ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு சீட் வழங்கிய அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

நாடாளுமன்ற தேர்தல்: புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார்.

சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத போதுகூட திமுகவுக்கு கணிசமான எம்.எல்.ஏக்களை கொண்டு கை கொடுத்தது சென்னை.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் போலவே இந்த ஆண்டும் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் திமுகவே நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக வட சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் போட்டியிடுகிறது, மத்திய சென்னை கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ என்று அறியப்படும் மனோகர். காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் அறியப்பட்டிருந்த ராயபுரம் மனோ, ஓராண்டுக்கு முன்பாக, அதிமுகவில் இணைந்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வகித்திருக்கும் ஒரே நபர் ஜெயவர்த்தன். 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவில் கிட்டத்தட்ட 50% வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்றவர்களாக இருக்கும் நிலையில், அதிமுகவின் வேட்பாளர்கள் தேர்வு இந்த முறை இப்படி அமைந்துள்ளது.

தென் சென்னை தொகுதியில் 2014ஆம் ஆண்டு வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்த்தனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் தென் சென்னையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பாக, தனது ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து வந்த, தமிழிசை சௌந்தர்ராஜன் களமிறங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தல்: புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன்

அதிமுகவின் பட்டியலில் இவரைத் தவிர கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு மட்டுமே ஏற்கெனவே தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கோவை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதியில் அதிமுக சார்பாக, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜ்-ன் மகன் ஆவார். கட்சியின் தகவல் தொழில்நுட்பச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் ஒ.பி.எஸ்-க்கு ஆதரவு அளித்து வந்தார். இவருக்கு எதிராக களத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிமுக முன்னாள் மேயரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரும் ஆவார்.

தேனி தொகுதியில், புதுமுகமான வி.டி.நாராயணசாமி போட்டியிடுகிறார். அந்தப் பகுதியின் பிரதான சமூகத்தைச் சேராத அவர், தொழிலதிபராக இருந்து வருகிறார். அந்தப் பகுதியில் செல்வாக்கு கொண்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தற்போது பாஜக பக்கம் இருக்கின்றனர். திமுக சார்பாக தேனி தொகுதியில், டிடிவி தினகரனுடன் முன்பு அமமுகவில் இருந்த தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல்: புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, பாஜக தலைவர் கே அண்ணாமலைக்கு எதிராகக் களமிறங்கும் அதிமுக கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

வேறு கட்சிகளிலிருந்து சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்தவர்கள் சிலருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தவர். பாஜக மாநில ஓ.பி.சி அணி துணைத் தலைவராக இருந்த ஆற்றல் அசோக்குமார் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மருமகனும் ஆவார். அவரது தந்தை அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும், ஈரோடு, கோவை பகுதிகளில் உணவகங்கள் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார். பலரும் ஆச்சர்யப்படும் வகையில், திமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்து இரண்டே வாரங்களில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளான சிம்லா முத்துசோழன் 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மருத்துவர் சரவணன் மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் ஓராண்டுக்கு முன்புதான் அதிமுகவில் இணைந்தார். முதலில் மதிமுக, பிறகு திமுகவில் இணைந்த சரவணன் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு திமுக மீது கொண்ட அதிருப்தியில் பாஜகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

மேலும், நீலகிரி தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். பி. காம், எம்.பி.ஏ படித்துள்ள அவர், அவிநாசியில் அதிமுக ஐடி பிரிவு பொறுப்பாளராக இருந்துள்ளார். இவருக்கு எதிராக களத்தில் திமுக சார்பாக ஆ.ராசா மற்றும் பாஜக சார்பாக எல்.முருகன் உள்ளனர். அதே போன்று மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாபு, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜின் மகன் ஆவார்.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லை என்பதை சிலர் விமர்சித்து வருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பசிலியான் நாசரேத், அதிமுகவின் மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஆவார். நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டு பேரில் இவரும் ஒருவர். மற்றொருவர் நாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் டாக்டர் சுர்ஜித் சங்கர் ஆவார்.

மேலும், அதிமுக வேட்பாளர்களில் ஐந்து மருத்துவர்கள், நான்கு பொறியியலாளர்கள், நான்கு வழக்கறிஞர்கள், ஒன்பது பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)