற்றும் ஜாவேத் ஆகியோர் கத்தியுடன் இறங்குவதைக் கண்டார். என் மனைவியைப் பார்த்து, 'நான் இன்று என் வேலையைச் செய்துவிட்டேன்' என்று கூறினார். அதன் பிறகு அவர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓட முயன்றார்."

தண்ணீர் எடுக்கச் சென்ற குழந்தை யுவராஜையும் தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சம்பவத்தின் போது குழந்தையின் பாட்டியும் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் மற்றும் இரண்டாவது குற்றவாளி ஜாவேத் இருக்கும் இடம் குறித்து போலீசார் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், சஜித்தின் தந்தை மற்றும் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சம்பவ இடத்தில் போலீசார்

கொலை எப்படி நடந்தது?

படாயூன் எஸ்எஸ்பி அலோக் பிரியதர்ஷி, ஏ.என்.ஐ ஊடக முகமையிடம் பேசும்போது, ​​இந்த கொலை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பிரியதர்ஷி கூறும்போது, ​​"சஜித் என்பவர் இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். மார்ச் 19 இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் நேராக மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தையும் அவர்கள் கொன்றனர்" என தெரிவித்தார்.

"அவர்களை அக்கம்பக்கத்தினர் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்."

இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சஜித் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக போலீசாரும் தகவல் அளித்துள்ளனர்.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அலோக் பிரியதர்ஷி

என்கவுன்டர் எப்படி நடந்தது?

அலோக் பிரியதர்ஷி கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டார் என்பது தெரிந்ததும், அவரைத் தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டன. சிறிது நேரத்தில், ஷேகுபூர் காட்டில் ரத்தக் கறை படிந்த உடையில் ஒருவர் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் முற்றுகையிட்டனர். போலீசாரை நோக்கி சஜித் சுட்டார். பதிலுக்கு போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்தார்."

எதிர்க்கட்சி விமர்சனம்

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து அரசியல் கட்சிகள் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல் சிவ்பால் யாதவ், ராம் கோபால் யாதவ் வரை இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில், "இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போலீசார் முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்" என தெரிவித்தார்.

அதே நேரத்தில், படாயூன் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஷிவ்பால் யாதவ், 'இது மிகவும் வருத்தமான சம்பவம். இந்த அரசின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது" என்றார்.

இதனுடன், சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், பாஜக இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம்: இரு குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் என்கவுண்ட்டரில் கொலை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அகிலேஷ் யாதவ்

தேர்தல் நேரத்தில் பாஜகவினர் எப்போதும் வன்முறையை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் ராய், "மாநிலம் முழுவதும் காட்டாட்சிதான் நிலவுகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

"அமைச்சர் வீட்டுக்குள் கொலை நடக்கிறது. அவர் மோகன்லால் கஞ்ச் எம்.பி., வீட்டில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கும் மோகன்லால் கஞ்ச்சில் அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர், விவசாயிகளை காரை ஏற்றி கொன்றார்" என தெரிவித்தார்.

மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கிரிராஜ் சிங், இந்த விவகாரத்தில் யோகி அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

"யோகியின் உத்தர பிரதேசத்தில், இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, சட்டத்தைக் கையில் எடுக்க முயன்ற எவரும் தப்பியதில்லை" என்று அவர் கூறினார்.

பாஜக தலைவர் சித்தார்த் நாத் கூறுகையில், "இது துரதிருஷ்டவசமானது. சமாஜ்வாதி கட்சி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும், இதில் அரசியல் செய்யக்கூடாது. வாக்கு வங்கி இருப்பதால் அவர்களும் வகுப்புவாத அரசியலை செய்கிறார்கள்" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)