“என் அன்பை வைத்து பணம் பறித்தார்கள்” – லெஸ்பியன் பெண்ணாக வாழ்வது எவ்வளவு கடினம்?

பட மூலாதாரம், SOUNDARYA
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு பெண்ணின் பாலின அடையாளத்தை வெளிப்படுத்துவது பெரும்பாலும் சவாலாகவே இருந்து வரும் இந்தியாவை போன்ற நாட்டில், ஒரு பெண் தன்பாலினத்தவராக இருப்பதென்பது சவாலானது மட்டுமில்ல, ஆபத்தானதும்கூட.
அத்தகைய இன்னல்களுக்கு நடுவிலும், தான் எதிர்கொண்ட பாகுபாடுகளைக் கடந்து தன்னுடைய பாலின அடையாளத்தை தைரியமாக அவதானித்து, அதை பொது சமூகத்திற்கும் வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள், நிச்சயம் நிஜ உலக ஹீரோக்களே.
அப்படிப்பட்ட ஒரு ஹீரோவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா. தான் தன்பால் ஈர்ப்பு கொண்டவர் என்பதைத் தனது குடும்பத்தினரிடமும் வெளியுலகுக்கும் அவர் வெளிப்படுத்தியபோது எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம்.
ஆனால், “அதையெல்லாம் தாண்டி இது என்னுடைய அடையாளம், எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் அதை ஏன் நான் மறைக்க வேண்டும்?” என்று மன உறுதியோடு நிற்கிறார் சௌந்தர்யா. அவர் வாழ்வில் ஒரு தன்பாலினத்தவராக அவர் எதிர்கொண்ட இன்னல்கள் அவருடைய வார்த்தைகளில் இனி.
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முதன்முதலாக என் அக்காவிடம் என் பாலின அடையாளம் குறித்துப் பேசினேன். அக்காவோ மாமாவோ இதை எதிர்க்கவில்லை. அவர்களுக்கு இதுகுறித்த புரிதல் இருந்த காரணத்தால் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். ஆனால், என் அம்மாவிடம் கூறியபோது அவர் அதேபோல் எதிர்கொள்ளவில்லை.
அக்கா, மாமாவின் ஆதரவோடு பெற்றோரிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகக் கூறினேன். ஆனால், என் அம்மா தரப்பில் இதற்குக் கடும் எதிர்ப்பு வந்தது. இன்னமும்கூட அம்மா என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால், குடும்பத்தையும் தாண்டி சமூகத்தில்தான் நான் பாகுபாடுகளை அதிகம் எதிர்கொண்டேன். வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றிருந்தபோது, “எதற்காக முடியை ஆண் போல் வெட்டியுள்ளீர்கள்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு, “ஏனென்றால், நான் லெஸ்பியன்,” எனக் கூறினேன். அந்த நேர்காணலில் இருந்த ஒருவர் எனக்கு டீம் லீடராக வந்தார். அந்த நேரத்தில்தான் சமூக ஊடகம் முதல் அனைத்து விதத்திலும் வெளியுலகுக்கு என்னுடைய பாலின அடையாளத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.
ஆகவே, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதால் நேர்காணலில் நான் அனைத்தையும் விவரமாகக் கூறினேன். இதன்மூலம், எனக்கு குடும்பத்தின் ஆதரவு பெரிதாக இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட டீம் லீடர், என்னிடம் வெளிப்படையாகவே தவறாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

பட மூலாதாரம், SOUNDARYA
இரவு பத்து மணிக்கு மேல் அலுவலக மீட்டிங் எனக் கூறி என்னை மட்டும் அழைப்பார். மீட்டிங்கில் பேச வேண்டிய விஷயம் 5 நிமிடத்தில் முடிந்துவிட்டாலும்கூட, தேவையில்லாத விஷயங்களை எல்லாம் நீண்டநேரத்திற்குப் பேசிக் கொண்டிருப்பார்.
ஒருநாள் அதேபோல் நள்ளிரவில் நீண்ட நேரத்திற்கு மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, விஷயம் வேறு மாதிரியாகச் செல்கிறது என்பதை உணர்ந்து, என் அக்காவையும் உடன் அமர வைத்துக் கொண்டேன். கூடவே, அந்த மீட்டிங்கின் ஸ்க்ரீன் ஷாட்களையும் எடுத்து வைத்துக்கொண்டேன்.
அவர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து, அவரைத் தாண்டி வேறு எங்கும் பிரச்னையைக் கொண்டு செல்ல முடியாது, அப்படிக் கொண்டு சென்றாலும் மேலிடத்தில் இருப்பவர்கள் என்னையே குறி வைப்பார்கள் என்ற பயத்தை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை நான் மீட்டிங்கில் இருந்தபோது, தன்னுடைய பாலுறுப்பு குறித்து பேசிவிட்டு, அதை முடித்தவுடன் அவர் தரப்பை ம்யூட் செய்துவிட்டார். எனக்கு குடும்பத்தின் ஆதரவு முழுமையாக இல்லை என்பதால் என்னால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்தில் ஆரம்பத்தில் இருந்தே என்னைத் தவறாக நடத்திக் கொண்டிருந்தார்.
நான் சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு குழந்தை. அதிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வந்திராத காலகட்டம் அது. கூடவே, இவருடைய நடவடிக்கையும் மன அழுத்தத்தைக் கொண்டு வரவே, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி மனநல ஆலோசனை எடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மேலாளரிடம் இதுகுறித்துப் புகார் செய்தேன். ஆனால், நான் இப்படிச் செய்வதன் மூலம் மொத்த குழுவையும் கெடுக்கிறேன், வேலை செய்வதைத் தடுக்கிறேன் என்று அவர் கூறினார்.
“நீங்களாகத் தவறாகப் புரிந்துகொண்டு, வெறுமனே உங்களுடைய கற்பனைகளை இங்கு கொண்டு வராதீர்கள்” என்று என்னிடம் கூறினார். இதற்கு மேல் பொறுக்க முடியாமல், வேலையை விடுவதற்குத் தயாரானேன். அந்த நேரத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் பேசும் சூழல் ஏற்பட்டது.
அவர்களிடம் நடந்தவற்றைக் கூறியபோது, உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
“என் அன்பை வைத்து பணம் பறித்தார்கள்”
எங்களைப் போன்ற பெண்களுக்குப் பெரிதாக குடும்ப ஆதரவு இருப்பதில்லை என்பதை உணரும்போது, பணிச்சூழல், நட்பு வட்டம் என்று சுற்றி இருப்பவர்களே எங்களைத் தவறான முறையில் நடத்துவது இயல்பாக நடக்கிறது.
தன்பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை வீடுகூட தரமாட்டார்கள். பொதுவெளியில் கழிவறையைப் பயன்படுத்துவதிலேயே பிரச்னை ஏற்படுகிறது. நான் ஓர் ஆணைப் போல உடையணிந்து, முடியை வெட்டியிருப்பதால் என்னை பொதுக் கழிவறையில் இருந்து துரத்திய சம்பவங்களையெல்லாம் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இன்றும்கூட, நான் பொதுவெளியில் செல்லும்போது என்மீது விழும் கண்கள், “ஏன் இவள் இப்படி இருக்கிறாள்?” என்பதைப் போல் என்னைக் குத்துவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவு ஏன், நான் லெஸ்பியன் என்று என் சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து, லெஸ்பியன் உறவில் வருவதாகக் கூறி என் அன்பைத் தவறாகப் பயன்படுத்தியும் உள்ளார்கள்.
சமூக ஊடக வாயிலாக ஒரு பெண்ணோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது காதலாகவும் மாறியது. ஆனால், சில காலம் போன பிறகுதான் அந்த உறவு என்னிடமிருந்து பணம் பறிப்பதற்கான முயற்சி என்பது புரிந்தது.
நான் காதலில் விழுந்த பெண்ணின் அக்கா, எங்களுடைய காதல் தெரிந்து உதவுவதாக முன்வந்தார். எதிர்பாலின காதலுக்கு நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சில நேரங்களில் பெற்றோர்களேகூட ஆதரவாக நிற்பார்கள்.
ஆனால், எங்களைப் போன்ற தன்பாலின காதலர்களுக்கு இப்படியான உறவுகள் உதவிக்கு வருவது அரிதிலும் அரிது. ஆகையால், ஆரம்பத்தில் அவருடைய அக்கா உதவ முன்வந்தபோது நான் பெரிதும் மகிழ்ந்தேன்.
பின்னாளில்தான், அவர் இந்த உறவைப் பயன்படுத்தி என்னிடம் தொடர்ச்சியாகப் பணம் பறித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நீண்ட நாட்களாக குடும்பத்தில் கஷ்டம் எனக் கூறி அடிக்கடி பணம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
நானும் காதலிக்கும் பெண்ணின் அக்கா கேட்கிறார், அவருடைய குடும்ப கஷ்டம் காதலியின் கஷ்டம் என்று நினைத்து அளித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் எங்களுடைய உறவைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை உணர்ந்து, அவருக்குப் பணம் தருவதை நிறுத்தினேன்.
அதற்குப் பிறகு, அவருடைய தங்கையை, நான் காதலித்த பெண்ணை வைத்து பணம் கேட்க வைத்தார். நான் நிலைமையை உணர்ந்து மறுத்தபோது, அந்தப் பெண் எங்கள் காதலை பிரேக்-அப் செய்துவிட்டார்.
இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்திலும் என் பாலின அடையாளத்தை நான் பதிவிட்டிருந்தேன். இதன்மூலம், எனக்கு யாரும் ஆதரவாக வந்து நிற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். உண்மையை உணர்ந்த நேரத்தில் நான் அவர்களிடம் பெரும் தொகையை இழந்திருந்தேன்.

பட மூலாதாரம், SOUNDARYA
“நான் நானாக இருப்பதுதான் என் பலம்”
இப்படி எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், நான் ஒருநாள்கூட ஏன் எனது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தினேன் என்று கவலை கொண்டதில்லை. ஏனென்றால், என் சுயத்தை நான் வெளிப்படுத்திய பிறகு எனக்கு உள்ளூர தனி பலம் கிடைத்துள்ளது.
அதற்கு முன்பு எனக்கு இருந்த நட்பு வட்டத்தைவிட இப்போது எனக்கு இருக்கும் நட்பு வட்டம் மிக மிகக் குறைவு. ஆனால், மிகவும் பாதுகாப்பானது.
என் நண்பர்களில் பலரும் நன்கு படித்தவர்கள். ஆனாலும், அதில் பலரும் என்னைப் பற்றித் தெரிய வந்ததும், சத்தமின்றி என்னை ப்ளாக் செய்துவிட்டு விலகிக் கொண்டார்கள். நன்றாகப் படித்த சமூகத்தினரிடமே இதுகுறித்த புரிதல் ஏதுமில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
பாலின அடையாளம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்று. கழிவறை பயன்படுத்துவது, அணியும் உடை என்று அனைத்துமே இங்கு சிக்கலாக இருக்கிறது. பள்ளிப்பருவத்தில் ஒருவர் பாலின அடையாளத்தை உணரும்போது, அவர் விருப்பத்திற்கு ஆணை போல் உடையணிய முடியுமா?
இல்லையே, பள்ளி, கல்லூரி என்று எங்குமே இதுகுறித்த புரிதலோ, இதற்கேற்ற அணுகுமுறையோ இல்லையே!

பட மூலாதாரம், Getty Images
ஆணுக்கான உடலமைப்போடு பிறந்தால், ஆணுக்கான உடை, பெண்ணுக்கான உடலமைப்போடு பிறந்தால் பெண்ணுக்கான உடை அணிய வேண்டும் என்றுதானே நிர்பந்திக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் இருந்தே சமூக அணுகுமுறை மாறினால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கும்.
என் குடும்பத்திற்குத் தெரியும், என் நண்பர்களுக்குத் தெரியும். அதைவிட முக்கியமாக, என் சமூகத்தைச் சேர்ந்தவர்களோடு நான் அதிகமாகப் பேச, பழகத் தொடங்கியுள்ளேன். அது எனக்கொரு பாதுகாப்பை வழங்கியது.
முன்பெல்லாம், பெண் நண்பர்களோடு பேசுவதற்கும் பழகுவதற்குமே தயங்கிக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றித் தெரிந்தால், அந்த எண்ணத்தோடுதான் பழகினேனோ என்று நினைத்துவிடுவார்களோ என்று கவலைப்பட்டேன்.
சராசரியாக எதிர்பாலினத்தில் எப்படி ஒருவர் மீதுதான் காதல் ஏற்படுகிறதோ, அப்படித்தான் தன்பாலினத்தவர்களுக்கும். ஆனால், அதை யாரும் உணர்வதில்லை. அது என்னைப் பாதித்துவிடுமோ என்று மிகவும் அஞ்சினேன்.
ஆனால், இப்போது எனக்கு அப்படி எந்த பயமும் கிடையாது. சமூக ஊடகங்களில், “என் நண்பர் ஒருவர் இருபால் ஈர்ப்பாளராக இருக்கிறார். அவரோடு நாம் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்வோமா?” என்றெல்லாம் வந்து கேட்பார்கள்.
அப்படிக் கேட்கும் மோசமான மனிதர்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது இப்போது எனக்குத் தெரியும். அவர்களுக்கு நான் அஞ்சுவதில்லை.
இப்போது எந்தப் பிரச்னை வந்தாலும் அதைக் கையாளும் தைரியம் எனக்கு வந்துள்ளது. அதற்கு என் சுய அடையாளத்தை வெளிப்படுத்தியது, இப்போது நான் நானாக இருப்பதுதான் காரணம். அதை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












