சோழர் ஆட்சியில் திருமணத்தின் போது வசூலிக்கப்பட்ட 'கட்டில் ஏறுதல் வரி' பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் என்பது மிக முக்கியமான கலாசார விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அந்தக் காலத்தில் தமிழர்கள் தங்கள் இணையை காதல் மூலமும், விருப்பத்தின் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்து இணைந்து வாழ்ந்தனர். தொடர்ந்து ஊரார்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மிக எளிய அளவில் நடைபெற்று வந்த இந்தத் திருமணம் நாகரீக வளர்ச்சியின் காரணமாகப் பெரிய விழாவாகவே உருமாற்றம் அடைந்து நடைபெற்று வருகின்றது.
சங்க காலம் முதல் சேர, சோழ, பாண்டியர் காலங்களிலும் விருப்பத்தின் அடிப்படையில் அல்லது காதல் மூலமாக மறைமுகமாக வாழ்ந்து பின்னர், இணைந்து பின் ஊரறிய திருமணம் செய்து வாழ்ந்தனர்.
திருமணத்திற்காக வரிகளையும் அப்போதைய அரசு அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இருவர் திருமணம் செய்துகொள்ளும் சூழலில் அப்போதைய அரசு அவர்களிடம் திருமண வரியைப் பெற்றுக்கொண்டது. இது திருமண வரி என அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் என்ன? அது ஏன் விதிக்கப்பட்டது?

சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள்
- கண்ணாலக் காணம் (திருமண வரி),
- குமரகச் சரணம் (முருகன் கோவில் வரி)
- மீன்பாடம் (மீன்பிடிக்க)
- கீழிறைப்பாட்டம் (சிறுவரிகள்)
- முத்தாவணம் (விற்பனை வரி)
- வேலிக்காசு (ஒரு வேலி நிலத்திற்கான வரி)
- ஊராட்சி (ஊர்வரி)
- வட்டநாழி (கழனிவரி நாழிக்கணக்கில்)
- வண்ணாரப்பாறை (சலவையாளர் பயன்படுத்திய பாறைக்காக வரி)
- சக்காணம் (குயவர் வரி)
- நீர்க்கூலி (தண்ணீர் வரி)
- தனிக்கூறை (துணிநெய்வோர் வரி)
- தட்டார் பாட்டம் (பொற்கொல்லர் வரி)
- ஆட்டுநிறை வரி (ஆட்டுவரி)
- நல்லாநல்லெருது (மாட்டுவரி)
- ஊடுபோக்கு (தானியம் பயிரிட வரி)
- வாலாக்காணம் (வீட்டுவரி)
- உல்கு (சுங்கம்)
இப்படிப் பல்வகை வரிகள் சோழர் ஆட்சியில் விதிக்கப்பட்டிருந்தன. இதில் கண்ணால காணம் என்று அழைக்கப்பட்ட திருமண வரி (கல்வெட்டில் கட்டில் ஏறுதலுக்கான வரி எனக் குறிப்பிட்ப்பட்டுள்ளது) பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் அக்காலத்தில் விதிக்கப்பட்ட திருமண வரி குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"அனைத்து மதங்களும் ஆண், பெண் இடையிலான உறவைத்தான் திருமணம் என்கிறது. அக்காலத்தில் திருமணத்தில் பல்வேறு சடங்குமுறைகள் பின்பற்றப்பட்டன. ஜல்லிக்கட்டு, வட்டக்கல் தூக்குதல் போன்ற வீர விளையாட்டுகளில் சாதித்த இளைஞர்களை திருமணம் செய்யும் முறையும் இருந்தது.
மன்னர் ஆட்சியில் தற்பொழுது பெறப்படும் வரதட்சணை போன்ற சம்பிரதாயங்கள் அரிதாகவே இருந்தன. ஆனால் திருமண வரி (கண்ணால காணம்) என்று அழைக்கப்படக்கூடிய கட்டில் ஏறுதல் வரி அரசர்களால் பெறப்பட்டது.
அது குறித்த சில கல்வெட்டு ஆதாரங்களும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளன," என்று விவரித்தார்.
திருமண வரியாக வழங்கப்பட்ட ஆடு

புதுச்சேரியில் இருக்கும் பாகூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இருக்கும் கல்வெட்டு இந்தத் திருமண வரி குறித்துக் கூறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.
"ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கி.பி. 961ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் பாகூரில் வசித்த மன்றாடிகள் சமூகத்தினர் மூலட்டானத்துப் பெருமான் என்னும் அந்த சிவன் கோவிலுக்கு திருமணத்திற்காக ஒரு தர்மம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
'நாங்கள் வைத்த தன்மம் கட்டிலேறப் போம்போது,
ஒரு ஆடு குடுத்துக் கட்டி லேறு வோமாகவும்' என்றும்,
தொடர்ந்து அடுத்த வாக்கியத்தில்,
'புறநாட்டினின்று வந்து இந்நாட்டில் கட்டிலேறும்
மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும்', எனவும் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூடாது இருந்தால் இவ்வூரைச் சேர்ந்தவர்களும், தேவராடியாரும் இரண்டு ஆடுகள் பிடித்துக் கொள்ளலாம் என்றும் இச்செயலை இந்நாட்டில் மதகு செய்கின்ற மதகர், சந்திர, சூரியர் உள்ளவரைப் பாதுகாப்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டதும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது," என்கிறார்.
இதில் கட்டில் ஏறுதல் என்ற சொல் சடங்கு சார்ந்த நிகழ்வாகவே கூறப்பட்டுள்ளதாகவும், தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி 'மணவினை' என்ற பொருளில் இதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு

இதேபோல கரூர் ஜலசயனப் பெருமாள் கோவிலில் காணப்படும் முதலாம் குலோத்துங்க சோழனின் 43ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் கட்டிலேறுதல் வரி பற்றித் தெரிவிக்கின்றது.
இப்பகுதியில் உள்ள திருவாய்ப்பாடி மன்றாடிகள் தங்கள் மக்கள் திருமணத்தின்போது ஒரு ஆடு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று பேராசிரியர் ரமேஷ் விவரித்தார்.
அந்தக் கல்வெட்டில், 'எங்கள் திருமணத்து ஒரு ஆண் கட்டிலேறுமிடத்தும், ஒரு பெண் வாட்கைப்படுமிடத்தும் ஆடு கொடுப்பதாக' இம்மன்றாடிகள் இசைந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
கட்டிலேறத்தடையும், பெண் தற்கொலையும்
கட்டிலேறுதல் தொடர்பான கல்வெட்டுகளில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள கல்வெட்டு சற்று வித்தியாசமானது என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், திருமணச் சடங்கு நின்று போனதால் ஒரு பெண் இறந்து போனாள் என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி விவரித்தார்.

"புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் திருமலைக்கடம்பர் மலை உள்ளது. திருமலைக்கடம்பர் கோவிலினுள் பாறை லிங்கத்தின் அருகில் வடக்கு சுவராக அமைந்துள்ள ஒரு பாறையில் உள்ள கல்வெட்டு ஒன்று கட்டிலேறத்தடை விதித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.
நார்த்தமலை என்ற ஊரின் பழைய பெயர் தெலிங்ககுலகாலபுரம் என்பது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. அதனுடைய காலம் கி.பி.1055-56. இது வணிகக் குழுவினரான திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளது.
அக்கல்வெட்டில் அருமொழி என்னும் வியாபாரி ஒருவன் கட்டிலேற (திருமணம் செய்ய) ஒரு பெண்ணை நிச்சயம் செய்து கொள்கிறான். ஆனால் ஏதோ காரணத்தால் தில்லைக்கூத்தன் என்பவனும் மற்றும் சிலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணாண ராமன் என்பவரின் மகளைத் திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்.
இதை அறிந்து முதலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட செட்டிச்சி விஷம் குடித்து சாகிறாள். இந்த அவலத்தால் நேர்ந்த பாவத்திற்கு வணிகக் குழுவினர் சங்குபரமேஸ்வரி அம்மைக்கு கோவில் எடுப்பித்து நந்தாவிளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்," என்று கல்வெட்டு பதிவைப் பற்றி விரிவாகக் கூறினார் பேராசிரியர் ரமேஷ்.
பாகூர், கரூர், நார்த்தாமலை கல்வெட்டுகள் திருமண வரி பற்றி தெளிவாகக் கூறுகின்றன. அக்காலத்தில் நில வரி, வணிக வரி, நீர் வரி எனப் பலவித வரிகள் இருந்ததைப் போல் திருமண வரி இருந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
ஒற்றர்களின் ஊடுருவலைத் தடுக்க திருமண வரி

வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான உளுந்தூர்பேட்டை லலித் குமார் கண்ணால கானம் குறித்துப் பேசியபோது, "தற்போதும்கூட கிராமங்களில் திருமணம் அல்லது திருமணத்தை கண்ணாலம் என்று கூறுவதைக் காணலாம்.
முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டில் இந்த வரி அரைக்கால் பணம் என அறியப்படுகிறது," என்றார்.
சோழ நாட்டின் பாதுகாப்பையும் ஒற்றர்கள், மாப்பிள்ளை என்ற பெயரில் சோழ மண்ணில் ஊடுருவுவதைத் தடுக்கவும் இந்த வரி நடைமுறையில் இருந்தததாகவும் லலித் குமார் விளக்குகிறார்.
"அக்காலத்தில் சிற்றரசர்களுக்கு இடையே அடிக்கடி போர்கள் நடக்கும். திருமண உறவு என்ற போர்வையில், பகை அரசர் குடிகள் தம் நாட்டில் ஊடுருவி வாழ்ந்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்.
அதற்காக அரண்மனைக்கு வரி செலுத்தும்போது மணமகன், மணமகள் இரு வீட்டார் தகவல்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும். வரி செலுத்துவதன் மூலம் திருமணமும் பதிவு செய்யப்பட்டது," என்கிறார் லலித் குமார்.
மன்னர்களின் அங்கீகாரம் திருமணத்திற்கு அவசியம்

பட மூலாதாரம், Getty Images
வரலாற்று ஆர்வலர் லலித் குமாரின் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகள், இரு வீட்டுப் பெரியோர்களும், ஊர் கிராம சபையில் கூடி, விவாதித்து விளக்கம் பெற்று, கண்ணாலத்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்காது என்று உறுதி செய்து, ஒப்புதல் பெற்று, இரு வீட்டார் மற்றும் கிராம சபையார் கையெழுத்துடன், வரியையும் பெற்று, மன்னனின் அங்கீகாரம் பெற அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
"அரண்மனையில் வரி புத்தகத்தில் பதிவு செய்து, திருமண விவரங்கள் மன்னனுக்குத் தெரியப்படுத்தப்படும். கிராம சபையார் பரிந்துரையை ஏற்று மன்னனும் நடைபெறும் கண்ணாலத்திற்கு (திருமண) ஒப்புதல் ஆணையில் கையொப்பம் இடுவார்.
ஊர் சபையாரும் சாட்சியாகக் கையழுத்திடுவார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது பதிவு அலுவலகங்களிலும் திருமணத்தை சாட்சிகளுடன் பதிவாளர் முன்னிலையில் மணமக்கள் கையெழுத்திடுவதை நினைவூட்டதாகவே அமைகிறது," என்று கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சடங்குகள்

திருமணச் சடங்குகள் குறித்துப் பேசிய லலித் குமார், "திருமணத்தின்போது அரசர் ஆணையை, அரசன் தன் நாட்டுப் புதுமணத் தம்பதிகளுக்குப் பரிசாக வழங்கும் பானைகளுடனும், பரிசுப் பொருட்களுடனும் மணப்பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்.
திருமண நாளன்று அரசன் ஆணையுடன் வரும் பரிசுப் பானைகளை மேள, தாள வாத்தியங்களுடன் எதிர்கொண்டு ஊர்வலமாக அழைத்து வந்து, திருமணத்திற்கு அரசன் ஆணை கிடைத்துவிட்ட தகவல் ஊராருக்குத் தெரியப்படுத்தப்படும்.
மணவிழா மேடையில் ஈசான்ய திசையில் வைக்கப்பட்டு, மாவிலை, துண்டு கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து மரியாதைகளும் அரசனுக்குச் செய்வது போல் செய்யப்படும்.
இப்பானைகள் முன்னிலையில்தான் திருமண சடங்குகள் நடைபெறும். மணப்பெண்ணிற்கு தாலி கட்டியதும், மணமக்கள் அரசன் தங்களுக்கு அனுப்பி வைத்த பரிசுப் பொருட்களை, தண்ணீர் நிரம்பியுள்ள பெரிய பானையில் ஒரே நேரத்தில் கைகளைவிட்டுத் துழாவி எடுப்பார்கள்.
இதன் பின்னர் மணப்பெண் அரசன் வழங்கிய பானையுடன் கணவனுடன் நீர் நிலைக்குச் சென்று நீர் நிரப்பிக்கொண்டு வருவாள். இந்த 'அரசர் ஆணைப் பானை'யே சிதைந்து தற்போது அரசாணிப் பானை ஆகிப்போனது," என்று கூறினார்.
மேலும், "தற்போதும் தமிழர் திருமணங்களில் இந்த அரசாணைப் பானை வைத்தல் நடைமுறையில் உள்ளது. மூன்று பானைகளை மாக்கோலம் அல்லது வண்ணக்கோலம் இட்டு அடுக்கி வைத்திருப்பதை நாம் காணலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சடங்குகள் தமிழர் திருமணத்தில் நடைபெறுவதை இன்றும் நாம் காண முடியும்.
அக்காலத்தில் ஒற்றர்கள் ஊரில் எந்த வழியிலும் உள் நுழையாமல் இருக்கவும், புதியவர்கள் யார் நாட்டில் வந்து குடியேறினார்கள் என்பது பற்றின விபரங்களை அறிந்து கொள்ளவுமே திருமண வரி வசூலிக்கப்பட்டது," என்று கூறுகிறார் வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான லலித் குமார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












