மகாபாரதத்திற்கும் மண்ணில் புதையும் இந்த நகரத்திற்கும் இப்படியொரு தொடர்பா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அசோக் பாண்டே
- பதவி, பிபிசி இந்தி
தபோவன்-விஷ்ணுகர் மின் திட்டத்தின் ஒரு சுரங்கப்பாதை, ஜோஷிமட் நகரம் கீழே அமுங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு அந்த மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பழங்கால நகரமான ஜோஷிமட்டின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
ஆங்கில ஐசிஎஸ் அதிகாரி எச்.ஜி. வால்டன் 1910ஆம் ஆண்டு எழுதப்பட்ட "தி கெசெட்டியர் ஆஃப் கர்வால் ஹிமாலயாஸ்" என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜோஷிமட் பற்றி எழுதியுள்ளார்.
"அந்தக் காலகட்டத்தில் கல்லால் கட்டப்பட்ட வீடுகள், சத்திரங்கள், இரவில் தூங்குவதற்கு கோவில்கள் இருந்தன. தெருக்களில் வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. குதிரைகள் ஓடும் சத்தம் எங்கும் கேட்கிறது. இங்குள்ள மக்கள் திபெத்துடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தனர்" என்று அந்தப் புத்தகத்தில் எச்.ஜி. வால்டன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலத்தில் ஜோஷிமட் வர்த்தக மையமாக இருந்தது. எனினும், வால்டனின் காலத்தில்தான் சில வணிகர்கள் தங்கள் சந்தையை தெற்கே அதாவது நந்த்பிரயாக் நகருக்கு மாற்றினர்.
இங்குள்ள போடியா சந்தையை திபெத்தில் உள்ள ஞானிமா சந்தையுடன் வால்டன் ஒப்பிடுகிறார். ஞானிமா சந்தையில் ஆண்டு முழுமைக்கும் வணிகம் நடைபெறும்.
அலக்நந்தா நதிக்கு மேலே அமைந்துள்ள ஜோஷிமட்டின் மக்கள் தொகை 1872இல் 455ஆக இருந்தது. பின்னர், 1881இல் அது 572ஆக அதிகரித்தது.
எனினும், 1900ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 468ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கணக்கெடுப்பு நடந்தபோது பத்ரிநாத் ஊழியர்கள் யாரும் இங்கு இல்லை.
யாத்திரை காலத்தில் அவர்கள் பத்ரிநாத் சென்றுவிடுவார்கள். பின்னர், குளிர்காலத்தில் பனி அதிகமாக இருக்கும் காரணத்தால் கோயில்கள் மூடப்படுவதால் அவர்கள் ஜோஷிமட்டிற்கு திரும்பிவருவர்.
கர்ணபிரயாக்கிலிருந்து திபெத்துக்குச் செல்லும் பாதை சாமோலி, ஜோஷிமத் மற்றும் பத்ரிநாத் வழியாகச் சென்று மானஸ் கணவாயில் இணைகிறது. மற்றொரு பாதை தபோவன் மற்றும் மலரி வழியாக செல்லும் நித்தி கணவாயில் இணைகிறது.
முதலில் ஜோஷிமத் ராவல் மக்களுக்கும் பத்ரிநாத் ஊழியர்களுக்கும் குளிர்கால ஓய்வு விடுதியாக இருந்த நிலையில், பின்னர் தொலைதூரப் பகுதிகளிலிருந்து கர்வாலின் பல்வேறு பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு தங்குமிட மையமாக மாறியது.
ஜோஷிமட்டின் கதை

பட மூலாதாரம், Getty Images
கடல் மட்டத்திலிருந்து 6,107 அடி உயரத்தில் இருக்கும் ஜோஷிமட், உத்தரகாண்டில் உள்ள தௌலி மற்றும் விஷ்ணு கங்கை சங்கமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியாரின் வருகை மற்றும் நிறைய மத மாற்றங்கள் இங்கு நடந்தன.
கேரளாவின் திருவிதாங்கூரில் உள்ள தொலைதூர கிராமத்தில் பிறந்த சங்கராச்சாரியார், இந்து வேதக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், இமயமலைக்கும் அவர் பயணம் செய்தார். அங்கு அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர்.
தனது ஆதரவாளர்களுக்காக நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை சங்கராச்சாரியார் நிறுவினார். கிழக்கில் பூரியில் வர்தன மடத்தையும், மேற்கில் துவாரகாவில் சாரதா மடத்தையும், தெற்கில் மைசூரில் சிருங்கேரி மடத்தையும், வடக்கில் ஜோதிர்மத் எனப்படும் ஜோஷிமட்டையும் நிறுவினார்.
ஜோஷிமட் நிறுவப்பட்ட பிறகு, சேதமடைந்த நிலையில் இருந்த பத்ரிநாத் கோவில் மீண்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கேதார்நாத் சென்ற சங்கராச்சாரியார், அங்கு தனது 32ஆவது வயதில் உயிரிழந்தார்.
ஞானம் பெற்ற ஆதி சங்கராச்சாரியார்

நவீன இந்து மதத்தை போதித்தவர்களில் ஒருவரான ஆதி சங்கராச்சாரியார் ஜோஷிமட்டில் உள்ள ஒரு மரத்தடியில் ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
எனவே இப்பகுதி ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த மரத்தை இன்றும் அங்கு காணலாம். இது கல்பவ்ரிக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், இந்த மரத்தை அடுத்துள்ள கோயில் இன்று இடிந்து விழுந்துள்ளது. அதன் அருகில் இருந்த குகையும் அழிக்கப்பட்டுவிட்டது. அதில் ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜோஷிமட் பற்றி பல கதைகள் உள்ளன. இங்கு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலும் உள்ளது. அவரது பக்தரான பிரஹலாதன் இங்கு முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இங்கு ஏராளமான கோவில்கள் மற்றும் நீர் ஊற்றுகள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, கணேஷ் என கடவுளின் பெயர்களிலும் அறியப்படுகின்றன.
குமாவோன் மற்றும் கர்வால்கள்

பட மூலாதாரம், Getty Images
குமாவோன்-கர்வால்களின் வரலாற்றில் ஜோஷிமட் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஜோதிர்மத் இமயமலைப் பகுதியை ஆண்ட கத்யூரி பேரரசின் முதல் தலைநகரம்.
ராஜா வாசுதேவ் என்ற கத்தூரி சக்ரவர்த்தி ஸ்ரீவாசுதேவ் கிரிராஜ சக்ர சக்தன் ஆட்சியின் போது ஜோதிர்மத் முக்கிய மையமாக மாறியது. பின்னர், தலைநகரம் குமாவோனுக்கு அருகிலுள்ள பைஜ்நாத்துக்கு மாற்றப்பட்டது.
பைஜ்நாத்திற்கு ஏன் தலைநகரை மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக ஒரு கதை புழக்கத்தில் உள்ளது.
ஒருநாள் மன்னர் ராஜா வாசுதேவ் வேட்டையாடச் சென்றார். அப்போது நரசிம்மமூர்த்தி மனித உருவில் பிச்சை எடுக்க வந்தார். அவரை அடையாளம் கண்டு மரியாதை செய்த ராணி, மன்னரின் படுக்கையில் அவர் படுக்க ஏற்பாடுகள் செய்தார்.
வேட்டைக்குச் சென்ற மன்னர் திரும்பி வந்த போது, தன்னுடைய கட்டிலில் ஒரு பிச்சைக்காரர் இருப்பதைப் பார்த்ததும் தன் வாளால் அவரைத் தாக்கினார்.
ஆனால், நரசிம்மமூர்த்தியின் கையிலிருந்து ரத்தத்திற்குப் பதிலாக பால் வழியத் தொடங்கியது. அதைக் கண்டு பயந்த மன்னர், அரசியை அழைத்து இது யார் என்று கேட்டார்.
அவர் கடவுள் என்று அறிந்ததும், தான் செய்த தவறுக்கு தன்னைத் தண்டிக்கும்படி மன்னர் வேண்டினார்.
மன்னரின் இந்தத் தவறுக்காக ஜோதிர்மத்தை விட்டு வெளியேறி பைஜ்நாத் செல்ல நரசிம்மமூர்த்தி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நரசிம்மமூர்த்தி அங்கிருந்து மறைந்துவிட்டார். நரசிம்மமூர்த்தியின் உத்தரவைத் தொடர்ந்து மன்னர் பைஜ்நாத் சென்றதாகக் கூறப்படுகிறது.
பூக்கள் பள்ளத்தாக்கு

பட மூலாதாரம், UTTARAKHANDTOURISM
வரலாற்றாசிரியர் சிவபிரசாத் தப்ரால் கர்வால் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் மகாபாரத காலத்தோடு ஜோஷிமட்டை தொடர்புபடுத்தியுள்ளார். பாணினியின் அஷ்டாத்யாயிலும் மகாபாரதத்திலும் கூறப்படும் கார்த்திகேயபுரம் இதுதான் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இன்றைய ஜோஷிமட்டை பார்க்கும்போது வால்டனின் கெஸட்டியரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜோஷிமட் இதுதானா என்று பலருக்கும் சந்தேகம் வரலாம்.
20ஆம் நூற்றாண்டில் இங்கு சுற்றுலா வளர்ச்சியடைந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த இடம்
திபெத்துக்கு அருகாமையில் இருப்பதால் இப்பகுதி இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு இங்கு ஏராளமான ராணுவத்தையும் ஆயுதப் படைகளையும் குவித்தது.
இங்குள்ள ஆயுதப்படைகளில் கர்வால் படைகளை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த பிரிவு கடல் மட்டத்திலிருந்து உயரமான இடங்களில் சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஜோஷிமட்டில் அமைந்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜோஷிமத் மக்கள் தொகை 17,000 ஆகும். ஆனால் இன்று ராணுவம் மற்றும் பிற பிரிவுகளை சேர்த்தால் 50,000க்கும் அதிகமாக இருக்கும்.
பத்ரிநாத் யாத்ரீகர் அதிகம் வரும் பகுதி என்பதால், இங்குள்ள வியாபார வாய்ப்புகளை கருத்தில் கொண்டு தனது குடும்பம் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு இங்கு குடியேறியதாகக் கூறுகிறார் முகேஷ் ஷா.
சுற்றியுள்ள கிராமங்களில் பீட்ரூட், கோதுமை போன்ற பல பயிர்கள் விளைகின்றன. இங்கு விளையும் பயிர்களை வாங்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.
வெறும் மண்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரம் கற்களால் கட்டப்படவில்லை என்றும், ஒரு காலத்தில் மலைத்தொடர்களில் இருந்து இடிந்து உருவான மண் மற்றும் சிறிய கூழாங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்றும் கூறும் நிபுணர்கள், இங்குள்ள நிலம் பெரிய அளவிலான கட்டுமானத்திற்கு பொருந்தாது என்றும் எச்சரிக்கின்றனர்.
இங்கு பெரிய கட்டமைப்புகளை அமைக்க முயன்றால் தற்போது நடப்பது போல் நிலம் பூமிக்குள் இறங்கும் என்கின்றனர்.
தபோவன் நீர்மின் திட்டம் இங்கு அழிவை ஏற்படுத்துவதாக கூறும் நிபுணர்கள், இது போன்ற மாபெரும் திட்டங்கள் இங்குள்ள மண்ணுக்கு ஏற்றதல்ல என்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












