ஜொமேட்டோ: சைவ உணவு டெலிவரிக்கு பச்சை சீருடை - 11 மணி நேரத்தில் அறிவிப்பு வாபஸ் ஏன்?

ஜொமேட்டோ

பட மூலாதாரம், DEEPIGOYAL

படக்குறிப்பு, ஜொமேட்டோ நிறுவனத்தின் புதிய சுத்த சைவ டெலிவரி திட்டம்

சைவ உணவு விநியோகத்திற்காக ஜொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்த புதிய திட்டத்தில் சில மாற்றங்களை அந்நிறுவனத்தின் சிஇஓ தீபேந்திர கோயல் அறிவித்திருக்கிறார் .

உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ சமீபத்தில் தனது சைவ உணவு வாடிக்கையாளர்களுக்காக சுத்த சைவம் (pure veg mode) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

முதலில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்ய தனியாக ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள். இவர்கள் பச்சை நிற உடையும், டெலிவரி பைகளும் கொண்டு உணவுகளை டெலிவரி செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் திட்டம் அறிவிக்கப்பட்ட 11 மணி நேரத்தில் உடைமாற்றம் குறித்த முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது ஜொமேட்டோ நிறுவனம்.

இதுகுறித்து பேசியுள்ள அந்த நிறுவனத்தின் சிஇஓ தீபேந்திர கோயல், இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார். அதே சமயம் அவரே அந்த திட்டத்தின் ஒரு பகுதியை திரும்ப பெற்றுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், DEEPIGOYAL

படக்குறிப்பு, தீபேந்திர கோயல், “சைவ உணவு டெலிவரி செய்ய தனி ஊழியர்களை பயன்படுத்த போவதாகவும், அதே சமயம் அவர்களுக்கு புதிய பச்சை சீருடை என்ற முடிவை கைவிடுவதாகவும்” தெரிவித்துள்ளார்.

பச்சை சீருடை திட்டத்தால் என்ன ஆபத்து? நிறுவனம் பின்வாங்கியது ஏன்?

முடிவை திரும்பப் பெற்றது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள தீபேந்திர கோயல், “சைவ உணவு டெலிவரி செய்ய தனி ஊழியர்களை பயன்படுத்த போவதாகவும், அதே சமயம் அவர்களுக்கு புதிய பச்சை சீருடை என்ற முடிவை கைவிடுவதாகவும்” தெரிவித்துள்ளார். எனவே அவர்களும் வழக்கமான சிவப்பு நிற சீருடையையே அணிவார்கள்.

மேலும், “ சைவ உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் எந்த வேறுபாடும் காட்டப்படாது. ஆனால், வாடிக்கையாளர்கள் மொபைல் செயலி வழியாக சைவ உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களால்தான் தங்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படுகிறது என்பதை ட்ராக் செய்ய முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது ஊழியர்களின் பாதுகாப்புக்கே ஜொமேட்டோ நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக கூறிய அவர், “ இந்த முடிவின் மூலம் சிவப்பு நிற சீருடை அணிந்து செல்லும் எங்களது ஊழியர்கள் அசைவம் சார்ந்தவர்கள் என்ற தோற்றம் ஏற்படாமல் உறுதி செய்ய முடியும். அதே போல் குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் குடியிருப்பு நல சங்கங்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படாமல் இருக்கவும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

“இது வாடகைக்கு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், DEEPIGOYAL

படக்குறிப்பு, “கடந்த முறை வாடிக்கையாளர் ஒருவர் ஜொமேட்டோ நிறுவனத்திடம் குறிப்பிட்ட மதம் சார்ந்த ஊழியரை டெலிவரி செய்ய அனுப்ப வேண்டும் என கேட்டபோது, உணவிற்கு மதமில்லை என்று கூறினார் தீபேந்திர கோயல்"

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த செயலிகள்-அடிப்படையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கான அமைப்பின் (IFAT) தலைவர் ஷேக் சலாவுதீன் கூறியதாவது,

“கடந்த முறை வாடிக்கையாளர் ஒருவர் ஜொமேட்டோ நிறுவனத்திடம் குறிப்பிட்ட மதம் சார்ந்த ஊழியரை டெலிவரி செய்ய அனுப்ப வேண்டும் என கேட்டபோது, உணவிற்கு மதமில்லை என்று கூறினார் தீபேந்திர கோயல். ஆனால், இப்போது அவரே அந்த சிந்தனையில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. தங்களது டெலிவரி பார்ட்னர்களை அவரே சாதி, மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் பிரிக்கிறாரா என்று நான் நேரடியாகவே கேட்க விரும்புகிறேன்”

கடந்த காலங்களில் கூட தனது விளம்பரங்களுக்காக ஜொமேட்டோ நிறுவனம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அப்படி கடந்த ஆண்டு ஒரு விளம்பரத்திற்காக மன்னிப்பும் கேட்டது அந்நிறுவனம்.

அந்த விளம்பரத்தில், லகான் திரைப்படத்தின் தலித் கதாபாத்திரமான காச்ராவை மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பையில் இருந்து உருவாக்கப்பட்டதாக காட்டியிருந்தது ஜொமேட்டோ நிறுவனம். இதற்காக பட்டியலின சமுக மக்களுக்கான தேசிய ஆணையம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், DEEPIGOYAL

படக்குறிப்பு, திட்டம் அறிவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சம்பவத்தின் முழு பின்னணி என்ன?

கடந்த செவ்வாய்க்கிழமை ஜொமேட்டோநிறுவனம் புதிய "pure veg mode" திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தார் தீபேந்திர கோயல். அதன்படி, சைவ உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெறும் சைவ உணவகங்கள் மட்டுமே செயலி வழியாக காட்டப்படும். அசைவம் சமைக்கும் உணவகங்கள் காட்டப்படாது.

“எங்களது சுத்த சைவம் டெலிவரி ஊழியர்கள் சைவ உணவகங்களில் இருந்து இந்த உணவுகளை பெற்று வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வார்கள். அதற்கென்று பிரேத்யேகமான பச்சை கலர் பெட்டிகளும் வழங்கப்படும். இதன் மூலம் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் ஒரே டெலிவரி பெட்டிகளின் வழியாக டெலிவரி செய்யப்படுவது தடுக்கப்படும்” என்று அவரை தெரிவித்திருந்தார்.

இதற்கு பலத்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிய தீபேந்திர கோயலுக்கு ஏமாற்றமே மிச்சம். காரணம் திட்டம் அறிவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சைவம் உண்பவர்களை சுத்தம் என்று அடையாளப்படுத்துவதன் மூலம் ஜொமேட்டோ நிறுவனம் பாகுபாட்டை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதன் சுத்த சைவம் என்ற பதம் மற்றும் அதற்கான பிரத்யேக சீருடை ஆகியவற்றிற்காக கடுமையான எதிர்ப்பை சந்தித்தது

சமூக வலைத்தளங்களில் விவாதம்

ஜொமேட்டோ இந்த சுத்த சைவ திட்டத்தை அறிமுகப்படுத்தி, பின்னால் சீருடை விஷயத்தை திரும்ப பெற்றுள்ள போதிலும், சமூக வலைத்தளங்களில் பலரும் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதன் சுத்த சைவம் என்ற பதம் மற்றும் அதற்கான பிரத்யேக சீருடை ஆகியவற்றிற்காக கடுமையான எதிர்ப்பை சந்தித்தது அந்நிறுவனம்.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, “சைவத்தின் பெயரை சொல்லி பாகுபாடு காட்டுவதை நிறுத்துங்கள்"

இதனால் கோபமடைந்த KuniRashmilata என்ற ட்விட்டர் பயனர், “சைவத்தின் பெயரை சொல்லி பாகுபாடு காட்டுவதை நிறுத்துங்கள். ஏற்கனவே இதன் பெயரால் நிறைய பார்த்துவிட்டோம். நான் சுத்த அசைவம். சைவ மேலாதிக்கத்தை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, "சைவ உணவு சாப்பிடுபவர்கள் எனும் போர்வையில் இருப்பவர்கள் இனி திருட்டுத்தனமாக அசைவ உணவு சாப்பிட முடியாது"

Bensakumar என்ற ட்விட்டர் பயனர் “சைவ உணவு சாப்பிடுபவர்கள் எனும் போர்வையில் இருப்பவர்கள் இனி திருட்டுத்தனமாக அசைவ உணவு சாப்பிட முடியாது. அவர்கள் அசைவ உணவு சாப்பிட்டால் ஊருக்கே தெரிந்து விடும். பச்சை உடைக்காரர்கள் தவிர வேறு யார் வந்தாலும் அவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதாக தான் அர்த்தம் ஆகும். இது நிச்சயம் தோல்வி அடையும். பச்சை ஆடை உடுத்தும் ஆட்களுக்கு தொடர்ச்சியாக ஆர்டர்கள் கிடைக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

ஜொமேட்டோ

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, ஜொமேட்டோ நிறுவனத்தை ஆதரித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பயனர்.

மேலும் Akash Shah என்ற பயனர் ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த திட்டத்தை ஆதரித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “சுத்த சைவம் என்பதாலேயே ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யாத பல நண்பர்களையும் எனக்கு தெரியும். அவர்களுக்கெல்லாம் இந்த திட்டம் உதவியாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் ஜொமேட்டோ நிறுவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இப்படி மாறிமாறி ஜொமேட்டோ நிறுவனத்தை ஆதரித்தும், எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)